Navigation


RSS : Articles / Comments


அன்று சிந்திய ரத்தம் தொடர் ....

2:00 PM, Posted by sathiri, No Comment

அன்று  சிந்திய ரத்தம் ..
புதிய தலைமுறை  வார இதழுக்காக ..

சிறையில் இருந்த கருணாமீது மனிதவுரிமை மீறல்,யுத்தக் குற்றம் ,சிறுவர்களை படையில் இணைத்த சிறுவர் துஷ்பிரயோக குற்றம் என பல வழக்குகள் பாயும் என மனிதவுரிமை ஆர்வலர்களும் புலி ஆதரவாளர்களும் ஆவலோடு காத்திருக்க பிரித்தானியாவின் உளவமைப்பான M16 இன் Secret Intelligence Service (SIS) அதிகாரி ஒருவரோடு இணைந்து ஒரு ஸ்ரீலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவரும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய சில நாட்களிலேயே கருணா மீண்டும்  ஜூலை 2, 2008 புதன்கிழமை, இலங்கைக்கு திருப்பி அனுப்பப் படுகிறான்.இலங்கை சென்ற கருணாவுக்கு  பெரும் வரவேற்பு கொடுத்த மகிந்தா வேண்டிய வசதி வாய்ப்புகள் அனைத்தும் செய்து கொடுக்கிறார் .அடுத்தடுத்த நாட்கள் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சே, முப்படைத் தளபதிகள் அனைவரோடும் அலோசனைக் கூட்டம் தொடங்குகிறது.புலிகளை அழித்தொழிப்பதற்கான திட்டங்கள் தீட்டப் பட்டு நகர்வு வியூகங்களை வகுத்துக் கொடுக்கத் தொடங்கிய கருணா மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொன்ன விடயம் என்னவெனில் புலிகளுக்கு  எதிரான  நகர்வில்  எந்தப் பெரிய பிரச்னை வந்தாலும் எந்தப் பெரிய அழுத்தம் வந்தாலும் புலிகள் முற்று முழுதாக அழிக்கப் படும்வரை ஒருநாள் ,ஒரு மணி நேரம் மட்டுமல்ல ஒரு வினாடி கூட தாக்குதல் நிறுத்தப் படக்கூடாது.அது தாரை ,வான் ,கடல் என்று இரவு பகலாக எதோ ஒரு மார்க்கமாக தொடர்ந்துகொண்டே இருக்கவேண்டும் ஒரு நிமிட தாக்குதல் நிறுத்த இடைவெளியிலும் புலிகள் மீள இணைந்து புதிய தாக்குதல் திட்டங்களை வகுத்து விடுவார்கள்.எனவே காயமடையும் படையினரை களத்திலிருந்து அப்புறப்படுத்தி உடனுக்குடன் புதிய படையினர்  முன்னரங்குக்கு அனுப்பப் பட்டுக் கொண்டிருக்கவேண்டும் என்று சொல்லி முடித்தவன்.உடனடியாக தற்போது புலிகளின்  படையணிகள் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் வரைபடங்களை தருவித்து ஆராய்ந்தவன் இதுவரை காலமும் புலிகளுக்காக  இலங்கைப்படையினர் மீது பல வெற்றிகரமான ஊடறுப்பு தாக்குதல்களை நடத்தியவன் முதன் முதலாக புலிகள் அணிகளுக்கு எதிராக ஊடறுப்பு தாக்குதல்களை நடத்த இலங்கைப்படையினருக்கு திட்டங்களைப் போடத் தொடங்கினான்.

புலிகளின் அணிகள்ஊடறுக்கப் பட்டு அவர்களின் முக்கிய ஆயுதக் களஞ்சியங்கள்,வெடிபொளுள் கிடங்குகள் ,ஆட்லெறி பீரங்கி நிலைகள் ஒவ்வொன்றாக அழிக்கப்படத் தொடங்கியது மட்டுமல்லாமல் புலி முக்கியஸ்தர்களையும் ஊடறுப்பு தாக்குதல் அணிகளால்  குறிவைக்கப் பட்டனர் .அப்படி அவர்களால் குறிவைத்து கிளைமோர் தாக்குதல் மூலம்   புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் கர்னல் சார்லஸ் என்பவர் கொல்லப் பட்டார் கொழும்பில் பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்திய  இவரது இழப்பும் புலிகளுக்கு பேரிழப்பு என்று சொல்லலாம். புலிகள் படையினர் மீது திட்டமிட்ட தாக்குதல் எதுவும் நடத்தாமல் தற்காப்பு தாக்குதல் மட்டுமே நடத்தியபடி பின்வாங்கிக் கொண்டிருந்தனர்.ஆனால் எங்காவது ஒரு இடத்தில்  நிறுத்தி படையினர் மீது திரும்ப ஒரு பாய்ச்சலை நிச்சயம் நடத்துவார்கள் அதற்கான திட்டம் அவர்களிடம் இருக்கும் .அந்த இடம் புலிகளின்  நிர்வாக தலைநகரான கிளிநொச்சி நகராக இருக்கும் என்று எண்ணிய தமிழ் மக்களும் பெருமளவாக புலிகளின் பின்னாலேயே இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்தார்கள்.பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள்  மட்டுமல்ல உலகத் தமிழர்கள் அனைவருமே  புலிகள் கிளிநொச்சியோடு தங்கள் பின்வாங்கலை நிறுத்தி திருப்பித் தாக்குவார்கள் என்றுதான் நினைதிருந்தர்கள்.அனைவரும் எதிர்பார்த்திருந்தது போல கிளிநொச்சி நகரை இராணுவம் நெருங்கிக்கொண்டிருந்தது.அதற்கிடையில் புலிகளோடு சண்டையிடுவது எமது படை வீரர்க்களே அப்படியிருக்க  மகிந்தா அரசு தேவையில்லாமல் எதற்காக ஒரு முன்னாள் புலி உறுப்பினருக்கு சகல வசதிகளும் செய்து கொடுத்து பாதுகாப்பும் கொடுகிறார்கள் என்று சிங்கள எதிர் கட்சிகள் குடைச்சல் கொடுக்கத் தொடங்கவே உடனடியாக தேசியப் பட்டியல் மூலம் 2008 அக்டோபர் 7 ஆம் நாள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சராக கருணாவை அமர்த்தி எதிர் கட்சிகளின் வாயை அடைத்து  அழகு பார்த்தார் மகிந்தா.

இலங்கை இராணுவம் கிளிநொச்சி நகரை நெருங்கும் வரை புலிகள் மரபுவழி இராணுவமாகவே தொடர்ந்தும் போரிட்டுக்கொண்டேயிருந்ததை இராணுவத் தளபதிகளும் கருணாவும் கவனிக்கத் தவறவில்லை.அதற்கான காரணம் கட்டுரையில் முன்னரே கூறப்பட்டது போல் புலிகளின் தளபதிகள் சொகுசு வாழ்க்கைக்கு பழக்கப் பட்டிருந்தனர் என்பதோடு மீண்டும் கெரில்லா வாழ்க்கைக்கு திரும்ப அவர்கள் தயாராயிருந்திருக்கவில்லை அதே நேரம்  கருணா பால்ராஜ் ஆகியோருக்கு அடுத்த பெரும் நம்பிக்கை நட்சத்திர தளபதிகளாக இருந்த பானு ,தீபன் ,ஜெயம் ,துர்க்கா,ஜெயம்  போன்றவர்கள் கூட திட்டமிட்ட தாக்குதல் எதையும் நடத்தாமல் தற்காப்பு தாக்குதல்களை மட்டுமே நடத்தியபடி பின்வாங்கிக்  கொண்டிருந்தனர்.கிளிநொச்சியை வீழ்த்தவும் அது வீழ்த்த பின்னர்  புலிகள் தங்களை தற்காத்துக் கொள்ள காடுகளுக்குள் இறங்கி கெரில்லாக்களா மாறி விடும் அபாயமும் இருந்தது .பெரும் படை பலத்தோடு தாக்குதல் நடத்திய இந்தியஇராணுவத்திடமிருந்து சிறு குழுவாக இருந்த புலிகளை மணலாற்று காடுதான் பாதுகாத்தது என்பது கடந்த கால வரலாறாக இருந்தது எனவே  இது வரை மரபு இராணுவமாக போரிட்டுக் கொண்டிருந்த இலங்கை இராணுவத்தை கெரில்லாக்களாக மாற்ற வேண்டிய தேவை அவசியமாவிருந்தது.உடனடியாகவே இரண்டு பட்டாலியன் ( சுமார் ஐந்தாயிரம்  )இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப் பட்டு  கெரில்லாக்கலாக  காடுகளுக்குள் இறக்கப் பட்டதோடு புலிகளை சுற்றி இது புலிகளுக்கான சவப்பெட்டி என்கிற குறியீட்டோடு   "ப " வடிவில் பெட்டியடிக்கப் பட்டார்கள்.இப்போ இலங்கை இராணுவம் கெரில்லாக்களாகவும் புலிகள் மரபு இராணுவமாகவும் போரிட்டுக்கொண்டிருந்தார்கள்.எல்லாப் பக்கமும் ஊடறுத்து நடத்தப் பட்ட கெரில்லா தாக்குதல்களை புலிகள் தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டாடினார்கள்.3திகதி தை மாதம் 2009 ஆண்டு அதிகாலை  புலிகளின் பாரிய மண் அணையை உடைத்துக்கொண்டு இராணுவம் உள் நுழைந்த போது அவர்களுக்கு ஆச்சரியம்.. எந்த எதிர்ப்பும் இல்லாமல் புலிகள் முழுவதுமாக நகரை விட்டு வெளியேறியிருந்தார்கள்.

அங்கிருந்த பெருமளவான பொது மக்கள் இராணுவத்திடம் சரணடையத் தொடங்குகிறார்கள்.
கிளி நொச்சி நகர் வீழ்ந்த பின்னர் புலிகள் மீது இருந்த நம்பிக்கை  உள்ளூர் மக்களிடம் பெருமளவு தகர்ந்து போனது.இதற்கு மேலும் புலிகளை நம்பி பின்னல் செல்ல முடியாது என முடிவெடுத்தவர்கள் கூட்டம் கூட்டமாக சரணடையத் தொடங்குகிறார்கள்.புலிகளும் தாங்கள் காடுகளுக்குள் இறங்க முடியாது பெட்டியடிக்கப் பட்டுள்ளது தெரியவந்தது .அவர்கள் பலஇடங்களில் உடைப்புகளை ஏற்படுத்தி காடுகளுக்குள் நுழையும் போதெல்லாம் காடுகள் முழுதும் இராணுவத்தினர் பரவலாக கெரில்லாக்களாக மறைந்திருந்து தாக்குதல்களை தொடுத்தார்கள்.அதனாலும் பெரும் இழப்புக்களை புலிகள் சந்தித்தது மட்டுமல்லாமல் இராணுவத்தினர் எங்கெங்கு மறைந்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கவே முடியாமல் திண்டாடினார்கள் .எனவே அவர்கள் கட்டுப் பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளால் தொடர்ந்தும் முல்லைத்தீவு நகரை நோக்கி தலைமையையும் நகர்த்திக்கொண்டு  பின்வன்குவதைத் தவிர அவர்களுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை.அதே நேரம் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி நகரமும் அதுவாகத்தான் இருந்தது .அதட்குப்பின்னல் வெள்ளை முள்ளிவாய்க்கால்,வட்டுவாகல் என்கிற கடற்கரை பிரதேசமே இருந்தது.அதட்குமப்பால் கடல் முழுதும் இலங்கைக் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் ரோந்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். கிளிநொச்சி நகரை புலிகள் கைவிட்டு விட்டது மட்ட்டுமல்ல அதோடு அவர்களது கட்டமைப்புகளும் ஆட்டம் காணத் தொடங்கியிருந்தது.அவர்களது சிவில் நிருவாகத் துறைகளான  காவல்த்துறை ,நீதி,நிதித்துறை ,வெளியீட்டுப்பிரிவுப் மட்டுமல்லாது அரசியல்துறையும் கலைக்கப்பட்டு அனைவரையும் ஆயுதம் தூக்கி போராட கட்டளையிட்டார்கள் .இராணுவம்  மக்களையும் புலிகளையும் சரணடையுமாறு ஒலிபெருக்கியில் தொடர்ந்து அறிவித்துக்கொண்டேயிருந்தார்கள்.பொதுமக்கள் சாரை சாரையாக சரணடையத் தொடங்கவே அவர்களுடன் சேர்ந்து புலிகளின் சிவில் நிருவாக கட்டமைப்பினரும் பெருமளவில் சரணடையத் தொடங்கினார்கள்.நிலைமை இப்படியே போனால் புலிகள் தனிமைப் படுத்தப் பட்டு விரைவில் அழித்து முடிக்கப் படுவார்கள் என நினைத்து எவரையும் சரணடைய விடக்கூடாது என்கிற முடிவை புலிகள் அமைப்பில் ஒரு சாரார் எடுக்கின்றார்கள் அவர்களில் முக்கியமானவர் பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் அன்டனியே தான் அந்த முடிவை கடுமையக்கினார்.

அதற்கு சில தளபதிகள் எதிப்பும் தெரிவித்தார்கள்.இதனால் புலிகளின் இராணுவக் கட்டமைப்புக்குள்ளும் குழப்பங்கள் தொடங்கியதோடு அவர்களுக்குள் பிரச்சனைகளும் தொடங்கியது.உலகிலேயே மிகவும் கட்டுப்பாடான அமைப்பு எனப் பெயரெடுத்த புலிகள் அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதன் கட்டுப்பாடுகளை இழந்து ஆட்டம் காணத் தொங்குகிறது.சரணடையும் மக்கள் மீது அவர்கள் தாக்குதல்களும் நடத்தத் தொடங்குகிறார்கள்.
தொடர்ச்சியாக புலிகள் ஏதாவதொரு தாக்குதல் முயற்சியை தொடங்கும் போதெல்லாம் எப்படியோ படையினருக்கு செய்திசென்று விடுகிறது.அந்த இடத்தை குறிவைத்து அவர்கள் தாக்குதலை நடத்தி புலிகளின் தாக்குதலை முறியடித்து விடுகிறார்கள்.மிக இரகசியமான தாக்குதல்  செய்திகள்  எப்படி எதிரிக்கு உடனுக்குடன் கசிகிறது எப்படி அதை தடுப்பது என்பதும் புலிகளுக்கு இப்போ பெரும் பிரச்சனை. நிச்சயமாக அவை புலனாய்வுப்பிரிவை சேர்ந்தவர்களால்தான் கசிகிறது என்பது தெரிந்திருந்தது  .இந்த விடயத்தில் பொட்டம்மானை பிரபாகரன் குற்றம் சுமத்த ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாய் தர்க்கம் நடடக்கும் அளவுக்கு விவகாரம் சென்றிருந்தது.புலிகளின் புலனாய்வுப் பிரிவில் கட்டுரையில் ஏற்கனவே குறிப்பிட்ட படி கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களே அதிகமாக இருந்தார்கள்.கருணா பிரிவின் பின்னர் பலர் இரட்டை உளவாளிகளாக மாறிவிட்டிருந்தனர்.புலிகளின் மற்றைய பிரிவுகளுக்குள் ஊடுருவியிருந்த எதிரிகளின் உளவாளிகளை  புலனாய்வு பிரிவினர் கண்டு பிடித்து களையெடுத்த காலம் போய் இப்போ புலனாய்வுப் பிரிவுக்குள் எதிரிக்கு தகவல் கொடுப்பவனை கண்டுபிடிக்க வேண்டிய நிலைமை.அது முடியாத காரியம் என்பதால் புலனாய்வுப்பிரிவும் கலைக்கப் பட்டு அவர்களும் களமுனைக்கு அனுப்பப் பட்டார்கள்.அதன் பின்னர் புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள்.அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு செய்துகொள்ள சிலநாட்கலாவது யுத்தத்தை நிறுத்தவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் படுவார்கள் அந்த அவகாசத்தை பயன்படுத்தி ஒரு ஊடறுப்பினை செய்து காடுகளுக்குள் சென்று விடலாம் என்பது புலிகளின் திட்டமாக இருந்தது.
ஜனவரி 25, 2009 அன்று  சுமார் 5 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட  நிரம்பி வழிந்த கல்மடுக் குளத்தின் அணைகளை  இராணுவம் முன்னேறி வரும் விசுவமடுப்பக்கமாக புலிகள் தகர்க்கிறார்கள்.

ஒரு மினி சுனாமியைப்போல பாய்ந்த சென்ற வெள்ளத்தில் ஏற்கனவே தயார் நிலையிலிருந்த சிறியகடற்புலிப் படகுகளின் புலிகளும் தாக்குதலை நடத்த  சுமார் இரண்டாயிரம் இராணுவத்தினர்  கொல்லப் பட்டனர் .இது போன்றதொரு விபரீதத்தை இலங்கை இராணுவம் எதிர்பார்காததால் புலிகள் எதிர்பார்த்தது போலவே நிலை குலைந்து போனார்கள் என்பது உண்மை.பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய கைகளை பிசைந்தபடி கருணாவைப் பார்த்தார்.எதிர்பார்க்காத தாக்குதல்தான் ஆனாலும் புலிகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுவிடக்கூடாது அப்படி நிறுத்தினால் அவர்கள் நோக்கம் நிறைவேறி விடும் வேறு படை வளங்களை பாவித்து தாக்குதல் தொடர்ந்தும் நடக்கட்டும் என்றன்.இறந்த பெருமளவான படையினரை தாண்டிய படியே வான்படையின் உதவியோடு புதுக்குடியிருப்பை நோக்கி இராணுவத்தினர் தாக்குதலை தொடர்ந்தார்கள்.இதனை புலிகள் எதிர்பார்க்கவில்லை.
களநிலைமைகள் இப்படிப் போய்க்கொண்டிருக்கும்போது யுத்தத்தை நிறுத்துமாறு வெளிநாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கத் தொடங்கியிருந்தது.ஆரம்பத்தில் புலிகளின் அனைத்துலகச் செயலகத்தின் ஏற்பாட்டில் ஐய்ரோப்பவில் இயங்கும் அவர்களது கோவில்களில் சிலர் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்கள்.நாங்களும் போராட்டம் நடத்துகிறோம் என்று அவற்றை படம் பிடித்து வன்னிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.ஆனால் வன்னியில் மக்களின் இழப்பு அதிகரிக்க அதிகரிக்க மக்கள் தாங்களாகவே வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கினார்கள்.மக்களின் உணர்வுகளை தூண்டி அவர்களை போராட வைப்பதற்காக கொல்லப்படும் மக்களின்  வீடியோக்களும் படங்களும்  பல கோணங்களில் எடுத்து வன்னியிலிருந்து அனுபிக்கொண்டிருந்தர்கள்.அதே நேரம் இதுதான் இறுதி யுத்தம் அனைவரும் உதவுங்கள் என்று பெருமளவான நிதி சேகரிப்பையும் அனைத்துலகச் செயலகத்தினர் செய்துகொண்டிருந்தனர்.புலிகளைப் பலப்படுத்தி எப்படியாவது எம் மக்களை அழிவிலிருந்து காப்பாற்றி விடலாமென அங்கலாய்ப்போடு இலட்சக் கணக்கில் வங்கிகளில் கடன் எடுத்துக் கொடுத்தவர்களும் உண்டு .இறுதி யுத்தத்துக்கு என சேகரித்த பல மில்லியன் யுரோக்களில் ஒரு சதம் கூட வன்னிக்கு அனுப்பப் படாமல் வெளிநாடுகளில் நிதி சேகரித்தவர்கலாலேயே அனைத்தும் அமுக்கப்பட்டது என்பது வேறு கதை.அதே நேரம் வெளி நாடுகளில் நடந்த போராட்டங்களில் கூட பல சிறுபிள்ளைத்தனமான மக்களை முட்டாள்களாக்கும் வேலைகளும் நடக்கத்தான் செய்தது.

சுவிஸ் நாட்டில் புலிகளின் பரப்புரைப் பொறுப்பாளரான அம்பலவாணர் என்பவர் வன்னியில் உடனடியாக யுத்த நிறுத்தம் கொண்டுவர வேண்டும் எனவே சாகும்வரை உண்ணாவிரதம் என அறிவித்து போராட்டத்தில் குதித்தார் .தமிழ் ஊடகங்களில் எல்லாம் செய்திகள் வெளியானது இரண்டு நாளுக்கு மேல் அவரால் தாக்குப்பிடிக்க முடியாமல் போகவே அவரது மனைவியே காவல்துறைக்கு போனடித்து கணவன் சாப்பிடாமல் தற்கொலை முயற்சியில் இறங்கியிருக்கிறார் அவரை காப்பாற்றுங்கள் என்று சொல்லவும் அங்கு விரைந்த பொலிசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கிக் கொண்டுபோய் வைத்தியசாலையில் போட்டுவிட்டு போய் விட்டார்கள்.அதேபோல லண்டனில் பரமேஸ்வரன் என்பவரும் சாகும்வரை உண்ணாவிரதம் என்று தொடங்கினார் இவர் கொஞ்சம் அதிகநாட்கள் உண்ணாவிரதம் இருந்தாலும்  யுத்தத்தை நிறுத்த பிரித்தானிய அரசு சார்பில் வழங்கப்பட்ட சில உறுதி மொழிகளையடுத்து உண்ணாவிரதம் கை விடப்படுகிறது என அறிவித்தார் .ஆனால் யுத்தமும் நிறுத்தப்படவில்லை புலிகள் அழிக்கப்பட்டு இத்தனை வருடங்கள் கழிந்தும் பிரித்தானிய அரசு சார்பில் வழங்கப்பட்ட உறுதிமொழி என்ன என்றும் அவர் வாய் திறந்து சொல்லவும் இல்லை சொல்லப் போவதுமில்லை  .பிரான்ஸ்  ஜேர்மனி கனடா என சாகும்வரை எல்லா நாடுகளிலும் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தவர்களின் நிலைமைகளும் இதே நிலைமைதான் அரசு தந்த உறுதிமொழிகளை அடுத்து தங்கள் உண்ணாவிதங்களை முடிதுக்கொண்டார்கள்.
ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரை உண்ணாவிரதம் என்பது சிலநாட்களாக இருந்தால் அது உடல் எடையைக் குறைப்பதற்கான முயற்சி அதுவே தொடர்ந்தால் தற்கொலைக்கான முயற்சி.உண்ணாவிரதத்தை ஒரு போராட்ட வடிவமாக அவர்கள் பார்த்ததில்லை.அதனால்தான் மேற்குல நாடுகளில் போராட்டங்களை நடத்துபவர்கள் யாரும் உண்ணாவிரதம் இருப்பதில்லை.எனக்குத் தெரிந்து உலகத்திலேயே ஒரு பொது இலட்சியத்துக்காக அதன் இலக்கை குறிவைத்து ஒரு சாகும்வரை உண்ணா விரதமிருந்து இலட்சியதுக்ககவே உயிரை விட்டவர்கள் இரண்டு பேர்தான் .அந்த இருவருமே ஈழத்தில் இந்தியப்படை காலத்தில் தமிழ்மக்களின் உரிமைகளுக்காக உண்ணா விரதமிருந்து உயிரை விட்டவர்கள் அதில் ஒருவன் திலீபன் .அடுத்தது அன்னை பூபதி .இதில் அன்னை பூபதி கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் என்பதாலேயோ என்னமோ கொஞ்சம் கொஞ்சமாக அவரது பெயர் மறக்கடிக்கப்பட்டு தீலீபன் மடுமே நினைவுகளில் கடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறான் என்பதையும் குறிப்பிட்டேயாகவேண்டும் .
வெளிநாடுகளில் இப்படியான போராட்டங்கள் தொடங்கும்போதே தமிழகத்திலும் போராட்டங்கள் தொடங்கியிருந்தது முத்துக்குமாரின் மரணமும் அவன் எழுதிவைத்துவிட்டுப் போன கடிதமும் தமிழ்நாட்டு மக்களிடம் குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் பெரியதொரு எழுச்சியை உண்டுபண்ணியிருந்தது.இந்த மக்கள் எழுச்சியை தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே தாங்கள் அறுவடை செய்துவிடவேண்டும் என்கிற நோக்கில் போட்டி போட்டுக்கொண்டு அதனை சிதைத்து அழிதுவிட்டிருந்தனர்.

அதில் எந்த கட்சிகளுமே சளைத்தவர்கள் அல்ல என்று நிருபித்திருந்தார்கள்.முத்துக்குமார் மட்டுமல்லாது ஈழத்தமிழருக்காக யுத்தத்தை நிறுத்தச்சொல்லி தமிழ்நாட்டில் சுமார் பதின்முன்று பேர் தீக்குளித்து இறந்து போனார்கள்.அவர்களது விலைமதிப்பற்ற உயிர்கள் உணர்வுகள் அனைத்துமே ஒரு காசுக்கு பிரயோசனமில்லாத தியாகங்களாகி விட்டது என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது .ஈழத் தமிழர்களுக்காக இத்தனை தமிழகத் தமிழர்கள் உணர்ச்சி வசப்பட்டு  தீக்குளித்துள்ளர்களே ஒரு ஈழத் தமிழனுக்கும் சொந்த இனத்துக்காக உணர்வே வரவில்லையா என்கிற கேள்வி பலருக்கும் எழுந்தபோது 2009 ம் ஆண்டு மாசி மாதம் 12 ம் திகதி வியாழக் கிழைமை இரவு சுவிஸ் நாட்டில் ஜெனீவா ஜ.நா சபைக்கு முன்பாக இலண்டனில் இருந்து வந்து முருகதாசன் என்கிறவர் தீக்குளித்து இறந்து போகிறார் . முருகதாசனின் மரணமும் புலம்பெயர் தமிழர்களிடம் ஒரு உணர்வு ரீதியான எழுச்சியை கொடுத்திருந்தது என்பது உண்மை.அதே நேரம் முருகதாசனின் மரணத்தின் பின்னால் பல சந்தேகங்களும் இருக்கவே செய்கின்றது .அவை என்வெனில்,முருகதாசன் இலண்டனில் இருந்து ஜெனிவா நோக்கி ஒரு பச்சைக் நிற காரில் நண்பர்களோடு புறப்பட்ட வீடியோ ஒளிப்பதிவென்றை பிரித்தானிய காவல்த்துறையினர் கைப்பற்றி விசாரணைகளும் நடாத்தியிருந்தார்கள்.அடுத்ததாக ஈழத் தமிழர்களின் படுகொலைகளையும் அவர்களது நிலைமையையும் சர்வதேசத்திற்கும் ஜ.நா சபைக்கும் எடுத்துச் சொல்லி அதனை தடுத்து நிறுத்தக்கோரி தீக்குளித்தவன் எதற்காக ஜ.நா சபை சுற்றாடலில் யாருமேயற்ற இரவு நேரம் தீக் குளித்தான்?.முருகதாசன் தீக்குளித்து இறந்து போய் நீண்ட நேரத்தின் பின்னராகவே தீயணைக்கும்படையினர் அந்த இடத்திற்கு வந்துள்ளனர் .எனவே முருகதாசனுடன் சென்றவர்கள் அதுவரை என்ன செய்தார்கள்? அவர்கள் யார்??. ஈழத்தமிழர் விடயத்தில் சர்வதேசம் தலையிட வேண்டும் என முருகதாசனால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் ஏழுபக்க அறிக்கை என்று இணையத் தளங்களில் மட்டுமே செய்தியாக வெளியாகியிருந்தது. அதன் மூலம் எங்கும் இல்லை.குடும்பத்தின் செல்லப்பிள்ளையாக வளர்ந்த முருகதாசன் தனது இறுதிக் கணம் வரை தனது பெற்றோருடன் தொடர்பு கொள்வேயில்லை. அவன் இறந்துபோன செய்தியை மறுநாள் மாலையளவில் செய்திகளை பார்த்தே அவர்கள் அறிந்து கொண்டிருந்தார்கள்.

அதுவரை அவர்களிற்கு தங்கள் பிள்ளை எங்கே இருக்கிறான் என்றே தெரிந்திருக்கவில்லை இப்படி ஏகப்பட்ட கேள்விகளும் சந்தேககங்களும் முருகதாசனின் மரணத்திற்கு பின்னால் இருந்தாலும்.அதனை ஆராய்வது இந்தக்கட்டுரை யின் நோக்கமல்ல என்பதால் கடந்து செல்கிறேன் .
உலகமெங்கும் நடக்கும் ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் அனைத்தையும் அந்தந்த அரசுகளும் ஐ.நா  சபையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அதே நேரம் கிளிநொச்சியை புலிகள் கைவிட்ட பின்னர் ஆயுதங்களை கைவிடத் தயார் என அறிவித்தால் மீண்டும் பேச்சுவார்தைகள் தொடங்குவதைப் பற்றி பரிசீலிக்கிறோம் என ஒரு செய்தியையும் ஐ.நா  சபை நோர்வே ஊடாக புலிகளுக்கு அனுப்பியிருந்தார்கள்.அதனையும் நிராகரித்த புலிகள் யுத்தத்தை நிறுத்துங்கள் ஆயுதங்களை கடைசிவரை கைவிட முடியாது என அறிவித்து விட்டிருந்தார்கள்.சரி இனி உங்கள் விருப்பம் இனி ஆயுதங்களை கைவிட சொல்லி உங்களுக்கு தொந்தரவு கொடுக்கமாட்டோம் நீங்கள் விரும்பினால் எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லியதோடு  ஐ.நா  சபையும் புலிகளுடனான தொடர்புகளை நிறுத்தி விட்டது .

புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று கவனித்தவர்கள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சேவிடம் உங்களுக்கு இராணுவ ஆலோசனைகள் தேவைப்பட்டால் தாராளமா கேளுங்கள் வழங்க தயாராக இருக்கிறோம் என்றவர்களிடம்  "புலிகளின் இதயம்தான் வன்னியில் இருக்கிறது புலிகளின் மூளை இங்கே எங்களிடம் உள்ளது " என்று கருணாவைக் காட்டி சிரித்தவர். எனவே உங்கள் ஆலோசனைகள் தேவையில்லை ஆயுதங்களை மட்டும் கொடுத்தால் போதும் என்றார் .ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் இராணுவம் புலிகளின் கட்டுப் பாட்டு பகுதியை நோக்கி தாக்குதல்களை கடுமைப் படுத்துவார்கள் காரணம் இலங்கையில் நடக்கும் யுத்தத்தை மட்டும் கண்காணிப்பதற்காக மேற்குலகமோ ஐ.நா சபையோ சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் தங்கள் அலுவலகங்களை திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்க மாட்டார்கள் இழுத்துப் பூட்டிவிட்டு போய் விடுவார்கள் .திங்கட்கிழமை காலை அவர்கள் தங்கள் அலுவலகங்களை திறந்து கணணியை இயக்கியதுமே இலங்கை இராணுவத்தின் தாக்குதலை நிறுத்துமாறு இலட்சக்கணக்காண மின்னஞ்சல்கள் கொல்லப்பட்டவர்களின் படங்களோடு குவிந்துபோய் கிடக்கும்.அதே நேரம் இலங்கை இராணுவமும் தாக்குதலை தணித்து தங்களிடம் சரணடைந்த பொதுமக்களின் படங்களோடு  புலிகளிடமிருந்து மக்களை காப்பாற்றி வருகிறோம் என செய்திவெளியிட்டிருக்கும் .ஐ.நா சபையும் உடனே  "இலங்கைத்தீவில் நடக்கும் யுத்தத்தை நாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம் பொது மக்களின் இழப்பு எமக்கு கவலையளிக்கிறது. இலங்கையரசு  பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் " என்று ஒரு அறிக்கையை விடுவார்கள்.பின்னர் மீண்டும் அடுத்த வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல்கள் அகோரமாக இருக்கும் .மீண்டும் அதே மின்னஞ்சல்கள்.. திங்கள் காலை மீண்டும்  ஐ.நா சபையின் நாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம் பொது மக்களின் இழப்பு எமக்கு கவலையளிக்கிறது அறிக்கை வழமையான ஒன்றாகிப் போனது.
இராணுவம் முல்லைத்தீவு நகரை நெருங்கிக்கொண்டிருந்தது அப்போது புலிகள் முதன் முதலாக ஆனந்தபுரம் பகுதியில் ஒரு ஊடறுப்பு தாக்குதல் ஒன்றுக்கு தயாரானார்கள்.அதுவும் பிரபாகரனே களத்தில் நின்று வழிநடத்தப் போகும் தாக்குதல் அனைத்து தளபதிகளும் தங்கள் படைகளை தயார் நிலையில் வைத்திருந்தார்கள்.புலிகள் ,மணலாறு காடுகளுக்குள் இறங்கி விடுவார்கள் என்பதால் காட்டுப் பகுதிகள் முழுதும் பலமான இராணுவத்தின் பாதுகாப்பு இருந்ததால் வடக்கு நோக்கிய ஒரு ஊடறுப்பை செய்தபடி ஒரு அணி போக்கு கட்டியபடி இருக்கும்போது இன்னொரு அணி யாழ் குடாநாட்டை நோக்கி நகர்வதே  புலிகளின் திட்டமாக இருந்தது.அனைத்து இராணுவமும் வன்னிக்குள் குவிக்கப் பட்டிருந்ததால் யாழ் குடா பலவீனமாக இருக்கும் இலகுவாக முன்னேறலாம் என்பது அவர்களது கணிப்பு அதுமட்டுமல்ல புலிகள் அமைப்புக்கான வாழ்வா சாவா என்கிறதை தீர்மானிக்கப் போகும் தாக்குதலும் இதுதான் ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகளும் தளபதிகளும்  தலைவரின் உத்தரவுக்காக காத்திருக்கும்போது  இராணுவத்தினருக்கு  தகவல் கிடைத்து விட்டிருந்தது மாத்திரமல்லாது புலிகள் கனரக ஆயுதங்களை நகர்த்துவதை ராடர்கள் மூலம் கண்காணித்துக்கொண்டேயிருந்தது மட்டுமல்லாமல் அவர்களது வாக்கி டாக்கி யிலான பேச்சுக்களையும் இடைமறித்து கேட்டுக்கொண்டிருந்தவர்கள்  புலிகள்  தாக்குததலை தொடங்க ஒரு மணி நேரத்துக்கு முன்னராகவே இராணுவம் புலிகள் அணி மீது தாக்குதலை தொடங்கியது .மூன்று பக்கத்திலும் இருந்து மழை போல வந்து வீழ்ந்து வெடிக்கத் தொடங்கிய  எறிகணை குண்டுகளால் திணறிப்போன புலிகள் சுதாகரிக்கு முன்னரே குண்டு மழையில் புலிகளின் முன்னணி தளபதிகளான கேணல் பானு, கேணல் விதுஷா, கேணல் தீபன், கேணல் கடாபி, கேணல் மணிவண்ணன், கேணல் நாகேஸ், கேணல் சேரலாதன் ஆகியோருடன் நூற்றுக் கணக்கான போராளிகளும் கொல்லப் பட்டனர் .இந்த தாக்குதலில் இலங்கை இராணுவம் சுமார் 100,000 எறிகணைகளையும் , 15 நிமிடங்களுக்கு ஒரு வான் தாக்குதலையும் நிகழ்த்தியிருந்தது.என்பது பின்னர் செய்திகளில் வெளியானது உலகப் போர் வரலாற்றிலேயே ஒரு நாட்டு இராணுவம் குறுகிய ஒரு பிரதேசத்தில் ஒரு விடுதலைப்போரட்ட இயக்கத்தின் மீது நடத்திய தாக்குதலும் இதுதான் .இந்த தாக்குதலில் பிரபாகரனோடு பொட்டம்மான் ஆகியோரோடு கடற்புலி தளபதி சூசையும் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தர்கள் .அந்த சண்டையில் கொல்லப்பட்ட அனைவரையும்இராணுவம் புலிகள் என்கிற வித்தியாசமின்றி  புல்டோசர்கள் மூலம் குழி தோண்டி புதைத்தபடி இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்தது.புலிகளின் இறுதி முயற்சியும் தோற்றுப் போயிருந்தது.அதே நேரம் அமெரிக்க கப்பல் ஒன்று  முல்லைத்தீவு வருகிறது. அது புலிகளின் தலைமையை காப்பாற்றும் என்றொரு கதையும் பரவலாக அடிபட்டது மட்டுமல்லாது செய்திகளாகவும் வெளியாகியிருந்தது.அதேபோல அமெரிக்காவும் பாரசீக வளைகுடாவில் நிறுத்தி வைத்திருந்த தனது ஒரு யுத்தக்கப்பலை இந்துசமுத்திர பிராந்தியத்துக்கு முல்லைத்தீவுக்கு மிக அண்மையாக நகர்த்தியிருந்தது அந்தக்கப்பல் எப்படியும் பிரபாகரனைக் காப்பாற்றி விடுமென புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நம்பியிருந்தார்கள்.ஆனால் அந்தக் யுத்தக்கப்பலானது புலிகளை காப்பாற்ற அங்கு நகர்த்தப் பட்டிருக்கவில்லை. மாறாக முல்லைத்தீவு கடல்வழியாக புலிகளின் முக்கியஸ்தர்கள் தப்பிச் செல்கிறார்களா என கப்பலில் இருக்கும் சக்திவாய்ந்த ராடார்கள் மூலம் கண்காணித்து இலங்கை இராணுவத்துக்கு தகவல் சொல்வதுதான் அவர்களது நோக்கம்.அப்படித் தப்பிச் சென்ற புலகளின் பல படகுகளை இலங்கை கடற்படையினர் தாக்கியது மட்டுமல்லாமல் பலரை கைது செய்துமிருந்தனர்.அப்படி  தப்பிச் செல்லும்போது  கடற்புலி தளபதி சூசையின் மனைவியும்  மகளும் கைதானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இனியும் தங்கள் வெளிநாட்டு பணியகமான அனைத்துலகச் செயலகத்தின் முயற்சிகளால்  அங்கு நடக்கும் மக்கள் போராட்டங்கலாலோ இனி எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை என புலிகளின் தலைமை உணரத் தொடங்கியிருந்தது எனவே உடனடியாக சர்வதேச தொடர்பாளராக மீண்டும் கே .பி  யை  நியமித்த பிரபாகரன் .உலக நாடுகளோடு தொடர்புகளை ஏற்படுத்தியோ அல்லது அதிரடியாக எதாவது திட்டத்தை நிறைவேற்றி  தங்களை எப்படியாவது காப்பாற்றி விடுமாறு கோரிக்கை வைத்திருந்தார்.இப்போ புலிகளின் தலைமைக்கு கே .பியை நம்புவதைத் தவிர வேறு தெரிவு இருந்திருக்கவில்லை.அனால் கே.பியின் நிலைமையோ வேறு விதமாக இருந்தது.அவர் ஏற்கனவே சர்வதேச புலனாய்வுத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தார்.அவரது ஒவ்வொரு அசைவும் புலிகளின் தலைமையுடனான உரையாடல்களும் கண்காணிக்கப் பட்டுக்கொண்டிருந்தது.தான் கண்காணிக்கப் படுகிறேன் என்பதை அறிந்திருந்தும் அதனையும் மீறி புலிகளின் தலைமையை காப்பாற்ற கே. பி  சில முயற்சிகளை எடுத்தார் ஆனால் அவைகள் சர்வதேச புலனாய்வுத்துறையினரால் முறியடிக்கப்பட்டது.அதன் பின்னர் ஆயுதங்களை கைவிட்டு சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை ஆனால் சரணடைபவர்களின் உயிருக்கு உத்தரவாதமளிக்க தொடர்ந்தும் இந்தியா மற்றும் வெளி நாடுகளோடும் ஐ.நா சபை அதிகாரிகளோடும் பேசிக்கொண்டு இருப்பதாகவும் கட்டம் கட்டமாக சரணடைய புலிகள் அணியை தயார் படுத்துமாறு  புலிகளின் தலைமைக்கு அவரால் ஆலோசனை வழங்கப்பட்டது .இந்தப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் தரப்பில் கலந்துகொண்ட கே.பி. மற்றும் உருத்திரகுமாரன் (இன்றைய நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர்) தரப்பினர் ஆமோதிப்புடன், உலக நாடுகளால் முன்மொழியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவு - சரணாகதி திட்டத்தை அதிகாரபூர்வமயப்படுத்தும் அறிக்கை ஒன்று, 03.02.2009 அன்று இணைத்தலைமை நாடுகளால் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதே நிலைப்பாட்டுடன் 05.02.2009 அன்று இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரால் ஊடக அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து  புலிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் நடந்தது. எம்மால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான சமாதான ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில், அண்டன் பாலசிங்கம் தெரிவித்திருந்தது, ஒரு தளபதியால் குறிப்பிடப்பட்டது. ‘இப்போதும் அப்படியொரு நிலைப்பாட்டை எடுக்கலாம். ஈழம் கொள்கையைக் கைவிட்டால் இந்தியாவால் எந்தவிதத்தில் உதவ முடிகிறது என்று பார்க்கலாம்’ என்பது சில தளபதிகளின் கருத்து. இந்நிலையில், ‘ஈழம் கொள்கையைக் கைவிடுவது தொடர்பான எமது அறிவிப்பை (அல்லது ப்ரபோசலை) புதுடில்லியே தயாரிக்கட்டும். அதை அவர்கள் எமக்கு அனுப்பி வைத்தால், நாம் படித்துப் பார்த்துவிட்டு, ஏற்றுக்கொள்ளும் வகையில் அது இருந்தால் வெளியிடலாம்’ என்று பிரபாகரன் தன் முடிவை அறிவித்தார்.
இதையடுத்து, புலிகள் வெளியிடுவதற்கான ப்ரபோசலை டில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாமே தம் கைப்படத் தயாரித்தார். மிக ரகசியமாகத் தயாரிக்கப்பட்ட அந்த ஆவணத்தைக் கொடுப்பதற்கு முன், சிதம்பரம் விதித்த நிபந்தனை, ‘இந்த ப்ரபோசலை புலிகள் ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி, இந்த ஆவணத்தில் உள்ள விபரம் குறித்து எக்காரணம் கொண்டும் இந்தியாவில் உள்ள யாருக்கும் தெரிவிக்கக்கூடாது’ என்பதுதான். சிதம்பரம் நிபந்தனையைப் பா.நடேசன் சீரியசாக எடுக்கவில்லையா அல்லது தமிழகத்தில் உள்ள தமக்குத் தெரிந்தவர்களுக்குக் கூறினால் தப்பில்லை என்று நினைத்தாரா தெரியவில்லை… விஷயத்தை வைகோவிடம் கூறிவிட்டார் .அதே ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள் நடக்கவிருந்தன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியும், மத்தியில் பா.ஜ.க. கூட்டணியும் அமோக வெற்றிபெறும் என்ற விதத்தில் இருந்தன. இந்நிலையில் , ‘நீங்கள் எக்காரணம் கொண்டும் காங்கிரஸ்காரர்களை நம்ப வேண்டாம். அவர்கள் ஆட்சியில் இருக்கப் போவதே இன்னமும் சில மாதங்கள்தான். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வரப்போகிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிப் பெறப்போகிறது. ஜெயலலிதா, ஈழத்துக்கு ஆதரவாக உள்ளார். இந்த நேரத்தில் ‘ஈழம் கொள்கையைக் கைவிடுகிறோம்’ என்று கூறி எல்லாவற்றையும் கெடுத்து விடாதீர்கள். மத்தியில் ஆட்சி மாறட்டும். மறுநாளே யுத்தத்தை நிறுத்திவிடலாம்’ என்றார் வைகோ .. குழம்பிப் போனார் நடேசன். செய்தி பிரபாகரனுக்கு தெரிவிக்கப் பட்டது. சில நிமிடங்கள் யோசித்த பிரபாகரன், தனது உதவியாளர் ஒருவரை அழைத்து, சிதம்பரம் தயாரித்துக் கொடுத்த ஆவணத்தில், ‘நிராகரிக்கப்பட்டது’ என எழுதி, கையெழுத்திட்டு, நடேசனிடம் கொடுத்தார்.அதன் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நகரங்கள் ஒவ்வொன்றாக ராணுவத்திடம் வீழ்ந்தன. புலிகள், சிறிய பகுதி ஒன்றுக்குள் முடக்கப்பட்டார்கள். அந்தப் பகுதியையும் ராணுவம் நெருங்கி வரத்தொடங்கியது. இந்த நிலையில், புலிகள் மீண்டும் இந்தியாவைத் தொடர்புகொள்ள முயன்றார்கள். இந்தியாவுடன் மீண்டும் பேசிப் பார்க்கும்படி கேபியிடம் பிரபாகரன் சொன்னார். ஆனால் தேர்தலுக்காக இந்தியா நாடாளுமன்றம் கலைக்கப் பட்டிருந்தது அங்கு யாருடனும் காத்திரமாக பேசமுடியாத நிலை .

மே மாதம் எட்டாம் ஒன்பதாம்  திகதிகளில் புலிகள் அமைப்பு தங்களின் இறுதி முடிவுநெருங்கி விட்டது சரணடைபவர்கள் சரணடையலாம் மற்றையவர்கள் இறுதி வரை போராடுவது என்கிற முடிவை பலர் எடுத்த பின்னர்  முக்கிய தளபதிகளின் மனைவிகள் மற்றும் அவர்களது பிள்ளைகளைகள் என சுமார் 56 பேர்வரையில் எப்படியாவது பத்திரமாக நாட்டை விட்டு வெளியேற்றிவிட முடிவுசெய்துகடற்புலிகளின் ஒரு பிரிவினர் அதற்கான  வேலைகளில் இறங்கியிருந்தார்கள். அவர்களது முதலாவது தெரிவாக தமிழ்நாடு இருந்தது  அங்கு கொண்டுபோய் சேர்த்து விட்டால் அவர்கள் சாதாரண அகதிகளைப் போல உயிர் பிழைத்து வாழ்ந்து விடுவார்கள் என்று நம்பினார்கள்.அது மட்டுமல்லாமல் அந்த இறுதிக கணங்களிலும் தங்களிற்கு ஆதரவான தமிழ்நாட்டுத் தலைவர்களிடம் அவர்களிற்கு நம்பிக்கையிருந்து கொண்டேதான் இருந்தது.அதே நேரம் தமிழ் நாட்டு தலைவர்களது தொலைபேசிகள் அனைத்தும் ஒட்டுக் கேட்கப் படும் என்பதால் புலிகள் அவர்களோடு நேடியாக தொடர்புகளை ஏற்படுத்தாமல் ஜரோப்பிய நாடுகளில் இருந்தவர்கள் மூலமாக தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.
ஜரோப்பாவிலிருந்து வை.கோ வை தொடர்பு கொண்டவர்கள் நிமையை அவரிற்கு சொல்லி கடற்புலிகள் தங்கள் உயிரைக் கொடுத்தாவது  பெண்களையும் குழந்தைகளையும் தமிழ் நாட்டுகரைகளில் இறக்கி  விடுவார்கள் நீங்கள் அதற்கு உதவவேண்டும் என்றதும்.எனக்கு இப்போ தேர்தல் வேலைகள் அதிகம் ஊர் ஊராக பயணம் செய்யவேண்டும் அதெல்லாம் முடியாது என்று தனது தொலைபேசியை நிறுத்தி விட்டிருந்தார்.அதே போல திருமாவளவன்.சு.ப.வீரபாண்டியன் .நெடுமாறன்.என்று தொடர்புகொண்ட ஈழத் தமிழ் ஆதரவுத் தலைவர்கள்  பட்டியல் நீளமானது.தங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லையென இப்போது அவர்கள் மறுப்பறிக்கை விடலாம் அவர்கள்தான்  அறிக்கைகள் விடும் அரசியல் வாதிகளாச்சே.. .தமிழ் நாட்டு தலைவர்களிடம் இருந்து சாதகமான பதில்கள் எதாவது வரும் என காத்திருந்தபோதுதான் மே.11 ந்திகதி இலங்கை இராணுவத்தின் மோசமான செல் தாக்குதலில் பலர் கொல்லப் படவே இனியும் இந்த தமிழ்நாட்டு தலைவர்களை நம்பிக் கொண்டிருப்பதில் பயனில்லை என முடிவெடுத்து. பின்னர் தனிப்பட்ட நட்புகள் மூலம்  தொர்புகள் ஏற்படுத்தப் பட்டு சிறிய படகுகள் மூலம்பலர் தமிழ் நாட்டிற்கும் பலர் இந்தோனேசியா தீவுகளிற்கும் கொண்டு போய் சேர்க்கப் பட்டனர்.சிலர் கடற்படையினரின் தாக்குதலில் இறந்து போனார்கள்.இந்திய லோக்சபா தேர்தல் முடிவுகள் மே 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் கூட்டணியே மீண்டும் ஜெயித்தது. அதன்பின்னர் தமிழகத்தோடு மட்டுமல்ல இந்தியாவில் யாரோடும் தொடர்புகொள்வதில் பிரயோசனம் இல்லை என்கிற நிலைமை. புலிகளின் தலைமையும் சுமார் ஒரு லட்சம் மக்களும் சுமார் ஒன்றரை சதுர கிலோமீட்டர் பரப்புக்குள் சுற்றி வளைக்கப் பட்டு பெட்டியடிக்கப் படுகிறார்கள். புலிகளின் தலைமை தங்கள் சுற்றி வளைப்புக்குள் அகப்பட்டு விட்டது என்பதை உறுதி செய்த இராணுவம்  அப்போ ஜோர்தான் நாட்டுக்கு சென்றிருந்த மகிந்தா ராஜபக்சேவுக்கு தகவல் அனுப்புகிறார்கள்.அவசரமாக நாடு திரும்பிய மகிந்தா முப்பதாண்டு கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து பயங்கரவாதத்தை தோற்கடித்து விட்டேன் என்று விமான நிலையத்திலேயே நிலத்தில் விழுந்து மண்ணை முத்தமிடுகிறார்.

அடுத்த நாள் இரவு நான்கு பக்கமும் இராணுவத்தால் சூழப்பட்ட நிலையில் நந்திக்கடல் பகுதியில் சுமார் இருபது படகுகளில் கடற் புலிகள் மற்றும் கரும்புலிகள் பிரபாகரனை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டுமென  எந்த இலக்குமற்று ஒரு ஊடறுப்பை நடத்துகிறார்கள் .. அந்தச் சண்டையில் பிரபாகரன் இறந்து போகிறார் .அவர் சண்டையில் இறந்தாரா தற்கொலை செய்தாரா என்பது இன்றுவரை தொடரும் சர்ச்சை .காரணம் அவருடன் இறுதியாக நின்றிருந்த எவரும் உயிரோடு இல்லை ..மே 18ஆம் தேதி  காலை இலங்கை ராணுவத்தின் 53ஆம் டிவிஷனின் கீழ் செயல்பட்ட 4ஆம் விஜயபாகு ரெஜிமென்ட் படைப்பிரிவு, லெப்டினென்ட் கர்னல் ரொஹித அலுவிஹர தலைமையில் தேடுதலை மேற்கொண்டபோது, நந்திக்கடல் ஓரம், கோரைப் புற்களில் சிக்கிய நிலையில் பிரபாகரனின் உடல் கிடைத்ததாக இலங்கை ராணுவம் மே 19ஆம் தேதி அறிவித்தது.அத்தோடு விடுதலைப் புலிகளுக்கு எதிரான முப்பதாண்டு கால யுத்தம் முடிவுக்கு வந்தது.
அன்று தமிழ்நாட்டு தலைவர்கள் உதவ மறுத்து தங்கள் கைத் தொலைபேசிகளையும் நிறுத்தி வைத்தபோது கட்டுக்கடங்காத கோபமே அவர்கள் மீது வந்திருந்தது ஆனால் பின்னர் ஆறுதலாக ஆழமாகச் சிந்தித்து பார்தத்தில் ஒரு உண்மை புரிந்தது அவர்களால் ஈழத் தமிழர்கள் பற்றியும் புலிகள் பற்றியும்.பிரபாகரன் பற்றியும்.மேடைகளில் அடுக்கு வசனங்களில் உணர்ச்சி பொங்க பேசவும் மக்களின் உணர்வுகளைத் தூண்டி விடவும் மட்டுமே முடியும்.நடைமுறை அல்லது செயல் என்று வரும்போது பாவம் அவர்களால் அங்கு எதுவுமே செய்ய முடியாது.அப்படி ஏதாவது செய்ய நினைத்தால் மத்திய.மானில உளவுப் பிரிவினர் ஏதாவது ஒரு வழக்கில் அவர்களை உள்ளே தள்ளிவிடுவார்கள்.அதே நேரம் அன்று முதலமைச்சராக இருந்த கலைஜர் புலிகளோடு பேச்சுவார்த்தை மேசையில் தீர்வை வைத்து அது சரிவராத பட்சத்தில் அவர்களை முற்றாக அழித்து இலங்கைத் தீவில் ஆயுத மோதலை கொண்டுவருவதற்காக உலக நாடுகள் பெரும்பாலானவை 2001 ம் ஆண்டு மிக நுணுக்கமாக திட்டமிட்டு நகர்த்தத் தொடங்கியிருந்தார்கள்.அதில் பெரும்பங்கு மேற்குலகத்தினுடையது.இங்கு இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலென்ன பி.ஜே .பி இருந்தாலென்ன எல்லாம் ஏற்கனவே திட்டமிட்டபடியே தான் நடந்து முடிந்திருக்கும்.இங்கு . உலகமயமாக்கல்.புதிய பொருளாதாரக்கொள்கை.சர்வதேச அரசியல் என்று அவைகளைப் புரிந்து அதன் நெளிவு சுளிவுகளோடு தம்மை நம்பிய மக்களின் அபிலாசைகளை அரசியல் ரீதியாக  வென்றெடுத்து  தங்களையும் பாதுகாத்து பயணிக்க பல சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தும் அத்தனையையும் தட்டி விட்டு..உலகத்தில் எவரையுமே நம்பாது  கொண்ட கொள்கைக்காக இறுதிவரை ஆயுதத்தையே நம்பி தாங்களும் அழிந்ததோடு ஈழத் தமிழர் அரசியல் எதிர்காலத்தையும் சூனியத்தில் தள்ளி விட்டு சென்றது மட்டுமல்லாமல் உலகத்திலேயே விடுதலைக்காக  ஆயுதப் போராட்டம் தொடங்கிய அனைத்து குழுக்களுக்கு முன்னுதாரணமா இருந்தது மட்டுமல்லாது முப்படைகளையும் கட்டியெழுப்பி ஒரு நிழல் அரசையும் நடத்திக்காட்டியதோடு மட்டுமல்லாமல்.  தோற்றுப் போய் இப்படியான ஒரு மோசமான அழிவை சந்திக்கக் கூடாது என்பதற்கும் ஒரு முன்னுதாரணமாக புலிகள் அமைப்பு எப்போதும் வரலாற்றில் எழுதி நிக்கும் ..பிரபாகரன் என்கிற பெயர் என்றென்றும் உலகத் தமிழர்களின் வரலாற்றில் ஒரு குறியீடு ....
இந்த வாய்ப்பை எனக்களித்த புதிய தலைமுறை ஆசிரியர் குழுமத்துக்கு நன்றிகள் அன்புடன் சாத்திரி ..




No Comment