Navigation


RSS : Articles / Comments


அன்று சிந்திய ரத்தம் தொடர் ...12

11:37 PM, Posted by sathiri, No Comment

 அன்று சிந்திய ரத்தம்  தொடர் ...12
புதிய தலைமுறை வார இதழுக்காக ..

தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு  மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது.அதே நேரம் புலிகளின் தாக்குதலுக்குள்ளாகி கோமாநிலைக்கு சென்றிருந்த ராணுவத் தளபதி சரத் பொன்சேகா நினைவு திரும்பியிருந்தார்.புலிகள் மீது கடும் கோபத்தில் இருந்தவர்  காதுக்கு விடயம் சென்றது  புலிகளோடு இதற்கெல்லாம் பேசத் தேவையில்லை உடனடியாக  ஒரு ராணுவ நடவடிக்கை மூலம் அணைக்கட்டை மீட்டு விடுவோம் பின்னர் மிகுதி விடயங்களைப் பற்றி யோசிக்கலாம் எனவே ராணுவ நடவடிக்கையை தொடங்குங்கள் என்று கட்டையிட்டார்.சொர்ணம் எதிர்பார்த்தது நடந்தது ஜூலை மாதம் 26-ம் தேதி, அதிகாலை 5 மணி.இலங்கை ராணுவத்தின் அதிரடி கமாண்டோக்கள், கல்லாறு ராணுவ முகாமில் இருந்து மாவிலாறு அணைக்கட்டு கதவுகளை நோக்கி புறப்பட்டனர் .கல்லாறு ராணுவ முகாமில் இருந்து புறப்பட்ட இலங்கை ராணுவத்தின் அதிரடி கமாண்டோ படையினர் தெற்கு நோக்கி நகர்ந்து, மாவிலாறு அணைக்கட்டு பகுதியில் இருந்து 800 மீட்டர் தொலைவுக்கு வந்த நிலையில், அணைக்கட்டு பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் மூர்க்கமான தாக்குதல் தொடங்கியது. கமாண்டோ படையினரை நோக்கி, மோட்டார் மற்றுட் ஆட்டிலரி தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்த தொடங்கியதால், அதிரடிப் படையினரால் மேற்கொண்டு நகர முடியவில்லை. இந்த தகவல் ராணுவ தலைமையகத்துக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இவர்களுக்கு உதவுவதற்காக இரு படைப்பிரிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இலங்கை ராணுவத்தின் 8-வது கெமுனு வாட்ச் படைப்பிரிவு, மற்றும் 5-வது பாட்டிலியன் படைப்பிரிவினர் வந்து சேர்ந்தனர். வான் தாக்குதல்களின் உதவியோடு இலங்கை ராணுவத்தினரால் இஞ்ச்-பை-இஞ்சாகவே நகர முடிந்தது. 26-ம் தேதி காலை யுத்தம் தொடங்கிய நிலையில், 31-ம் தேதி மாலை இலங்கை ராணுவம் மாவிலாறு அணைக்கட்டு கதவுகள் இருந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் வரை நெருங்கி வந்துவிட்டனர்.தாம் இருந்த இடத்தில் இருந்து மாவிலாறு அணைக்கட்டை பார்க்க முடிந்தது. அணைக்கட்டில் விடுதலைப்புலிகள் யாரையும் காண முடியவில்லை. அங்கிருந்து வந்துகொண்டிருந்த ஆட்டிலரி தாக்குதல்களும் நின்று போயிருந்தன.விடுதலைப் புலிகள் அணைக்கட்டை கைவிட்டு பின்வாங்கி சென்றிருந்தார்கள்.“விடுதலைப் புலிகளை அசைக்க முடியாது, அவர்கள் மீது தாக்கி பின்வாங்க வைக்க முடியாது” என ராணுவத்திலேயே பலர் நினைத்திருந்தார்கள். மாவிலாறில் நடைபெற்ற யுத்தத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல், அங்கிருந்து விடுதலைப் புலிகள் பின்வாங்கியபோது, இலங்கை ராணுவத்தில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டது.அந்த எழுச்சியே, அடுத்தடுத்து பல இடங்களில் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்த உத்வேகத்தை கொடுத்ததில், ராணுவம் தாக்க தாக்க, விடுதலைப் புலிகள் ஒவ்வொரு பகுதியையும் கைவிட்டு பின்வாங்கினார்கள். ஒவ்வொரு இடத்தில் இருந்தும் புலிகள் பின்வாங்க, பின்வாங்க, ராணுவத்தின் உத்வேகம் அதிகரித்து சென்றது.

மாவிலாறு கைவிட்டுப் போனதால் உடனடியாகவே அடுத்ததொரு தாக்குதலை சொர்ணம் திட்டமிட்டார்.திருகோணமலை துறைமுகத்தை தாக்கி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இலங்கை கடல்படையின் கப்பல்களை முக்கியமாக துருப்புக்களை ஏற்றி இறக்கும் ஜெட்லைனர் கப்பலை  மூள்கடிப்பதாகும். காரணம் யாழ்ப்பாணத்தில் இருந்து ராணுவத்தினர்  போக்குவரத்து செய்ய, இலங்கையின் கைவசம் இருந்த ஒரேயொரு கப்பல்.அந்தக் கப்பல் துறைமுகத்தில் முடக்கப்பட்டால், யாழ்ப்பாணத்தைவிட்டு ராணுவத்தினரால் வெளியேற முடியாது, புதிய ராணுவத்தினரை அங்கு கொண்டு செல்ல முடியாது, யாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவத்தினருக்கு சப்ளை பொருட்களும் அனுப்ப முடியாது.இந்த தாக்குதல் வெற்றி செய்தியையாவது வன்னிக்கு அனுப்ப வேண்டுநினைத்த சொர்ணம் தாக்குதலுக்கு கட்டளையிட்டார் . காலை 10 மணி முதல் விடுதலைப் புலிகள் சம்பூரில் இருந்து திரிகோணமலை துறைமுகத்தின் வாய் பகுதியை நோக்கி ஆட்டிலரி ஷெல்களை ஏவிக்கொண்டு இருந்ததால், துறைமுகப் பகுதி மிகுந்த பதட்டத்தில் இருந்தது. விடுதலைப் புலிகளின் நோக்கம், துறைமுகத்தின் வாய் பகுதியை தாக்குதல் நடத்தி  மூட வைத்து, துறைமுகத்தை முற்றாக செயலிழக்க வைப்பது என்பதை, இலங்கை கடற்படை தளபதி வசந்த கரணகொட புரிந்து கொண்டார்.திருகோணமலை  கடற்படை தளத்திலிருந்து பதில் தாக்குதல் நடத்தப்பட்டு அன்றிரவு   ஜெட்லைனர் கப்பல் உட்பட அனைத்து கப்பல்களையும் கடற்படையினர் துறை முகத்திலிருந்து பத்திரமாக காலி துறை முகத்துக்கு  நகர்த்தி விட்டிருந்தார்கள்.இந்த விடயம் மறுநாள் காலையே  புலிகளுக்கு தெரிய வந்தது சொர்ணத்தின் இரண்டாவது தாக்குதல் திட்டம் மட்டுமல்ல தொடர்ந்து தோல்விகளோடு பின்வாங்கிக் கொண்டிருந்தார்.ஆனால் எது எப்படியோ யுத்தம் தொடங்கிவிட்டது எனவே அதனை தொர்வது என பிரபாகரன் முடிவெடுத்தார் .முகமாலை, ஹபரண மற்றும் காலியில் புலிகள் நடத்திய தாக்குதல்கள் இலங்கை ராணுவத்துக்கு இழப்பைக் கொடுத்தது .

அதே நேரம்  மாவிலாறில் சண்டை தொடங்கியதுமே  வன்னியை ஊடறுத்து கொழும்பையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் பிரதான வீதியான ஏ 9 பதையை மூடி விட்டனர் .இதனால் வன்னிக்குள் யாரும் போக முடியாத நிலைமை ஏற்பட்டது இதனால் வன்னிக்கு வெளியே சென்றிருந்த புலி உறுப்பினர்கள் குறுக்குப் பாதைகள் வழியாக வன்னிக்குள் சென்றார்கள் சிலர் இராணுவத்திடம் கைதானார்கள். இதற்கிடையில் நோர்வேயில் திட்டமிடலின்படி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜெனிவாவில் அக்ட்டோபர் மாதம் தொடங்கவிருந்தது இந்த பேச்சு வார்த்தைக்கு இலங்கை அரசு எந்தவிதமான திட்டத்தையும் தயார் செய்திருக்கவில்லை என்பது மட்டுமல்ல பேச்சு வார்த்தைக்கு செல்லும் புலிகள் குழுவினருக்கு போக்கு வரத்து உதவியும் செய்ய முடியாது என மகிந்தா அறிவித்தார். இதனால் நோர்வே புலிகள் குழுவினருக்கு தனியார் விமான போக்குவரத்து சேவைகளை வாடகைக்கு அமர்த்தி ஜெனிவா அழைத்துச் சென்றிருந்தனர்.ஜெனிவாவில் பேச்சு வார்த்தை தொடங்கியதுமே  இலங்கை அரசு ஏ 9 பதையை உடனடியாக திறக்கவேண்டும்.இராணுவம் முன்னேறிய பகுதிகளில் இருந்து பின்வாங்கி பழைய நிலைகளுக்கு திரும்பினால் மட்டுமே தொடர்ந்து பேசலாம் என்று விட்டு தமிழ்ச்செல்வன் மண்டபத்தை விட்டு வெளியேறிவிட்டார்.புலிகளாகவே பேச்சுவார்த்தை மேசையை விட்டு வெளியேறியதில் இலங்கை தரப்புக்கு உள்ளுர மகிழ்ச்சி .ஆனாலும்   அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக்காண வேண்டும் என்று உயரிய நோக்கத்தில் ஜெனிவா பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டது. ஆனால் புலிகள் நிரந்தரத் தீர்வை விடுத்து ஏ 9 வீதியை திறப்பது தொடர்பான தற்காலிக பிரச்சினையை முன்வைத்து பேச்சை குழப்பிவிட்டனர். இது நியாயமற்ற விடயமாகும். புலிகள் மிகவும் பொறுப்புடன் நடந்துகொண்டிருக்கவேண்டும்.

அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக குறிப்பிட்டது. ஆனால் புலிகள் ஏ 9 வீதி திறப்பது தொடர்பான விடயத்ததைப்பற்றி மட்டுமே பேச முயற்சித்தனர். இவ்வாறான முக்கிய பேச்சுவார்த்தையை தற்காலிக விடயங்களை முன்வைத்து புலிகள் குழப்பியமை தொடர்பாக அரசாங்கம் கவலையடைகின்றது. புலிகள் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வார்கள் என்று நாங்கள் எண்ணவில்லை. அடுத்த கட்ட பேச்சுக்கான திகதியை நிர்ணயம்செய்ய அரசாங்கம் தயாரான போதும் புலிகள் அதற்கு இணங்கவில்லை. ஏ9 வீதியை திறந்தால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து பரிசீலிக்க முடியும் என்று புலிகள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். எனவே, புலிகளின் கோரிக்கை குறித்து விரைவில் அரசாங்கம் பதிலை வழங்கும் என்பதனை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாணவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது என்பதனையும் வலியுறுத்திக்கூறுகின்றோம். என்று அரசாங்க பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினரும் அமைச்சருமான ரோஹித்த போகொல்லாகம அறிக்கை விட்டார் .பேச்சு வார்த்தைக்கு அனுசரணை வழங்கிய நோர்வேயின் பிரதிநிதி எரிக் சொல்கைம் வெளியேறிய தமிழ்செல்வனின் கைப்பற்றிப் பிடித்து "பேச்சு வார்த்தைகளில் இருந்து வெளியேறினால் இனிவரும் காலங்கள் மிக மோசமானதாக இருக்கும் எனவே தயவு செய்து உள்ளே வாருங்கள்" என்று மன்றாட்டமாக கேட்டார்.

கையை உதறிய தமிழ்ச்செல்வன் "எப்பொழுதுமே எங்களில் தான் தவறை கண்டு பிடிக்கி றீர்கள் முடிந்தால் எங்கள் கோரிக்கைகளை இலங்கை அரசிடம் சொல்லி நிறைவேற்ற சொல்லுங்கள் தொடர்ந்து பேசலாம் முடியாவிட்டால் எங்களை எங்கிருந்து கொண்டு வந்தீர்களோ அங்கேயே கொண்டுபோய் விட்டு விடுவதோடு உங்கள் பேச்சு வார்த்தை முயற்சிகளை முடித்துக் கொள்ளுங்கள் எங்கள் வழி எங்களுக்கு தெரியும்" என்று சொல்லி முடித்ததும் அதற்கு மேலும் ஏதும் பேச முடியாது எரிக் சொல்கைம் புலிகள் குழுவினரை வன்னிக்கு அனுப்பி வைத்தது மட்டுமல்லாது இலங்கை பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தது துரதிஸ்டவசமானது மீண்டும் அவர்கள் அழைத்தால்  உதவ காத்திருக்கிறோம் என்றொரு அறிக்கையும் விட்டு விட்டு நோர்வே திரும்பிவிட்டார் .இலங்கையில் கடமையில் ஈடுபட்டிருந்த போர்நிறுத்த கண்காணிப்பு குழுவும் தங்கள் பணிகளை நிறுத்திவிட்டு இலங்கையை விட்டு வெளியேறினார்கள்.இலங்கை பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முயன்று முடியாது போய் விட்டதால் மேற்குலகம் அடுத்த திட்டத்தை நிறைவேற்றி பிரச்சனையை தீர்த்து விடுவது என்று முடிவெடுத்தார்கள் .அவர்களது அடுத்த திட்டம் புலிகளின் ஆயுதங்களை களைந்து பலவீனமாக்கி அழித்தொழித்து பிரச்சனையை தீர்ப்பது .
புலிகளின் பலம் என்பது கருணா பிளவு சர்வதேச கடல் கடத்தல் வலையமைப்பை அழித்தொழித்தது என்பதன் மூலம் அவர்களின் எழுபது வீதமான பலத்தை இழந்திருந்தார்கள். ஆனாலும் அவர்களது போரிடும் திறன், கையாளும் யுக்திகள், மனோபலம் என்பவற்றை குறைத்து மதிப்பிட முடியாது என்பதும் மேற்குலக நாடுகளுக்கு தெரியும்.

No Comment