அன்று சிந்திய ரத்தம்
தளவாய் சுந்தரம்
தமிழகத் தலைவர்களின் ஆவேசப் பேச்சுக்கள்
ஈழத் தமிழருக்கு தீமையையே செய்யும்!
சாத்திரி பரபரப்பு பேட்டி
ஈழத் தமிழருக்கு தீமையையே செய்யும்!
சாத்திரி பரபரப்பு பேட்டி
‘அன்று சிந்திய ரத்தம்’ தொடரை எழுதிவந்த கௌரிபால் சிறி என்கிற சாத்திரி., முன்னாள் ஈழப்போராளி, பத்திரிகையாளர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர், யாழ்ப்பாணம், மானிப்பாயில் பிறந்த சாத்திரி, 1984இல் தமது பள்ளிப் பருவத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவர். தற்போது புலம்பெயர்ந்து பிரான்ஸில் அகதியாக வாழ்ந்து வருகின்றார். சமீபத்தில் இந்தியா வந்திருந்த சாத்திரியுடன் ‘அன்று சிந்திய ரத்தம்’ தொடரின் தொடர்ச்சியாக ஒரு பேட்டி…
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நீங்கள் எப்போது இணைந்தீர்கள். இணைய தூண்டுதலாக அமைந்தது என்ன?
அந்தக் கால ஏனைய இலங்கைத் தமிழ் இளைஞர்கள் போல, ஈழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்துகொள்ள எனக்கும் தூண்டுதலாக அமைந்த சம்பவம், இலங்கையில் 1983ஆம் ஆண்டில் நிகழ்ந்த இனக் கலவரம்தான். 1983 கலவரத்திற்கு முன்பே ஈழத்தில் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்திருந்தாலும் அப்போது அது பற்றிய அக்கறைகள் ஏதுமற்ற சாதாரண பாடசாலை மாணவனாகவே நான் இருந்தேன். ஆனால், 1983 கலவரத்தில் தமிழர்களின் பாதிப்புக்கள் பற்றிய செய்திகள்; குறிப்பாக, தமிழ் சகோதரிகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட செய்திகள் மற்றும் அகதிகளாக ஆயிரக்கணக்கில் கப்பலில் காங்கேசன் துறையில் வந்திறங்கிய கொழும்புத் தமிழர்களின் துயரங்களை நேரில் பார்த்ததும் ஒரு இளைஞனுக்கேயுரிய கோபமும், பழிவாங்கும் உணர்ச்சியும் ஒன்று சேர என்னை ஈழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக்கொண்டேன்.
ஈழ விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்கான முதற்படியாக, இன்று பலராலும் ஈழ விடுதலை இயக்கங்களின் ஆரம்ப கால சகோதரப் படுகொலைகளே முன்வைக்கப்படுகிறது. நீங்கள் அதனை இப்போது எப்படிப் பார்கிறீர்கள்?
வேகம் மட்டுமே இருந்த இளைஞர்களான எங்களிடம் அன்று விவேகம் இருந்திருக்கவில்லை. சரியான வழிநடத்தல்கள் இருந்திருக்கவில்லை. இந்திய, இலங்கை உளவுப் பிரிவுகளின் சூழ்ச்சிகளை சரியாக இனம் கண்டு அவற்றை முறியடிக்கும் ஆளுமை இருந்திருக்கவில்லை. இவற்றின் தொடர்ச்சியே சகோதரப் படுகொலைகளிற்கு காரணங்களாக இருந்தன. ஈழ விடுதலை இயக்கங்கள் தங்களிற்குள் மோதிக் கொள்ளாமல் ஓரணியில் நின்று இயங்கியிருந்தால் 1986ஆம் ஆண்டே தமிழீழம் கிடைத்திருக்கும்.
உலக நாடுகளே திரண்டு விடுதலைப்புலிகளை அழித்து முடிக்கவேண்டிய அவசியம் என்ன?
உலக ஒழுங்கு என்பது காலவோட்டத்தில் மாறிக்கொண்டே இருக்கும் ஒன்று. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், மிகப் பெரும் சக்தியாக உருவெடுக்கும் ராச்சியங்கள் அல்லது அரசுகள்தான் உலக ஒழுங்கை தீர்மானிக்கின்றன என்பது கசப்பான உண்மை. அதன்படி சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் தனிப்பெரும் சக்தியாக மாறிய அமெரிக்காவே இன்றுவரை உலக ஒழுங்கை தீர்மானிக்கின்றது. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலிற்குப் பின்னர், உலகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைத் தவிர்த்து, விடுதலைப் போராட்ட ஆயுதக் குழுக்கள் அனைத்தையுமே பயங்கரவாத குழுக்களாக அறிவித்து அமெரிக்கா ஒரு பட்டியலை தயாரிக்கின்றது. அதில் விடுதலைப்புலிகளின் பெயரும் இணைக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் பெயர் அதில் இணைக்கப்பட இந்தியாவும் பெரும் பங்காற்றியிருந்தது.
அமெரிக்கா தயாரித்த பட்டியலில், முப்படைகளையும் கொண்டிருந்தவர்களாகவும் ஒரு நிழல் அரசை இயக்கிக் கொண்டிருந்தவர்களாகவும் விடுதலைப்புலிகள் அமைப்பு இருந்தது. மேலும், பெரும் இழப்புக்களை ஏற்படுத்தும் தற்கொலைத் தாக்குதல்களையும் அவர்கள் செய்தபடி இருந்தார்கள். இது அமெரிக்காவிற்கும் அதன் பின்னால் திரண்டிருந்த நாடுகளிற்கும் ஒரு உறுத்தலாகவே இருந்தது.
உலக அரசியலில் நிகழ்ந்து வந்த இந்த மாற்றங்களை அண்டன் பாலசிங்கமும்கூடவா புரிந்துகொள்ளவில்லை?
அவர் புரிந்திருந்தார் என்றே கருதுகிறேன். இதுவரை காலமும் இலங்கையரை பேச்சுவார்த்தைகளில் ஏமாற்றியது போல் இந்த முறை சர்வதேசத்தை ஏமாற்றமுடியாது என்பதோடு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உலகத்தையே எதிர்க்க முடியாதென்பதையும் புரிந்துகொண்டதால்தான், சமஸ்டி முறையை ஆதரிக்கிறோம் என்று பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். விடுதலைப்புலிகள் தரப்பில் அவரோடு பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்த, அப்போது கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கருணாவும் இதற்கு சம்மதித்தார். அண்டன் பாலசிங்கம் புத்தி சாதுரியமாக, “சுயநிர்ணய உரிமையை பரிசீலிக்கின்றோம்; சுயநிர்ணய உரிமை இரண்டு வகைப்படும். அது அக சுயநிர்ணயம், புற சுயநிர்ணயம். இதில் நாங்கள் அக சுய நிர்ணயத்தை பரிசீலிக்கிறோம்” என பேச்சுவார்த்தை மேசையில் சர்வதேசத்திடம் கூறிவிட்டிருந்தார். சுய நிர்ணய உரிமையை அன்ரன் பாலசிங்கம் அகம், புறமாக பிரித்ததில் சந்திரிக்காவே குழம்பிப் போய்விட்டார். அப்படியொரு ஆட்சிமுயை இல்லை; இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன் என அவர் அறிக்கையும் விட்டிருந்தார்.
ஆனால், அண்டன் பாலசிங்கத்தின் புத்திசாதுர்யத்தை புரிந்துகொள்ளாத விடுதலைப்புலிகள் தலைமை, பேச்சுவார்த்தைகளின் தலைமைப் பொறுப்பை அண்டன் பாலசிங்கத்திடம் இருந்து பறித்து, தமிழ்ச்செல்வனிடம் ஒப்படைத்தது. அத்தோடு அவரை வன்னியைவிட்டு வெளியேறவும் உத்தரவு பிறப்பித்தது. “இத்தனை ஆண்டுகள் தனது பேச்சுவார்த்தை தந்திரங்களால் காப்பாற்றப்பட்ட விடுதலைப்புலிகள்அமைப்பிற்கும் பிரபாகரனிற்கும் இனி கெடுகாலம் வரப்போகின்றது; அவர்களைத் தன்னால் காப்பாற்ற முடியாமல் போகப் போகின்றதே” என்கின்ற மனவேதனையுடன் அவர் மீண்டும் லண்டனிற்கு திரும்பினார். அதேநேரம் பேச்சுவார்தை மேசையில் தங்களிற்கு சிம்ம சொப்பனமாக இருந்த சிங்கம் வெளியேறியது இலங்கை பேச்சுவார்த்தைக் குழுவினரிற்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. மேற்குலகம் விடுதலைப்லிகள் அமைப்புக்குள் நம்பிக்கை வைத்திருந்த ஒரேயொரு நபர் அன்ரன் பாலசிங்கம் மட்டுமே.
விடுதலைப் புலிகள் அமைப்பு இப்படியொரு பின்னடைவை சந்திக்கும் என, அதன் அமைப்பில் இருந்த காலங்களில் நீங்கள் நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?
இல்லை. புலிகள் அமைப்பு மிகத் திறமையான போராளிகளின் வீரத்தாலும் தியாகங்களாலும் திறைமைகளாலும் நன்கு திட்டமிடப்பட்டு சிறுகச் சிறுக கட்டியமைக்கப்பட்டதொரு விடுதலை அமைப்பு. ஒற்றைக் கைத்துப்பாக்கியோடு தொடங்கப்பட்டு ஆட்லெறிகள், பல குழல் எறிகணைகள், ஏவுகணை, விமானம் என கண் முன்னாலேயே வளர்ந்து நின்ற இயக்கம். இப்படி அழிந்து போகும் என நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை.
விடுதலைப் புலிகள் தோல்விக்கு பிரதான காரணமாக நீங்கள் நினைப்பது என்ன?
அதற்கு நிறைய அக புற காரணிகள் உள்ளன. பிரதான காரணங்களில் முதலாவது சர்வதேச அரசியல் ஓட்டத்தை சரியாக கணித்து அதற்கேற்ப சில ராஜதந்திர நகர்வுகளை செய்து புலிகள் தங்களிற்கானதொரு நெளிவு சுழிவு அரசியலை செய்யாதது, பொதுவான புறக் காரணியாகும். அகக்காரணிகள் என்று பார்த்தால், புலிகளின் பெரு வெற்றிக்கு பின்னர், அவர்கள் ஒரு நிழல் அரசை அமைக்கத் தொடங்கியபோது, இயக்கத்தினுள் பிரிவுகளுக்கு இடையே எழுந்த அதிகார போட்டிகள். இவர்கள், தங்களில் யார் அதிகம் பிரபாகரனை புகழ்ந்தும் போற்றியும் அதிக அதிகாரங்களை தங்கள் கைவசப்படுத்த முயல்வது என்பதில் போட்டியிட்டனர். இந்தப் புகழ்ச்சிகளிற்கு இறுதிக் காலங்களில் பிரபாகரனும் மயங்கத் தொடங்கியிருந்தார் என்பது கவலைக்குரிய விடயம்.
ஈழத்தில் மீண்டும் ஆயுதப் போராட்டம் உருவாக சாத்தியமுள்ளதா?
இல்லை, நிச்சயமாக இல்லை. இனியொரு ஆயுதப் போராட்டத்தை கற்பனைகூட செய்து பார்க்க முடியாத காலகட்டத்திற்கு ஈழத் தமிழர்கள் வந்துவிட்டார்கள். அதுமட்டுமல்லாமல் உள்ளுரிலிருந்து உலக ஒழுங்கு வரை மாறிவிட்டது. உலகப் பொருளாதாரத்தின் விளம்பரக் கவர்ச்சிகளிலும் நவீன தொழில்நுட்பங்களிலும் இன்றைய இளம் சந்ததியினர் தங்கள் நேரத்தையும் வாழ்வையும் தொலைக்கின்றனர். அவர்கள், நாம் நமது நாடு என்கிற சிந்தனை குறைந்து, நான் எனது என்கிற குறுகிய வட்டதிக்குள் சுருங்கிப் போகிறார்கள் . இனி வருங்காலங்களில் தங்கள் சுயதேவைகளை நிறைவேற்றும் போராட்டத்திலேயே அவர்கள் வாழ்நாள் கழிந்துவிடும் . அவர்களை வழிநடத்த வேண்டிய சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகள்,. அதிகாரிகள், ஆசிரியர்கள் என்று சமுகமே சுயநலமாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இளையவர்களை மட்டும் குறை சொல்லி பிரயோஜனமில்லை.
ஈழத் தமிழர்கள் உரிமைப் போராட்டங்களுக்கான தமிழகத் தமிழர்களின் ஆதரவை எப்படி பார்க்கிறீர்கள்?
ஈழத் தமிழர்களுக்கான தமிழகத்தின் ஆதரவை இரண்டு வேறு நிலைகளாகப் பார்க்கவேண்டும். ஒன்று, தமிழக அரசியல் கட்சிகளது ஆதரவு. இரண்டு, கட்சி பேதம் கடந்த சாதாரண மக்களது ஆதரவு. இவை இரண்டையுமே நான் நேரிலேயே அனுபவித்திருக்கிறேன். அரசியல் கட்சிகளின் ஆதரவு அவர்களது கட்சி நலன் சார்ந்ததும், ஈழத் தமிழர் பிரச்சனைக்கான தமிழக மக்களின் உணர்வை தங்கள் சார்பாக திரும்ப வைப்பதுமாகும். அந்தவகையில், ஈழத் தமிழர் விவகாரம் என்பது தமிழக அரசியல் கட்சிகளுக்கு தொட்டுக்கொள்ளும் ஊறுகாய்தான். தமிழக அரசியல் கட்சிகளின் ஆதரவு ஈழத் தமிழர்களிற்கும் சரி, ஈழத் தமிழ் போராட்டக் குழுக்களிற்கும் சரி நன்மை தீமை இரண்டையுமே கொடுத்துள்ளது.
குறிப்பாக, அரசியல் கட்சித் தலைவர்களின் யதார்த்தத்திற்கு மீறிய ஆவேசப் பேச்சுக்கள்அல்லது பரபரப்பான அறிக்கைகள் ஈழத் தமிழருக்கு தீமையையே செய்யும். ஈழத் தமிழனிற்கு ஒரு பிரச்னையென்றால் இரத்த ஆறு ஓடும், தமிழகம் கொந்தளிக்கும், இந்தியாவிலிருந்து தமிழகம் பிரியும், ஆறு கோடி தமிழர்களும் திரண்டு வந்து ஈழத் தமிழரை காப்பாற்றுவோம் போன்ற நடக்காத அல்லது நடைமுறைக்கு சாத்தியமே இல்லையென்று தெரிந்தே, விடும் வாய்ச் சவாடல்களால் ஒரு பிரயோசனமும் இல்லை. மட்டுமல்லாது அவை சிங்கள ஆட்சியாளர்களை மேலும் எரிச்சலூட்டுவதாக அமையும். அரசியல்வாதிகள் உணர்சிகரமாகப் பேசிவிட்டு சோடா குடித்துவிட்டுப் போய் விடுவார்கள்; அடிவாங்குவது ஈழத்தமிழன்தான்.
ஈழத் தமிழர்களுக்கான சாதரண தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு என்பது நீண்ட காலமாகத் தொடர்வது. எந்தவித லாப நட்டக் கணக்கோ எதிர்பார்ப்புக்களோ அற்றது. பணம் பொருள் உதவிகள் மட்டுமல்லாது எமக்காக தமிழக மக்கள் சிறையும் சென்றிருக்கிறார்கள். அதில், முதன்மையானவர்களாக கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், ஆறுச்சாமி போன்றோரை முக்கியமாக சொல்லலாம். ஈழத் தமிழர் பிரச்சனை தீர வேண்டுமென்கிற போராட்டத்தில் அப்துல் ராவூப் தொடங்கி முத்துக்குமார் வரை பலர் தங்கள் உயிரையே தியாகம் செய்திருக்கிறார்கள். இந்த உதவிகளிற்கு ஈழத் தமிழர்கள் என்றென்றும் கடைமைப்பட்டவர்கள். அதேநேரம் எமக்காக தமிழகத்த உறவுகள் உயிரை மாய்ப்பதை நான் உட்பட எந்தவொரு ஈழத் தமிழரும் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதனால் மட்டுமே ஈழத்தமிழர் பிரச்சனை தீர்ந்துவிடப் போவதில்லை. மாறாக, அவர்கள் உயிரோடு இருந்து வெவ்வேறு வழிகளில் அவர்களது போராட்டங்களை நடத்தவேண்டும், உதவவேண்டும்.
முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களின் போது, உதவிக்காக நீங்கள் அழைத்த தமிழ்நாட்டு தலைவர்கள் உதவ மறுத்து தங்கள் கைத்தொலைபேசிகளை நிறுத்தி வைத்துவிட்டனர் என எழுதியிருந்தீர்கள். அது குறித்து உங்களுக்குக் கோபங்கள் உள்ளதா?
அப்போது கட்டுக்கடங்காத கோபம் தமிழகத் தலைவர்கள் மேல் வந்தது உண்மை. ஆனால், இப்போது ஆறுதலாக ஆழமாகச் சிந்தித்து பார்க்கும்போது ஒரு உண்மை புரிகிறது. தமிழக அரசியல் தலைவர்களால் ஈழத் தமிழர்கள் பற்றியும் புலிகள் பற்றியும் பிரபாகரன் பற்றியும் மேடைகளில் அடுக்கு வசனங்களில் உணர்ச்சி பொங்க பேசவும் மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடவும் மட்டுமே முடியும். நடைமுறை அல்லது செயல் என்று வரும்போது பாவம் அவர்களால் இந்தியாவுக்குள் எதுவுமே செய்ய முடியாது. அப்படி ஏதாவது செய்ய நினைத்தால் மத்திய மாநில உளவுப் பிரிவினர் ஏதாவது ஒரு வழக்கில் அவர்களை உள்ளே தள்ளிவிடுவார்கள்.
அன்று முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி, எப்படியும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, யுத்தத்தை நிறுத்தி மக்களையும் புலிகளின் தலைமையும் காப்பாற்றிவிடுவார் என்று நம்பி ஏமாந்து, அவரை இன்றுவரை திட்டி தீர்ப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் ஒரு உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். இந்திய தேசம் என்பது 29 மாநிலங்களையும் ஏழு யுனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய ஒரு தேசம். அதில் ஒரே ஒரு மாநிலமான தமிழ்நாட்டு முதலமைச்சரால், ‘அது யாராக இருந்தாலும்’ தனது அதிகாரங்களை தாண்டி, அடுத்த நாட்டில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்தை நிறுத்திவிட முடியாது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றலாம், மதிய அரசுக்கு கடிதம் எழுதலாம், அறிக்கை விடலாம்... அவ்வளவுதான் அவர்களால் முடிந்தது. ஈழத் தமிழர் விடயத்தில் இதையேதான் காலங்காலமாக அனைத்து தமிழ்நாட்டு முதலமைச்சர்களும் செய்தார்கள்; இனிமேலும் செய்வார்கள்.
அன்று மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு நினைதிருந்தாலும்கூட இலங்கையில் யுத்தத்தை தடுத்து நிறுத்தியிருக்க முடியாது. ஏனெனில், உலக நாடுகள் பெரும்பாலானவை சேர்ந்து, இலங்கைத் தீவில் ஆயுத மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முடிவுகளை எடுத்து, 2001ஆம் ஆண்டு முதலே மிக நுணுக்கமாக திட்டமிட்டு, காய்களை நகர்த்தத் தொடங்கியிருந்தார்கள். விடுதலைப்புலிகளோடு பேச்சுவார்த்தை மேசையில் தீர்வை வைத்து, அது சரிவராத பட்சத்தில் அவர்களை முற்றாக அழித்துவிடுவது என்பது அப்போதே முடிவானது. அதனை செயல்படுத்தியதில் பெரும்பங்கு மேற்குலகத்தினுடையது. அப்போது இந்தியாவில் மத்தியில் பாஜக ஆட்சி இருந்திருந்தாலும் எல்லாம் ஏற்கெனவே திட்டமிட்டபடியேதான் நடந்து முடிந்திருக்கும்.
இக்காலகட்டங்களில் உலகமயமாக்கல், புதிய பொருளாதாரக் கொள்கை, சர்வதேச அரசியல் மாற்றங்கள் போன்றவற்றைப் புரிந்துகொண்டு, அதன் நெளிவுசுளிவுகளோடு பயணித்து, தம்மை நம்பிய மக்களின் அபிலாசைகளை அரசியல் ரீதியாக வென்றெடுத்து, தங்களையும் பாதுகாத்துக்கொள்ள விடுதலைப்புலிகளுக்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தது. ஆனால், அத்தனையையும் தட்டிவிட்டு, உலகத்தில் எவரையுமே நம்பாது, கொண்ட கொள்கைக்காக இறுதிவரை ஆயுதத்தையே நம்பி, தாங்களும் அழிந்ததோடு ஈழத் தமிழர் அரசியல் எதிர்காலத்தையும் சூனியத்தில் தள்ளிவிட்டு சென்றுவிட்டார்கள்.
உலகத்திலேயே விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய அனைத்து போராட்டக் குழுக்களுக்கும் முன்னுதாரணமாக இருந்தவர்கள் விடுதலைப்புலிகள். முப்படைகளையும் கட்டியெழுப்பி, ஒரு நிழல் அரசையும் நடத்திக் காட்டியவர்கள். அப்படிப்பட்டவர்கள், விடுதலைப் போராட்ட இயக்கங்கள் தோற்றுப்போய் இப்படியான ஒரு மோசமான அழிவை சந்திக்கக்கூடாது என்பதற்கும் ஒரு முன்னுதாரணமாக வரலாற்றில் இடம்பிடித்து அழிந்துவிட்டார்கள். பிரபாகரன் என்கிற பெயர் என்றென்றும் உலகத் தமிழர்களின் வரலாற்றில் ஒரு குறியீடு!