அஞ்சலி – சிறுகதை
வழக்கம் போல இன்றும் காலை கடையைத் திறந்து
விட்டு.. பத்திரிகை போடுபவன் எறிந்து விட்டுப் போகும் பத்திரிகையைத்
தேடினேன். நல்ல வேளையாக அது சுவரின் ஓரத்தில் கிடந்தது. போகிற போக்கில்
எறிந்து விட்டுப் போகும் பத்திரிகையை சில நேரங்களில் கடையின் கூரையிலும்
தேடிப்பிடித்திருக்கிறேன். கடையின் உள்ளே நுழைந்ததும் ஒரு கோப்பியை போட்டு
கையில் எடுத்தபடி சுருட்டியிருந்த பத்திரிகையைப் பிரித்து தலைப்புச்
செய்திகளை ஒரு தடவை மேலாக நோட்டம் விட்டேன்.”ஆறாவது மாடியில்
தீப்பிடித்தது. வீட்டில் இருந்த அனைவரும் தீயணைப்புப் படையினரால்
காப்பாற்றப்பட்டனர் “. “விபத்து…..கடற்கரை வீதியில் காரோடு மோட்டர்
சைக்கிள் மோதியது”. .”காணவில்லை. அஞ்சலி சிறிதரன் ” என்கிற தலைப்புச்
செய்தியில் கொஞ்சம் நிறுத்தி அதைத் தொடர்ந்து படித்தேன். இளந்தாயான அஞ்சலி
சிறிதரன் வயது பதினேழு . நேற்றுக் காலையிலிருந்து காணவில்லையென அவரது
குடும்பத்தினரால் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது . அனைத்துக்
காவல் நிலையங்களும் தீயணைப்பு நிலையங்களும், கடலோரக் காவல் நிலைகளும்
உசார்ப்படுத்தப்பட்டுத் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. ‘இவரைப்
பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாகக் காவல் துறையினருக்குத்
தெரிவியுங்கள்’.
என்கிற செய்தியின் கீழே புன்னகைத்தபடி அஞ்சலியின் படம்.
உறிஞ்சிய கோப்பியை அவசரமாக விழுங்கவே……
தொண்டை வழியே அது சூடாக இறங்கிய தாக்கத்தைக் குறைக்கக் கொஞ்சம் தண்ணீரையும்
குடித்து விட்டுக்கைத்தொலைபேசியை எடுத்து சிறி அண்ணரின் இலக்கத்தைத்
தேடினேன் . ‘எஸ்’ வரிசையில் ஏகப்பட்டவர்களின் பெயர்களில் சிறிதரன் என்கிற
பெயரை மட்டும் காணவில்லை . சிறி அண்ணரோடு இரண்டு வருடங்களுக்கு மேலாகத்
தொடர்பு விட்டுப் போயிருந்தது, அதற்குக் காரணமும் அஞ்சலிதான். அதனால்
நோக்கியாவிலிருந்து ஐ.போனுக்கு மாறும்போது அவரது இலக்கத்தை பதிவு
செய்யாமல் விடுபட்டிருந்தது நினைவுக்கு வந்தது . வேலை முடிந்ததும்
சிறியண்ணாவின் கபே பாருக்கு போய் அஞ்சலிக்கு என்ன நடந்தது என்று கேட்க
வேண்டும் என்று நினைத்தபடியே வேலையைத் தொடங்கி விட்டிருந்தேன்.
பிட்சா போடுகிறவன் ஒரு நாள் லீவு
வேண்டுமென்று கேட்டு போனவன்தான் மூன்று நாட்களாகி விட்டன இன்றும் வேலைக்கு
வரமாட்டான். அவன் கேட்கும் போதே கொடுத்து விடவேண்டும் லீவு தரமுடியாது
என்று சொன்னாலும் அவன் வரப்போவதில்லை. அவ்வப்போது தண்ணியடித்துவிட்டு லீவு
போடுபவன். எனவே அவனது பிட்சா போடுகிற வேலையையும் நான்தான் கவனிக்க
வேண்டும். பிட்சா மாவை உருட்டிய படியே அஞ்சலியின் நினைவுகளையும் உருட்டி
விட்டேன்.
*******************************
காலை நித்திரை விட்டெழும்பிய மிசேல்
வழமைக்கு மாறாகக் கட்டிற்காலில் கட்டிப் போட்டிருந்த லொக்கா
படுத்திருக்கிறதாவெனப் பார்த்தான். எப்போதுமே அதுதான் மிசேலை
கால்களாற்பிராண்டி, நக்கி, குரைத்து எழுப்பும் .ஆனால் இன்று அவனை லேசாய்
திரும்பிப் பார்த்து விட்டுப் படுத்துக் கொண்டது .
‘அதைக்கட்டிப் போட்டிருந்ததால் அப்படி
செய்ததா அல்லது இன்று தன்னை கொல்லப்போகிறார்கள் என்பது அதற்குத்
தெரிந்திருக்குமா’ என்று யோசித்த படி அதன் தலையை தடவிக் கொடுத்தான்.
லொக்காவை ஊசி போட்டுக் கொல்வதற்காக நாள் குறித்து அதற்குப் பணமும்
கட்டிவிட்டிருந்தான் .அவனது வாழ்நாளில் சந்திக்கும் இரண்டாவது மிக மோசமான
துயரமானநாள் இது. முதலாவது துயரம் சரியாக பத்தாண்டுகளுக்கு முன்னர்
பிரான்ஸின் வடக்கு பகுதியில் அவனது சொந்தக் கிராமமான குய்னேசில் நடந்தது.
வழமை போல தொழிற்சாலை வேலை முடிந்து நகர மத்தியில் இருந்த மதுச்சாலையில்
நண்பர்களோடு மது அருந்திவிட்டு மிதமான போதையில் இரவு வீடு திரும்பியபோது
அவனது மனைவி லூசியா அவனது துணிகளைப் பெட்டிகளில் அடைத்து வெளியே
வைத்துவிட்டு “இனிமேல் உன்னோடு வாழப்பிடிக்கவில்லை நீ போகலாம்” என்று
சொன்ன நாள். அப்போது லுசியாவுக்குப்பின்னால் பதுங்கித் தலையைக் குனிந்தபடி
அவனது நண்பன் அலெக்ஸ் ஜட்டியோடு நின்றிருந்தான். இப்போதெல்லாம் அலெக்ஸ்
தன்னோடு மதுச்சாலைக்கு வராத காரணம் அப்போதான் புரிந்தது. காதல்
மனைவியையும் ஆறு வயது மகனையும் பிரிந்து அந்த ஊரில் வாழப்பிடிக்காமல்
லூசியா கட்டிவைத்த பெட்டியோடு தெற்கு பிரான்ஸிற்கு ரயிலேறி வந்தவனுக்கு
இப்போ லொக்காதான் எல்லாமே. அதனைக் குளிப்பாட்டி துடைத்து மடியில்
தூக்கிவைத்து வேகவைத்த கோழியிறைச்சியை துண்டுகளாக வெட்டி ஊட்டி விட்டான்.
*******************************
நான் இருபதாண்டுகளுக்கு முன்னர் இந்த
நகரத்துக்கு வந்தபோது இங்கிருந்த ஒரு சில தமிழர்களில் சிறி அண்ணையும்
ஒருவர். சிறியதாய் ஒரு கடை வைத்திருந்தார் அப்போதுதான் அவருக்கு
திருமணமாகியிருந்தது, கணவன் மனைவி இருவருமே கடின உழைப்பாளிகள். காலை
ஒன்பது மணிக்குத் திறக்கும் கடை இரவு ஒரு மணிவரை ஏழு நாட்களும்
திறந்திருக்கும். பொருட்கள் வாங்கவும் தமிழில் கதைத்துப் பேசவும் அவரது
கடைக்கு அடிக்கடி நான் போய் வந்ததில் நல்ல நண்பராகிவிட்டிருந்தார்.
கதைத்தபடியே வாங்கும் பொருட்களுக்கு எப்பொழுதும் ஒரு பத்து சதமாவது
அதிகமாகக் கணக்கில் அடித்துவிடுவார். கண்டு பிடித்துக் கேட்டால் “கதையிலை
மறந்திட்டன்” என்று சிரித்தபடியே திருப்பித் தருவது வழமை. அவரின் மனைவி
சுமதி மிக நேர்மையானவர், அதனால் சிறியண்ணை அவரிடம் அடிக்கடி பேச்சு
வாங்குவதுண்டு. அவர்களுக்கு அஞ்சலி பிறந்த பின்னர் அவர் நகர மத்தியில்
பெரிய கபே பார் ஒன்றை வாங்கி அதற்கு Angel bar என்று பெயரும்
வைத்திருந்தார். மகள் பிறந்த ராசிதான் தனக்கு வாழ்கையில் முன்னேற்றம்
கிடைத்தது என்று எல்லோரிடமும் பெருமையாய்ச் சொல்லிக்கொள்வார். அதன்
பின்னர் கடைதான் அவர்களுக்கு வீடு . அஞ்சலி அங்கேயே தவழ்ந்தாள் அங்கேயே
வளர்ந்தாள். அங்கு வந்து போகின்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அவள்
செல்லப் பிள்ளையானாள்.
Angel bar நகர மத்தியில்
அமைந்திருந்ததால் அங்கு போக வேண்டிய தேவை எனக்கு அதிகம் இருந்ததில்லை,
அதைவிட கார் நிறுத்த இடம் கிடைப்பது சிரமம் எனவே எப்போதாவது வார இறுதி
நாட்களில் நண்பர்களோடு கோப்பி அருந்தச் செல்வேன். அஞ்சலி வளர்ந்து
பாடசாலைக்கு போகத் தொடங்கி விட்டிருந்தாள். லீவு நாட்களில் சிறி
அண்ணருக்கு உதவியாக கடையில் வேலை செய்வாள். ஒரே செல்ல மகள் என்பதால்
அவளே குடும்பத்தின் அதிகாரியாகவும் சுட்டித்தனம் மிகுந்தவளாகவும்
மாறிவிட்டிருந்தாள். நான் கோப்பி அருந்தி விட்டு கிளம்பும் போதெல்லாம்
“டேய் மாமா டிப்ஸ் தந்திட்டுப் போ ” என்று பலவந்தமாகவே சில்லறைகளைப்
பிடுங்கிவிடுவாள். “அப்பனுக்குத் தப்பாமல் பிறந்திருக்கிறாய்” என்று
சொல்லி செல்லமாய் அவள் காதைப் பிடித்து ஆட்டி விட்டு கிளம்பி விடுவேன்.
பின்னர் என் வேலையிடமும் மாறி விட்டதால் அங்கு போவதும் குறைந்து
விட்டிருந்தது.
“டேய் புகையிது புகையிது” என்று
பக்கத்தில் நின்றவன் கத்தவே வெதுப்பியைத் திறந்து பார்த்தேன். ஓம
குண்டத்தில் போட்ட அரிசிப் பொரிபோல எரிந்து கொண்டிருந்தது நான் வைத்த
பிட்சா. எரியும் மணத்தில் எங்கேயோ நின்ற முதலாளி ஓடிவந்து “என்ன யோசனை”?
என்றான்.
நான்.. “இல்லை அஞ்சலி” என்று சொல்லவும்
“ஓ …அஞ்சலினா ஜோலியா” ஒழுங்கா வேலையைப்
பார் என்று முறைத்து விட்டுப்போனான். எரிந்த பிட்சாவை எடுத்து குப்பை
வாளியில் போட்டு விட்டு அடுத்த பிட்சாவுக்கான மாவை உருட்ட ஆரம்பித்தேன்….
*******************************
மிசேல் இந்த நகரத்துக்கு வரும்போது
அவனுக்கு யாரையும் தெரியாது. மனைவியை விட்டுத் தொலைவாகப் போய் விட
வேண்டும் என்கிற ஒரே நோக்கம் மட்டுமே அவனிடத்தில் இருந்தது. கிராமசபை
உதவியோடு தங்குவதற்கு சிறிய அறை கிடைத்திருந்தது. வேலை வாய்ப்பு
அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு ஊர் சுற்றித்திரிந்தவனுக்கு உணவு விடுதி
ஒன்றில் வேலையும் கிடைத்தது பெரும் ஆறுதலாக இருந்தது.
ஆனால் இரவு நேரத்தனிமையையும் மகனின்
நினைவுகளையும் போக்குவதற்கு மதுவைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. மனைவி
லூசியாவையும் நண்பன் அலெக்ஸையும் நினைத்து குடித்து முடித்த பியர் கேனை
ஆத்திரம் தீர நசுக்கி எறிவான். எல்லோரையும் போலவே எல்லாவற்றையும் மறந்து
விடுவதற்காக அளவுக்கதிகமாக் குடித்தாலும் மறக்க நினைத்த அத்தனையும்
மீண்டும், மீண்டும் அவனது தலைக்குள்ளேயே சுற்றிவரத் தலை சுற்றிச் சுய
நினைவிழந்துபோய் விடுவான்.
நினைவுகளை கொல்வதற்காக அடுத்த தெரிவாக
கஞ்சா என்று முடிவு செய்தவன். நகரத்துக்கு வெளியேயிருந்த இரயில்
நிலையத்தின் பின்னால் வாங்கலாமென அறிந்து கொண்டு இப்போதெல்லாம் வேலை
முடிந்ததும் இரவில் இரயில் நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கி
விட்டிருந்தான்.
அன்றும் வழமை போல கஞ்சாவை வாங்கி வந்து
இரயில் நிலையத்தின் கார் நிறுத்துமிடத்தில் யாருமற்ற ஓரத்தில் அமர்ந்து
பொட்டலத்தைப் பிரித்து இடது உள்ளங்கையில் கொட்டி, வலக்கை பெருவிரலை வைத்து
பொத்திப் பிடித்து கசக்கி தயார்ப்படுத்தி வைத்திருந்த பேப்பரில் போட்டு
உருட்டி அதன் நுனியை லேசாய் நாவால் நீவி ஒட்டி உதடுகளுக்கிடையில் பொருத்தி
லைட்டரை உரசியதும் அந்த இருளில் அவன் முன்னால் தோன்றிய அந்த ஒளியில்
கஞ்சாவை பற்ற வைத்தான் . இப்போ ஒளி இடம் மாறிவிட்டிருந்தது. கண்ணை மூடி
ஆழமாக உள்ளே இழுத்தான். பலருக்கு தலைக்கு பின்னால் தோன்றும் ஒளிவட்டம்
அவனுக்கு முகத்துக்கு முன்னால் தோன்றியிருந்தது கொஞ்சம் சிறியதாக
உள்ளிழுத்த புகையில் பாதியை விழுங்கிவிட்டு மீதியை அண்ணாந்து ஓசோன் படலத்தை
நோக்கி ஊதி விட்டுக் கொண்டிருந்தபோது மெல்லியதாய் அனுங்கும் சத்தம் கேட்டு
குனிந்து பார்த்தான். தள்ளாடியபடியே ஒரு குட்டி நாய் அவனை நோக்கி வந்து
கொண்டிருந்தது . அது குரைக்கிறதா, கத்துகிறதாவென்று தெரியவில்லை.
அவனுக்கு அருகில் வந்து கால்களுக்கிடையில் படுத்துக் கொண்டது. “என்னைப்
போலவே யாரோ வீதியில் எறிந்துவிட்டு போன இன்னொரு ஜீவன்” என்றபடி அதனை
அணைத்துத் தூக்கியவன் உனக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக்
கொண்டிருக்கும் போது இருமல் வரவே ’ ‘லொக்கா’ என்று பெயரை வைத்து விட்டு
மறுபடியும் இழுத்த கஞ்சா புகையில் பாதியை விழுங்கிவிட்டு மீதியை லொக்காவின்
முகத்தில் ஊதியவன் அதனை அணைத்தபடி வீட்டை நோக்கி நடக்கத்
தொடங்கியிருந்தான். அன்றிலிருந்து அவனுக்கு எல்லாமே லொக்காதான் .
*******************************
அடுத்தநாள் வேலைக்கு வரும்போது சிறி
அண்ணரின் கடைக்கு போய் விபரம் கேட்டு விட்டுப்போகலாம் என நினைத்து காரை நகர
மத்தியை நோக்கித் திருப்பி விட்டிருந்தேன். நல்ல வேளையாக அவரது கடைக்கு
அருகிலேயே ஒரு கார்நிறுத்துமிடம் கிடைத்துமிருந்தது. அவரது கடையில்
கூட்டம் கொஞ்சம் அதிகமாகத்தானிருந்தது. என்னைப் போலவே அவர்களும் புதினம்
அறிய வந்திருக்கலாம். யாரோ ஒரு பிரெஞ்சு பெண் பரிமாறிக் கொண்டிருந்தாள்.
சிறிய வியாபாரப் புன்னகையோடு என்னை வரவேற்று “ஏதாவது அருந்துகிறீர்களா”
என்றவளிடம் ஒரு கோப்பிக்குச் சொல்லிவிட்டு நோட்டம் விட்டேன். சிறி அண்ணா
பாரின் உள்ளே நின்றிருந்தார் மனைவியைக் காணவில்லை. என்னைக் கண்டதும்
வேகமாக வந்தவர் என்னை சில வினாடிகள் இறுக்கமாக கட்டியணைத்துக்கொண்டார்.
அவரின் லேசான விசும்பல் என் காதில், அங்கிருந்த அத்தனை கண்களும் எங்களை
நோக்கியே திரும்பின.
“அண்ணை என்ன இது குழந்தை மாதிரி” என்றபடி அவரை என்னிடமிருந்து பிரித்தேன் . என் கையைப் பற்றி வெளியே அழைத்து வந்தவர்.
“தம்பி நீ மகளைப்பற்றி சொல்லேக்குள்ளை
அவளிலை இருந்த அளவு கடந்த பாசத்தாலயும் நம்பிக்கையாலையும் உன்னைக்
கோவிச்சுப் போட்டன். அப்பவே கவனிச்சிருந்தால் இந்த நிலைமை
வந்திருக்காது………. எல்லாம் அந்த ரெமியாலை வந்தது “.
”சரியண்ணை நடந்தது நடந்து போச்சு, விடுங்கோ,போலிஸ்ல என்ன சொல்லுறாங்கள்”
”அவங்களும் அந்தப் பெடியன் ரெமியையும்
அவனின்ரை தாய், தகப்பன், சிநேகிதர்கள் என்று எல்லாரையும் விசாரிச்சுக்
கொண்டிருக்கிறாங்கள். ஒரு விபரமும் தெரியேல்லை” .
”கடைசிவரை அந்த ரெமியோடை தான் சினேகிதமா …….?”
”இல்லை தம்பி. அவனோடை பிரச்சனைப்பட்டு
எங்களிட்டை வந்திட்டாள். நாங்களும் வைத்தியரிட்டை காட்டி போதைப்
பழக்கத்துக்கு சிகிச்சை எல்லாம் செய்து ஒரு பிரச்சனையும் இல்லாமல் நல்லாத்
தான் இருந்தவள். இப்ப ஆறு மாசமா எங்கேயும் போறேல்லை. சிகரெட் மட்டும்
களவாய்ப் பத்துவாள். எங்களுக்கு தெரிஞ்சாலும் கண்டு கொள்ளுறேல்லை.”
”அப்போ என்னதான் நடந்தது .?”
”முந்தா நாள் காலமை ஒரு சினேகிதியைப்
பாத்திட்டு வாறதாச் சொல்லிட்டு போனவள்தான் வரவேயில்லை. இவ்வளவு நாளா
ஒழுங்கா இருந்ததாலை நாங்களும் போயிட்டு வரட்டும் எண்டு விட்டிட்டம்”.
“பேப்பரிலை இளம் தாய் எண்டு
போட்டிருக்கே” என்றதும் என் கையை பிடித்து மீண்டும் கடைக்குள் அழைத்துப்
போனார் ஒரு ஓரத்தில் அஞ்சலி குழந்தையாய் இருந்தபோது படுத்திருந்த அதே
தொட்டிலில் சாயலில் அஞ்சலியைப் போலவே ஒரு பெண் குழந்தை உறங்கிக்
கொண்டிருந்தது .
இதுதான் அவளின்ரை குழந்தை. அவந்திகா, அவள் எங்களிட்டைத் திரும்ப வரேக்குள்ளை ஏழு மாசம் .
பணிப்பெண் கோப்பியை நீட்டினாள், அதனை அவசரமாக விழுங்கியபடி…
“எங்கை சுமதியக்கா”?
”பொலிசிலை இருந்து போன் வந்தது, அவள் போயிட்டாள்.”
“சரியண்ணை எனக்கு வேலைக்கு நேரமாகுது” என்றபடி கோப்பிக்கான பணத்தை கொடுக்க பர்ஸை எடுத்தபோது என் கையைப் பிடித்துத்தடுத்து
“அதெல்லாம் வேண்டாம் கன காலத்துக்குப்
பிறகு கண்டதே மகிழ்ச்சி. இனி அடிக்கடி வந்திட்டு போ தம்பி” என்றவரிடம்
விடை பெறும்போது வெளியே என்னோடு வந்தவர் திடீரென என் இரண்டு கைகளையும்
பிடித்து தனது கைகளுக்குள் பொத்திப் பிடித்தபடி.
“தம்பி சில நேரங்களிலை உங்களிட்டை 5
… 10 சதம் கூடுதலா எடுத்திருப்பன். அற்பத்தனம்தான், இப்ப அனுபவிக்கிறன்,
என்னை மன்னிச்சுக்கொள்ளு” என்றவரின் கண்கள் மீண்டும் கலங்கின.
“போங்கண்ணே, அதெல்லாம் ஒண்டும் இல்லை”
என்று அவரின் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு வேலையிடத்துக்கு வந்து முதல்
நாள் பேப்பரில் அஞ்சலியின் “காணவில்லை” என்கிற அறிவித்தலை
வெட்டியெடுத்துக் கடையின் முன் பக்கக்கண்ணாடியில் ஒட்டி விட்டு அன்றைய
பேப்பரை எடுத்துப் புரட்டினேன். அஞ்சலியை இரயில் நிலையத்துக்கு அருகில்
ஒருவர் பார்த்ததாகவும் தேடுதல் தொடர்கிறது என்றுமிருந்தது. பிட்சா
போடுபவனுக்கு போன்போட்டுப் பார்த்தேன். போன் நிறுத்தி வைக்கப்
பட்டிருந்தது. சரி இன்றைக்கும் நான்தான் பிட்சா போடவேண்டும்.
*******************************
மதியத்துக்கு தேவையான உணவு, தண்ணீர்,
நிலத்தில் விரிக்கத் தடிப்பான துணி, லொக்கா விளையாட பந்து, இவைகளோடு ஒரு
போத்தல் வைன் என்று ஒரு ‘பிக்னிக்’குக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும்
தனது காரில் எடுத்து வைத்தவன் லொக்காவையும் ஏற்றிக்கொண்டு ஊருக்குத்
தொலைவாக இருக்கும் காட்டுப் பகுதியை நோக்கி வண்டியை செலுத்தினான். லொக்கா
யன்னலுக்கு வெளியே தலையை விட்டபடி வெறித்துப் பார்ப்பதும் மிசேலை
பார்ப்பதுமாக இருந்தது. அப்பப்போ அவன் லொக்காவை தடவிவிட்டான்.
வண்டி காட்டுப் பகுதிக்குள் நுழைந்ததும்
பாதை சீராக இருந்த வரை சென்றவன் வண்டியை நிறுத்திவிட்டு, ஒரு மரத்தின் கீழ்
துணியை விரித்து , கொண்டு வந்த பொருட்களை எடுத்துத் துணியின் மீது
வரிசையாக வைத்துக் கொண்டிருக்கும்போது, வண்டியை விட்டிறங்கிய லொக்கா மணந்த
படியே சிறிது தூரம் சென்று காலைத் தூக்க முயன்று முடியாமல் மூத்திரம்
பெய்து விட்டு வந்தது.
யாருமற்ற காடு, காற்று மரங்களில்
மோதியதில் எழுந்த இலைகளின் ’சல சல’ப்பைத் தவிர எந்த சத்தமும் இல்லை.
பந்தைத் தூக்கி சிறிது தூரத்தில் எறிந்தான். மெதுவாகவே நடந்து சென்ற
லொக்கா அதை கவ்விக்கொண்டு வந்து அவனது காலடியில் போட்டு விட்டு
நிமிர்ந்து பார்த்தது. அதன் தலையை தடவி “நல்ல பையன் “..என்று விட்டு
மீண்டும் பந்தை எறிந்தான். இந்தத் தடவை லொக்கா பந்தையும் அவனையும் மாறி
மாறி பார்த்து விட்டு அங்கேயே படுத்து விட்டது.
“களைத்துப்போய் விட்டாயா…. சரி” என்றபடி
அவனே போய் எடுத்துக் கொண்டு வந்தவன் துணியின் மேல் அமர்ந்து வைன் போத்தலை
எடுத்துத் திறந்து அப்படியே அண்ணாந்து விழுங்கிக்கொண்டிருக்கும் போது
வண்டியொன்றின் இரைச்சல் கேட்கவே தலையைக் குனிந்து வாயிலிருந்தும் போத்தலை
எடுத்து விட்டுப் பார்த்தான். பச்சை நிறக் கார் ஓன்று புழுதியைக்
கிளப்பியபடி அந்த சூழலில் அமைதியை குலைத்து செல்ல லொக்கா அதனைப் பார்த்து
குரைத்துக் கொண்டிருந்தது .
*******************************
நான் வேலை முடிந்து போகும்போது பாடசாலை
முடிந்து நகரத்து வீதியில் நண்பர்களோடு நடந்து செல்லும் அஞ்சலியை அடிக்கடி
கடந்து போவதுண்டு. எனது கார் ஒலிப்பானை ஒலித்ததும் திருப்பிப் பார்த்து
வயதுக்கேயான குறும்போடு துள்ளிக்குதித்து “மாமா” என்று கத்தியபடி
கைகளையாட்டி ஒரு ‘ஃப்ளையிங் கிஸ்’ தந்து விட்டுப்போவாள். சில காலங்களின்
பின்னர் நண்பர் கூட்டத்தைப் பிரிந்து தனியாக ஒருவனோடு மட்டும் திரிவதை
கண்டிருக்கிறேன். அப்படியான ஒரு நாளில் வீதியில் என்னை கண்டவள் “மாமா
இவன்தான் ரெமி என்னுடைய நண்பன்” என்று அறிமுகம் செய்தாள்.
வணக்கம் சொல்வதற்காக அவனிடம் கையை நீட்டிய
போது அனாயாசமாக சிகரெட்புகையை இழுத்து விட்டபடி பதில் வணக்கம் சொன்ன
விதமும், காவி படிந்த அவனது பற்களும், இடது தாடையில் இருந்த காயத்தின்
தழும்பு என்று முதல் பார்வையிலேயே அவனை எனக்குப் பிடிக்கவில்லை. வேண்டா
வெறுப்பாகவே வணக்கம் சொல்லி விட்டுக் கிளம்பிவிட்டிருந்தேன்.
சில நேரங்களில் அஞ்சலியின் தலைக்கு
மேலாலும் புகை போவதை அவதானித்திருக்கிறேன். அது மட்டுமல்ல இரயில்
நிலையத்தின் பின்னால் உள்ள கார் நிறுத்திடத்தில் அவளின் நண்பனோடு
அமர்ந்திருப்பாள். “இந்தக் காலத்து பிள்ளைகள்” என்கிற ஒரு பெரு
மூச்சோடு கார் ஒலிப்பானை ஒலிக்காமலும் காணாததுபோலக் கடந்து செல்வதுண்டு
.
அப்படியொரு மாலைப்பொழுதில் வேலை முடிந்து
நான் இரயில் நிலையத்தை கடந்து கொண்டிருக்கையில் அங்கு இளையோர் கூட்டமொன்று
தள்ளுமுல்லுப் பட்டு வாய்த்தர்க்கத்தில் ஈடு பட்டுக்கொண்டிருந்தார்கள்.
அவர்களோடு அஞ்சலியும் நின்றிருந்ததால் காரை ஓரங்கட்டி விட்டு
அவதானித்துக்கொண்டிருந்தேன். திடீரென ஒருவன் அஞ்சலியைப் பிடித்து
தள்ளிவிட நிலை தடுமாறிக் கீழே விழுந்தவளை வேடிக்கை பார்த்தபடி ரெமி
நின்றிருந்தான். கோபமாக “ஏய்” என்று கத்தியபடி நான் காரை விட்டிறங்கிச்
செல்ல அனைவரும் ஓடி விட்டார்கள்.
தட்டுத்தடுமாறி எழுந்த அஞ்சலியைத்
தாங்கிப்பிடித்து காருக்குள் அழைத்துப்போய் ஏற்றினேன். கண்கள் சிவந்து,
வாயிலிருந்து வாணீர் வடிய. நிறைந்த போதையில் இருந்தாள். “ச்சே என்னடி இது
கோலம் இந்த வயசிலை ? என்ன பிரச்னை” ? என்றதும் “ஒண்டுமில்லை” என்றபடி
சீற்றில் சாய்ந்து கொண்டாள். ஆசனப்பட்டியைப் போட்டுவிட்டு வண்டியைக்
கிளப்பினேன்.
“எங்கை மாமா போறாய்? ”
”உங்கடை கடைக்கு”
”எதுக்கு? ”
”உன்ரை அப்பாவோடை கொஞ்சம் கதைக்க வேணும்”
”அதெல்லாம் வேண்டாம் எனக்கு 50 யூரோ தந்து இங்கை இறக்கி விடு ”
“பேசாமல் வா”
”காசு தர முடியுமா முடியாதா ?”
“முடியாது ” என்றதும் அவள் ஆசனப்பட்டியை
எடுத்து விட்டு ஓடிக் கொண்டிருத்த காரின் கதவை திறக்கவே, நான் சட்டென்று
பிரேக்கை அழுத்த பின்னால் வந்த கார்கள் எல்லாம் ஒலிப்பானை ஒலிக்கத்
தொடங்கின. ஒருவன் “ஏய் …பைத்தியக்காரா” என்று சத்தமாகவே கத்தினான்.
எதையும் பொருட் படுத்தாமல் அஞ்சலி காரை
விட்டிறங்கி வேகமாக நடந்து போய்க்கொண்டிருந்தாள். “எடியே நில்லடி ” என்று
நான் கத்தவும் சட்டென்று திரும்பி வலக்கை நடு விரலை காட்டி விட்டுப்
போய்விட்டாள். எனக்கு வந்த கோபத்திற்கு ஓடிப்போய் அவளுக்கு இரண்டு அடி
போட்டு இழுத்துக்கொண்டு வந்து காரில் ஏற்றலாமா என்று யோசித்தாலும்.
பின்னாலிருந்த கார்களின் ஒலிப்பான்களின் சத்தம் எதுவும் செய்ய
முடியாமல்பண்ணக் கோபத்தை அடக்கியபடி நேரே சிறியண்ணரின் கடைக்குப்போய்
அவரிடம் விபரத்தை சொன்னதும் அவர் “தம்பி மகளை எப்பிடி வளர்கிறதெண்டு
எனக்கு தெரியும் நீங்கள் போகலாம் “என்றார். கோபத்தோடு எனக்கு அவமானமும்
சேர்ந்து கொள்ள அங்கிருந்து போய் விட்டேன். அதுதான் நான் அவரோடும்
அஞ்சலியோடும் பேசிய இறுதி நாட்கள்.
*******************************
அந்த காட்டுப்பகுதியில் கரடு முரடான
பாதைகளுக்குள்ளால் புகுந்து வந்த கார் ஒரு பெரிய மரத்தின் கீழ் நின்று
கொள்ள, அதிலிருந்து இறங்கியவன் காரின் டிக்கியில் இருந்து நீல நிறத்திலான
தடித்த பெரிய பாலித்தீன் ஒன்றை நிலத்தில் விரித்தான். காரிலிருந்து
ஒரு சிறிய பையையும் எடுத்து அதன்மேல் வைத்து விட்டு “அஞ்சலி வா” என்று
அழைத்தபடியே பையிலிருந்த வோட்கா போத்தலை எடுத்து இரண்டு பிளாஸ்டிக்
கிண்ணத்தில் ஊற்றி அளவோடு கொஞ்சம் ஒரேஞ் ஜூசையும் கலந்து அருகில் வந்த
அஞ்சலியிடம் நீட்டினான்.
அந்தக் காட்டுப் பகுதியை கொஞ்சம்
அச்சத்தோடு சுற்றிவரப் பார்த்தபடியே அவன் நீட்டிய கிண்ணத்தை வாங்கி
உறிஞ்சியபடியே விரித்திருந்த பாலித்தீன் மேல் அமர்ந்துகொள்ள, அவளருகே
அமர்ந்தவன் அதிகமாக எதுவுமே பேசிக்கொள்ளாமல் அடிக்கடி காலியான கிண்ணங்களை
நிரப்புவதிலேயே குறியாக இருந்தான். இருவருமே பல சிகரெட்டுகளை எரித்துச்
சாம்பலாக்கி யிருந்தனர். போத்தலின் கடைசித்துளி வொட்காவையும் அவன்
இரண்டு கிண்ணத்திலும் சரி பாதியாக பகிர்ந்து முடித்தபோது இருவருக்குள்ளும்
இருந்த இறுக்கம் குறைந்து நெருக்கம் கூடியிருந்தது.
சட்டைப்பையிலிருந்து எப்போதோ பார்த்த
சினிமா டிக்கெட் ஒன்றையும் சிறிய பிளாஸ்டிக் கொக்கெயின் பொட்டலத்தையும்
எடுத்தவன் சினிமா டிக்கெட்டை சுருட்டி பக்கத்தில் வைத்து விட்டு
விரித்திருந்த பாலித்தீனில் ஒரு பகுதியை கையால் தேய்த்துத் துடைத்து
துப்பரவு செய்தவன் அதில் பொட்டலத்தை பிரித்து கொட்டி சிகரெட் பெட்டியில்
மூடியை கிழித்து அந்த மட்டையால் பவுடரை சரி சமமாக இரண்டாகப் பிரித்துவிட்டு
அது காற்றில் பறந்து விடாதபடி மிகக் கவனமாக பொத்திப் பிடித்தபடி
சுருட்டியிருந்த சினிமா டிக்கெட்டை எடுத்து “இந்தா அஞ்சலி” என்று
நீட்டினான்.
”இல்லையடா எனக்கு வேண்டாம்”
”ஏன் ?”
”நான் இதெல்லாம் விட்டுக் கனகாலமாச்சு. அப்பா, அம்மா, அவந்திகா எல்லாம் பாவமடா .எனக்காக எவ்வளவோ கஷ்டப் பட்டிட்டாங்கள்…வேண்டாம்”
”இண்டைக்கு நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் தெரியுமா, எனக்காக ஒரே ஒரு தடவை”
”அதில்லை அப்பா மேலை சத்தியம் பண்ணியிருக்கிறேன்”
“ஈ “…என்று சிரித்தவன் எத்தனை தடவை நீ அப்பா , அம்மா மேல சத்தியம் பண்ணியிருப்பாய் இதெல்லாம் ஒரு காரணமா?”
”வேண்டாம் விட்டிடேன்”
“சரி எனக்கும் வேண்டாம்” என்றபடி
பொத்திப் பிடித்திருந்த கையை எடுத்துவிட்டு காலியாய் இருந்த வொட்காப்
போத்தலை எடுத்துச் சட்டென்று தன் முன் மண்டையில் அடித்தவன், உடைந்து
கையில் மீதியாய் இருந்த பாதியால் இடக்கையை கீறிக் கொள்ள பதறிப் போய் அஞ்சலி
அதைப் பறித்தவள், அவனின் சட்டையைக் கழற்றி உடைந்த போத்தலால் அதைக்
கிழித்து இரத்தம் வழிந்த தலையிலும் கையிலும் கட்டுப்போட்டுவிட்டு “டேய்
எதுக்கடா இப்பிடி” என்றாள்.
“அஞ்சலி நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன்
தெரியுமா ? எனக்கு நீ வேணும்” என்றபடி அவளின் மேல் சாய்ந்துகொண்டு
அழுதவனை தேற்றியவள் “சரி உனக்காக ஒரேயொரு தடவை” என்றபடி சுருட்டியிருந்த
டிக்கெட்டை எடுத்து வலப்பக்க மூக்குத் துவாரத்தில் செருகி மறுபக்கத்
துவாரத்தை விரலால் அழுத்திப்பிடித்துக்கொண்டு கொஞ்சம் சிதறிப்போயிருந்த
தன் பங்கை ஒரே மூச்சில் உறிஞ்சி முடித்து மூக்கை துடைத்து விட்டு
நிமிந்தவளின் கண்கள் சிவந்து, கலங்கி நீர் வழியத்தொடங்கியிருந்தன.
அவன் தன் பங்கையும் உறிஞ்சி முடித்தவன்
சிரித்தபடியே அவளை இழுத்தணைத்து சரித்தவன் உதட்டோடு உதடுவைத்து
முத்தமிட்டபடியே ஆடைகளை அவிழ்த்து முடித்தவர்கள் முயங்கிக்
கொண்டிருக்கும்போதே கையை நீட்டி சிறிய பையிலிருந்த கத்தியை எடுத்து கண்
மூடிக் களித்திருந்தவளின் கழுத்தில் அழுத்தி “சரக்” என்று இழுத்து
விட்டிருந்தான். அவள் கைகளை ஓங்கி நிலத்தில் அடித்த சத்தத்தில்
மரத்திலிருந்த ஏதோவொரு பறவையொன்று அலறிப் பறந்து போனது. இறுதியாய்
உள்ளிழுத்த மூச்சுக் காற்று அறுந்த கழுத்து வழியாக சீறிய இரத்தத்தோடு
குமிழிகளாக வெளியேறிக்கொண்டிருந்தபோதே முயங்கிக் கொண்டிருந்தவன்
முடிக்கும்போது அவளின் மூச்சும் அடங்கி விட்டிருந்தது.
எழுந்து தனது ஜீன்ஸை அணிந்து கொண்டு தன்
கையிலும் தலையிலும் கட்டியிருந்த சட்டைத் துணிகளை அவிழ்த்து அவளின் மீது
வீசிவிட்டுக் காருக்கு சென்றவன் காயங்களின் மீது பிளாஸ்டரை ஒட்டிக்கொண்டு
இன்னொரு சட்டையை அணிந்தவன், திரும்பிவந்து இறந்து கிடந்தவளின் உடலை
விரித்திருந்த பொலித்தீனால் இரத்தம் கொஞ்சமும் கீழே சிந்திவிடாமல்
பக்குவமாக அப்படியே மடித்து, சுருட்டி நிதானமாக ஸ்கொச் போட்டு ஒட்டியவன்
கார் டிக்கியினுள் தூக்கிப் போட்டுக்கொண்டு எல்லாவற்றையும் ஒரு முறை சரி
பார்த்துவிட்டு வண்டியைக் கிளப்பிப்போய்க்கொண்டிருக்கும் போது வழியில் யாரோ
ஒருவன் தன் நாயோடு செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தான் .
*******************************
வைனைக் குடித்துமுடித்துவிட்டு சிறிய
சாண்ட்விச் ஒன்றைச் செய்து சாப்பிட்டு விட்டு லொக்காவை கட்டியணைத்தபடி
குட்டித்தூக்கம் போட்டுக்கொண்டிருந்த மிசேல் ஒரு பறவையின் அலறல் கேட்டுக்
கண்விழித்தவன் நேரத்தைப் பார்த்தான். மாலை மூன்று மணியை
நெருங்கிக்கொண்டிருந்தது. ஐந்து மணிக்கெல்லாம் மிருக வைத்தியரிடம்
நிற்கவேண்டும். எல்லாப் பொருட்களையும் காரில் அள்ளிப் போட்டவன் புறப்படு
முன்னர் லொக்கவோடு செல்பி எடுக்க நினைத்து அதனை தூக்கி காரின் மீது படுக்க
வைத்துவிட்டு செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கும்போது காலையில் காட்டுக்குள்
வேகமாகச் சென்ற அதே கார் இப்பொழுது அதே வேகத்தோடு வெளியே சென்று
கொண்டிருந்தது.
“இந்தக் காட்டுக்குள்ள அப்பிடி என்னதான்
அவசரமோ ” என்று நினைத்தபடியே அங்கிருந்து கிளம்பி வைத்தியரிடம் வந்து
சேர்ந்து விட்டிருந்தான். லொக்கா காரை விட்டு இறங்க மறுக்கவே அதனை அப்படியே
தூக்கிக் கொண்டு வைத்தியரிடம் போனவன் அவர் காட்டிய அறையினுள் புகுந்து
அங்கிருந்த மேசையில் லொக்காவை படுக்க வைத்துத் தடவிக் கொடுத்தான். லொக்கா
அவனது கையை சில தடவைகள் நக்கிவிட்டு பேசாமல் படுத்துகொண்டது.
கைகளுக்கு உறைகளை மாட்டியபடி அறைக்குள்
நுழைந்த வைத்தியர் ஊசியை எடுத்து ஒரு மருந்து குப்பிக்குள் நுழைத்து
மருந்தை இழுத்தெடுத்தவர் இரண்டு விரல்களால் லொக்காவின் கழுத்துப்பகுதியில்
அழுத்தியபடி மருந்தை செலுத்தினார். மெல்லிய முனகலுடன் லொக்கா உயிரை
விட்டுக் கொள்ள, அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் வெளியேறிய மிசேல்
வீட்டுக்கு போகும் வழியிலேயே மலர்க்கொத்து ஒன்றும் விஸ்கிப்போத்தல்
ஒற்றையும் வாங்கிச் சென்றவன் லோக்காவோடு எடுத்த செல்ஃபிகளில்
தரமானதொன்றைப் பிரதி எடுத்துக் கணனி மேசைக்கு மேலே சுவரில் ஒட்டியவன்
இரண்டு கிளாஸை எடுத்து ஒன்றில் தண்ணீரை நிரப்பி மலர்க்கொத்தைச்செருகி
ஒட்டிய படத்தின் முன்னால் வைத்துவிட்டு இரண்டாவது கிளாஸில் விஸ்கியை
நிரப்பத் தொடங்கியிருந்தான் .
*******************************
யாருமற்ற அவர்களது பண்ணை வீட்டுக்குள்
நுழைந்தவன் தோட்டவேலைக்கு பாவிக்கும் கருவிகள் வைத்திருக்கும் சிறிய
கட்டிடத்திற்குள் பொலித்தீனால் சுற்றப் பட்டிருந்த அஞ்சலியின் உடலை தூக்கி
வந்தவன் அங்கிருந்த நீளமான மேசையில் கிடத்திப் பொலித்தீனைப் பிரித்தான்.
இரத்தம் உறைந்துபோயிருந்த ஆடைகளற்ற உடல் பொலித்தீனில் ஒட்டிப் போயிருந்த
தால் சிரமப்பட்டே பிரிக்க வேண்டியிருந்தது.
ஒரு கிளாஸை எடுத்தவன் அங்கிருந்த சிறிய
குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து கொஞ்சம் வொட்காவை ஊற்றிக்கொண்டு
மேசைக்கருகே வந்து நின்று கண்கள் அகலத் திறந்திருந்த உடலையே சிறிது நேரம்
பார்த்து விட்டு ஒரே மடக்கில் குடித்தவன் “என்னடி முறைக்கிறாய் ”
என்றபடி அங்கிருந்த மரம் வெட்டும் இயந்திர வாளை இயக்கியவன் வேகமான வெறித்
தனத்தோடு ஒரே நிமிடத்தில் காலிலிருந்து தலைவரை அரிந்து முடித்து இயந்திர
வாளை நிறுத்திவிட்டுப்பார்த்தான். ஒரு நீளமான மசாலாத்தோசையை அளந்து
வெட்டியதைப்போலிருந்தது. சிறு துண்டுகளாக கிடந்தவற்றில் சிலவற்றை தனியாக
எடுத்து வைத்தவன் மிகுதித்துண்டுகள் அனைத்தையும் ஒரு பிளாஸ்டிக் பீப்பாயில்
போட்டுவிட்டு வெட்டும்போது சிதறிய தசைத் துண்டங்களைப் பொறுக்கி
மேசையில் விரித்திருந்த பொலிதீனில் போட்டு அதை சுருட்டிப் பீப்பாயில்
போட்டு மூடியவன் பண்ணையில் ஏற்கனவே வெட்டப் பட்டிருந்த குழியில் போட்டதோடு
தனது உடைகள் அனைத்தையும் அவிழ்த்து உள்ளே போட்டுப் புதைத்துவிட்டுப்
பண்ணை வீட்டுக் குளியலறைக்குள் நுழைத்து சவரை திறந்தபோது வெதவெதப்பாய் சீறி
விழுந்த நீரில் அண்ணாந்து நின்றிருந்தான் .
*******************************
அன்றும் வழமைபோல பத்திரிகையைத்
தேடியெடுத்து விட்டுக் கடையை திறந்து கொண்டிருக்கும்போது தலையை தொங்கப்
போட்டபடி மிசேல் வந்துகொண்டிருந்தான். “அப்பாடா இண்டைக்கு நான் பிட்சா
போடத் தேவையில்லை” என்று நினைத்தபடி கொஞ்சம் கோபமாகவே “என்ன…. ஒரு
நாள்தானே லீவு கேட்டுப் போயிட்டு இப்போ நாலு நாள் கழிச்சு வாறியே”..
என்றதுக்கு கையைக் கொடுத்து சோககமாகவே வணக்கம் சொன்னவன் “லொக்காவுக்கு
வாத நோய் வந்து பின்னங் கால்கள் இரண்டும் நடக்க முடியாமல் போய் விட்டது.
அதுக்கு வயசாகி விட்டதால் கருணைக் கொலை செய்யும்படி வைத்தியர்
சொல்லிவிட்டார், அதுக்கு ஊசி போட்டு” என்று சொல்லும் போதே அவனுக்குத்
தொண்டை அடைத்து கண்கள் கலங்கின.
“சரி சரி கவலைப் படாதே” என்று அவனது
தோளில் லேசாகத் தட்டி சமாதானப் படுத்திவிட்டு கதவு சட்டரை மேலே தள்ளி
திறந்ததும் உட் கண்ணாடிக் கதவில் ஒட்டியிருந்த “காணவில்லை” என்கிற
அஞ்சலியின் படத்தைப் பார்த்ததும் “ஏய், இந்தப் பெண்,
அண்டைக்குக்காட்டுக்குள்ளை, தெரியும், பச்சைக்கார்” என்றான்.
“ச்சே என்ன இவன்…. மணிரத்தினம் படம்
எதையாவது பிரெஞ்சு மொழி பெயர்ப்பில் பார்த்திருப்பானோ”….. என்று நினைத்தபடி
“தெளிவா சொல்லடா” என்றதும் அவசரமாக தனது கைத் தொலைபேசியை எடுத்து அதில்
இருந்த படம் ஒன்றை காட்டினான். அதில் அவன் லோக்காவோடு எடுத்த செல்பியின்
பின்னணியில் ஒரு பச்சை நிறக் கார் மங்கலாகத் தெரிந்தது.
”அந்தப் பெண்ணை எனக்கு தெரியும், அடிக்கடி
ரயில் நிலையப் பக்கம் கண்டிருக்கிறேன் கடைசியாக நான்கு நாளைக்கு முன்னர்
இந்தக் காரில் ஒருவனுடன் காட்டுக்குள்ளே போய்க்கொண்டிருந்ததைக்
கவனித்தேன். பொலீஸிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு வருகிறேன்” என்று
வேகமாகப் போய் விட்டான்.
ச்சே …. இண்டைக்கும் நான்தான் பிட்சா போட
வேண்டும் என்று அலுத்துக் கொண்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினேன்.
மறுநாள் பத்திரிகையில் “காணாமல் போயிருந்த அஞ்சலி சிறிதரன் தொடர்பாக
ஒருவர் கொடுத்த தகவல்களின் அடிப்படியில் அவளது முன்னைநாள் காதலன்
விசாரணைகளின் பின்னர் கைது செய்யப் பட்டுள்ளான். அவன் கொடுத்த மேலதிக
தகவல்களின் அடிப்படையில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பிளாஸ்டிக்
பீப்பாயில் போட்டுப் பண்ணை ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த உடல் எடுக்கப்
பட்டு பகுப்பாய்வு சோதனைகளுக்காக அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. உடலின் சில
பாகங்களை பண்ணை வீட்டின் குளிர்சாதனப்பெட்டியிலும் காவல்துறையினர்
கண்டெடுத்தனர். அவற்றைத் தான் உண்பதற்காகப் பதப்படுத்தி வைத்திருந்ததாக
விசாரணைகளின் போது கைதானவன் கூ றியுள்ளான்.
அவன் உளவியல் பாதிப்புக்குள்ளனவனாக இருக்கலாம் என்பதால் காவல்துறையின் பாதுகாப்போடு உளவியல் பரிசோதனைகள் நடத்தவுள்ளது”
’ …..ம்….. இந்த வெள்ளைக்காரங்களே
இப்பிடித்தான் கொலை செய்தவனை பிடிச்சுத் தூக்கிலை போடுறதை விட்டிட்டு
அவனுக்கு உளவியல் பிரச்சனை என்று சொல்லி வைத்தியம் பார்ப்பான்கள்’. என்று
அலுத்துக் கொண்டு நேரத்தைப் பார்த்தேன் ஒன்பதாகிவிட்டிருந்தது, மிசேலை
காணவில்லை. அவன் போனை எடுக்க மாட்டான் என்று தெரிந்தும் ஒரு முறை அடித்துப்
பார்த்தேன். அது நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது.இனி அவன் அஞ்சலியின்
கவலையை மறக்க தண்ணியடித்துவிட்டு ஒரு வாரத்துக்கு வர மாட்டான். எனக்கு
வாய்க்கிறவன் எல்லாமே அப்படிதான். பிட்சா மாவை உருட்டத் தொடங்கினேன்.
அடுத்தடுத்த நாட்களின் பின்னர் அஞ்சலியின்
செய்திகளும் பத்திரிகையில் நின்று போயிருந்தது. ஒரு மாதம் கழித்து
பத்திரிகையில் “நாளை காலை நகர மத்தியில் உள்ள பூங்காவில் அஞ்சலி
சிறிதரனுக்கு நகர மேயர் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும்”
என்றிருந்தது. நானுங்கூட அஞ்சலியை மறந்து போயிருந்தேன். மறுநாள் வேலை
முடிந்ததும் பூக்கடைக்குப்போய் வெள்ளை ரோஜாக்களால் செய்யப்பட்ட சிறிய
மலர்க்கொத்து ஒன்றை வாங்கிக்கொண்டு பூங்காவுக்குச் சென்றிருந்தேன். பெரிய
பைன் மரத்தின் கீழ் புன்னகைத்தபடி இருந்த அஞ்சலியின் படத்துக்கு
மலர்களாலும் மெழுகுவர்த்தி களாலும் நகர மக்கள் அஞ்சலித்திருந்தனர்.
பல மெழுகுவர்த்திகள் இன்னமும்
எரிந்தபடியிருந்தன. எனது மலர்க்கொத்தை படத்துக்கு முன்னால் வைத்துச் சில
வினாடிகள் கண்ணை மூடி குனிந்து நின்ற போது “ச்சே சிறியண்ணர் இவளுக்கு
அஞ்சலி எண்டு பெயரே வைச்சிருக்கக் கூடாது ” என்று தோன்றியது. நிமிர்ந்தேன்
“காதலே ஏன் இறந்தாய், என் காத்திருப்பை ஏன் மறந்தாய்” என்று எழுதிய
கடதாசியில் ஒரு சிகப்பு ரோஜாவும் இணைத்து மரப்பட்டையில் செருகியிருந்தது.
அஞ்சலியை காதலித்த யாரோ ஒருவனாக இருக்கலாம் .
ஒரு பெருமூச்சோடு அங்கிருந்து கிளம்பிய
எனக்கு “மாமா டிப்ஸ் தந்திட்டு போடா ” என்று அஞ்சலி கேட்பது போலிருந்தது.
அண்டைக்கு அவள் கேட்கும்போது ஐம்பது யூரோவை கொடுத்திருக்கலாம் என்று
நினைத்தபடி காற்சட்டைப் பையில் கையை விட்டு கிடைத்த சில்லறைகளை
பொத்திஎடுத்து படத்துக்கு முன்னால் போட்டு விட்டு வந்து காரை இயக்கி
வீதிக்கு இறக்கியபோது தான் நான் போட்ட சில்லறைகளை ஒருவன்
பொறுக்கிக்கொண்டிருப்பதைக் கவனித்தேன். கார்க்கண்ணாடியை இறக்கி விட்டு
“ஏய் ” என்று கத்தவும் என்னைப் பார்த்துச் சிரித்து விட்டு பொறுக்கிய
சில்லறைகளோடு போய்க்கொண்டிருந்தான். அதற்கிடையில் பின்னால் ஒரு
வண்டிக்காரன் ஒலிப்பானை ஒலிக்கவே வேறு வழியின்றி அங்கிருந்து கிளம்பினேன்.
ஆனால் அவனை எங்கேயோ பார்த்த ஞாபகம். நெற்றியில் விரல்களை அழுத்தி
யோசித்தேன் .காவிப்பற்கள் , இடது தாடையில் தழும்பு …ஆம் அவனேதான்.