யார் இந்த சிறீதரன் எம்.பி? பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை மிரட்டல்! மாவீரர் குடும்பம் ஒன்றின் சோகக்கதை
3:31 AM, Posted by sathiri, No Comment
மரத்தால் விழுந்தவனை மாடு முட்டுவது போல்…, வெந்த புண்ணில் வேல் பாயச்சுவது போல்… என்றெல்லாம் பழமொழிகள் உள்ள நிலையில், இன்று நாம் அம்பலப்படுத்தப் போகும் விடயத்துக்காகப் புதிதாக ஒரு பழ மொழியைத் தேட வேண்டிய நிலையில் எமது தமிழ் இனம் உள்ளது.
அதாவது, எமது இனத்தையே விற்றுப் பிழைக்கும் சில்லறை வியாபாரி ஒருவரின் மொத்த வியாபாரத்தை நாம் இங்கு அம்பலப்படுத்த வேண்டியுள்ளதன் காரணமாகவே நாம் புதிய பழமொழி ஒன்றினையும் தேட வேண்டியுள்ளது.
தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த இந்த வியாபாரி இன்று தமிழ்ப் பெண்களை இரத்தக் கண்ணீர் விட வைத்துள்ளார். யுத்த காலத்தில் புலிகளைத் தேடிய இலங்கைப் படையை விட யுத்தம் முடிந்தவுடன் அந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களைத் தேடுவதில்…அப்பாவிகளைத் தனது வலைக்குள் சிக்க வைப்பதில் இந்தத் தமிழன் இன்று கில்லாடி…
அப்பாவிப் பெண்களை, அபலைகளை ஏமாற்றலாம் என்பதில் நம்பிக்கை கொண்ட இவரால் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால், தற்போது வெளிச்சத்துக்கு வந்தவர்கள் சிலரே. வர வேண்டியவர்கள் இன்னும் பலர் இருக்கலாம். வெளியில் தமிழ்த் தேசியம்.... உள்ளே அனைத்தும் வேஷமாகச் செயற்படும் இவர் யார்? என்ன செய்கிறார்?
தனது குடும்ப வறுமையைத் தனக்குத் தெரியாமலே விளம்பரப்படுத்தி தனது உறவுகளிடையே சிக்கல்களை உருவாக்கி தனக்கு இருந்த கொஞ்ச நிம்மதியும் இல்லாமல் செய்து விட்டார் என மனமுடைந்து போன இந்தத் தாய்… உதவியும் வேண்டாம்.
எனது பிள்ளைக்குச் சத்திர சிகிச்சையும் வேண்டாம். தன்னை அவமானப்படுத்திய செய்தியையும் வீடியோவையும் அழிக்குமாறு மண்டியிட்டுக் கெஞ்சும் இந்தத் தாயின் வாழ்க்கையே இன்று மனிதாபிமானமற்றவர்களால் அழிக்கப்படும் நிலை…
கணவனையும் இழந்த நிலையில் வாழ்வதற்கே அச்சத்தோடும் சொல்ல முடியாத அழுத்தங்களுடன் வாழும் ஒரு பெண்ணை அவளுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து அவளை விளம்பர வியாபாரியாக்கி பிச்சையேந்தும் நிலைக்கு இட்டுச் சென்றவர் யார்…?
வன்னி மண்ணில் சிங்களவர்களால் மனிதர்கள் தான் புதைக்கப்பட்டார்களென்ற செய்தியை இன்று மிஞ்சி நிற்கிறது ஒரு தமிழனால் புதைக்கப்பட்டுப் போன மனிதாபிமானம். அந்த மனிதாபிமானத்தைப் புதைத்த தமிழன் தான் யார்?
தமிழினத்தின் வாக்குக்களால் வென்று இத்தகைய பெண்களின் வறுமையை விளம்பரமாக்கும் மேன்மை தங்கிய மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் தான். அது மட்டுமல்ல.. ஸ்ரீதரனின் செயலாளரான பொன்காந்தனால் இன்று அந்தப் பெண் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார்.
இணையத்தள வளர்ச்சி பற்றியோ அல்லது ஊடகங்கள் பற்றியோ எதுவித தெளிவும் இல்லாத ஒரு சமான்யப் பெண் தனது துயரங்களுக்கு எதாவது விடிவு வருமென்று நம்பிக் கதைத்த விடயங்களை அவருக்குத் தெரியாமல் வீடியோ எடுத்தது பற்றியோ அல்லது ஊடகங்களில் போட்டது பற்றியோ எதையும் அறிந்திருக்கவில்லை.
அந்தப் பெண் இன்று தன் நிலை அறிந்து எதுவும் செய்ய முடியாத நிலமையில் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இவ்வளவுக்கும் ஆளான அந்தப் பெண் யார்..? அவளின் கதை என்ன படியுங்கள்..
இந்த விடயம் தொடர்பில் நேசக்கரம் அமைப்பினால் எமக்கு வழங்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரனின் கோரிக்கைககு இணங்க ஜெர்மனியில் இயங்கும் அமைப்பான உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் என்ற அமைப்பு 22.12.2010 இல் தமிழ் வின் இணையத்தளத்தில் பிரபாகரன் கலாரஞ்சினி என்ற ஒரு பெண்ணின் கோரிக்கையொன்றை வெளியிடப்பட்டிருந்தது.
இந்தப் பெண்ணின் குடும்பத்திற்கான உதவிகள் அவரது பிள்ளைக்கான வைத்திய உதவிகள் மற்றும் ஆலோசனைகள் என்பன நேசக் கரம் அமைப்பினால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பெண்ணின் மகன் தமிழன்பன் என்பவரின் சிகிச்சைக்காகக் கொழும்பில் சுமார் ஆறுமாதங்கள் முயற்சி செய்த பின்னர் தமிழ் நாட்டிலும் வைத்திய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ் நாட்டு வைத்தியர்களினாலும் அவரது குறைகள் என்பன பிறப்பில் இருந்தே இருப்பதால் அவருக்குக் காது கேட்பது கதைப்பது போன்ற குறைகளைச் சரி செய்ய முடியாதெனக் கூறி விட்டனர். ஏற்கனவே பணம் பிடுங்கிகள் சிலர் 25 லட்சரூபாய் தந்தால் குழந்தையை பேசவும் காது கேட்கும் வலுவையும் ஏற்படுத்துவோம் என இப்பெண்ணிடம் கேட்டிருந்தனர்.
இந்த விடயம் எம்மையும் எட்டியதால் எம்மிடம் வருகின்ற மருத்துவ உதவிகளுக்கான மிகப்பெரும் உதவியாக இருக்கும் மருத்துவருக்கு இதனைத் தெரியப்படுத்தியிருந்தோம். நேரடியாக உரிய மருத்துவர் இப்பெண்ணிடம் தொடர்பு கொண்டு பணம்பிடுங்கிகளிடம் ஏமாறாமல் இருக்க வேண்டிய ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.
அத்தோடு துறைசார் மருத்துவர் ஒருவரையும் நியமித்து கலாரஞ்சனிக்கான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. குறித்த மருத்துவர் குழந்தை தமிழன்பனின் மருத்துவ அறிக்கைகளை தமிழ்நாடு வைத்தியர்களை நாடி மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகள் மற்றும் குழந்தையின் மருத்துவத்தில் அக்கறை கொண்டு பணியாற்றிய மருத்துவக் குழுவின் பிரதான மருத்துவரும் உடனுக்குடன் தகவல்களை எமக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார்.
அதன் விளக்கங்களை ஏற்று நாமும் அந்தக் குடும்பத்தின் வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டு வருகின்றோம். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கான உதவிகள் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்களையும் நேசக்கரம் அமைப்பு சேமித்து வைத்துள்ளது.
அப்படி அவரது தேவைகள் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இப்பெண்ணுக்கான உதவிகள் கோரி மீண்டும் தமிழ் வின் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து குழப்பமடைந்த நாம் அந்தப் பெண்ணுடன் தொடர்பு கொண்டபோது சிறிதரன் (பா.ம.உறுப்பினர்) பற்றியும் அவர் உரையாடிய உரையாடல்களும் மற்றும் கலாரஞ்சனி தெரிவித்த விடயங்களும் எம்மை அதிர்ச்சிக்கும் மிகுந்த கவலைக்கும் உள்ளாக்கின.
சிறீதரன் உதவுவதாகக் கூறி இந்தப் பெண்ணை ஒருவர் சிறீதரனிடம் அழைத்துச் சென்றபோது, சிறீதரன் அவர்கள் தானும் போராளிகளுடனும் போராட்டத்துடனும் மிகவும் ஒன்றியிருந்ததாகவும் மனம் திறந்து தன்னிடம் அவரது குறைகளைக் கூறுமாறும் அந்தப் பெண்ணிடம் கேட்ட போது தனது குறைகளை அவர் சிறீதரனிடம் தெரிவித்துள்ளார்.
தனக்கு ஒரு நிரந்தர அரச தொழில் வாய்ப்பை சிறீதரன் பெற்றுத் தருவார் என்று நம்பிப் போன காலரஞ்சினி சிறீதரனின் சாதுரியமான கதைகளை நம்பி தனது கணவர் குடும்பம் குழந்தையின் நிலமைகளையும் கூறியுள்ளார். சிறீதரனோ தனது நண்பர் ஒருவரின் குழந்தையும் இதே பிரச்சினையில் இருப்பதாகவும் பிறப்பிலுள்ள குறைபாட்டை 28 லட்சம் ரூபா செலவு செய்து மாற்றியுள்ளார்கள் எனவும் கூறி உங்கள் மகனை வெளிநாட்டிற்குக் கொண்டு சென்று சத்திர சிகிச்சை செய்து குறைகளைத் தீர்க்கலாமென வாக்குறுதியளித்து தான் உதவுவதாகவும் கூறியிருந்தார்.
அந்நேரம் கலாரஞ்சினியையும் அவரது குழந்தையையும் சிறீதரன் நிழற்படமும் எடுத்துள்ளார். ஒரு தாயாக தனது பிள்ளையின் குறைபாடு நீங்கி தனக்காக உள்ள ஒரே குழந்தை ஆரோக்கியமடையலாம் என்ற நப்பாசையில் தனது துயரங்களை கண்ணீருடன் வெளிப்படுத்தியுள்ளார். (நாம் பாதிக்கப்பட்ட ஒருவராக இருப்பின் இந்த வெளிப்பாடு இயல்பானது.)
இன்றைய இன்டெர் நெட் வளர்ச்சி பற்றியோ அல்லது ஊடகங்கள் பற்றியோ எதுவித தெளிவும் இல்லாத ஒரு சாமானியப் பெண் தனது துயரங்களுக்கு எதாவது விடிவு வருமென்று நம்பி கதைத்த விடயங்களை அவருக்குத் தெரியாமல் வீடியோ எடுத்தது பற்றியோ அல்லது ஊடகங்களில் போட்டது பற்றியோ எதையும் அறிந்திருக்கவில்லை.
தமிழ்வின், லங்காசிறி போன்ற இணையங்களில் சிறீதரன் அனுப்பிய செய்தியும் வீடியோப் பதிவும் வெளியாகிய அதேநேரம் யாழ் தினக்குரலில் கலாரஞ்சினியினதும் தமிழன்பனினதும் படத்தையும் பிரசுரித்து பண உதவி கோரிய விபரங்களைப் பார்த்தவர்கள் தொடர்பு கொண்டு கேட்ட போதே தனது விபரங்களை சிறீதரன் ஊடகங்களில் வெளியிட்டு பணம் சேகரிக்கும் விடயம் தெரியவந்தது.
ஏற்கனவே பல வகைகளில் பாதிக்கப்பட்டு கணவனையும் இழந்து வாழ்வதற்கே அச்சத்தோடும் சொல்ல முடியாத அழுத்தங்களுடன் வாழும் ஒரு பெண்ணை அவளுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து அவளை பிச்சையேந்தும் நிலைக்கு இட்டுச்சென்ற சிறீதரனை கண்டிக்கவோ கேள்வி கேட்கவோ முடியாத நிலமையில் எம்மிடம் மீண்டும் உதவி கோரியிருந்தார் கலாரஞ்சினி.
சிறீதரனின் பொறுப்பற்ற விளம்பரத்தைக் கேள்விப்பட்டதிலிருந்து மிகவும் மனமுடைந்த நிலையில் இருக்கிறார் இந்தப்பெண். தனக்கு இத்தகையதொரு அசௌகரியத்தை ஏற்படுத்தியது பற்றி சிறீதரனுக்குத் தெரிவித்த போது சிறீதரன் பதவியில் இருக்கும் அதிகாரத்துடன் பதிலளித்தமை அவளை மேலும் துன்புறுத்தியுள்ளது.
தன்னிடம் உதவி கோரி வந்தால் இதுவெல்லாம் அறிந்திருக்க வேண்டும் என்றும் இந்தச் செய்தியால் ஏற்பட்ட அசௌகரியம் சில நாட்களில் மாறி விடும் என்றும் அதுவரையில் வேறொரு தொலைபேசியைப் பாவிக்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்தோடு காலரஞ்சனிக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்குத் தான் பொறுப்பில்லையெனவும் தெரிவித்துள்ளார். தனது குடும்ப வறுமையை விளம்பரப்படுத்தி ஏனைய தனது குடும்ப அங்கத்தவர்களுக்கும் பல சிக்கல்களை உருவாக்கி இருந்த கொஞ்ச நிம்மதியையும் குலைத்த சிறீதரனால் ஏதாவது விபரீதம் வந்துவிடுமோ என அஞ்சுகின்றனர் கலாரஞ்சனியும் அவரது குடும்பத்தினரும்.
தன்னைப் பற்றிய விளம்பர வீடியோவையும் செய்தியையும் வெளியிட்ட சிறீதரனின் சகோதரரின் இணையங்களான லங்காசிறி, தமிழ்வின்னிலிருந்து அழிக்குமாறு வேண்டியும் இதுவரை சிறீதரன் எவ்வித அக்கறையும் எடுக்காதுள்ளார்.
இச்செய்தி தொடர்பாக உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் யேர்மனி கணேசலிங்கம் அவர்களிடம் கேட்டபோது சிறீதரன் சொன்னார் நாங்கள் செய்தியைப் போடச் சொன்னோம் என்றும் பொறுப்புமிக்க ஒரு பா.ம.உறுப்பினர் தரும் தகவல் உண்மையென்பதாலேயே தாம் தமது பெயரில் செய்தி போட ஒப்புக் கொண்டதாகவும் மேற்படி வீடியோவை பொன்காந்தன் (சிறீதரனின் செயலாளர்) தந்ததாகவும் கூறியிருந்தார்.
அடுத்து சிறீதரனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, தனது செய்தியாளர் இச்செய்தியை வெளியிட்டதாகவும் தன்னிடம் வரும்போது இப்படியெல்லாம் செய்தி வருமென்பதை அறியாதது கலாரஞ்சனியின் பிழையெனவும் இன்ரநெற் என்றால் என்ன ஊடகம் என்றால் என்ன என்பது பற்றி அறியாது இருப்பது கலாரஞ்சனியின் பிழையெனவும் கூறிய அதே நேரம் அவருக்கென சேகரிக்கப்பட்ட பணத்தை தாம் வேறு உதவி தேவைப்படுவோருக்குக் கொடுக்கப்போவதாகவும் கூறியிருந்தார்.
உதவியும் வேண்டாம் பிள்ளைக்கு சத்திர சிகிச்சையும் வேண்டாம் தன்னை அவமானப்படுத்திய செய்தியையும் வீடியோவையும் அழிக்குமாறு கலாரஞ்சனியும் நாங்களும் சிறீதரனிடம் கேட்டும் அது செவிசாய்க்கப்படாதுள்ளது எம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதுடன் மட்டுமல்லாமல் சிறீதரன் பா.உறுப்பினர் மீது பல சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.
தற்போதைய வன்னி நிலமைகளை அறிந்து கொண்டுள்ள சிறீதரன் அவர்கள் அதுவும் இந்தப்பெண் போன்ற நிலமையில் இருக்கும் ஒருவருக்கு இவரது இத்தகைய விளம்பரப்படுத்தல் நிதிசேகரிப்பு மூலம் எத்தகைய நெருக்கடிகள் வரும் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத சாதாரணமான ஒருவரல்ல.
வன்னிக்குள் எத்தனையோ விரும்பத்தகாத முறைகேடுகள் பெண்கள் மீதான அத்துமீறல்கள் துன்புறுத்தல் நடப்பது சிங்களவர்களால் மட்டுமல்ல சிறீதரன் போன்றவர்களாலும் என்பதனையும் வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.
பல பெண்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள கடிதங்கள் தொலைபேசி அழைப்புக்களிலிருந்து பலரது கோர முகங்களும் அவர்கள் எவ்வாறு சிதைக்கப்படுகிறார்கள் என்பதனையும் உணர முடிகிறது.
ஆனால் இத்தகைய செல்வாக்கு மிக்கவர்களுடன் சமானமாக நின்று போராடும் வலுவை நாம் இழந்து போனோம் என்பதனையும் வேதனையுடன் கூறிக்கொள்கிறோம். இதேவேளை, இந்த அப்பாவிப் பெண் தனக்கு ஏற்பட்டுள்ள அவமானத்தை, தான் விற்றுப் பிழைக்கப்பட்டுள்ளதனை தாங்க முடியாத நிலையில் தற்கொலைக்கும் தயாரானாதாகவும் நெஞ்சை நெருடும் தகவல் ஒன்றும் தற்போது கிடைத்துள்ளது.
http://www.youtube.c...player_embedded
http://www.youtube.com/watch?v=JC6EsXyv3i8
பிற்குறிப்பு :-
மேலே இணைக்கப்பட்டுள்ள உரையாடல் சிறிதரன் எம் பியின் உதவியாளர் பொன் காந்தனிற்கும் நேசக்கரம் சாந்தி ரமேசிற்கும் இடையில் நடந்ததாகும்.
கலாரஞ்சனி விடயத்தைக் கையண்டவர்களுடனான ஒலிப்பதிவுகள் மற்றும் அதற்கான ஆவணங்கள் யாவும் உள்ளன. தேவையேற்படும் பட்சத்தில் அவற்றையும் வெளியிடுவோம் என்பதனையும் மனவருத்தத்துடன் அறியத்தருகிறோம்.
மேலும் உதவிக் கரம் நீட்டும் தர்மக் கரங்களும் உதவி கோரும் எமது உறவுகளும் இவ்வாறான இடைத் தரகர்களையும் விற்றுப் பிழைப்போரையும் நம்பி ஏமாற வேணடாம் என்ற ஒரு செய்தியினையும் இங்கு சொல்லி வைக்க விரும்புகிறோம்..