Navigation


RSS : Articles / Comments


ஒரு கடிதம் எழுதலாமா??

2:35 AM, Posted by sathiri, 2 Comments



வருடக்கடைசி லீவு எடுத்தாகி விட்டது இந்த வருடம் எங்கையும் போகிற மாதிரி இல்லை வெளியே வெளிக்கிடவே மனம் இல்லை சரியான குளிர். என்ன செய்யலாமென யேசித்து. சரி சுமார் ஆறு மாதங்களுக்கு மேலாக கடிதக்கூடையில் சேத்து வைத்திருக்கும் கடிதங்கள் பில்லுகள் வங்கி கடதாசிகள் எல்லாத்தையும் தரம்பிரித்து ஒழுங்காய் பைலில் போடலாமென முடிவு செய்து கடிதக் கூடையை எடுத்து நடுவீட்டில் கவிட்டு கொட்டிவிட்டு நடுவில் அமர்ந்தேன். ஊரிலைமுன்னைய காலத்திலை முக்கிய ஆவணம் எண்டால் காணி உறுதியும் கூப்பன் மட்டையும் மட்டுமதான்.பிறகு அடையாள அட்டையும் முக்கியமாய் போனது.


ஆனால் இங்கை வெளிநாட்டிலை எதுக்கெடுத்தாலும் என்ன அலுவலுக்கு போனாலும் ஆவணங்கள்தான் முக்கியம்.அதுவும் பிரான்சிலை ஆகமேசம். ஒரு அலுவலுக்கு போறதெண்டாலும். கரண்டுபில்.வாடைகை துண்டு.அடையாள அட்டை.வீட்டு வாடைகை .தொலைபேசி பில் இப்பிடி ஒரு கட்டு கடுதாசி கொண்டு போகவேணும். அது பத்தாதெண்டு போற இடத்திலைவேறை பல கடுதாசியளிலை கையெழுத்து வாங்கி அவங்கள் வேறை கொஞ்ச கடுதாசியளை தலையிலை கட்டிவிடுவாங்கள். இப்பிடி இந்த கடுதாசியளை வைக்கிறதுக்கெண்டே தனி அலுமாரி ஒண்டு வேணும்.அதுமட்டுமில்லை கடிதப்பெட்டியை நான் கடிதப்பெட்டியெண்டு சொல்லுறதில்லை பில் பெட்டி எண்டுதான் சொல்லுறனான் ஏணென்டால் இப்ப வளந்த தொழிநுட்பத்தாலை யாரும் எனக்கு கடிதம் போடுறதும் இல்லை நானும் யாருக்கும் கடிதம் எழுதிறதும் இல்லை. மின்னஞ்சலும் ஸ்கைப்பும்தான். அதனாலை தபால் பெட்டிக்குள்ளை தனிய காசு கட்டவேண்டிய பில்லுகளும் விளம்பரமும் மட்டும்தான் கிடக்கும் .சுற்றுசூழல் பாதுகாப்பு காரணமாய் கடுதாசி விழம்பரங்களை குறைக்கசொல்லி பிரான்ஸ் அரசாங்கம் ஒரு சட்டத்தையும் கொண்டு வந்தார்கள் ஆனாலும் கடுதாசி குறைந்தபாடில்லை.பீசா கடை. தனியார் வங்கிகள். கிளியோசியம் நாடியோசியம் எண்டு ஏதாவது ஒரு கடுதாசி கட்டாயம் பெட்டிக்குள்ளை கிடக்கும் அதுகளை தனியா பிரித்தெடுத்து எறியிறதெண்டுறதே பெரியவேலை. சிலநேரம் அதுகளோடை சேத்து முக்கியமான கடுதாசிகளையும் சேத்து எறிஞ்சுபோட்டு பிறகு அவதிப்பட்டும் இருக்கிறன்.கடிதம் எண்டதும் தான் ஞாபகத்திற்கு வருகிது .முன்பு ஊரில் இருந்த காலங்களில் தபால் காரனை கண்டாலே யார் முதலிலை ஓடிப்போய் கடிதத்தை வாங்கிறதெண்டு என்னுடைய சகோதரங்களோடை ஒரு ஓட்டப் போட்டியே நடக்கும்..


பழுப்பு நிற உறையெண்டால் எண்டால் உள்ளுர் கடிதம் கரையிலை சிவப்பு நீல கோடு போட்ட உறையெண்டால் வெளிநாட்டு கடிதம். இந்த வெளிநாட்டு கடிதத்திற்காகத்தான் நாங்கள் அடிபடுறது காரணம் கடிதம் படிக்கிறதற்காக இல்லை அதிலை உள்ள முத்திரைக்காக . அதை கிழிச்செடுத்து சேகரித்து வைக்கத்தான். கையிலை பேனை பிடிச்சு கடிதம் எழுதி எத்தினை வருசமாகிறது??என்று எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. சுமார் பதினைந்து இருபது வருசங்களிற்கு முன்னர்அம்மாவிற்கு உறவுகளிற்கு நண்பர்களிற்கு என்று யாரிற்காவது கடிதம் எழுதுவது என்றாலே ஒரு தனி சுகமான அனுபவம்.அதுவும் முக்கியமாக காதலி(களிற்)க்கான கடிதம். அதென்ன காதலிகள் என்று பன்மையில் எழுதியிருக்கிறேன் என யோசிக்க வேண்டாம். என்வாழ்வில் பலகாலகட்டங்களில் பலரை காதலித்திருக்கிறேன் பலராலும் காதலிக்கப்பட்டும் இருக்கிறேன். உண்மையை சொல்லத்தானே வேணும்..அதே நேரம் கடிதம் எழுதும் அந்தந்த இடங்களிற்கு ஏற்றால் போல் சின்னதாய் ஒரு கவிதை ..பொன்மொழிகள். அடுக்கு மொழி..எதுகை மோனை என்று போட்டு கடிதத்தை அழகு படுத்தி நாலு ஜந்து பக்கத்தில் எழுதியவற்றை எல்லாம் சரியாக எழுதியிருக்கிறோமா என் ஒன்றிற்கு பல தடைவை சரிபார்த்;து என்பலப்பில் போட்டு ஒட்டி அனுப்பி விட்டு அதற்கான பதில் வருகிறதா என கடிதக்காரனையும் தபால் பெட்டியையும் பார்த்;து ஏங்கிய காலங்கள்.எத்தனை....அது மட்டுமில்லை வாழ்த்து மட்டைகள் அனுப்புவதற்காக ஒவ்வொருவருக்கும் எப்படியான வடிவங்கள் அல்லது படங்கள் பிடிக்குமென தெரிந்து கொண்டு அதற்கேற்றால் போல் அவர்களிற்கான வாழ்த்து மட்டைடைகளை பல கடைகளில் ஏறி இறங்கி தெரிவுசெய்து அவரவருக்கு ஏற்றால் வசனங்களை எழுதி அனுப்புவது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் இந்த வருடம் வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் எல்லாம் எஸ்.எம்.எஸ்சிலும் ..தொ.பேசியிலும். மின்னஞ்சலிலும் வருடப்பிறந்த சில நிமிடங்களிலேயே முடிந்து போய்விட்டது. நான் பல வருடங்களாய் நாடு நாடாய் அலைந்து திரிந்த காலங்களிலும் சில கடிதங்களை தவற விடாமல் பொக்கிசமாய் சேர்த்து வைத்திருக்கிறேன் அவற்றில் முதல் காதலியின் கடைசிக்கடிதம்... தற்சயம் உயிரோடு இல்லாது போய்விட்ட சில நண்பர்களினது கடிதங்கள்...அம்மாவினது சில கடிதங்கள். என்பன முக்கியமானது. பேனை பிடித்து எழுதாததாலை என்ரை கையெழுத்து என்ன வடிவத்திலை இருக்குமெண்டதே மறந்து போச்சு. இப்ப பேனையை தொடுறதே எங்காவது அலுவலகங்களில் கையெழுத்து போடவும்.(முக்கியமாய் வங்கியில் கடன் பத்திரங்கள் )வீட்டு வாடைகை கட்டுவதற்கு காசோலையை நிரப்பி கையெழுத்து போட மட்டும்தான். மற்றும்படி இந்த கதையை எழுதியதைப்போலை கணணிக்கு முன்னாலை இருந்து டொக் .... டொக் ..... டொக்...தான்.. விரைவில் இதுவும் மாறி ஸ்கிறீன்டச் திரை தொடுகை எழுத்து கணணி வாங்கிட்டால் டொக் ..டொக் சத்தமும் வராது. காலப்போக்கிலை நாங்கள் மனசிலை நினைக்கிறதே கணணி திரையிலை எழுத்துக்களாய் விழுகிற காலம் வந்தாலும் வரலாம்..அப்பிடி நேர செலவு மிச்சம் எண்டு சந்தோசப்பட்டாலும்.. மனதிலை நினைக்கிறதெல்லாமே.......கணணி திரையிலை எழுத்தாய் விழுந்தால் என்ன நடக்கும் ஜயோ நினைக்கவே பயமாய் இருக்கு வேண்டாம்...

2 Comments

Yoga.s.fr @ 2:52 AM

வீட்டில "அந்த" விஷயம்(அதான் காதலிகள்)தெரியுமோ?பிறகு வேலியில போன ஓணானை"அதுக்குள்ள" பிடிச்சு விட்ட கதையா,இந்தக் கடிதம் எழுதின விசயம் வந்திடப் போகுது!!!!!!!!!!!!

sathiri @ 2:43 AM

Anonymous Yoga.s.fr said...

வீட்டில "அந்த" விஷயம்(அதான் காதலிகள்)தெரியுமோ?பிறகு வேலியில போன ஓணானை"அதுக்குள்ள" பிடிச்சு விட்ட கதையா,இந்தக் கடிதம் எழுதின விசயம் வந்திடப் போகுது!!!!!!!!!!!!//

2:52 AMசுய வாக்கு முலம் எல்லாம் எப்பவோ கொடுத்தாச்சு