ஐந்தாம் ஆண்டு அஞ்சலியா ஐந்தாம் கட்ட ஈழப்போரா?? சாத்திரி:-
இலங்கைத்தீவில் தனித்தமிழ் ஈழம்
கேட்டுப் போராட்டம் நடத்திய புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் அழிக்கப்பட்ட
பின்னர் பிரபாகரன் அவர்களின் மாவீரர்தின உரை இன்றி புலம் பெயர்
தேசங்களில் நடக்கப் போகும் ஐந்தாவது மாவீரர் நாள் கொண்டாட்டத்தினை
எதிர்கொள்ளப் போகிறோம். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில்
நடக்கும் மாவீரர் நினவுநாளினை நான் எனது கட்டுரைகளில் மாவீரர் நாள்
கொண்டாட்டம் என்று எழுதுவது வழமை ஏனெனில் அந்த நாள் மாவீரர் அஞ்சலி நாளாக
இல்லாமல் ஆட்டம் பாட்டம்.கடைகள் . என்று கொண்டாட்டமாகவே நடைபெறுவது
வழமை.அப்படி இன்னொரு கொண்டாட்டத்தினை எதிர்கொள்ளப் போகிறோம்.2009 ம் ஆண்டு
மாவீரர் தினத்தின் போது தலைவரின் உரை கட்டாயம் வருமென அதன்
ஏற்பாட்டளர்களால் அடித்துக் கூறப்பட்டிருந்தது.எப்படியும் தலைவரின் உரை
வந்துவிடுமென நம்பிக்கையோடு பலரும்.வருமா வரதா என்று குழப்பத்தில்
சிலரும்.வரக்கூடாது என்றவர்களும்.வராது என்று சொன்னவர்களும்.மாவீரர் தினஉரை
வந்து விடுமோ என்று காத்திருக்க 2008ம் ஆண்டின் மாவீரர் தின உரையை மீள்
ஒலிபரப்பு செய்திருந்தார்கள்.தலைவர் மாவீரர் தின உரை நிகழ்த்தினால் அவரின்
இரகசிய இடத்தினை எதிரிகள் கண்டு பிடித்துவிடுவார்கள் அதனால்தான் பழைய உரையை
மீள் ஒலிபரப்பு செய்தோம் அடுத்த வருடம் கட்டாயம் வரும் என்றார்கள்.அதையும்
சிலர் நம்பதான் செய்தனர்.ஆனால் அடுத்த வருடமும் வரவில்லை.அது
மட்டுமல்லாமல் ஐந்தாயிரம் பேரோடு தலைவர் ஐந்தாம் கட்டப் போருக்கு
திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்.எரித்தியாவில் நூறு குண்டு வீச்சு
விமானங்களும் தயார் நிலையில் உள்ளது என்கிற பிரசாரமும் நடந்துகொண்டுதான்
இருந்தது.
ஆண்டுகள் செல்லச் செல்ல ஐந்தாயிரம் பேரும் காணமல்போய் எரித்தியாவில் நின்றிருந்த குண்டுவீச்சு விமானங்கள் பற்றிய கதைகளும் பறந்து போய். தலைவர் இருக்கிறார் என்பதும் இல்லாமல் போய்விட்டது .
ஈழத்துக்கான போராட்டத்தை புலம்பெயர் தமிழ்
மக்களிடம் ஒப்படைத்துவிட்டேன் என்று தலைவர் தனது கடைசி மாவீரர் தின
உரையில் சொல்லியுள்ளார் எனவே நாம்தான் ஈழத்துக்கான அடுத்த கட்டப்
போராட்டங்களை நடாத்தப் போகிறோம் என்று வெளிநாடுகளில் பல தமிழ் அமைப்புக்கள்
கிளம்பியிருந்தார்கள்.அதில் பெரும் எதிர்பார்ப்போடும் பரபரப்போடும்
தொடங்கப்பட்ட நாடு கடந்த தமிழ் ஈழ அரசு தனது முதலாவது தேர்தலை அறிவித்ததும்
நான் நீ என போட்டி போட்டு அடிபட்டு தேர்தல் நடந்து முடிந்து அமைச்சர்களும்
தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.தேர்தலில் நின்றவர்கள் சிலர் பிரதமராக
நியமிக்கப்பட்ட உருதித் ரகுமருக்கு எதிராக அறிக்கையும் விட்டு நாடுகடந்த
தமிழ் ஈழ அரசைப்புறக்கணித்து பிரிந்து போனார்கள் .
இது இப்படிப் போய்க்கொண்டிருக்கும்போதே
புலிகளின் வெளிநாட்டு பிரிவாக இயங்கிய அனைத்துலகச் செயலகம் அதன் மீது
இருந்த தடை காரணமாக சில நாடுகளில் தமிழர் பேரவை என பெயர் மாற்றம்
செய்துகொண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பு என்று
ஒன்றை பெரும் பொருட் செலவில் நடத்திமுடிதிருந்தர்கள்.அந்த வாக்கெடுப்பின்
பின்னர் அனைத்து நாடுகளிலும் 90.99வீதம் தேர்தல் வெற்றி மக்கள் தீர்ப்பை
அப்படியே ஐ.நா சபையில் கொண்டுபோய் கொடுப்போம் அடுத்தமாதம் தமிழீழம்
என்கிற பரபரப்பு பிரச்சாரங்களும் நடந்து முடிந்திருந்தது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் மனம்
கொதித்துப் போயிருந்த மக்களும் எதாவது ஒரு மாற்றம் வந்துவிடாதா என்கிற
ஆதங்கத்தில் இந்த இரண்டு வாக்கெடுப்புக்களுக்குமே பெருமளவில் வரிசையில்
நின்று வாக்களித்துவிட்டு காத்திருந்தார்கள். வட்டுக்கோட்டைக்கு
வாக்கெடுப்பு நடத்திமுடித்து மாதங்கள் வருடங்களாக ஓடி விட்டது.அதை
நடத்தியவர்களும் ஓடி விட்டார்கள் யாரையும் காணவில்லை.
நாடு கடந்த தமிழ் ஈழ அரசோ அடுத்த தேர்தலை அறிவித்து.. தேர்தலில் நிக்கவும் யாரும் முன்வரவில்லை என்பது மட்டுமல்ல ஓட்டுப் போடவே எவரும் போகாத நிலையில் அவர்களாகவே சில அமைச்சர்கள் என்று பெயர்களை அறிவித்து மீண்டும் உருத்திரகுமாரே பிரதமர் ஆனார்.நாடுகடந்த சில அரசுகள் இந்த உலகத்தில் இன்றும் இயங்குகின்றது. ஆனால் உலகத்திலேயே ஒரு மென்பொருளில்(SKYPE) அரசாங்கம் இயங்குகின்றது என்றால் அது நாடு கடந்த தமிழ் ஈழ அரசுதான்.அதற்காக மேன்மை தாங்கிய எமது பிரதமர் திரு .உருதிரகுமார் அவர்களுக்கு ஸ்கைப் நிறுவனம் எதாவது விருது வழங்குமாயின் நான் பெருமகிழ்வடைவேன்.
மேலே குறிப்பிட்ட இரண்டு பெரிய புலம்
பெயர் அமைப்புக்களின் நிலைமை இப்படியென்றால் அடுத்ததாக புதியதோர் விதி
செய்யப் புறப்பட்ட இளையோர் அமைப்புக்கள் கோடை காலத்தில் கொண்டாட்ட
நிகழ்வுகள் நடாத்தி ஆடிப்போடுவதோடு சரி.உலகத்தமிழர் பேரவை அவ்வப்போது
எதாவது அறிக்கை மூலம் தனது இருப்பை அறிவிப்பார்கள் அதேபோல அண்மையில் தங்கள்
அமைப்பு தமிழீழக் கொள்கையை கைவிட்டு விட்டதாக ஒரு அறிக்கையை
விட்டிருகிறார்கள் இவர்கள் தமிழீழக் கொள்கையை கையில் தூக்கிப்
பிடிதிருந்தபோதும் எதுவும் செய்யவில்லை.இனி அதை கை விட்ட பின்னரும் எதுவும்
செய்யப்போவதில்லை என்பது உண்மை.பிரித்தானிய தமிழர் பேரவை அண்மைக்
காலங்களாக தங்கள் போராட்டங்களில் புலிக்கொடியை கைவிட்டுள்ளனர் அதேபோல
அவர்களும் தமிழீழக் கோரிக்கையையும் கை விட்டுவிட்டு ஊரில்
வாழ்வாதாரத்துக்காக போராடும் மக்களுக்கு எதாவது செய்ய முன்வந்தால்
மகிழ்ச்சி.
புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட பின்னர்
வெளிநாடுகளில் புதிதாக போட்டி மாவீரர் தினத்தை தொடங்கிய தலைமை
செயலகதினரின் தலைகளையே காணவில்லை நாடு கடந்த தமிழ்ஈழ அரசுடன் கலந்து
கரைந்து போய் விட்டார்கள்.மக்கள் அவையினரின் நிலைமை மிக மோசம் என
நினைகிறேன் அறிக்கைகளும் இல்லை போராட்டங்களும் இல்லை..ஆனாலும் சிலர் தங்கள்
தனிப்பட்ட முயற்சிகளாக முகப்புதகத்தில் புலிக்கொடியையும் பிரபாகரன்
படத்தையும் தங்கள் படங்களோடு கிரபிக்கில் இணைத்து தினமும் ஒரு குறள் என்பது
போல தினமும் ஒரு வீரவசனத்தை இணைத்துப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் .
வெளி நாடுகளில் ஈழபோரட்ட அமைப்புகளின் நிலை இப்படியென்றால் தமிழகத்தில் ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்கு வந்ததுமே ஈழ ஆதரவுப் போராட்டம் டான்சி நிலமாக மாறிவிட்டது.ஒட்டு மொத்த ஈழப் போராட்டத்தையும் அவரே குத்தகைக்கு எடுத்து அவற்றை வளைத்து வேலி போட்டுவிட்டார் .ஈழம் ..ஈழத்தமிழர் பற்றி அவர் மட்டுமே அறிக்கை விடமுடியும் ..போராட்டம் நடத்த முடியும்..கடிதம் எழுதமுடியும் .அவரை மீறி யாராவது செய்தால் சட்டம் தன் கடமையை செய்யும். அதனால் ஐந்தாம் கட்டப் போர் .ஆயுதப்போர் என தொண்டை கிழியக் கத்திக் கொண்டிருந்தவர்கள் வாயிலிருந்து இப்போ காத்துக்கூட வருவதில்லை ஆகவே அவர்களது ஈழ ஆதரவுப் போராட்டம் என்பது இப்போதிரைப்படங்களை எதிர்க்கும் போராட்டமாக மாறிவிட்டிருக்கின்றது.
தினம் தினம் தமிழ்நாட்டில் ஈழத்
தமிழர்களுக்காக இப்படிப் போராடும் எந்த அமைப்புக்கும் சிறப்பு முகாம்
என்கிற பெயரில் தமிழகத்தில் வருடக்கணக்காக சிறையில் இருக்கும் ஈழத்
தமிழர்கள் பற்றி ஏனோ நினைவில் வருவதேயில்லை.சரி தமிழகத்தில் இருக்கும்
சிறப்பு முகம்களுக்காக போராட்டம் நடாத்தினால் சட்டம் ஒழுங்கு
பிரச்சனையாகிவிடும் என்று கருதினால் இலங்கையில் தேயிலைத்தோட்டங்களில்
வேலைக்கு கூலிகளாக ஆங்கிலேயர்களால் தமிழ் நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டு
நூற்றாண்டுகள் கடந்தும் இன்னமும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இன்னமும்
அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்டு அடிமைகளாக குறைந்த சம்பளத்தில்
தினக் கூலிகளாக வேலை செய்துகொண்டு லயங்கள் என்கிற சிறு குடிசைகளில்
வாழ்நாள் முழுதும் கழித்துமுடித்து அதே தேயிலை செடிகளுக்கு உரமாகிப்போகின்ற
மலையகத் தமிழர்களுக்காக இதுவரை தமிழ் நாட்டில் எத்தனை போராட்டம்
நடந்திருகிறது ...இபோதும் கூட பதுளையில் மீரியபெத்தை ஆற்றுப் பள்ளத்தாக்கு
பகுதியில் குடியிருப்பதற்கு பாதுகாப்பற்ற பகுதி என அறிவிக்கப்பட்டிருந்த
இடத்தில் ஏற் பட்ட மண் சரிவில் அங்கு குடிசைகளில் வசித்தவர்கள் புதையுண்டு
போயுள்ளார்கள்.பன்னிரண்டு சடலங்கள் மீட்கப் பட்டுள்ளது முன்னுறுக்கும்
அதிகமானவர்கள் காணமல் போயுள்ளனர் .அவர்களும் இறந்து போயிருக்கலாம்
என்றுதான் நம்பப் படுகிறது என்று செய்திகள் தெரிவித்தாலும் அதுதான் உண்மை
.உலக நாடுகளில் காணமல் போனவர் பட்டியலில் பெயர்களை இணைப்பதில் இலங்கைக்கு
நிகரான நாடு எதுவுமில்லை ..வாழ்வதற்கு பாதுகாப்பற்ற பகுதி என்று
தெரிந்தும் அங்கு வசித்தவர்களுக்கு மாற்று ஒழுங்குகள் செய்யாத அரசு
மட்டுமல்ல அந்த மக்களின் பெயரால் அவர்களின் வாக்குகள் பெற்று பாராளுமன்றம்
சென்ற கட்சியும் இத்தனை மனித இழப்புக்களுக்கும் பொறுப்பு. அதே நேரம் இந்த
மலையக தமிழர்களுக்கு தமிழகத்து தமிழர் போராட்டமெல்லாம் நடத்த வேண்டாம்.
சிறை செல்ல வேண்டாம் இது போன்ற சந்தர்ப்பங்களில் ஒரு ஆதரவுக்கரம் நீட்டினலே
போதும் அவர்களுக்கான உதவிகள் கூட செய்ய முடியாதா ?.தினசரிப் பத்திரிகையில்
முன்பக்க செய்தியாக வராது என்கிற காரணமாகவும் இருக்கலாம் .அதைப்போலவே
இவர்களைப் பற்றி ஒரு சிறு பக்க செய்தி கூட தமிழக பத்திரிகைகளில் வரவில்லை
என்பது மட்டுமல்ல தமிழகப் போராளிகள் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்பது
வேதனை .
தமிழகத் தமிழர்களின் உண்மையான
தொப்புள்கொடி உறவு மலையகத் தமிழரே ..அவர்கள்தான் இரத்த உறவு .ஈழத் தமிழன்
மாமன் மச்சான் உறவுதான் .முதலில் இரத்த உறவுகளுக்காக அவர்களின் நிம்மதியான
வாழ்வுக்காக போராடுங்கள் .பின்னர் ஈழத்தமிழர்களுக்காக போராடலாம் காரணம்
அவர்களுக்காக போராட வெளி நாடுகளில் புலம்பெயர்ந்த அவர்களது உறவினர்கள்
யாரும் இங்கு இல்லை ..
அதே நேரம் இந்தக் கட்டுரையை எழுதத்தொடங்கிய நேரத்தில்மேலும் இரண்டு சம்பவங்களும் நடந்து முடிந்து விட்டிருக்கிறது ஒன்று தமிழக முதலமைச்சர் ஜெயலிதா அவர்கள் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்று பிணையில் வெளியே வந்திருக்கிறார்.அவர் எப்படியும் பிணையில் வந்து விடுவார் என்று தெரிந்தும் தமிழகமே கொந்தளித்து வன்முறைகள் வெடித்திருந்தது .நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கி றார்கள்.நாடு கடந்த தமிழீழ அரசங்கமும் ஜெயலிதாவின் கைதை எதிர்த்து அறிக்கை விட்ட கோமாளிக்கூத்தும் நடந்தது.
ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்
எந்தக் குற்றமுமே செய்யாமல் வெறும் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு
தூக்குதண்டனை நிறைவேற்றப் பட்டு 23 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில்
வாடியபின்னர் உச்ச நீதி மன்றத்தால் அவர்களை விடுதலை செய்யும்படி தீர்ப்பு
கூறிய பின்னரும் அவர்கள் விடுதலை செய்யப் படாமல் சிறையிலேயே வாடுகிறார்கள்
இவர்களுக்காக தமிழகத்தில் ஒருசில மனிதவுரிமை ஆர்வலர்கள் அமைப்புகளை
தவிர்த்து எந்த அரசியல் கட்சியும் போராட்டம் நடத்தவுமில்லை தமிழகம் பொங்கி
எழவும் இல்லை என்பது வேதனையான விடயம்.இரண்டாவது சம்பவம் ஐரோப்பவில் புலிகள்
இயக்கம் பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப் படுவதற்காக ஐரோப்பிய யூனியன்
கையாண்ட வழிமுறைகளில் தவறு உள்ளது மூன்று மாதங்களுக்குள் சரியான வழிமுறைகளை
கையாண்டு தடையை நீடிக்கவேண்டும் அல்லது நீக்கவேண்டும் என்று ஐரோப்பிய
நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அதனை அரைகுறை விளக்கத்தோடு வெளிநாடுகளில்
தங்களைத் தாங்களே தமிழ்த்தேசிய ஊடகங்கள் என சொல்லிக் கொள்பவர்கள் புலிகளின்
மீதான தடையை ஐரோப்பிய நீதிமன்றம் நீக்கிவிட்டதாக கும்மியடித்துக்
கொண்டிருகிறார்கள் .
உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஈழப் போராட்ட நிலை இப்படியென்றால் தமிழர் தாயகத்திலோ கடந்த தேர்தலில் ஆளும் அரசு புனரமைப்பு என்று என்னதான் பளபளப்பான வீதிகளைப் போட்டு, கட்டிடங்கள், பாலங்கள். என்று காட்டி தண்டவலதைப் போட்டு இரயிலை கொண்டுவந்து விட்டிருந்தாலும் தமிழ் மக்களுக்கு அதையும் தாண்டி தங்களுக்கான தேவைகள் என்பது வேறு இருக்கின்றது என்று கட்டவும் அரசின் மீதான அதிருப்தியை காட்டவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தங்கள் பெரும் பான்மை வாக்குகளை போட்டு அவர்களை பாராளுமன்றம் அனுப்பி விட்டிருந்தார்கள்.ஆனால் பாராளுமன்றப் படியில் கால் வைக்கும் போதே வாக்குப் போட்ட தமிழ் மக்களை கால் மண்ணைப்போல தட்டிவிட்டு உள்ளே போய்விட்டார்கள் . தமிழர் பிரதேசங்களின் புனரமைப்புக்கு ஒதுக்கப்படும் நிதியைக் கூட மெத்தனப் போக்கால் சரியாக கையாளாது விட்டு அது திரும்பிப் போனதும்.கூட்டமைப்பு என்கிற பெயரை வைத்து வாக்கு கேட்டு வென்று விட்டு பின்னர் தனித் தனி கட்சிகளாக பிரிந்து நின்று உள்மோதல்கள்..மாகாண சபை நிருவாகத்தில் ஊழல் என்று ஒரு பக்கம் போய்க்கொண்டிருந்தாலும் ..மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான போக்குவரத்து குறைந்த விலையில் பயணம் செய்யக் கூடிய யாழ்தேவி இரயிலின் வருகையை எதிர்ப்பார்களாம்..ஆனால் தங்களுக்கு வேண்டிய சொகுசு வாகனங்களை அரசின் அன்பளிப்பாகவும் வரிச் சலுகைகளும் பெற்றுக் கொள்வார்களாம் ..மகிந்தவை வடக்கு வரவேண்டாம் என்று எதிர்த்து புறக்கணிப்பு செய்வாங்களாம் ..ஆனால் இவர்களே கொழும்பு போய் மகிந்தவை கட்டிப் பிடித்து கை கொடுத்து பக்கத்தில் அமர்ந்து விருந்துண்பார்களாம்.பாராளுமன்ற சொகுசுகள்,சொகுசு வாகனங்கள் , வெளிநாட்டுப் பயணங்கள் செலவுகள் எல்லாமே அரசாங்கத்திடமிருந்து இவர்கள் பெற்றுக் கொள்வார்கள் ..ஆனால் மக்களுக்கு அரசிடமிருந்து கிடைக்கும் அத்தியாவசிய தேவைகளை புறக்கணிப்பர்களாம் . மக்களின் தேவைகளை புறக்கணிக்க முன்னுக்கு நிக்கும் இவர்கள் எத்தனை பேர் காணமல் போனவர்களின் உறவினர்கள் நடாத்தும் போராட்டங்களிலும் இராணுவம் ஆக்கிரமித்து நிக்கும் தங்கள் நிலத்துக்காக போராடும் மக்களோடு நின்று போராடுகிறார்கள் என்று பார்த்தால் யாரோ ஒருவரோ இருவரோ தான் அங்கு நிக்கிறார்கள் .மிகுதிப்பேர் செய்திகளிலேயே அதனைப்படிகிறார்கள் ..எனவே இலங்கை அரசுக்கு எதிராக போராடும் மக்கள் அல்லது அமைப்புக்கள் அது தமிழர் பிரதேசமாகட்டும், தமிழ் நாடாகட்டும், வெளி நாடுகளாகட்டும் ,இனிவரும் காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் எதிராக போராடினால்தான் அவகளிற்கு மக்கள் மீது ஒரு மரியாதையாவது வரும்.அடுத்த தேர்தலும் நினைவுக்கு வரும்.
மேலே குறிப்பிட்ட விடயங்கள் எல்லாமே அனேகமாக தெரிந்த விடயங்கள் தானே எதுக்காக மீண்டும் மீண்டும் எழுதுகிறேன் என பலர் நினைக்கலாம்.வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வெளிநாட்டு வாழ்க்கை.இன்றைய செய்திகளே நாளை மறந்துபோகும் அல்லது ஒரு செய்தியை இன்னொரு செய்தி முக்கியமற்றதாக்கிவிடும் காலத்திலேயே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.மக்களின் மறதியிலும். என்ன நடந்தாலும் எனகென்ன என்று விலகிப்போகும் சுயநலத்திலுமே இன்றைய அரசியலும் வியாபாரங்களும் நடை பெறுகின்றது .எனேவேதான் அவ்வப்போது சில விடயங்களை நினவு படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது .
இவையெல்லாவற்றையும் தாண்டி புலிகளும் .புலிகளின் தலைமையும்.மாவீரர் தின உரையுமற்ற ஐந்தாவது மாவீரர் தினம் வரவுள்ளது.இனியும் தலைவர் இருக்கிறார் மாவீரர்தின உரை வருமென்று கதை விட்டுக்கொண்டிருக்க முடியாது எனவே இனிவரும் காலங்களில் பிரபாகரன் பற்றிய பேச்சுக்களே இல்லாமல் அவர் சாவகாசமாக மறக்கடிக்கப்பட்டு விடுவார் என்பது உறுதி.ஆனால் ஈழத் தமிழினத்தின் விடிவு வேண்டி ஆயுதப்போரை வழிநடத்தி உலகின் உறுதியான கட்டமைப்பைக் கொண்ட கெரில்லாக்களாகவும் பின்னர் முப்படைகளையும் கொண்ட மரபுவழி இராணுவத்தையும் உருவாக்கி நிழல் அரசு ஒன்றையும் நடத்திக்காட்டி தான் கொண்ட கொள்கைக்காக தனது குடும்பத்தையும் தன்னையும் பலியிட்ட பிரபாகரன் என்கிற மனிதனுக்கு ஒரு அகல் விளக்கேற்றி அஞ்சலி செலுத்த துப்பில்லாத இனமாக தமிழினம் இருகின்றதேன்பதே உண்மை.ஆனால் உண்மையாக மாவீரர்களையும் பிரபாகரனையும் நேசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். பெருமெடுப்பில் மண்டபங்களில் நடக்கும் மாவீரர் தினக் கொண்டாட்டங்கள் தொடரட்டும்.மண்டபங்கள் எங்கும் கொத்துரொட்டி வாசனை நிரவட்டும் ...