“ஆயுத எழுத்து“ ( நாவல் ) “ படித்ததில் புரிந்தது“ / தமிழ்க்கவி
Dec. 02 2014, இதழ் 63, டிசம்பர், பதிப்பக அலமாரி, முதன்மை 5 no comments
போராட்டம் வலுவிழந்து நிற்கும் காலப்பகுதியில் வரும் ஒப்புதல் வாக்குமூலம்.1983ம் ஆண்டு தின்னவேலித்தாக்குதலோடு தொடங்கும்.கதை பரந்து விரிந்த போராட்டத்தின் பல பரிமாணங்களை விளக்குகிறது
”அப்பு ராசா வாடா போராட எண்டால் வரமாட்டாங்கள்” அவர்களை களத்துக்கு அனுப்ப சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு வழிகளையும் கையாளவேண்டித்தான் வரும்.இங்கு அந்த காரணங்களில் சில வெளிவருகிறது.
1987க்குப்பினனரான காலத்தில் நடக்காத எதையும் புலிகள் செய்யவில்லை. இந்திய ராணுவத்தின் அனுசரணையுடன் ஆள் பிடித்தவர்களால் தமிழீழப்பிரதேசமே அரண்டு போய்க் கிடந்ததை நாம் மறக்க முடியுமா? இயக்கத்துக்கு போவதற்கு பல காரணங்கள்உண்டு.
சிலவற்றை முடிச்சவிழ்க்கிறது. ஆயுத எழுத்து. போர் பிரபலமடைந்ததே இயக்க மோதல்கள் தொடங்கியபின்னர்தான்.அதையும் புலிகள்தான் தொடக்கி வைத்தார்களா? தனிப்பட்ட பகைகளால் நடந்த அசம்பாவிதங்கள். உயிர் நண்பா்களால் விடுவிக்கப்பட்டபுலியால், உயிர் நண்பனைக் காப்பாற்ற மனசில்லாமற் போனதும், வெட்கமற்று விரிகிறது காரணத்தோடும் காரணமேஇல்லாமலும் மனித உயிரகள் தமர் பிறர் என்றில்லாமல் காவு கொள்ளப்பட்ட விந்தை. வலக்கரத்தில் துப்பாக்கி பிடித்தபின் இடக்கரத்தால் மாலை போட்டு வீரவணக்கம் செலுத்தும்..அசகாய சூரத்தனம்..ஒருபுறம்.
பெண்கரும்புலிகளின் போ் சொல்ல முடியாத சாதனைகள்.
“வாய்விட்டு போ் சொல்லி அழ முடியாது
வெறும் வார்த்தைகளால்… உன்னை தொழ முடியாது… இவரகள் புகழ் பாட முடியாது எனற பாடலடிகளுக்கு விளக்கம் வெளியிடப் பட்டுள்ளது.
ஒருதேச விடுதலைப் போராட்டத்தின் மறுபக்கம் உடைக்கப்பட்டிருக்கிறது.அது ஆயுத எழுத்தாக வெளிவந்திருக்கிறது.
”நீதி வழங்கப்பட்டால் போதாது…நீதிவழங்கப் பட்டதாக காட்டப்பட வேண்டும்” என்றசட்டப் பழமொழிக்கமைய அதிக நீதியை கடைப்பிடிக்க முடியாத நிலையே உலக யதார்த்தமாகும்.
இந்த நுாலின் தாத்பரியமும் அதில் வரும் ஒரு பாத்திரத்தால் பேசப்படும்.” எனது நாட்டுக்காகவும் எமது மக்களுக்காகவும்” என்ற போர்வையில் நடந்தேறிய அராஜகங்கள்தான்..என துடைத்தெறிய முடிகிறதா பாருங்கள்.
திட்டங்களைத் தீட்டி ஏவாமல் ஏவப்பட்டவரே திட்டங்களைத் தீட்ட முடிந்துள்ளது.
“சினைப்பர் “திரைப்படத்தில் வருவது போல ” அங்க அறைக்குள்ள இருந்து திட்டம் போடுறவன்ர கட்டளைகள நாங்க நிறைவேற்ற முடியாது. இஞ்ச என்ன சூழ்நிலை இருக்கோ அதற்கு ஏற்றமாதிரிதான் நாங்கள் செயல்பட முடியும்”
மற்ற இயக்கப் போராளிகள் பரவலாக வந்து போகிறார்கள். இயக்க மோதல்கள் மிக தெளிவாக அதற்கான துாசுக் காரணங்களுடன் விபரிக்கப்படுகிறது.மனித உயிர் நண்பன் பகைவன் என்ற வேறுபாடின்றி பந்தாடப்பட்டுள்ளது.
கதைக்கு தேவையானதற்கு மேலாகவே உடலுறவுச் சம்பவங்கள் ஏராளமாக,தாராளமாக.உள்ளது சில இடங்களில் அது தேவையானதாக உள்ளது இன்னொரு வகையில் பழைய மித்திரன் தொடர்களான ,பட்லீ, அலீமாராணி, பூலான்தேவி தொடர்களை நினைவூட்டத் தவறவில்லை. ஆடை களையும் வரை அருகிலிருந்து குறிப் பெடுக்கும் எழுத்தாளர்களைப் போலல்லாது விடயத்தைசுருங்கச்சொல்லி விலகி விடுகிறார். சாத்திரி
கற்பனையல்ல நிஜம். என்பது சிறீசபாரத்தினம் கொலைச்சம்பவஙகளில் விழிகளைத் திறந்து வைத்திருக்கிறது
எல்லாம் சரி இப்போது எதற்காக இதையெல்லாம் வெளியே சொல்லவேண்டும். தகவல்களை வைத்துக் கொண்டிருக்க முடியாமல் தத்தளித்து கொட்டிவிட்டார் ஆசிரியா். கொடூரமான சம்பவங்கள்ஊடாக பயணிக்கும்போதும் எழுத்தில் எள்ளல் சுவை துள்ளி நடை போடுகிறது. எல்லாம் நானே என்பதான கர்வம் தொனிக்கிறது.
ஆயுத எழுத்துக்குள் மக்கள் எவ்வளவு மட்டமாக முட்டாள்களாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுபல இடஙகளில் செரிமானமாகாமல் வலிக்கிறது.அழகான இந்த ஆயுத எழுத்தை எழுதிய நபர் இங்கு நடமாடுவது நானல்ல,இது உங்களில் ஒருவராகவும் இருக்கலாம். ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு நபர்களைப் பொருத்திப்பாருங்கள்.என்கிறார்.
இவைபற்றி இயக்கவேறுபாடின்றி எல்லோரும் கருத்துக் கூறப் போகிறார்கள். எனபது சர்வ நிச்சயம். ஆசிரியரின் தீர்க்க தரிசனம் அல்லஇது
ஏற்கெனவே தெரிந்திருந்தும் நாம் பேசாது விட்ட பல விடயங்களை உடைத்து வெளிவந்திருக்கிறது ஆயுத எழுத்து .ஒரு சுய விசாரணை கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து மீளெழுகைக்கான வழிகாட்டலாக…..நிச்சயமாக இது இருக்கவேண்டாம்.
•••