Navigation


RSS : Articles / Comments


ஆண்டவரே ஆறாவடுவை வாசித்து விட்டேன்

1:34 PM, Posted by sathiri, No Comment
சயந்தனின் ஆறாவடு கைகளில் கிடைத்ததும் முதலில் எனக்கு ஏமாற்றம் காரணம் புத்தகம் பெரியதாய் இருக்குமென்று எதிர்பார்த்திருந்தேன். அடுத்ததாக நான் அந்த புத்தகத்தினை பத்து மணிநேர இரயில் பயணம் ஒன்றில் படிக்கத்திட்டமிட்டிருந்தேன் புத்தகத்தை பார்த்தால் குறைந்தது ஒரு இரண்டு மணிநேரத்திற்குள் படித்து முடித்து விடலாம்போல் இருந்தது மிகுதி நேரம் என்ன செய்யலாமென்கின்ற கவலை..இரயில் ஏறி ஆறாவடுவை பிரித்தேன். சயந்தனின் சிறியதொரு உரையுடனும் சு.வில்வரத்தினத்தின் கவிதையோடும் ஆரம்பமாகின்றது. எம்மவர் பொதுவாக கவிதைத் தொகுப்போ அல்லது நாவலோ வெளியிடும்பொழுது யாராவது ஒரு பிரபலத்தின் முன்னுரையோடு ஆரம்பிப்பதே வழைமை.பத்து நாளில் எழுதி முடித்த புத்தகத்திற்கு பிரபலத்தின் முன்னுரைக்காக பலமாதங்கள் காத்திருந்த கதைகளையும் நான் அறிந்திருக்கின்றேன். அப்படி பிரபலமென்றின் முதுகு சொறிவோடு புத்தகத்தை ஆரம்பிக்காததையிட்டு சயந்தனிற்கு முதுகில் ஒரு தட்டு.

நாவல் ஒற்றைக்காலையிழந்த புலிகளின் முன்னை நாள் போராளியொருவன் இத்தலிக்கு கப்பலில் களவாக இடம் பெயர்கிறான் அவனிற்கு ஒரு காதலியும் இருக்கிறாள். நீர்கொழும்பு கடற்கரையில் தொடங்கும் கதை இலங்கையில் இந்தியப்படை காலத்து சம்பவங்களில் புகுந்து யாழ் இடப்பெயர்வில் விரிந்து ஓயாத அலைகளில் ஊடறுத்து சமாதான காலத்தின் சம்பவங்கை சுமந்து ஆழ்கடலில் சங்கமமாகி படித்தவர்கள் மனங்களிலும் மெல்லியதாய் கீறி ஆறாவடுவை ஏற்படுத்தி முடிந்து போகின்றது.

சயந்தனின் சிறுகதைகளை ஏற்கனவே வாசித்தவன் என்கிற முறையில் நான் எதிர்பார்த்த எள்ளல்களையும் ஆங்காங்கே தூவியிருக்கிறார். அதில் இந்தியப்படை காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வினரின் தமிழ் தேசிய இராணுவத்திற்காக வலுக்கட்டாயமாக இளைஞர்களை பிடித்து பயிற்சி கொடுக்கிறார்கள் அப்படி பிடிபட்ட ஒருவன் பயிற்சி முகாமில் பொறுப்பாளரிடம் அண்ணை எங்கடை தலைவர் யார் என கேட்கிறார் அதுக்கு அவர் இது தெரியாதா வரதராஜப்பெருமாள்தான் என்கிறார். அதற்கு அவனும் அப்பாவித்தனமாய் பொன்னாலை கோயிலில் குடிகொண்டிருக்கும் வரதராஜப்பெருமாள் என நினைத்து பெருமாளே இந்தச் சனியனிகளிட்டை இருந்து தப்பிவந்தால் இந்த வருசம் உனக்கு காவடி எடுக்கிறன் என்று நேர்த்தி வைப்பான்.
அடுத்ததாய் கதையின் நாயகன் முதல் தடைவை வெளிநாட்டிற்கு களவாக புறப்பட்டு பிடிபட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படுகிறார். அவரை இலங்கை விமான நிலையத்தில் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை செய்கிறார்கள் அப்பொழுது உனக்கு நியூட்டனை தெரியுமா என கேட்டபொழுது அவனும் ஜந்தாம் வகுப்பு விஞ்ஞான ரீச்சரும் இதே கேள்வியை தானே கேட்டவர் என்கிற வரியை படித்தபொழுது இரயில் என்னை மறந்து சத்தமாய் சிரித்துவிட்டேன். இப்படி பல எள்ளல்களை அள்ளி விட்டிருக்கிறார்.

இனி அவரின் கதா பாத்திரங்கள் என்று பார்த்தால் குண்டுப்பாப்பா பருத்த மார்புகளையுடைய நிலாமதி இவர் போராளிகளின் கைக்குண்டினை மார்புக்குள் ஒழித்து வைத்திருந்தது ஏற்புடையதல்ல என்று நண்பர் நந்தா தன்னுடைய விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தார். கைக்குண்டு என்றால் அந்தக்காலத்து ரி.என்.ரி அல்லது பென்ரலைற் குண்டுகளை மனதில் வைத்து அவர் எழுதியிருக்கலாம். ஆனால் சிறிய ரக கைக்குண்டுகள் M 26..57..61 MARK 3 a2 M 33 M 63 என்பன வெறும் 400 கிறாம் எடையுள்ள சிறிய சுற்றளவை கொண்ட கைக்குண்டுகள். இவற்றை மார்பு கச்சையினுள் கீழ்ப்புறமாக மறைக்கலாம் என்றே எண்ணுகிறேன். அது அருமையான படைப்பு..மகளின் மாதவிடாய் காலத்தில் வேறு வழிகளின்றி கோயிலில் அம்மனின் பட்டுத்துணியை களவெடுத்து பாவிக்கும் சுபத்திரை .நேரு ஜயா .கப்பலில் முதலில் இறந்து போகும் சின்னப் பெடியன் பெரிய ஜயா ஆகியோர் மனதை அழுத்தி செல்கின்றார்கள். இவை நாவலின் நிறைப்பக்கங்கள் என்றால் குறை பக்கங்கள் தேவி என்கிற மனப்பிறழ்வு பெண்பத்திரம் இந்திய இராணுவத்தால் வன்புனர்பு செய்யப்பட்டு கர்பப்பம் அடைகிறாள் அவளை சுட்டுக் கொலை செய்தவர்கள் யார் என்பதை சொல்வதில் ஒரு தளம்பல்..

அமுதன் எப்படி இயக்கத்தை விட்டு வெளியேறினான்என்பதில் தெளிவின்மை
அதே நேரம் ஈழத் தமிழரல்லாத தமிழர்களும் இருபது வருடங்களிற்கு முன்னரேயே புலம் பெயர்ந்து விட்டவர்களிற்கு இந்தியப்படை காலம் இடப்பெயர்வு என்பன என்பது பற்றி வெறும் செய்திகளியே அறிந்திருப்பார்கள். அவர்களிற்கு அவை பற்றி மேலதிக விளக்க குறிப்பக்களை கொடுத்திருக்கலாம். உதாரணத்திற்கு நியூட்டன் என்றால் புலிகளின் முக்கியமான புலனாய்வு போராளி என்பது எத்தனை பேரிற்கு தெரிந்திருக்கும் . அதனால் அவர்களும் சிரிக்கமுடியாமல் போயிருக்கலாம். அதே நேரம் சில விடையங்களை வேகமாக நகர்த்தியிருக்கிறார். இயக்கம் வெளியேறியது .சனங்கள் திரும்பவும் யாழ்ப்பாணம் போனார்கள். இராமலிங்கத்தை இயக்கம் சுட்டது.செம்மணியில் கிருசாந்தியின் சைக்கிளை இராணுவம் மறித்தது. என்பன.செய்தித் தலைப்புக்களை படிப்பது பேல இருக்கின்றது ஆயினும் அமுதன் என்கிற முன்னைநாள் விடுதலைப் புலிப் போராளியின் செயற்கை காலினை எரித்திய முன்னை நாள் போராளியான இத்திரிசிசிற்கு கிடைக்கச்செய்து கதையை முடித்த அந்த சிந்தனைக் கோர்வைக்கு ஒரு கைதட்டு

No Comment