Navigation


RSS : Articles / Comments


காடுவரை உறவு ..இவ்வார புதிய தலைமுறை இதழுக்காக.

1:51 PM, Posted by sathiri, No Comment

காடுவரை உறவு
இவ்வார புதிய தலைமுறை இதழுக்காக  (சாத்திரி)

குடியேற்றவாசிகளின் காடு  அமேசன் காடு பற்றி அறிந்திருப்போம்.இதென்ன குடியேற்றவாசிகளின் காடு? இங்கிலாந்து பிரான்ஸ் எல்லையில் பிரான்சின் கடைசி நகரமான CALAIS யில் தான் குடியேற்றவாசிகளின் காடு அமைந்துள்ளது. பிரான்சில் குளிர்காலம் தொடங்கும்போதும் தேர்தல் காலத்திலும் இந்த குடியேற்றவாசிகளின் காடு  ஊடகங்களின் முக்கிய இடத்தைப் பிடிப்பதோடு அரசியல் வாதிகளின் வாயிலும் பேசுபொருளாக மாறிவிடும்.இந்த வருட இறுதி குளிர்,தேர்தல் இரண்டுமே ஓன்று சேர்ந்து வருவதால் எங்கு பார்த்தாலும் இதே பேச்சுத்தான் .சுமார் இருபதாண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்துக்குள் நுழைய முயன்று முடியாமல் போனவர்கள் சிலர் CALAIS இரயில் நிலையத்திலும் வீதியோரங்களிலும் தங்கத் தொடங்கியிருந்தார்கள்.


அவர்களால் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடைஞ்சல்கள் ஏற்படத் தொடங்கவே பிரான்சின் கத்தோலிக்க உதவி அமைப்பானது 1999 ம் ஆண்டின் இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதியில் சில தற்காலிக கூடாரங்களை அமைத்து அதில் குடியேற்றவாசிகளை தங்கவைத்து உணவும் வழங்கத் தொடங்கினார்கள்.
சில பத்துப் பேரோடு தொடங்கிய முகாம்.வளைகுடா யுத்தம்,ஆப்கானில் தலிபான்கள் மீதான யுத்தம்,என்று விரிவடைத்து,அரபு வசந்தம் என்கிற பெயரில் எகிப்து,துனிசியா,லிபியா,சிரியா..உள்நாடுக் கலவரங்களாக வடிவெடுத்து இன்று ஐ.எஸ்.ஐஎஸ் .மீதான தாக்குதலாக  இஸ்லாமிய நாடுகள் முழுவதும் பரந்து விரிந்திருப்பதைப் போலவே.இந்த நாடுகளிலிருந்து அகதிகளாக வந்த மக்களால் குடியேற்றவாசிகளின் காடானது சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்களோடு பரந்து விரிந்து நிற்கிறது.மிக அமைதியானதும் மீன்பிடிமற்றும் விவசாயத்தை தொழிலாகக் கொண்ட இந்தக் நகரம்  பலவருடங்களாகவே குடியேற்றவாசிகளால் நின்மதியிழந்து போயுள்ளது.

தங்கள் பண்ணைகள்,வயல்கள்,கடைகள்,வீடுகள் என்று எங்கும் ஒரே திருட்டு.வீதியிலும் நின்மதியாக நடமாடமுடியவில்லை.திடிரென வந்து எல்லாவற்றையும் பறித்துப் போகிறார்கள்.பணத் தேவைக்காக பாலியல்தொழில்,போதைப்பொருள் வியாபாரம் என குற்றங்களும் அதிகரித்துள்ளது. எனவே இவர்களை CALAIS நகரத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள் என அந்த நகரத்து மக்கள் பல போராட்டங்களை தொடர்ந்து நடத்துவது மட்டுமலாது வெளிநாடவர்கள் மீதான உச்ச கட்ட வெறுப்பையும் பகிரங்கமாக வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தனர்.இவர்களின் வெறுப்பானது கடந்த உள்ளட்சிச் தேர்தலிலும் எதிரொலித்தது.குடியேற்றவாசிகளுக்கு எதிரான கருத்துடைய தீவிர வலதுசாரிக் கட்சியான front natinal க்கட்சி பெருமளவு வாக்குகளைப் பெற்றிருந்தது.

இப்படி குடியேற்றவாசிகளுக்கு எதிராக நகர மக்கள் போராடிக்கொண்டிருக்கும் போது.அவர்களுக்கான கழிப்பறை ,போதிய உணவு உடை என்கிற அடிப்படை வசதிகள்,குழந்தைகளுக்கான கல்வி,பெண்களுக்கான பாதுகாப்பு  எதுவுமே இல்லை எனவே அவற்றை அரசு செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்களும் மனிதவுரிமை அமைப்புக்களும் குடியேற்றவாசிகளுக்கு ஆதரவாக போராடிக்கொண்டிருக் கிறார்கள்.அதே நேரம் இங்கிலாந்து பிரான்ஸ் எல்லையை பிரிக்கும் 30 கி.மீ  தூரக்கடலை கடப்பதற்காக சிலர் சிறிய படகுகளிலும் நீந்தியும், இரயிலின் பின்னல் தொற்றிக்கொண்டும் ஆபத்தான பயணங்களை முயற்சி செய்து இறந்தும் போயிருக்கிறார்கள். இங்கிலாந்தும் கடற்கரை பகுதியில் முட்கம்பி வேலியமைத்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது .

தொடர்ச்சியான பல போராட்டங்களின் பின்னர் பிரான்சில் பதினோரு இடங்களில் முகாம்களை அமைத்து அங்கு அனைவரையும் தங்கவைப்பதோடு குடியேற்றவாசிகளின் காட்டிற்கு முடிவு கட்டுவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.கட்டம் கட்டமாக அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப் படுகிறார்கள்.ஒரு பக்கத்தால் குடியேற்றவாசிகளை வெளியேற்றிக்கொண்டிருக்கும்போதே மீண்டும் இங்கிலாந்துக்குள் நுழைய முயன்ற இருபது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.காரணம் இங்கிலாந்து என்பது என்பதுதான் அவர்களது கனவு தேசம்.அதற்குள் நுழைந்து விட்டால் தங்கள் பிறவிப்பயனை அடைந்து விட்டதாகவே நினைக்கிறார்கள் .இதே பிரச்னை எம்மவர்களிடமும் உள்ளது.ஐரோப்பவில் மற்றைய நாடுகளில் வதிவிட அனுமதி,வீட்டு வசதி,நல்ல வேலை என அனைத்தும் இருந்தும் பெரும்பாலான தமிழர்கள் இங்கிலாந்து நோக்கியே ஓடுகிறார்கள்.அதற்கு காரணம் ஆங்கில மோகம் என்பதைத் தவிர வேறெதுவுமில்லை .

இது இப்படியிருக்க எங்களின் வரிப்பணத்தை வீணடித்து எதற்காக இவர்களை வைத்து பராமரிக்க வேண்டும்?எனவே  குடியேற்றவாசிகளை அவர்களின் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பவேண்டும் என  front natinal க்கட்சியும் தீவிர வலதுசாரிகளும் எதிப்பு தெரிவிக்கிறார்கள்.இவர்கள் யாரையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென இங்கிலாந்து திட்டவட்டமாக அறிவித்து விட்டது.அது மட்டுமல்ல இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதற்கு முக்கிய காரணமே குடியேற்றவாசிகளின் பிரச்சனை யால்தான் என்பது அனைவரும் அறிந்ததே.
அடுத்த வருடம் சித்திரை மாதம் பிரான்சில் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலிலும் குடியேற்றவாசிகளின் பிரச்சனையே முக்கிய பேசுபொருளாக இருக்கப்போவது மடுமல்லாமல் அவர்களின் தலைவிதியையும் அதுவே தீர்மானிக்கும் என்பது நிச்சயம்.

இதே நேரம் இந்த வருடம் மட்டும் கடல் வழியாக சுமார் நான்கு இலச்சம் குடியேற்றவாசிகள் இத்தாலிக்குள் நுழைந்திருக்கிறார்கள்.அவர்களை சமாளிக்க முடியாமல் இத்தாலி விழி பிதுங்கி நிற்கும் அதே வேளை .அகதிகள் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தன்னை கை விட்டு விட்டதாக புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் .அதில் மூவாயிரம் பேர் வரை பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைவதற்காக எல்லையில் காத்துக் கிடக்கிறார்கள்.இத்தாலி பிரான்ஸ் எல்லையில் இன்னொரு குடியேற்ற வாசிகளின் காடு உருவாகிக்கொண்டிருக்கின்றது ..



No Comment