Navigation


RSS : Articles / Comments


நடுவிலை நாலு நாளைக்காணோம்

12:03 AM, Posted by sathiri, One Comment

நடுவிலை நாலு நாளைக்காணோம்

செந்தக் கதை சோகக்கதை. ஒரு பேப்பரிற்காக  சாத்திரி.. :( :( :( :(

17 .08.13 ந்திகதி செவ்வாய்க்கிழைமை வழைமைபோல வேலை முடிந்து மாலை 3 மணியளவில் வீட்டிற்கு வருகிறேன் அன்று சரியான வெய்யிலும் அடித்தக் கொண்டிருந்தது. மனிசி வீட்டிற்கு பின்னால் உள்ள சிறிய பூந்தோட்டத்தில் வேண்டாத செடி புற்களை வெட்டித் துப்பரவாக்கி முடித்தவர் சாப்பிடும்போது லேசாய் தலை வலியோடு தலை சுற்றுவதாய் சென்னார். சரியான வெய்யில்  வெய்யிலுககை நின்று வேலை செய்ததால் தலை சுத்தலாம் ஒரு குளிசையை போட்டுவிட்டு படு என்றுவிட்டு சாப்பிட்டு விட்டு மீண்டும் வேலைக்குப் போய் விட்டேன்.இரவு பதினொரு மணி வீடு திரும்பியிருந்தேன் படுக்கையிலேயே இருந்தவர்  தலைச்சுற்றல் நிற்கவில்லையென்கிறார். வைத்திய சாலைக்கு போகலாமா என்று நினைத்தாலும் தலைச்சுத்துக்கெல்லாம் ஆஸ்பத்திரிக்கு போறதா என்று நினைத்துவிட்டு  பேசாமல் படுத்து விட்டேன் சாமம்மதாண்டி  இரண்டு மணியளவில் என்னை நித்திரையால் எழுப்பி என்னாலை முடியலை ஆஸ்பத்திரிக்கு பேவம் என்றதும் அவசரமாக  காரில் ஏற்றிக்கொண்டு  நான் வேலை செய்யும் இடத்திற்கு முன்னால் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டுபோய் அவசர பிரிவில் சேர்க்கிறேன்.அதிகாலை என்பதால் பத்து நிமிடத்திலேயே வைத்தியசாலைக்கு போய்விட்டிருந்தேன்.
அவசரப் பிரிவில் வழைமைபோல குளுக்கோஸ் ஏத்திவிட்டு பரிசோதனைக்காக இரத்தம் எடுத்துக்கொண்டு போனார்கள். ஒரு மணித்தியாலம் கழித்து இரத்த பரிசோதனையோடு வந்த  வைத்தியர் இரத்தத்தில் உப்பு (சோடியம்)அளவு பத்தவில்லை  அதுதான் தலைசுற்றுகிறது  என்றுவிட்டு  தாதியிடம் உப்பை குளுக்கோசில் கலந்து ஏற்றச்சொல்லிவிட்டு போய் விட்டார். அட சாதாரண உப்புப் பிரச்சனை என நினைத்து படி போனில் கேம் விழையாடிக்கொண்டிருந்தேன்  மனிசி திடீரென படுக்கையில் இருந்து எழுந்து இருக்க முயற்சி செய்ய எழும்பிப் போய் அவரை படுக்கும்படி சொல்லி படுக்கையோடு  சரிக்க அவருக்கு திடீரென வலிப்பு வந்த மாதிரி கை கால்களை இழுக்க தாதிகள் வைத்தியர்எல்லாருமே ஓடிவவந்து  அமத்திப் பிடித்தார்கள் ஒரு சில வினாடிகளில்   மயக்க நிலைக்குப் போய் விட்டார்.


இப்பதான் மனதிலை லேசாய் ஒரு கலக்கம் வரத் தொடங்கியிருந்தது. வைத்தியரிடம் பிரச்சனை ஒண்டும் இல்லையா ??எண்டதும் இல்லை  உடல் உப்புபை உடனடியாக ஏற்றுக் கொள்ள மறுத்ததால்தான் அப்படி வலிப்பு வந்தது சில மணித்தியாலங்கள் நன்றாக  நித்திரை கொள்வார்  அதன் பின்னர் எல்லாம் சரியாகி விடும் என்றார்.ஆனாலும் மனசிற்குள் ஏதோ ஒரு பயம் புதிதாய் குடிகொள்ளத் தொடங்கியிருந்தது. இப்பொழுது காலை பத்துமணியாகியிருந்தது அதற்கிடையில் இரண்டு தடைவை மீண்டும் இரத்தப் பரிசோதனையும் ஒரு I.R.M  மற்றும் Radiogramபரிசேதனையும் எடுத்து முடித்திருந்தார்கள்.எனக்கும் கடையை திறக்க வேண்டும் முதலேயே முதலாளிக்கு போனடித்து விடயத்தை சொல்லி விட்டு கடையை திறந்து வேலையாட்களிடம் சொல்லி விட்டு மீண்டும் வைத்திய சாலைக்கு போயிருந்தேன்.

மனைவியோ  மாலை  மூன்று மணியளவில் கண்விழித்து  என்னையும் சுற்றி வர பார்த்தார்  அவரின் கையைப் பிடித்து  என்ன செய்யிது?? என்று கேட்டேன்  அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை  என்பது மட்டுமல்ல  எதுவுமே நினைவில் இல்லை  பொருத்தியிருந்த வயர்களை  பிடுக்கி விட்டு எழுந்து போக முயற்சித்தார் உடனே நானும் தாதிகளும் ஓடிவந்து அமத்திப் பிடிக்க மருத்துவர்  அவரிற்கு மயக்க ஊசி பேடச் சொல்ல ஒரு தாதி அவசரமாக மயக்க மருந்தை  செலுத்தினாள். எனக்கோ இன்னமும் குழப்பமாகப் போய் விட்டது  வைத்தியரைப் பார்த்தேன் அவரோ  ஒன்றுமில்லை  மூளைக்கும் உடலுக்குமான தொடர்பு  விடுபட்டுப் போய் விட்டது அதனை மீண்டும் கொண்டு வர வேண்டும்  அதற்கு ஏற்ற வசதிகள் இங்கு இல்லை எனவே அந்த வசதிகள் உள்ள இன்னொரு வைத்திய சாலைக்கு  அனுப்பப் போகிறோம் என்றார். என்னடா இவன்  ஏதோ கரண்டு கட்டாயிட்டுது  திரும்ப வரும் என்கிற மாதிரி  சொல்லுறானே  என்று யோசித்துக் கொண்டிருக்க மயக்க நிலையில் இருந்து  கோமா நிலைக்கு சென்று விட்டிருந்தார். ஆனால் காரணம் என்ன என்று எதுவும் கண்டு பிடிக்கப் பட்டிருக்கவில்லை.

 மனைவியை அம்புலன்சில் இன்னொரு பெரிய அரச வைத்தியசாலைக்கு கொண்டுபோயிருந்தார்கள்.நானும் கடைக்குப் போய் விடயத்தை சொல்லி விட்டு அடுத்த வைத்தியசாலையை தேடிப் போய் கண்டு பிடித்து விட்டிருந்தேன்.. வைத்திய சாலைக்கு எதிரேயே இரண்டு சவப் பெட்டிக் கடைகள் இருந்தது .  சே..இவங்கள் என்ன அப சகுனம் மாதிரி ஆஸ்பத்திரி வாசல்லையே கடையை வைச்சிருக்கிறாங்கள் எண்டு யோசிச் சாலும்  வியாபாரம் எங்கு நடக்குமோ அங்கை தானே கடையை போடுவாங்கள் என்றபடி பல ஏக்கர் கணக்கில் பரந்து  கிடந்த வைத்தியசாலையில் புகுந்து Re animation (மீள ஒழுங்கு படுத்துதல்)பகுதியை அடைந்து அங்கு இருந்த அழைப்பு மணியை  அழைத்து மனைவியின் பெயரையும் விடயத்தையும் சொல்கிறேன் அங்கேயே இருந்கள் நாங்கள் வந்து சந்திக்கிறோம் என்று பதில் வந்திருந்தது.நேரத்தைப் பார்த்தேன்  மாலை ஏழு மணி அது விசேட பிரிவு என்பதால் அவர்கள் அனுமதி இல்லாமல் உள்ளே போக முடியாது  அதனால் அங்கு இருந்த கதிரையில் நான் மட்டுமே தனியாக அமர்ந்திருந்தேன். அப்படி நடந்தால் சே..நடக்காது  அடுத்தது என்ன செய்யலாம்?? என்னத்தை செய்ய  என்று  மனதில் என்னென்னவோ எண்ணங்கள் எல்லாம் ஓடிக்கொண்டிருந்தது நானே கேள்விகள் கேட்டு நானே பதில் சொல்லி எனக்கு நானே ஆறுதல் சொல்லியபடி  இருந்தபோது சில நண்பர்களிற்கும் மனைவி வீட்டிற்கும் போனடித்து விடயத்தை சொல்லி  விட்டு முகப் புத்தகத்திலும் யாழிலும் பதிவிட்டு விட்டு இருக்கும் போது  தொலைபேசி அழைப்புக்கள் வந்து கொண்டிருந்தது. அதனால் நேரம் போனது தெரியாமல் கொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது.நேரம் ஓடிக்கொண்டே இருந்தது  நள்ளிரவு ஒரு மணியைத் தாண்டி விட்ருந்தது யாரும் என்னைக் கூப்பிடுவதாயில்லை . என்னை  மறந்திருப்பாங்களோ?? அல்லது என்னை  காவலிருக்க சொன்னவன் வேலை முடிஞ்சு போயிருப்பானோ??என்று யோசித்தக் கொண்டிருக்கும்போதே ஒருவன் வந்து தன்னை அறிமுகம் செய்து நான்தான் உனது மனைவியை கவனிக்கிறேன் உள்ளே வா என்று அழைத்துப் போனான்.

ஒரு அறையில் மனிசியின் தலையில் கவசம் போல் போட்டு உடல் முழுக்க ஏகப்பட்ட வயர்கள் கொழுவிய நிலையில்  அவதார் படத்தில் விண்வெளிக்கு போகும் ஒருத்தனை தயார் செய்வது போல வைத்திருந்தார்கள்.கணணித் திரையில் கோடுகள். புள்ளிகள்.இலக்கங்கள் என ஓடிக்கொண்டிருந்தது. என்னை அழைத்துப் போனவர் என்னைப் பார்த்து  நாங்களும் பரிசோதனைகள் செய்து விட்டோம்  பயங்கரமான பிரச்சனைகள் ஒன்றும் இல்லை  ஒரு போத்தலிற்குள் கல்லைப் போட்டு குலுக்கியது போல மூளை குளப்பமடைந்திருக்கின்றது அதனை மீள ஒழுங்கமைக்கிறோம்  அது ஒழுங்காக வருவதற்கு  சில மணித்தியாலங்கள் ஆகலாம். அல்லது சில நாட்களும் ஆகலாம் அதை உறுதியாக சொல்ல முடியாது  ஆனால் வரும் என்றார். வராமலேயே போய்விடுமா??என்று கேட்க நினைத்தாலும்..  சரி இதற்கு காரணம் என்ன என்று கேட்டேன். அதுதான் இன்னமும் கண்டு பிடிக்கவில்லை தொடர்ந்து பரிசோதனைகள் செய்து கொண்டே இருப்போம். நீ இப்போ வீட்டிற்கு போகலாம் நாளை மாலை வா அதே நேரம் கடந்த காலங்களில் என்னென்ன  மருத்துவம் பெற்றார்  என்கிற விபரங்கள் அவர் பாவிக்கும் மருந்துகள்  அனைத்தையும் எடுக்கொண்டு  நாளை வரவும் என்று சொல்லி விட்டு போய் விட்டார். அழகான தாதி ஒருவர் வந்து  விசிட்டிங் காட் ஒன்றை நீட்டி நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அழைக்கலாம் என்றதும் அப்படியே அவளை உற்றுப் பார்க்க மனதிற்குள் கவுண்டமணி வந்து  நாயே..நாயே..இந்த நேரத்திலையுமா..என்று திட்ட அவள் உங்கள் மனைவியின் உடல் நிலையை  போனிலேயே தெரிந்து கொள்ளலாம் இந்த இலக்கத்திற்கு அழையுங்கள் நன்றி வணக்கம் என்று விட்டு போய் விட்டாள்.

மறுநாள் காலை வைத்தியர் கேட்ட விபரங்கள்  மருந்துகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு மயக்கம் என்ன படத்தில் தனுஸ் படிக்கும் ஓட ஓட தூரம் குறையலை.. என்கிற பாடலை முணு முணுத்தபடி ஸ்கூட்டரில் வைத்திய சாலைக்கு போய்க்கொண்டிருந்தேன் மனைவியின் உடல் நலத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை அதே நேரம் காரணமும் கண்டு பிடிக்கபட்டிருக்கவில்லை. நான் வேலைக்கும் வைத்திய சாலைக்குமாக ஓடிக்கொண்டிருந்தேன். அன்று நான்காவது நாள் சனிக்கிழைமை மதியமளவில் வைத்தியசாலைக்கு போயிருந்தேன்  மனைவியின் செயற்கை சுவாசக்குளாய்கள் அகற்றப் பட்டு சாதாரணமாக சுவாசிக்க விட்டிருந்தார்கள்.அதே நேரம் நான் கொடுத்த மருந்துகள் எல்லாம் வைத்தியர் பார்த்து அதனாலும் இந்த நிலைமைக்கு வருவதற்கு காரணங்கள் இல்லையென்றதோடு மனைவி இப்பொழுது கோமா நிலையில் இருந்து மீண்டு ஆழ்ந்த உறக்க நிலைக்கு வந்துள்ளார்  இனி அவராகபழைய நிலைக்கு  திரும்பவேண்டும்.இப்பொழுது நீங்கள் கதைப்பதெல்லாம் அவரிற்கு புரியும் எனவே அவராக கண்விழித்து பதில் சொல்லும் வரை கதைத்துக்கொண்டே இருங்கள் இன்றும் அவர் சுய நிலைக்கு திரும்பாவிட்டால்  உடலில் செயலிழந்து போன  செல்களையெல்லாம் செயற்பட வைக்கும் Cortisone என்கிற மருந்தை நாளை செலுத்துவோம் என்று விட்டு போய் விட்டார்.


நானும் மனைவின்கு பக்கத்தில் அமர்ந்திருந்து  பழைய சம்பவங்கள் நகைச்சுவையான கதைககள் மகளைப்பற்றி என்று சொல்லிக் கொண்டேயிருந்தோடு அவரது தாயார் சகோதரிகளிற்கும் அவ்வப்போது போனடித்து அவரது காதில் வைத்துக்கொண்டேயிருந்தேன்  .நேரம் ஒன்று இரண்டு என்று ஜந்தரை மணித்தியாலங்கள் ஓடிவிட்டிருந்தது  இடையில் வைத்தியரும்  ஒரு தடைவை வந்து சத்தமாக  கூப்பிட்டு கன்னத்தில் தட்டிப் பார்த்துவிட்டு போய்விட்டிருந்தார் எந்த அசைவும் இல்லை அதே நேரம் தான் மனிசி ஆசையாய் வளர்க்கும் பூனை மீனுவை நான் ஒரு தடைவை கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்து வைத்திருந்தது நினைவிற்கு வரவே போனை எடுத்து அந்த வீடியோவை போட்டு இங்கை பார் மீனு வந்திருக்கு பசிக்குதாம் சாப்பாடு வேணுமாம் என்று அது கத்தும் சத்தத்தினை அவரது காதருகே பிடித்தபோது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியிருந்தது.ங்கொய்யாலை ...ஒருத்தன் சாப்பாடு தண்ணியில்லாமல் தொண்டை வறண்டு 5 மணித்தியாலாமா கதைக்கிறன் என்னைப் பற்றி கவலையில்லை பூனைக்கு சாப்பாடு இல்லையெண்டதும் அழுகை வருதா ??எழும்பு உனக்கு ஆறுலாய் இருக்கு என்று நினைச்சாலும்.ஒரு  அசைவாவது தெரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது தொடர்ந்து கதைத்துக்கொண்டேயிருந்தேன்  ஒரு அரை மணித்தியாலம் கழித்து லேசாய் கண்விழித்தார் கடவுளே  இந்தமுறை என்னை அவருக்கு அடையளம் தெரியவேணும் என மனது வேண்டிக் கொண்டது.
என்னை பார்த்தவர்

 ''என்னங்க ஆச்சு??

ஒண்டும் இல்லை லேசா தலை வலிக்கிது எண்டு சொன்னியா  நான் வைத்தியசாலைக்கு கொண்டு போனனா..நீ மயக்கமாயிட்டாய். இப்ப ஒண்டும் இல்லை எல்லாம் சரியாயிட்டுது..என்று சொல்லும் போதே மீண்டும் மயங்கி விட்டார். திரும்ப ஒரு பத்து நிமிடம் கழித்து கண்விழித்து அதே

என்னங்க ஆச்சு??

நானும்.ஒண்டும் இல்லை லேசா தலை வலிக்கிது எண்டு சொன்னியா  நான் வைத்தியசாலைக்கு கொண்டு போனனா..நீ மயக்கமாயிட்டாய். இப்ப ஒண்டும் இல்லை எல்லாம் சரியாயிட்டுது..என்று சொல்லும் போதே மீண்டும் மயக்கம் .இப்படியாக  ஒரு பத்துத் தடைவை போய்க்கொண்டேயிருந்தது இரவு மணி பத்தைத் தாண்டி விட்டிருந்தது.இரண்டு கிழைமைக்கு முதல்தான்  நடுவிலை கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தை திருட்டு வி.சி.டியில் பார்த்திருந்தேன் அதுக்கு தண்டனைதான் இரு என்று நினைத்தபடி வீட்டிற்கு போய் விட்டிருந்தேன். வீட்டிற்கு முன்னால் தனது நாயை மேய்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு ஜோன் என்னைப் பார்த்ததும் மனைவியின் உடல் நலத்தை விசாரித்தார் இவரிற்கு வயது 81 ஒரு ஓய்வு பெற்ற பொது வைத்தியர். இன்று கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது சரிவராவிட்டால்  நாளை Cortisone கொடுக்கப் போவதாக சொல்லியுள்ளார்கள் என்றதும்.முடிந்தளவு Cortisone குடுப்பதை தவிர் அதைக் கொடுத்தால் பின்னர் பக்க விளைவுகள் வரும் என்றபடி நாயை மேய்த்துக்கொண்டு போய்விட்டார்.

அடுத்தநாள் ஞாயிற்றுக் கிழைமை நான்கு நாளைக்குப் பின்னர் மனைவியின் நிலைமை வழைமைக்குத் திரும்பியிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக  நடந்தது அனைத்தும் அவரிற்கு நினைவு வரத் தொடங்கியிருந்தது.தொலைபேசியில் ஊரிற்கு அவரது குடும்பத்தோடு நன்றாக கதைத்தார்.அவரை விசேட பிரிவில் இருந்த சாதாரண அறைக்கு மாத்தியவர்கள்  அவரது உடல் நிலை கொஞ்சம் தேறியதும் வீட்டிற்கு போகலாம் என்றார்கள்.பதினோராவது நாள் வீட்டிற்கு கூட்டி வந்து விட்டிருந்தேன். ஆனால் அவர் கோமா நிலைமைக்கு போனதற்கான காரணம் இன்னமும் தெரிந்திருக்கவில்லை.அன்று மாலை மனைவியை பாரக்க ஜோன் வந்திருந்தார் அவரும் நானும் நேரம் கிடைக்கும் நேரங்களில் விஸ்கி அடித்தபடியே உலக விடயங்கள் அரசியல் என்று கிண்டிக் கிழறுவது வழைமை அன்றும் அவர் மனைவியை நலம் விசாரித்ததும் இருவருமாக வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து வழைமைபோல நான் இரண்டு கிளாசை  எடுத்து விஸ்கியை  பாதி நிரப்பி  ஜஸ் கட்டிகளை போட்டேன் கையில் கிளாசை எடுத்தவர் இது உனது மனைவியின் உடல் நலத்திற்காக என்றபடி  சியஸ் செய்தார் .அப்பாடா ....அன்று நாம் தண்ணியடிப்பதற்கான காரணம் கிடைத்து விட்டிருந்தது. ஒரு கிளாஸ் முடிந்ததுமே  மனைவின் அனைத்து வைத்திய றிப்போட்டுக்களையும் கொண்டு வா..என்றார்.அனைத்தையும் கொண்டு போய் கொடுத்தேன்  ஒவ்வொன்றாக உற்றுப் பார்த்தவர். இரண்டாவது கிளாசையும் முடித்து விட்டு மனைவி பாவிக்கும் குளிசைகளை கொண்டு வா..என்றார். எனக்கு எரிச்சலாக வந்தது .இரண்டு வைத்திய சாலையிலை பல வைத்தியர்கள் ஏகப்பட்ட பரிசோதனையள் செய்தே கண்டு பிடிக்க முடியாமல் போனதை பென்சன் எடுத்திட்டு  நாய் மேய்த்துக்கொண்டு திரியிறது மட்டுமில்லாமல் ஓசி  விஸ்கியை  வேறை அடிச்சிட்டு  கண்டு பிடிக்கப் போறானாக்கும் எண்டு நினைச்சாலும். வைத்திய சாலைக்கு கொண்டு போய் காட்டிய மருந்துகள் காரிலேயே இருந்ததால் அதனையும் கொண்டு வந்து அவர் முனால் வைத்தேன்.

எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தவர் அதில் இருந்த மருந்துகளை எடுத்தபடி படுத்திருந்த மனிசிடம் போய் அவற்றைக் காட்டி இதில் கடைசியாக நீ எடுத்த மருந்துகள் ஞாபகம் இருக்கா என்று கேட்டார்.. மனிசியும் தயங்கிய படி என்னை பார்த்தபடியே இரண்டு மருந்துகளை காட்டியபடி நடநததை சொன்னார்.கடந்த சில நாட்களாக ஊரில் அவரது குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் மன உளைச்சலுக்குள்ளாகியிருந்தவர் இரவில் நித்திரை கூட வராமல் தவித்திருக்கிறார்.இது பற்றி என்னிடமும் அதிகம் எதுவும் சொல்லவில்லை  நித்திரை கொள்வதற்காக குடும்ப வைத்தியரிடம் குளிசைகள் வாங்கினால் அது எனக்கு தெரியவரும் என்பதால் அவர் கண்டு பிடித்தததுதான்  அலர்ச்சி குளிசைகள்.அவருக்கு கோடை காலங்களில் மகரந்த அலர்ச்சி உண்டு அதற்கான  குளிசையை போட்டால் கொஞ்சம் நித்திரை வரும் எனவே அலர்ச்சி குளிசைகளை போட்டு விட்டு நித்திரை கொள்ளத் தொடங்கியிருந்தார்.அன்றும் அலர்ச்சி குளிசையை போட எடுத்தபோது நான் வீட்டிற்கு வந்ததால் அவசரத்தில் எடுத்த குளிசையை வேறொரு மருந்து பெட்டியில் போட்டு விட்டிருக்கிறார்.நான் வேலைக்கு போனதும் ஒரு குளிசையை போட்டு விட்டு படுத்திருக்கிறார் நித்திரை வரவில்லை எனவே மீண்டும் ஒரு குளிசையை போட்டிருக்கிறார் ஆனார் அவர் இந்தத் தடைவை போட்ட இரண்டு குளிசைகளும் அலர்ச்சி குளிசைகள் அல்ல இரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள்.மாறிப்போட்டு விட்டார்.


 எனவே இரத்தம் அழுத்தம் குறைந்து தலை சுற்றல் ஆரம்பித்திருக்கின்றது. நான் வைத்திய சாலையில் அவரை சேர்த்தபோது எனக்கும் அவர் குளிசைகள் போட்டது தெரியாதததால் அதைப்பற்றி சொல்லவில்லை  இரத்த பரிசோதனையில் அவரது இரத்தத்தில் சோடியம் குறைவாக இருப்பதை கண்டு பிடித்தவர்கள் தலைச்சுற்றலுக்கு அதுதான் காரணம் என நினைத்து சோடியத்தை குளுக்கோசில் கலந்து ஏற்றியிருக்கிறார்கள் ஆனால் வேகமாக அதிகளவில் ஏற்றி விட்டார் இதனால் மனைவி கோமாவிற்கு போய் விட்டிருந்தார்.இங்கு இரண்டு தவறு நடந்திருக்கின்றது ஒன்று மனைவி குளிசைகளை  மாறிப் போட்டது இரண்டாவது வைத்தியத் தவறு குறைந்த நேரத்தில் அதிகளவு சோடியத்தை செலுத்தியது.என்று சொல்லி விட்டு ஜோன் வெறும் கிளாசை என்னிடம் நீட்டினார். அவரது கிளாசை நிரப்பிவிட்டு வைத்தியத் தவறா?? நான் யார் ??இந்தா வழக்கு போடுறன் ..கோட்டுக்கு இழுக்கிறன்.நட்டஈடு கேக்கிறன் என்று காத்திலை வீடு கட்டத் தொடங்கவே ..சே பொத்திக் கொண்டு இரு என்னை  அமத்தியவர். இங்கு ஒரு வைத்தியரின்  தவறை இன்னொரு வைத்தியர்  கண்டு பிடித்தாலும் அதனை நோயாளியிடமோ அல்லது வேறு யாரிடமோ சொல்லமாட்டார்கள்  தவறை சரிசெய்து விடுவார்கள் இது பொதுவான நடைமுறை விதி.வைத்திய தவறு என்று உனக்கு தெரிந்தாலும் அதனை உன்னால் நிருபிக்க முடியாது நீ வழக்கு போட்டாலும் உனது மனைவியிடமும் தவறு உள்ளது  எனவே  எது எப்படியோ உனது மனைவி குணமடைந்து விட்டார் அந்தளவில் சந்தோசப்படு என்றவர் விடைபெற்றுக்கொண்டார். இப்போ மனிசி எதுக்காக கோமாவுக்கு போனார் எண்டு கண்டு பிடித்தாச்சு.ஆனால் இத்தனை வருசமா ஜேன் அடிக்கிற அதே விஸ்கியைத்தானே நானும் இத்தனை வருசமா அடிக்கிறன் ஆனா என்னாலை மட்டும் எப்பிடி காரணத்தை கண்டு பிடிக்கமுடியாமல் போனது??அதை கண்டு பிடிக்கும்வரை தொடர்ந்து தண்ணியடிக்கிறதைத் தவிர வேறை வழியில்லை....

3345-1-chivas-regal-whisky.jpg

One Comment

Anonymous @ 12:05 AM

சாத்திரி, மிகவும் கஷ்டமான ஒரு சம்பவத்தை நகைசுவையோடு எழுதியுழீர்கள். அருமை. இதில் எங்களுக்கும் எத்தனையோ பாடங்கள் புதைந்திருக்கின்றன. சக்தி