Navigation


RSS : Articles / Comments


முட்டாள்தி(த)ன கைதுகள்.

11:59 AM, Posted by sathiri, No Comment

இந்தவார ஒரு பேப்ரிற்காக எழுதியது

முட்டாள்தி(த)ன கைதுகள்.

சித்திரை முதலாம் திகதி உலக முட்டாள்கள் தினம். அன்று ஞாயிற்று கிழைமை காலை எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு மறு முனையின் பாரிசில் உள்ள எனது நண்பனொருவன் என்னிடம் டேய் என்ன நித்திரையா?? பாஞ்சு எல்லாரையும் அள்ளிட்டாங்களாம். என்றான் எனக்கு ஒன்றும் புரியவில்லை யார் பாஞ்சது ?? என்னத்தை அள்ளினது என்றேன். பிரெஞ்சு காவல் துறையினர் ஞாயிறு அதிகாலையளவில் பிரான்சில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளர்கள் 17 பேரை கைது செய்து விட்டார்கள் என்றான். நானும் முதலில் அவன் என்னை முட்டாள் ஆக்ககின்றான் என நினைத்தேன். ஆனால் அவனது பேச்சில் இருந்த பதட்டம் அவன் சொல்வது உண்மையாக இருக்கலாம் என நினைத்து. வேறு அது சம்பந்தப்பட்டவர்கள் யாரிடமாவது கேட்கலாமென நினைத்து சில தொலைபேசி இலக்கங்களை அழுத்தினேன். ஆனால் எவருமே இணைப்பில் வரவில்லை. அன்று மாலை பிரான்சின் ஒரு தொலைக்காட்சி செய்தியிலும் மற்றும் வானொலி செய்தியிலும் தமிழீழ விடுதலை புலிகளிற்கு சட்ட விரோத நிதி சேகரிப்பில் ஈடுபட்ட 17 பேர் கைது செய்யபட்டிருப்பதாகவும் அவர்கள் நிதி சேகரிப்பின் போது பொது மக்களை பலவந்தபடுத்தியதால் கைது செய்யபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்கள்.

அதன் பின்னர் மெல்ல மெல்ல யார் யார் கைது செய்யப்பட்டனர், எங்கெங்கு வைத்து கைது செய்யபட்டனர் என்கிற விபரங்கள் வெளியாக தொடங்கின. ஆட்கள் கைது செய்யப்பட்டது மட்டுமல்லாமல் தங்கள் வருமானத்தில் பெரும்பகுதியை அல்லல்படும் ஈழதமிழர்களிற்காக அனுப்பிவைக்கும் சில வர்த்தக நிலையங்கள் கோவில் என்பனவும் காவல் துறையினரால் சோதனைக்குள்ளாக்கபட்டு அங்கிருந்த ஆவணங்கள் எடுத்து செல்லபட்டது. புலம் பெயர்ந்து வாழும் ஈழ தமிழர்கள் தங்கள் தாய் நாட்டிற்காகவும் அங்கு யுத்தத்தால் உறவுகளை இழந்து போன குழந்தைகள் மற்றும் உறவுகளிற்காக தங்கள் உழைப்பின் ஒரு பகுதியை அனுப்புவதும் அதற்குதவியாக தமிழர் புனர்வாழ்வு கழகமும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவும் உதவுவதும் அவர்களிற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதுவும் இன்று நேற்றல்ல ஈழத்தமிழன் யுத்தத்தால் புலம்பெயர தொடங்கிய காலந்தொட்டு 20 ஆண்டுகளிற்கு மேலாகவே நடை பெறுகின்ற ஒரு நிகழ்ச்சி.

இது ஒன்றும் இரகசியமல்ல தமிழர்கள் வாழுகின்ற நாடுகளில் உள்ள அரசுகளிற்கும் அந்த நாட்டு புலனாய்யவு துறையினரிற்கும் தெரிந்த விடயங்கள் தான். அதுமட்டுமல்ல ஜரோப்பிய ஒன்றியத்தின் புலிகள் மீதான தடை வந்தவுடன் இப்படியான சில நடவடிக்கைகள் நடக்கும் என பலர் எதிர் பார்த்த போதும் கூட அப்படி எதுவும் பிரான்சில் நடைபெறவில்லை. பின்னர் பணம் கடத்தியதாக பிரான்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் வேலை செய்த சில தமிழர்கள் கைது செய்யபட்ட போதும் இவர்களிற்கும் புலிகளிற்கும் தொடர்பு இருக்குமா? என்கிற விதத்திலும் விசாரணைகள் நடாத்தபட்டு அவைகூட ஆதாரங்கழுடன் நிரூபிக்கப்படாமல் அப்படியே அந்த செய்தியும் அமுங்கி போன நேரத்தில் தான் திடீரென இந்த கைது பிரான்ஸ் வாழ் மக்களிடம் பல கேள்விகள் சந்தேகங்கள் குழப்பம், பயம், கோபம் (ஒரு சிலரிற்கு மகிழ்ச்சி) என்று பலவிதமான உணர்வலைகளையும் ஏற்படுத்தியிருந்தது. காரணம் என்ன?? வேறொன்றும் இல்லை பிரான்சின் உள்நாட்டு அரசியல் தான் காரணமே தவிர வேறொன்றுமில்லை.

பிரான்ஸ் உள்நாட்டு அரசியலிற்கு இவர்கள் கைதினால் என்ன லாபம் இப்படியொரு கேள்வி எழுகிறதா? இருக்கின்றது அதுவும் பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலிற்கு இன்னமும் மூன்று வாரங்களே இருக்கின்ற நிலைமையில் ஆழும் கட்சிக்கு லாபம் இருக்கிறது அதுதான் அவர்கள் போட்ட கணக்கு . தற்சமயம் ஆளும் வலது சாரி கட்சியின் பிரதான வேட்பாளர் அதன் உள்துறை அமைச்சராக இருந்த நிக்கோலா சார்கோசி என்பவர். இவர் அதிரடி அரசியல் நடாத்தி கடும் போக்காளர் என்று பெயரெடுத்தவர் அது மட்டுமல்ல இவரது அதிரடி அரசியலால் ஏற்கனவே பிரான்ஸ் வாழ் ஆபிரிக்க அரேபிய இனங்களின் வெறுப்பை தாராளமாகவே சம்பாதித்து விட்டார். அனால் பிரான்சின் வெளிநாட்டவர் வருகையை கட்டுபடுத்தியவர் என்கிற பெயர் புகழ் இவைகள் பிரான்சின் இன மற்றும் நிற கொள்கை கடும்போக்காளர்கள் மத்தியில் இவரது மதிப்பை உயர்த்தியிருந்தாலும் பொது தேர்தல் கருத்து கணிப்புக்கள் இவரை சிறிது குழப்பியிருக்கலாம். காரணம் சோசலிச கட்சி பெண் வேட்பாளரான செகொலனிற்கு வெற்றி வாய்ப்புக்கள் இருப்பதாக கணிப்புகள் காட்டுகின்றன. செகொலனின் தேர்தல் வாக்குறுதிகளில் பிரான்சின் எதிர்காலம் பற்றிய பொருளாதார கொள்கைகள் தெளிவற்றனவாக இருக்கின்றது என்கிற குற்றசாட்டு இருந்தாலும், பிரெஞ்சு குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களின் ஆதரவு இவருக்கே இருக்கும் என்பது தெளிவு. ஆழும் கட்சிக்கு ஏற்கனவே பிரான்சில் உள்ள வேவையில்லா திண்டாட்டம் மற்றும் வீடற்றவர்கள் பிரச்சனை என்பற்றுடன் மீண்டும் தேர்தல் காலங்களில் நாட்டின் பாதுகாப்பு பிரச்சனை என்பதும் முக்கியமானதொரு பிரச்சனையாக விவாதிக்கப்படுவது வழமை. எனவே தங்கள் ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பில் அதிக கவனம் எடுப்பதாக காட்டவேண்டிய நிலை ஆனால் அதற்காக அதர பழசாகிவிட்ட அல்கெய்தா பிரச்சனைகளை புது பூச்சு பூசி காட்ட முடியாது. அதைவிட முஸ்லிம் போராட்ட இயக்கங்களின் செயற்பாடுகளை இழுத்து இன்னமும் அராபிய இனத்தவர்களின் எதிர்ப்பை இன்னமும் தேடிகொள்ளவும் விரும்பாது. எனவேதான் புதிதாக புலி தீவிரவாதம் என்கிற ஒன்றை என்கிற ஒன்றை பிரெஞ்சு மக்களிற்கு திரையிட திட்டம் போடப்பட்டிருக்கலாம். அது மட்டுமல்ல இது பிரெஞ்சு மக்களிற்கும் புதிது எனவே அவர்களும் இதனை பற்றி அறிய ஆர்வம் காட்டுவார்கள்.அது மட்டுமல்ல இந்த நடவடிக்கை மூலம் இங்கு வாழும் ஈழத்தமிழர்களின் எதிர்ப்பை சம்பாதித்தாலும். தேர்தலை பொறுத்தவரை இதனால் எந்த வித பாதிப்பும் வர போவதில்லை.

காரணம் பிரான்சில் ஒரு இலட்சத்தும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் வசித்தாலும் அதில் 80 வீதமானவர்கள் அகதிகளாக ஆனால் அனைத்து சலுகைகளையும் பெற்று இங்கு வாழ உரிமையுடையவர்களாகவே உள்ளனர். இவர்களிற்கு அரச அதிபர் தேர்தலில் வாக்களிக்க உரிமை இல்லை. 20 வீதமானவர்களே நிரந்தர குடியுரிமை பெற்று வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். ஆனால் நிரந்தர குடியுரிமையை பெற்றவர்கள் தங்கள் ஆங்கில மோகத்தால் அதிகமானவர்கள் இங்கிலாந்திற்கும் கொஞ்சம் கனடாவிற்கும் மீதம் பேர் அவுஸ்ரேலியா என்று சென்று ஆங்கிலம் பேசுகின்ற நாடுகளில் குடிபெயர்ந்துவிட, மீதமாக உள்ளவர்களை கூட்டிப்பார்த்தால் எப்படியும் ஒரு எட்டாயிரம் பேரை தாண்டுமா?? என்பது சந்தேகமே. அவர்களும் குடியுரிமையை எடுத்ததும் நாலு நண்பர்கள் உறவினர்களிற்கு சொல்லி பெருமை பட்டுகொள்வதோடு ஊரில் பிரச்சனை குறைந்த காலத்தில் ஊருக்கும் ஒருக்கா போய் வந்து விடுவதோடு சரி. தேர்தல் காலத்தில் வாக்கு போட ஒரு பத்து பேராவது போவார்களா?? என்றால் அதுவும் சந்தேகமே. அந்த பத்து வாக்குகள் பிரான்ஸ் அரசியலில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடப் போவதில்லையென்று நன்றாக தெரிந்தே இந்த கைதுகள் அரங்கேறியது. அதே நேரம் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் முன்னரே ஊடகங்களிற்கும் அழைப்பு விடுத்து அவர்களையும் இந்த நடவடிக்கைக்கு அழைத்து சென்றிருந்தனர். காரணம் அதிலும் விடயம் இருக்கின்றது.

பிரான்சில் ஈழ தமிழர்களின் அனைத்து நடவடிக்கைகளும் பிரெஞ்சு புலனாய்து துறையினரிற்கு அத்துபடி. அதில் சில அவர்களது சொந்த தேடல்கள் மீதம் இங்கும் மானத்தை விற்று உடை வாங்கும் ஒரு சில தமிழர். அவர்களின் கணக்குபடி ஆனையிறவு தளவீழ்ச்சியை அடுத்து மகிழ்ச்சியில் அதை திருவிழாவாக கொண்டாடிய பிரான்ஸ் வாழ் தமிழர்கள் தாங்களாகவே முன்வந்து தாயகத்திற்கான பங்களிப்பை வாரி வழங்கினர். அது போன்றே அண்மையில் கட்டுநாயக்கா விமானபடை தளத்தின் மீதான தாக்குதலும் தமிழர்களால் கொண்டாடப்பட்டது. எனவே இப்பொழுதும் அந்த மகிழ்ச்சியில் பணத்தை வாரி வழங்கியிருப்பார்கள் எனவே இப்பொழுது ஒரு தேடுதலை பரவலாக தமிழர் உதவி நிறுவனங்கள் மீதும் சில வர்த்தக நிலையங்கள் மீதும் நடாத்தினால் பெட்டி பெட்டியாக பணம் கிடைக்கும் அதை வைத்தே மீதி பிரச்சாரத்தை முடித்து விடாமென நினைத்திருப்பார்கள். ஆனால் நடந்ததென்னவோ வேறு. பெட்டி பெட்டியாக ஏற்றியதை தொலை காட்சியில் காட்டினார்கள் ஆனால் அவையெல்லாம் அந்த வியாபார நிலையங்களின் ஆவணங்கள். ஆனாலும் இது சாதாரண விடயமல்ல சில எம்மவர்கள் சொன்னார்கள் இந்த கைதுகள் அநியாயம் அக்கிரமம் என்று. ஆனால் இந்த பேச்சுக்கள் வெறும் இயலாமையே எந்த ஒரு நாட்டிலும் நாம் போய் குடியிருந்து கொண்டு அந்த நாட்டின் சட்டம் சரியில்லை, அது கூடாது என்று வாதாட முடியாது. வாதாடவும் கூடாது முடிந்தவரை எமது பக்க நியாயத்தை எடுத்து கூறலாம்.அதற்கு என்ன செய்யலாம். எமது பக்கதற்திற்கான எமது பக்க நியாயத்தை எடுத்து கூற ஒரு அரசியல் பலத்தை கட்டியெழுப்பவேண்டிய கட்டாய கடைமை எம்முன்னால் உள்ளது .

அது மட்டுமல்ல இந்த கைதுகள் நியாயமற்றவை என்பதை இன்றைய அரசிற்கு தெரிவிக்க வேண்டிய கடமையும் எம் முன்னால் உள்ளது. அது யாரால்முடியும் இன்றைய இளையவரால் முடியும் இளையோர் அமைப்பால் முடியும் அவர்களே இனி அடுத்த கட்டத்தை நகர்த்த வேண்டியராகவுள்ளனர். அது மட்டுமல்ல பிரான்சின் ஏனைய தமிழ் அமைப்புக்கள் ஏன் ஊடகங்கள் கூட உறை பனியில் உள்ளே புகுந்தது போலவே உள்ளனர். வெளியே வருவார்களா??

No Comment