Navigation


RSS : Articles / Comments


சாத்திரியின் ஆயுத எழுத்து / ஒரு பார்வை – ராகவன்

2:07 PM, Posted by sathiri, No Comment

சாத்திரியின் ஆயுத எழுத்து / ஒரு பார்வை – ராகவன்

 http://eathuvarai.net/?p=4824

 
391 பக்கங்களை கொண்ட இந்த நாவல் சாதாரணமான மனிதர்கள் , அழிவையே தரும் ஒரு அமைப்பொன்றின் அதிகாரத்தினுள் வந்தபின் எவ்வாறு கொலைகள் மற்றும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களில், இயல்பாக எவ்வித குற்ற உணர்வுமின்றி பங்கெடுக்கிறார்கள் என்பதை படம் பிடிக்கிறது. இந்த நாவலானது 83 கலவரத்தின் பின் விடுதலைப் புலிகளில் சேர்ந்த ஒரு இளைஞன் சந்தித்த அனுபவங்கள் மட்டுமல்லை, அவன் தன்னார்வத்துடன் புலிகளின் நடவடிக்கைகளில் பங்கு பற்றிய ஒரு பதிவு. விடுதலை புலிகளின், டெலோ மேலான படுகொலை தொடக்கம் பாரிசில் விடுதலை புலிகளின் முகவரான நாதனின் படுகொலை வரையாக நாவல் நீள்கிறது.எனது மனதை மிகவும் அழுத்திய நாவல்களில் இதுவுமொன்று.
raakavanஇந்த நாவலில் வரும் கதா பாத்திரம் ஒரு பெயரிலி. ‘அவன்’ என்று மட்டும் கதா நாயகன் விளிக்கப்படுகிறான். எனவே ‘அவன்’ என்றே நானும் விளிக்கிறேன்.அவன் வெறும் இயக்க கட்டளைகளை ஏற்றுக்கொண்டு மட்டும் செயல் படவில்லை. அதன் பங்காளனாகிறான். அவனதும், இயக்க உறுப்பினர்களினதும்  மானிட விழுமியங்களுக்கெதிரான ஒவ்வொரு செயலும் தினமும் சாப்பிடுவது உறங்குவது உறவு கொள்வது போன்ற அற்ப விடயங்களாக தினசரி நிகழ்வுகளாகின்றன. கொலைகள் சித்திரவதைகள் பழிவாங்கல்கள் ஏமாற்று என்பவை எவ்வித மனக்கிலேசமுமின்றி அரங்கேறுவதன் காலக்கண்ணடியாக ஆயுத எழுத்து இருக்கிறது.
ஒரு மோசமான அமைப்புக்கான தயார்படுத்தலை செயல்படுத்தலை தனது கடமையாக அவன் முன்னெடுக்கும் போது அனைத்து மானிட விழுமியங்களும் புதைக்கப்படுகின்றன. வெறும் உத்தரவுகளை நிறைவேற்றுபவனாக, ஒரு சிப்பாயாக அவன் காட்சிப்படுத்தப்படவில்லை. மாறாக அவன் ஒவ்வொரு நகர்வையும் தனது கடமையாக கருதி செயல்படுகிறான். அவன் மட்டுமல்லை அமைப்பில் அங்கம் வகிக்கும் பலரும் அவ்வாறே. ஒரு ராட்சச இயந்திரத்தின் சிறிய அங்கமாக அதன் சுழற்சிக்குள் அகப்பட்டு தொழில்படுகின்றான் என்பதைவிட அவனும் அந்த இயந்திரத்தின் சுழற்சிக்கு உந்து கொடுக்கின்ற முக்கிய பாத்திரம் வகிக்கின்றான் என்பதையே நாவல் உணர்த்துகிறது. .
ஒரு வகையில் தமிழ் மக்கள் மேலான 83 அரச வன்முறையை தொடர்ந்து அவனும் அவன் போன்றவர்களும் விடுதலை அல்லது இலங்கை அரசை பழி வாங்கல் என்ற ஆர்வத்துடன் புலிகளிலும் மற்றைய அமைப்புகளிலும் சேர்ந்தார்கள் என்பது உண்மையே. அதற்கான நியாயங்களும் இருக்கின்றன. ஆரம்பத்தில் அவன் அமைப்பில் சேரும் போது அவனுக்கு குடும்பம் பற்றிய நினைவுகள் ,காதலி , நண்பர்கள் பற்றிய நினைவுகள் போன்ற இயல்பான மனித உணர்வுகள் வரத்தான் செய்கிறது. இவ்வுணர்வுகளை படிப்படியாக அடக்குவதன் மூலம் தனது மனிதத்தை அவன் மழுங்கடிக்கிறான்.
ஆரம்ப காலகட்டத்தில் அவனுக்கோ மற்றும் பலருக்கோ அமைப்புகளின் முழுப் பரிமாணமும் தெரியவில்லை என்பதும் நியாயமே. அத்துடன் அமைப்புகளின், முக்கியமாக புலிகளின், வன்முறைசார்ந்த சர்வாதிகார தலைமைமுறை ஆரம்பத்தில் முழு பலமும் பெறவில்லை. ஆனால் ஒரு வகையில் அவன் பொறுமையற்றவனாக உடனடி நடவடிக்கையில் ஈடுபட விரும்பும் ஒருவனாக ஈ பி ஆர் எல் எப் இன் புத்தகப்படிப்பில் ஆர்வமற்று புலிகளின் ஆயுதங்களை நம்பி அவர்களுடன் சேர்கிறான். அவனது தெரிவுக்கு அவனது இளம் பராய வயது மற்றும் அரசின் நேரடியான வன்முறை காரணம் என்பதும் யதார்த்தமே.
நாவலின் பக்கங்கள் அவனது நடவடிக்கைகளின் தொகுப்பல்ல. ஹாலிவூட் பட நாயகனின் வீரக்கதையுமல்ல. மாறாக ஒரு வன் முறைக்கலாச்சாரம் எவ்வாறு சமூகத்தில் அங்கீகாரம் பெற்று சகஜமாக்கப்பட்டதென்பதே இக்கதை.நாவலில் வரும் அவன், விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ,இந்திய அரச படைகள் ,ஆயுத அமைப்புக்களின் ரத்தக்கறை படிந்த வரலாற்றின் பக்கங்களை தனது பங்களிப்புக்களூடாக எவ்வித ஒழிவுமறைவுமின்றி வெளிக்கொணர்கிறான். அத்துமீறல்கள், படுகொலைகள், கடத்தல்களுக்கான திட்டமிடுதல் அவற்றை நிறைவேற்றும் பாங்கு அனைத்தும் வெறும் சாதாரண நிகழ்வுகளாகவே அவனுக்குப்படுகின்றன. துப்பாக்கியின் விசை அழுத்தல் ஒரு பொழுது போக்காகிறது. எதிரி நண்பன் உறவினன் அனைவரும் துப்பாக்கி விசையின் முன் ஒரு புள்ளி. புளட் இயக்கத்தில் இருந்து விலகி வெளி நாடு செல்ல இருந்த தனது பால்ய நண்பனை திடீரென்று சந்திக்கையில் அவன் சுட்டு கொல்கிறான். நண்பனிடம் துப்பாக்கி இருக்குமென்ற சந்தேகத்தில். இங்கு அவனது நிலை கொலை நிலத்தில் வாழும் நிலையே. சிறிய சந்தேகம் துப்பாக்கி விசையின் அழுத்தத்தையே வேண்டி நிற்கிறது.
saaththiriஇக்கதை அறம், மனித விழுமியங்கள் பற்றிய சிந்தனைக்கான இடைவெளி இல்லாத அந்தகாரத்தில் விடப்பட்ட ஒரு மனிதனின் கதை மட்டுமல்ல; நடந்து முடிந்த ஒரு கோரமான வன்முறையின் பக்கங்கள் எவ்வாறு சாதாரண சம்பவங்களாக சகஜ நிலையாக பார்க்கப்பட்டன என்பதையும் நாவல் படம் பிடிக்கிறது. அவன் சம்பவங்களை நியாயத்தராசில் போடவில்லை ; மாறாக வாசகனிடம் அதனை விட்டுவிடுகிறான். சாத்திரியின் இந்த உத்தி அவரை தேர்ந்த கதை சொல்லியாக்கியிருக்கிறது.
மனிதத்துக்கெதிரான அப்பட்டமான குற்றசெயல்கள் ஸ்தாபனமயப்பட்டு எதிர்ப்பின்றி தினசரி நிகழ்வுகளாகும் போது இக்குற்றச்செயல்களின் பங்காளர்களுக்கு இது சாதாரணமான நிகழ்வுகள். மனிதத்துகெதிரான பாரிய குற்ற செயல்களானது அங்கீகரிக்கப்பட்டு வழமையாக்கப்படும் போது அதற்கெதிரான அறச் சீற்றமோ அரசியல் எதிர்ப்போ இன்றி நடைமுறைப்படுத்தப்படுகின்றதென்கிறார் ஹன்னா ஆரெண்ட் எனும் அறிஞர்.ஒரு ஆயுத அமைப்பின் பிறழ்வு, அதன் நாசகார சக்தி, அதில் இணைந்து கொண்ட இளைஞன் ஒருவனின் பங்களிப்பு இவை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவாறு கதை நகர்கிறது.
0000
இந்திய ராணுவத்தினதும் இலங்கை ராணுவத்தினதும் கோரத்தனங்கள் படுகொலைகள் பாலியல் பலாத்காரம் இவ்வதிகாரங்களுடன் சேர்ந்தியங்கும் ஆயுத அமைப்புக்களும் அவர்களின் வன்முறையும் அதற்கான புலிகளின் எதிர் நடவடிக்கைகள் ஊடாகவும் அவன் வருகிறான். வன்முறையே வாழ்க்கை முறையாகி ஒருமுழுச்சமூகத்தையும் காவு கொண்ட கதையை நாவல் சொல்கிறது.
இந்த நச்சு சூழல் மக்கள் மத்தியிலும் பரவியது யதார்த்தமே. கம்பத்தில் கட்டி கொல்லப்பட்ட மனிதர்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டபோது பலர் வேடிக்கை பார்த்தது மட்டுமல்ல அதனை நியாயப்படுத்தவும் தவறவில்லை. அது மட்டுமல்ல புலிகள், டெலோ மீது நடத்திய படுகொலைகளின் போது ஒரு சிலர்’ சுட்டு ‘ களைத்துப்போன’ புலிகளுக்கு சோடா கொடுத்த சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. அறிவு ஜீவிகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் இவ்வழிவு கலாச்சாரத்தை நியாயப்படுத்தி முண்டுகொடுத்திருக்கின்றனர். அதற்காக ஒட்டு மொத்த சமூகமும் வன்முறைக்கலாச்சாரத்தை அங்கீகரித்ததென்பதல்ல. மாறாக வன்முறைக்கலாச்சாரமானது எவ்வாறு பல் பரிமாணங்களில் செயல்படுகிறது, அக்கலாச்சாரம் எவ்வாறு சாதாரண நிகழ்வாக்கப்பட்டு அங்கீகாரம் பெறுகிறது என்பது கவனிக்கப்பட வேண்டியது.
இந்திய ராணுவ அட்டூழியம் அதனை தொடர்ந்த அவனது பிரான்ஸ் வருகை. அதன் பின் சர்வதேச ஆயுதக்கொள்வனவு என கதை நகர்கிறது. ஆயுத கொள்வனவு செய்கையில் பாலியல் தொழிலாளர்களிடம் போவதிலிருந்து ஜானி வாக்கர் விஸ்கி, நல்ல பிரஞ்சு வைன் தேடுதல் மற்றும் போதை பொருள் கடத்தல் வரை இயக்கத்துக்கான கடமையை எவ்வித கேள்விகளும் இன்றி அவன் செய்கிறான். விடுதலைப்புலிகள் கட்டுப்பாடான இயக்கம் என்ற முகத் திரை இங்கு கிழிந்து போகிறது.அதனை விட அவன் தயாரிக்கும் பெண் தற்கொலை போராளி மூலம் பொலிஸ் அதிகாரிகளை வலையில் விழுத்த அவன் திட்டம் போடுகிறான். அவளை அவர்களுடன் பாலியல் உறவு கொள்ள ஏற்பாடு செய்கிறான். அவள் அவனுக்கு ஒரு இயந்திரமாகவே தெரிகிறாள். அவள் இறந்த பின் அவளது முக அடையாளம் தெரியக்கூடாதென்பதில் கவனம் செலுத்தி வெடி மருந்து கொண்ட கழுத்துப்பட்டியும் மாட்டுகிறான்.
மற்றைய இயக்கங்களுக்கு மேலான புலிகளின் படுகொலைகள்,  தாக்குதல்கள் அவனுக்கு மட்டுமல்ல அவனுடன் சேர்ந்திருந்தவர்களுக்கும் நியாயமாகவே படுகிறது. டெலோவை அழிப்பதற்கு உறுப்பினர் பலரின் எவ்வித விசாரணையுமற்ற உற்சாகமான பங்கு பற்றலும் பல கேள்விகளை எழுப்புகின்றன.

0000
மனிதன் சுதந்திரமானவன் என்பது தீர்மானகரமானது. ஏனெனில் இவ்வுலகில் அவன் எறியப்பட்டபின் அவனது ஒவ்வொரு செயலுக்கும் அவனே பொறுப்பென்கிறார் சாத்தர். அவனும் அவனை சேர்ந்த பலரும் அழிப்புகளை உற்சாகத்துடன் செயல்படுத்துகின்றனர். டெலோ அமைப்பை அழிப்பதற்கான புலிகளின் தலைமையின் நியாயப்படுத்தலை கண்மூடித்தனமாக ஏற்றுகொண்டு அவர்கள் செயல் படுகின்றனர். ஒருவகையில் புலிகளின் தலைமையானது மாற்று இயக்க முரண்பாடுகளை அழிப்பு முறையை விடுத்து தீர்ப்பதற்கான வழிவகைகளை கைக்கொள்ளவில்லை என்பது யதார்த்தமெனினும் அந்த அழிப்பை முன்னின்று நிகழ்த்த துணை புரிந்த உறுப்பினர்களின் பாகத்தை எவ்வாறு கணக்கிடுவது? விசாரணையின்றி மற்றைய இயக்கங்களுக்கு மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வதை எவ்வாறு எடுத்துக்கொள்வது? ஹன்னா ஆரெண்ட் அடொல்ப் ஐச்மன் என்ற நாசி கொலையாளியை பற்றி ஆயும் போது அவன் கொலைகளை செய்தான் ஆனால் அதனை ஐச்மனுக்கு பகுத்தறிவாக சிந்திக்கும் திறன் இருக்கவில்லை என் கிறார். இன்னிலையை கெடுதியின் இயல்பாகம் (banality of evil) என்கிறார் அவர். அவனது செயல்களை banality of evil எனக்கொள்வதா அல்லது சாத்தர் சொல்வது போல் மனிதனின் செயலுக்கு அவன் பொறுப்பா என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது.
பாரிசில் விடுதலை புலிகளின் காசை கையாடுகிறார் என குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நாதன் வரை அவனது பங்களிப்பு தொடர்கிறது. அவனும் கொலை செய்வதற்காக இலங்கையிலிருந்து வரவழைக்கப்பட்ட தேர்ந்த கொலையாளியை பாதுகாப்பாக பிரான்ஸ் கொண்டு வருவதிலிருந்து கொலை செய்தபின் அவனை பாதுகாப்பாக பிரான்ஸிலிருந்து வெளியேற்றுவது வரை முழு பொறுப்பையும் நிறைவேற்றுகிறான். கொலையைச் செய்து விட்டு அதனை இலங்கை அரச உளவாளிகளின் தலையில் சுமத்துவது ,மக்களை தம்வசப்படுத்துவது ,அதிக பணம் சேர்ப்பது என்ற திட்டத்துடன் கொலை நிறைவேறுகிறது.
அல்பேர்டோ மொறவியாவின் -கொன்ஃபொர்மிஸ்ட் -என்ற நாவலை இரண்டு வருடங்களுக்கு முன் வாசித்திருந்தேன். பாசிஸ்ட் இத்தாலியில் புலனாய்வு துறையில் தொழில் புரியும் மார்சலோ என்ற பாத்திரத்தின் புனைவு அக்கதை . பாசிச எதிர்ப்பாளரான தனது முன்னை நாள் பேராசிரியரை பாரிசில் வைத்து கொலை செய்ய புலனாய்வு துறையால் மாசலஸ் தேர்ந்தெடுக்கப்படுகிறான். அப்போது தான் திருமணமான அவன் தனது தேன்னிலவை கொண்டாட பாரிசை தேர்ந்தெடுக்கிறான். ஏனெனில் தனது இரகசிய நடவடிக்கைக்கு அது துணை போகுமென்று. கொன்பொர்மிஸ்ட் நாவலில் ஒரு இடத்தில் மாசலசின் செயல் பற்றி இவ்வாறு…” அக்கணத்தில் அவளை விருப்புடன் கொன்றிருப்பான் . அவள் எதிரியாக இருந்துகொண்டு உயிருடனும் இருப்பது அவனுக்கு சகிக்கவில்லை. அவள் இறப்பதை காண மனப்பயம் இருப்பினும் அவள் தன்னை நேசிப்பதை விட அவளது இறப்பு அவனுக்கு அதிக மகிழ்வை தந்தது”.
0000
306938-gun

அது போல் ஆயுத எழுத்து அவன் இலங்கை பொலிசிடம் சிக்கி சித்திரவதை படும் போது ,ராணி என்ற விசாரணையாளரிடம் சிக்குகிறான். ராணி அவனை சித்திரவதைக்குள்ளாகி பின்னர் அவன் மேல் காதல் கொள்கிறாள். தனது கதையையும் சொல்கிறாள். தனது கணவன் ஈ பி ஆர் எல் எப் இலிருந்து விலகி இருக்கையில் புலிகளால் அனியாயமாக சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை விவரித்து புலிகளை பழி வாங்க பொலிஸில் சேர்ந்ததாக தெரிவித்தாள். இருவரும் உடலுறவு கொள்கின்றனர். அவன் பொலிசில் பிடி பட முன்னர் கச்சிதமாக ஒரு தற்கொலையாளியை தயார் செய்து குண்டு வெடிப்பொன்றை நிகழ்த்த ஏற்பாடு செய்துவிட்டான்.
தீவிரமான விசாரணைகளின் பின் அவன் விடுவிக்கப்பட்டு திரும்ப வெளி நாடு செல்ல விமான நிலையத்தில் நிற்கையில் தொலை பேசி அழைப்பு ராணியிடமிருந்து. உடனே அவன் எங்கு குண்டு வெடிப்பு நிகழ இருக்கிறதோ அங்கு அவளை வர சொல்கிறான். அவள் அந்த குண்டு வெடிப்பில் தப்பமாட்டாள் என அவன் திருப்தி அடைகிறான். தனது கணவன் அநியாயமாக புலிகளால் கொலை செய்யப்பட்டபின் பொலிஸில் அவள் இணைவதற்கான காரணம் அதன் சரி பிழைகளுக்கப்பால் அவனுக்கு உறுத்தவில்லை. அவள் அழிந்து போவது அவசியம் என நம்புகிறான்.
தனது தந்தை தன்னை கண்டிப்புடன் நடத்தியதை சிறு வயதில் இருந்து வெறுத்த அவன் ஒரு முறை இயக்கத்தில் இருந்து வீடு செல்கிறான். அங்கு முற்றத்தில் ஒரு கோழியும் சேவலும் உறவாடக் காண்கிறான். அச்சமயம் அவனது தந்தை அவனை திட்டி தீர்க்கிறார் . அவன் தனது கைத்துப்பாக்கியை எடுத்து சேவலை சுட்டு கொல்கிறான். தகப்பன் மேலான அவனது ஆத்திரம் கோழியுடன் உறவு கொண்டிருந்த சேவல் மேல் வந்தது. அவன் கோழியை கொன்றது பற்றி மன உறுத்தல் கொள்ளவில்லை, மாறாக கோழிக்கறியை சாப்பிடாமல் விட்டது தான் அவனுக்குப் பிரச்சனை. ஒருவகையில் தந்தை மேலான தீர்க்கப்படாத பகைமை சேவல் உறவு கொள்ளும் போது அதை கொல்ல தூண்டியதா எனவும் கருதத் தோன்றுகிறது
000000
பிரான்சுக்கு வரும் அவன் ஒரு பிரஞ்சு பெண்ணை காதலிக்கிறான். ஆனாலும் அவன் தன்னை விடுதலைப் புலிகளின் ஒரு பாகமாகவே நினைக்கிறான். . மற்றவர்களை தயார்படுத்த அவன் தொடர்ந்தும் முனைகிறான். அவளுக்கு தெரியாமல் பாரிசை விட்டு வெளிவருகிறான்.அவன் அழகையும் அன்பையும் காதலையும் உணரக்கூடியவான இருப்பினும் இவை தன்னை ஆட்கொள்ள கூடாதென உறுதியாக இருக்கிறான். தான் அங்கத்தவனாக இருக்கும்  அமைப்பிற்கான கடமையுணர்வு மேலோங்க தான் செய்யப்போகும் நடவடிக்கைகள் மேலான ஈர்ப்பு ,அன்பு இரக்கம் போன்ற விழுமியங்களை இழக்க அல்லது அடக்க செய்கிறது.
இந்த நாவலில் 1990களில் நிகழ்ந்த முஸ்லிம் வெளியேற்றம் பற்றிய பதிவானது நாவலுக்கு வெளியில் இருப்பதாகவே எனக்கு படுகிறது. ஏனெனில் அவன் அதுவரை நிகழ்வுகளை நேரடி அனுபவங்களூடாகவே சொன்னான். ஆனால் இது பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையாக தனியாக பதிக்கப்பட்டது அல்லது புகுத்தப்பட்டது போன்ற உணர்வை தந்தது. அதனை விட பதிப்பாளர்கள் எழுத்துப்பிழைகளை சீர்பார்த்திருக்க வேண்டும். பெரிதாக எழுத்துப்பிழை இல்லாவிடினும் அதில் கவனம் செலுத்துவது அவசியம்.
-கொன்ஃபொர்மிஸ்ட் -இல் வரும் மாசலோவின் இறப்பு முசோலினியின் பாசிச இத்தாலியின் ஆட்சி முடிவுடன் நிறைவேறுகிறது. காரில் செல்லும் மாசலோ நேசப்படைகளின் விமான குண்டு வீச்சில் சிக்கி இறக்கிறான். இது பாசிசத்தின் முடிவுக்கான ஒரு குறியீடாக அந்த நாவலில் வருகிறது. ஆயுத எழுத்து நாயகனும் மே 2009 இன் பின் புலிகளின் அழிவின் முடிவுடன் கொல்லப்படுகிறான். கொல்லப்பட்டது கதா நாயகனல்ல, புலிகளின் வன் முறைக்கலாச்சாரமே என்கிறது ஆயுத எழுத்து.
ஆனால் வன்முறை கலாச்சாரமானது வெறும் தமிழ் பகுதிகளுக்கு சொந்தமானது அல்ல. ஆயுதகலாச்சாரம் இலங்கையின் ஒட்டுமொத்த சமூகத்திலும் வேரூன்றியதுதான் யதார்த்தம். 80 களில் நிகழ்ந்த ஜேவி பி யினரின் கொலைகள் 1970 களிலிருந்து இலங்கை அரச படையினர் தமிழ் சிங்கள மக்கள் மேல் நிகழ்த்திய அப்பட்டமான படு கொலைகள் மனித உரிமை மீறல்கள். இதற்கு மகுடம் வைத்தது போல் முள்ளிவாய்க்காலில் அரச படைகள் நிராயுத பாணிகளை சித்திரவதை செய்து படுகொலைகள் செய்துவிட்டு அக்காட்சிகளை கைத்தொலைபேசிகளால் படமெடுத்து மகிழ்ந்ததும் ,அப்படங்களை வெற்றி சின்னங்களாக வரித்ததும் வன்முறைக்கலாச்சாரத்தின் இன்னுமொரு பிரிக்க முடியாத அங்கமே. இவை பற்றி அனைத்து பிரிவினரிடமிருந்தும் பதிவுகள் வர வேண்டும்.
முடிவாக சாத்திரி தரமான நாவலை மட்டுமல்ல ஆயுதக்கலாச்சாரத்தின் நச்சு சூழல் பற்றிய நல்லதொரு பதிவையும் தந்திருக்கிறார்.
00

No Comment