மறந்த நாள்
ரெலிபோன் மணிஅடித்த சத்தத்தில் நல்ல நித்திரையில் இருந்த நான் திடுக்கிட்டு எழும்பி தட்டி தடவி ரெலிபோனை எடுத்து காதில்வைத்தபடி அனுங்கிய குரலில் கலோ என்றோன் மறு பக்கம் 'கலோ தம்பி 'அவ்வளவுதான் கட்டாகி விட்டது நேரத்தை பார்த்தேன் அதிகாலை 5 மணி ரெலிபோனில் நம்பரும் விழவில்லை இது ஊரிலை இருந்து அம்மான்ரை போனாத்தான் இருக்கும் நித்திரை தூக்கத்திலை சத்தமும் விழங்கேல்லை. பாதி தூக்கத்தில் கண்ணை திறக்காமலே யாரப்பா போனிலை என்றாள் மனிசி. யாழ்ப்பாணத்திலை இருந்து அம்மா போலை கட்டாயிட்டுது என்றேன்.
ம்...என்னபடி மற்றபக்கம் பிரண்டு படுத்து கொண்டாள்.திரும்ப போன் அடிக்கும் என பாதி தூக்கத்தில் கண்ணை மூடியபடி எதிர்பார்த்தேன். அடிக்கவில்லை சரி அம்மா ஏதும் அவசரத்திற்கு அடிச்சாவோ தெரியாது போனை தூக்கி கொண்டு போய் கோலுக்கை நிண்டு ஒருக்கா அடிச்சு பாப்பம் என்று நினைத்து.எழும்பி நடக்க வல கால் சின்ன விரல் பாதி திறந்திருந்த கதவிலை படாரெண்டு அடிபட்டு நெட்டி முறிஞ்ச சத்தமும் கேட்டது.அம்மா... என்று மெல்ல முனகியவாறு லைற்றை போட்டு பாத்தன் பாதிநகம் பிய்ந்து இரத்தம் கசிந்தது.அதோடை நித்திரையும் முறிஞ்சு போச்சுது. மெதுவாய் பிய்ந்த நகத்தை வெட்டிவிட்டு ஒரு பிளாஸ்ரரை சுத்தி கொண்டு. போனை அடிச்சன் போனில்"ஒப அமத்த அங்கய பற்றிக்சாரய நமத "யாரது சிங்களத்தி கதைக்கிறாள் என்ன ஒண்டும் விழங்கேல்லை எண்டு யோசிக்கதான் நீங்கள் அழைத்த இலக்கத்தை அடைய முடியவில்லை என்று தமிழிலை சொல்லிச்சிது.
ஒரு பத்து நிமிசம் அடிச்சு பாத்தன் திருப்ப திருப்ப அதையே சொல்லி கொண்டிருந்தது. கால் வலியோடை இப்ப சாதுவா தலையும் வலிக்கிற மாதிரி இருந்திது.காலங்காத்தாலை எழும்பியிருந்து திருப்ப திருப்ப கேட்க இது என்ன சுப்பிர பாதமா எண்டு நினைச்சு சரி ஏதும் அவசரமெண்டா திருப்பி எடுப்பினம் தானேஎன்று நினைச்சபடி போய் திரும்ப படுத்தன். நித்திரை வரேல்லை கட்டிலிலை அங்கை இங்கை பிரண்டபடி கொஞ்ச நேரத்தாலை நித்திரையா போனன். திடீரெண்டு மனிசி பதறியபடி என்னை அடிச்சு எழுப்பிச்சிது. என்னப்பா நான் வழைமை மாதிரி ஆறு மணிக்கு அலாரம் வைச்சனான் அடிக்கேல்லை ஏழுமணியா போச்சுது நீங்களே அலாரத்தை நிப்பாட்டினது அய்யோ எனக்கு வேலைக்கு நேரம் போட்டுது எழும்புங்கோ இனி பஸ் பிடிச்சு போக ஏலாது என்னை காரிலை கொண்டு போய் விட்டிட்டு வாங்கோ என்றபடி அவசரமாய் குளியலறையில் நுளைந்தாள்.
நான் தான் காலைமை போன் எடுக்கிற அவசரத்திலை மணிக்கூட்டு அலாமை மாறி அமத்தி போட்டன் போலை என்றபடி எழும்பி போய் இரண்டு தேதண்ணியை போட்டு ஒண்டை குடிக்கவும் வழைமை போலை வயிற்றை கலக்கியது ரொய்லற்றுக்கை குந்தவும் மனிசி ரொய்லற் கதைவை தட்டி "என்னப்பா என்ன செய்யிறியள்??" எண்டாள்.
பொறு நல்ல படம் ஒண்டு போகுது பாக்கிறன் குழப்பாதை.
உங்களுக்கு இந்த அவசரத்திலையும் நக்கல் எனக்கு தெரியும் நீங்கள் உதுக்குள்ளை போனால் ஒரு பேப்பரை முழுசா படிச்சு முடிச்சிட்டு தான் வெளியாலை வருவியள் எங்கை என்ன செய்யிறதெண்டு தெரியாத மனிசன் கெதியா வாங்கோ நேரம் போட்டுது.
பின்னை ரொய்லற்றுக்கை இருக்கிற மனிசனிட்டை கதவை தட்டி என்ன செய்யிறியள் எண்டா என்னத்தை சொல்ல.பெரும் பணக்காரனிலை இருந்து பிச்சை காரன் வரை நிம்மதியா கொஞ்ச நேரம் இருக்கிற இடம் இதுதான் இதுவும் அவசரமெண்டா என்ன செய்ய. என்றவாறு வெளியில் வந்து வெளிக்கிட்டபடி தேத்தண்ணி போட்டு வைச்சனான் குடிச்சனியா?
உங்களுக்கென்ன 10 மணிக்கு வேலை நல்லா மூசி மூசி நித்திரை கொண்டிட்டு ஆறுதலா எழும்பி போகலாம் எனக்கு 8 மணிக்கு வேலை. வேண்டாம் நேரம் காணாது இருக்கட்டும் பின்னேரம் வந்து சூடாக்கி குடிக்கிறன்.
எட போட்டு வைச்ச தேதண்ணியை குடி எண்டு சொன்னதுக்கு ஏனப்பா கோவிக்கிறாய் சரி சரி வா எனறபடி சப்பாத்தை போட குனிந்து காலை பார்த்தேன்.அடிபட்ட சின்ன விரலும் வீங்கி
எனது வலக்காலில் இரண்டு பெருவிரல்கள் இருந்தது.சப்பாத்து போட முடியாத அளவுக்கு வலி ஒரு மாதிரி சமாளிச்சு சப்பாதை போட்டு கொண்டு வெளியில் லிப்ற் இருக்குமிடத்திற்கு வந்தேன். அதன் கதவில் ஒரு கடதாசியில் " இது வேலை செய்யவில்லை " என்று எழுதி ஒட்டியிருந்தது. நான் மனிசியை பார்க்க பிறகென்ன பாக்கிறியள் அதுதான் எழுதி ஒட்டியிருக்கெல்லோ வேலை செய்யாதெண்டு
கெதியா படியாலை இறங்குவம் எண்றபடி மனிசி இறங்க தொடங்க நானும் பினாலை. 4 ம் மாடியிலிருந்து படிவழியாக கால் வலியெடுக்க தாண்டி தாண்டி இறங்கி கொண்டிருக்க.மனிசி என்னை திரும்பி பாத்துஏனப்பா தாண்டுறியள்??
இல்லையப்பா வாழ்க்கையிலை என்ன கஸ்ரம் வந்தாலும் தாண்ட பழகவேணும் எண்டு எனக்கு சின்னவயசிலை என்ரை அம்மம்மா சொல்லி தந்தவா அதுதான் தாண்டுறன்.
இப்ப என்னை வேலையிடத்துக்கு காரிலை கொண்டு போய் விட சொன்னது பெரிய கஸ்ரமோ
அய்யோ அதில்லையப்பா காத்தாலை கதவு காலிலை அடிச்சு போட்டுது அதுதான் தாண்டுறன் சரி சரி நீ நட என்றபடி மனிசியை வேலையிடத்தில் கொண்டு போய் விட்டு விட்டு நேரத்தை பார்த்தேன் 8.30 எனக்கு 10மணிக்குதான் வேலை. திரும்ப வீட்டிற்கு போய் போக நேரம் காணாது. சப்பாத்து இறுக்க காலும் வலி கூடிகொண்டே போக சிற்றிக்குள்ளை(நகரமத்தி) போய் செருப்பு கடையிலை
ஒரு செருப்பு வாங்கி போட்டால் நல்லது பிறகு அங்கையிருந்து அப்பிடியே கைவே (அதி வேக வீதி)எடுத்து வேலைக்கு போகலாம் என நினைத்து சிற்றிக்குள்ளை போய் செருப்பு கடையடிக்கு போட்டன் ஆனால் கார் விட இடம் கிடைக்கேல்லை சரி ஒடிப்போய் ஒரு செருப்பை எடுத்து கொண்டு ஒடியாறதுதானே எண்டு நினைச்சு காரை எமேஜென்சி சிக்னலை போட்டு நடை பாதையிலை விட்டிட்டு ஓடிப்போய் கடைக்குள்ளை புகுந்தன்.
கால்வலி மாறும் மட்டும் நாலைஞ்சு நாளைக்கு போட்டிட்டு எறியிறதுதானே எதுக்கு விலையான செருப்பு வாங்குவான் என்று நினைத்து 9.90யுரோக்கு ஒரு செருப்பை வாங்கி கொண்டு ஓடியந்து பாத்தன் அதுக்கிடையிலை பொலிஸ்காரன் வந்து 30யுரோ தண்டம் எழுதிவைச்சிட்டு போய்கொண்டிருந்தான். சரி என்ன செய்யிறது 39.90யுரோக்கு செருப்பு வாங்கினது எண்டு நினைச்சு கொள்ளுவம் என்று நினைத்தபடி காரை கிளப்பினேன் நான் நின்ற இடத்திலிருந்து எனது வேலையிடம் ஒரு 50 கி்.மீ தூரம் வரும் கைவேயிலை போனால் அரை மணித்தியாலத்திலை போயிடலாம் எனவே காரை கைவேயில் ஏத்தி ஒரு 10 கி. மீ தூரம் ஒடியிருப்பன் முன்னால் போன வாகனங்கள் எல்லாம் எமெஜென்சி சிக்னலை போட்டபடி மெதுவாக ஓடி பின்னர் அப்படியே வீதியில் எல்லாம் அசையாமல நின்று விட்டன.
சரி கிழிஞ்சுது போ ஏதோ விபத்து பேலை காரை கைவேயிலை திருப்பி கொண்டா ஓட ஏலும் கொஞ்ச நேரத்திலை ஓட வெளிக்கிட்டா சரி. நேரத்தை பார்த்தேன் மணி 9.30 ஆகியிருந்தது சரி என்ன நடந்திருக்கும் எண்டு றேடியொவிலை TRAFIC F.M கேட்டா தெரியும் என நினைத்து சி.டி யிலை போய் கொண்டிருந்த "எங்கே செல்லும் இந்த பாதை " தமிழ்பாட்டை நிறுத்தி விட்டு TRAFIC F.M மை போட்டேன் அதில் "குட்பாய் மை லவ்வர் குட்பாய் மை பிறெண்ஸ்" என்று பாட்டு போய் கொண்டிருந்தது.
அட போய் தொலையடா இப்ப செய்தியை போடுவியா என்று நினைக்க பாட்டை நிறுத்தி செய்தி போனது பெரிய லொறி ஒண்டு விபத்திற்குள்ளாகி வீதியிலை குறுக்கை பிரண்டு போய்கிடக்கு அதலைதான் 10 கி.மீ தூரத்துக்கு வாகன நெரிசல் என்று அறிவிச்சாங்கள்.அட அந்த லெறி றைவருக்கு என்ன நடந்திருக்கும் பாவம் காயப் பட்டானா?? அல்லது போயிட்டானா என்று ஒரு நல்ல பாவப்படும் சிந்தனை கூட எனக்கு வரேல்லை உடைன நான் நினைச்சன் அட பிரண்டதுதான் பிரண்டான் பாதையிலை ஒரு ஓரமா பிரண்டிருக்க கூடாதா.
நடு றோட்டிலை கவிண்டு இப்ப எனக்கு வேலைக்கும் போக ஏலாமல் போட்டுது என்று நினைச்சபடி சரி முதலாளிக்கு போன் அடிச்சு விபரத்தை சொல்லுவம் என்று நினைச்சபோததான் நான் காலை அவசரத்தில் கைதொலைபேசியை கையை விட்டு விட்டு வந்தது ஞாபகத்தக்கு வந்தது. இனியென்ன போய் முதலாளியும் தாறதை வாங்குவம் என்றபடி எறும்பை விட மெதுவாக காரை ஓடிக்கொண்டிக்க என்ரை கார் கணணி பேசியது "உங்கள் வாகனத்தில் எரிபொருள் குறைந்தளவே உள்ளது " அப்பதான் திடுக்கிட்டு பார்த்தேன் மஞ்சள் லைற் எரிந்து கொண்டிருந்தது.
இப்ப எதுவுமே செய்யிற மாதிரி இல்லை சாதாரணமா ஓடினால் இன்னுமொரு 10 கி.மீ லை ஒரு பெற்றொல் செற் இருக்கு தப்பிடலாம் ஆனால் இப்பிடி ஊர்ந்து கொண்டு போனால் நடு றோட்டிலைதான் நிக்கவேணும் எதுக்கும் கடைசி லைனை பிடிச்சு ஓடினால் பெற்றோல் முடிஞ்சு கார் நிண்டாலும் அப்பிடியே கரையிலை நிப்பாட்டலாம் எண்டு நினைச்சு ஒரு மாதிரி கடைசி லைனுக்கு வந்திட்டன் ஆனால் நேரம் 10 மணியையும் தாண்டிவிட்டது அரை மணித்தியாலத்திலை ஒரு கி.மீ தூரம்தான் ஓடியிருப்பன் கார் மீண்டும் கதைத்தது " உங்கள் எரி பொருள் தீர்ந்து விட்டது இயந்திரத்தை நிறுத்தவும்" என்று இறுதியாய் கதைத்தது் சரி நான் நினைச்சபடி நடு றோட்டுத்தான் இண்டைக்கு.
காரை ஓரமாய் நிறுத்தி விட்டு அருகிலிருந்த S.O.S போனில் அழைத்து விபரத்தை சொன்னேன்.நிங்கள் நிற்கின்ற பகுதியில் வாகன நெரிசலாய் இருப்பதால் பாதை தெளிவானதும் உதவியாளர் எரி பொருளுடன் வருவார் என்று சொல்லி கார் என்ன கலர் அதின்ரை நம்பர் பெற்றோலா டீசலா என்ற விபரம் எல்லாம் எடுத்து விட்டு நன்றி வணக்கம் சொன்னார்கள். 11.30 தாண்டிவிட்டது எந்த வாகனமும் அசையவில்லை வெய்யில் ஏற ஏற தண்ணி தாகமும் எடுத்தது தண்ணி போத்தல் ஏதாவது இருக்குமா என்று கார் டிக்கியைபோய் திறந்து பார்தேன் ஓயில் கான் தான் இருந்தது. இதே ஊராய் அல்லது இந்தியாவாய் இருந்தால் செய்தி கேள்வி பட்டதும் இளனி சோடா ஏன் தோசை மசாலை வடை கூட கொண்டந்து விக்க தொடங்கியிருப்பாங்கள் இது கண்டறியாத வெளி நாடு ஒண்டும் இல்லை நடு றொட்டிலை காய வேண்டிகிடக்கு எண்டு நினைச்சன்.
ஒரு மாதிரி 11.30மணியளவிலை றோட்டு கிளியராகி பெற்றொலும் வந்து வேலைக்கு போய் முதலாளியிட்டை பம்மினபடி மன்னிப்பு கேட்டு நடந்ததை நடிச்சு காட்டி காலவலியோடை வேலையையும் முடிச்சிட்டு பின்னேரம் வீட்டை வந்து விரலிலை இரந்த பிளாஸ்ரரை களட்டிஎறிஞ்சிட்டு குளிப்பம் எண்டு குளியலறைக்கை புகுந்து தண்ணியை திறந்திட்டு தலையை நீட்ட வீட்டு போன் விடாமல் அடிச்சிது அட ஆரெண்டு பாப்பம் எண்டு துவாயை எடுத்து சுத்தி கொண்டு படுக்கையறைக்கு ஓடியந்தன் மீண்டும் அதே கதவு அதே இடத்தில் அச்சு பிசகாமல் படாரெண்டு அடித்தது. அய்யோ என்றபடி வாயில் வந்ததையெல்லாம் திட்டி கதவை எட்டி உதைந்து விட்டு போனை எடுத்து கலோ என்றேன் மறு பக்கம் அம்மா
" தம்பி காத்தாலை இருந்து உனக்கு அடிச்சு கொண்டேயிருக்கிறன் லைன் கிடைக்கேல்லை இண்டைக்கு உன்ரை பிறந்த நாள் அல்லோ அததான் வாழ்த்து சொல்ல அடிச்சனான் பிறந்த நாள் வாழ்த்துகள் எப்பிடி பிறந்த நாள் நல்லா போச்சுதோ "
ஓமம்மா அந்த மாதிரி போச்சுது என்று சொல்லி கொஞ்ச நேரம் கதைத்து விட்டு போனை வைத்தேன். அப்போதுதான் தெரியும் காத்தாலை போன் வந்ததிலை இருந்து நடந்த குளப்பத்திலை எனக்கு இண்டைக்குஎன்ரை பிறந்தநாள் எண்டதே மறந்து போச்சு.மீண்டும் போய் குளித்த விட்டு வந்து மீண்டும் கால் விரலில் ஒரு பிளாஸ்ரரை ஒட்டிகொண்டு கொஞ்ச நேரம் படுக்கலாமென நினைக்க மனிசி வேலை முடிந்து வந்து கதவை திறந்தபடி "என்னப்பா இண்டைக்கு உங்கடை பிறந்த நாளெல்லோ நான் உங்களுக்கு ஒரு சேட்டும் வாங்கி வைச்சிருந்தனான் காலைமை நேரம் பிந்தினதாலை தர ஏலாமல் போச்சுது இந்தாங்கோ போட்டு பாருங்கோ" என்று சேட்டை நீட்டியபடி சரி காலைமை காலிலை ஏதோ அடிச்சதெண்டனிங்களல்லோ இப்ப எப்பிடியிருக்குஎன்றாள் நானும் சேட்டை போட்டு பார்த்தபடி" பட்ட காலிலேயே படும்" எண்டவும் மனிசி ஒன்றும் புரியாமல் என்னை பாத்தபடி இந்த மனிசன் எப்பவும் இப்பிடித்தான் நான் ஒண்டு கேட்டா தாணெண்டு சொல்லும் என்றபடி தொலை காட்சியை போட்டாள்.
skip to main |
skip to sidebar
விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்
Back on top ^
created by Nuvio | Webdesign
அவலங்கள் © 2008 Ken ahlin | Converted to XML Blogger Template by ThemeLib
நல்ல அனுபவப் பதிவு. :)
நன்றி மலைநாடான் எல்லாம் ஒரு அனுபவம்தான் உங்களிற்கும் காலிலை கதவு அடிச்சிருக்கு போலை