Navigation


RSS : Articles / Comments


*தியாகிகளும் துரோகிகளும்- சாத்திரி

2:17 PM, Posted by sathiri, No Comment

 



ழத்திற்கான ஆயுத விடுதலைப் போராட்டம் என்பதன் ஆரம்பமே ஆயுதப் போராட்டங்களை வழிநடத்தியவர்களின் துப்பாக்கிகள் , முதன் முதலில் எதிரியானவர்களை நோக்கி நீளாமல் துரோகிகளாக இனம் காணப்பட்டவர்களை நோக்கியே நீண்டது. ஏனெனில் எதிரியை விட துரோகியே ஆபத்தானவன் என்பது பொதுவாகவே உலகமெங்கும் ஆயுதப்போராட்டங்களை நடத்திய விடுதலை இயக்கங்களின் தாரக மந்திரமாகவே இருந்தது. அது எமது விடுதலைப் போராட்டத்தில் கொஞ்சம் தூக்கலாகவே இருந்துவிட்டது.மேடைகள் தோறும் தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் துரோகியாக வர்ணிக்கப்பட்ட சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை என்னும் செய்தி இலங்கைத் தீவில் பெரும் அரசியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது மட்டுமல்லாமல் துரேக அழிப்பு என்று பெருமையாக மக்களால் கொண்டாடப்பட்டதோடு தொடங்கி துரையப்பாவின் கொலைக்கு மறைமுக ஆதரவுகளை வழங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கமும் அதே துரோகப்பட்டியலில் இணைக்கப் பட்டு கொல்லப்

பட்டார்.இப்படியாக ஈழ விடுதலைப் போராட்டத்தில் துரோகிகளாக இனம் காணப்பட்டு கொல்லப்பட்டவர்களின் பட்டியல் என்பது மீக நீளமானது.
துரோகிகள் என்று போட்டுத் தள்ளியதில் ஈழத்து அனைத்து விடுதலைப் போராட்ட இயக்கங்களும் ஒன்றிக்கொன்று சளைத்தலையல்ல.இறுதியில் மிஞ்சிய இயக்கங்களை துரோகிகளாக்கி போட்டுத் தள்ளியபடியே புலிகள் இயக்கம் மட்டும் மக்களிற்கான விடுதலையை பெற்றுத்தரும் போராட்ட இயக்கமாக தனித்துநின்று ,2009 மே மாதத்தோடு அதுவும் முடிந்துபோய்விட்டது. விடுதலை இயக்கங்களாலும் முஸ்லிம் குழுக்களாலும் தங்களிற்குளேயும் வெளியேயும் மாறி மாறி கொல்லப்பட்ட அந்த அமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களின் எண்ணிக்கை என்பது எங்கள் பொது எதிரி என விடுதலை இயக்கங்களால் இனம்காணப்பட்ட இலங்கை இராணுவத்தால் கொல்லப் பட்ட தமிழ் முஸ்லிம் மக்களின் தொகையோடு ஒப்பிடும்போது இரண்டிற்கும் பெரியளவு வித்தியாசம் இருக்கப்போவதில்லை.


இதில் வேடிக்கை என்னவென்றால் எமது விடுதலைப் போராட்டத்தில் தியாகிகள் துரோகிகளாகியும். துரோகிகள் தியாகிகள் ஆன விந்தையான வரலாறும் கூட உண்டு. அதற்கு ஒரு சில உதாரணங்களாக துரோகிகளாக கருதப்பட்ட அமிர்தலிங்கம் சுடப்பட்டபோது சூடுவாங்கி மயிரிழையில் உயிர் தப்பிய சிவசிதம்பரமும். புலிகள் அமைப்பின் பரம எதிரியான புளொட்டின் முக்கிய உறுப்பினர் தாராகி சிவராமும் தியாகிகளாகியும் அதே நேரம் மக்களிற்காகவும் அந்த மண்ணிற்காகவும் உயிரைக்கொடுத்து தியாகிகளாக போராட வந்த மாத்தையாவோடு சேர்ந்த சுமார் முன்னூறிக்கும் அதிகமானவர்களும்.கருணாவோடு சேர்ந்து சுமார் அறுநூறு பேர்வரை துரோகிகளாக்கப்பட்டு கொல்லப்பட. கருணாவும் இன்னும் சிலர் மட்டும் உயிர்தப்பிவிட்டார்கள் .இதே கருணா மீண்டும் தியாகியும் ஆகலாம் நடக்காது என்று சொல்வதற்கில்லை.


இங்கு தியாகி துரோகி என்பதை யார் தீர்மானிக்கிறார்கள் என்றால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பலமானவர்களாலும் கையில் ஆயுதங்கள் உள்வர்களாலுமே தீர்மானிக்கப் படுகின்றது. இங்கு முக்கிய விடயம் என்னவென்றால் ஆயுத விடுதலைப் போராட்டத்தின் போது சேர்ந்தே தாயகத்தில் தொடங்கப்பட்ட இந்த தியாகி துரோகி விளையாட்டு இன்றைய நிலையில் அங்குள்ள மக்களினால் மறக்கப்பட்டு அவர்கள் தங்கள் வாழ்வாதாரப் போராட்டத்தில் இறங்கிவிட , தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் பரவிவிட்டது மட்டுமல்லாமல் இது ஒரு மன நோயாகவே மாறிவிட்டிருக்கின்றது.அதற்கு வலுச் சேர்ப்பது புலம்பெயர் தமிழர்களால் நடாத்தப் படும் இணையத் தளங்களாகும்.


தமிழில் இணையத் தளம் நடாத்துவதென்பது புலம்பெயர் தேசங்களில் குடிசைக் கைத்தொழில் போல் ஆகிவிட்டது. ஒரு கணணியும் தமிழில் தட்டச்சும் செய்யத் தெரிந்தால் அவர் ஒரு செய்தி இணையத் தளத்தை நடாத்துவார் என்பது மட்டுமல்ல தினமும் பிரதான செய்தித் தளங்களில் வெளியாகும் செய்திகளை எடுத்து தலைப்பை மட்டும் தனகோற்றவாறு கவர்ச்சிகரமாக மாற்றத் தெரிந்துவிட்டால் அவர் பத்திரிகையாளராகவும் மாறிவிட்டிருப்பார். அதே நேரம் செய்திகளின் கீழ் தாயகத்திலிருந்து எமது செய்தியாளர் என்று அவர் போடத் தவறுவதும் இல்லை.இப்படி இங்கு இணையத் தளம் நடத்தும் ஒருவரிற்கு யார் யாரையெல்லாம் பிடிக்காதோ அவர்களெல்லாம் துரோகிகள்தான்.


புலம்பெயர் நாடுகளில் பெருமளவான இணையத் தளங்களை நடாத்திக் கொண்டிருப்பவர்கள் புலிகள் அமைப்பின் வெளிநாட்டுக் கிளைகளாக இயங்கிய அனைத்துலகச் செயலகத்தை சேர்ந்தவர்களே.அதே நேரம் புலிகள் அமைப்பின் பெருமளவான சொத்துக்கள் இன்னமும் இவர்கள் கைகளிலேயே தங்கியிருப்பதால் இன்றைய நிலவரப்படி பணபலம் மற்றும் இணையத்தளங்களின் பலத்தோடு தமிழர்கள் புலம்பெயரந்து வாழும் நாடுகளில் இவர்களே தியாகிகளையும் துரோகிகளையும் தீர்மானிக்கிறார்கள்.முன்னைய காலங்களில் தாயகத்தில் இயக்கங்களால் துரோகிகள் என தீர்மானிக்கப்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப் படுவார்கள். பின்னர் புலிகள் தங்கள் கட்டுப் பாட்டுப் பகுதிகளில் சிறைகளில் அடைத்தார்கள். ஆனால் வெளிநாடுகளில் இவை இரண்டையுமே புலிகளின் அனைத்துலகச் செயலகத்தினரால் செய்யமுடியாது என்பதால் துரோகியாக்கப்பட்டவரின் படத்தோடு தங்களால் இயக்கப்படும் இணையங்களில் இவர் இலங்கை புலனாய்வுத் துறையோடு சேர்ந்து இயங்குகிற கைக்கூலி என பதிவிட்டபின்னர் இராணுவத்தில் லெப்ரினன்ற்.லெப்.கேணல். கேணல் என தர வரிசை வழங்குவது போல் துரோகியாக்கப் பட்டவரிற்கு மேலதிகமாக தர வரிசை பதவிகள் வழங்கப்படும். அந்த மேலதிக தர வரிசைக்காக அவர்கள் பயன்படுத்துவது டக்லஸ் தேவானந்தா, பிள்ளையான் ,கருணா, கே.பி ஆகியோரோடு சேர்ந்து இயங்குகிறார் என்பதுதான்.


கே.பி யின் வருகைக்கு பின்னர் துரோகப் பதவி கொடுப்பவர்களால் டக்லஸ் பின்னிற்கு தள்ளப்பட்டு விட்டார்.கே.பி யோடு சேர்ந்து இயங்குகிறார் என ஒருவரிற்கு வழங்கப்படும் துரோகிப் பட்டம்தான் மிக உயர்ந்த லெப்.கேணல் அல்லது தளபதி துரோகிப்பட்டம் ஆகும். அத்தோடு இவர்களிற்கு இந்த உலகநாடுகளின் உளவமைப்புக்களில் தெரிந்த இரண்டேயிரண்டு உளவமைப்புக்களின் பெயரான இந்திய றோ..வின் கைக்கூலி மற்றும் அமெரிக்காவின் சி.ஜ.ஏ.ஏஜெண்ட்.என்கிற வசனங்களையும் சேர்ந்து விடுவார்கள். இப்படி அண்மையில் அனைத்துலகச் செயலகத்தினரால் தங்கள் இணையத் தளங்களில் துரோகிகளாக அறிவிக்கப்பட்டவர்கள்தான் முருகதாசனின் பெற்றோர்கள்.
யார் இந்த முருகதாசன் ஏன் அவரின் பெற்றோர்கள் துரோகியாக்கப்பட்டார்கள் என்று இனி பாரக்கலாம். புலிகளிற்கும் இலங்கையரசிற்குமான யுத்தம் இறுதிக்கட்டத்தை இலங்கையில் அடைந்துகொண்டிருக்கும் போது 2009 ம் ஆண்டு மாசி மாதம் 12 ம் திகதி வியாழக் கிழைமை இரவு சுவிஸ் நாட்டில் ஜெனீவா ஜ.நா சபைக்கு முன்பாக இலண்டனில் இருந்து வந்து தீக்குளித்து இறந்து போகிறார் முருகதாசன் என்கிறவர். இதற்கு முன்னரேயே தமிழ் நாட்டில் முத்துக்குமார் என்பவர் இதே ஈழத் தமிழர்களிற்காக தனது கைப்பட கடிதம் எழுதி வைத்து விட்டு இறந்து போயிருந்த சம்பவம் நடந்திருந்தது.அந்தச் சம்பவத்தால் தமிழ்நாட்டு இளையோர் மாணவர்களிடையே ஈழத் தமிழர்களிற்கு ஆதரவாக ஏற்பட்டதொரு எழுச்சியானது தமிழ் நாட்டு அரசியல் வாதிகளினால் சிதைந்து சின்னாபின்னமாகிப் போனது வேறு கதை. அதில் எந்த கட்சிகளுமே சளைத்தவர்கள் அல்ல என்று நிருபித்திருந்தார்கள்.


அதே போல முருகதாசனின் மரணமும் புலம்பெயர் தமிழர்களிடம் ஒரு உணர்வு ரீதியான எழுச்சியை கொடுத்திருந்தது என்பது உண்மை.அதே நேரம் முருகதாசனின் மரணத்தின் பின்னால் பல சந்தேகங்களும் இருக்கவே செய்கின்றது .அவை என்வெனில்,முருகதாசன் இலண்டனில் இருந்து ஜெனிவா நோக்கி ஒரு பச்சைக் நிற காரில் நண்பர்களோடு புறப்பட்ட வீடியோ ஒளிப்பதிவென்றை பிரித்தானிய காவல்த்துறையினர் கைப்பற்றி விசாரணைகளும் நடாத்தியிருந்தார்கள்.அடுத்ததாக ஈழத் தமிழர்களின் படுகொலைகளையும் அவர்களது நிலைமையையும் சர்வதேசத்திற்கும் ஜ.நா சபைக்கும் எடுத்துச் சொல்லி அதனை தடுத்து நிறுத்தக்கோரி தீக்குளித்தவன் எதற்காக ஜ.நா சபை சுற்றாடலில் யாருமேயற்ற இரவு நேரம் தீக் குளித்தான்?.முருகதாசன் தீக்குளித்து இறந்து போய் நீண்ட நேரத்தின் பின்னராகவே தீயணைக்கும்படையினர் அந்த இடத்திற்கு வந்துள்ளனர் .எனவே முருகதாசனுடன் சென்றவர்கள் அதுவரை என்ன செய்தார்கள்? அவர்கள் யார்??. ஈழத்தமிழர் விடயத்தில் சர்வதேசம் தலையிட வேண்டும் என முருகதாசனால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் ஏழுபக்க அறிக்கை என்று இணையத் தளங்களில் மட்டுமே செய்தியாக வெளியாகியிருந்தது. அதன் மூலம் எங்கும் இல்லை.

குடும்பத்தின் செல்லப்பிள்ளையாக வளர்ந்த முருகதாசன் தனது இறுதிக் கணம் வரை தனது பெற்றோருடன் தொடர்பு கொள்வேயில்லை. அவன் இறந்துபோன செய்தியை மறுநாள் மாலையளவில் செய்திகளை பார்த்தே அவர்கள் அறிந்து கொண்டிருந்தார்கள். அதுவரை அவர்களிற்கு தங்கள் பிள்ளை எங்கே இருக்கிறான் என்றே தெரிந்திருக்கவில்லை இப்படி ஏகப்பட்ட கேள்விகளும் சந்தேககங்களும் முருகதாசனின் மரணத்திற்கு பின்னால் இருந்தாலும். ஒரு இனத்தின் அவலத்தை நினைத்து தனது உயிரையே ஆகுதியாக்கியாக்கிவன் என்கிற காரணத்திற்காக அதைப்பற்றி ஆராச்சி செய்யாமல். அடுத்த கட்டத்திற்கு போவோம்.

முருகதாசனின் மரணத்திற்கு பின்னர் முருகதாசனிற்காக இலண்டனில் ஒரு நினைவிடம் எழுப்ப வேண்டும் என அவரது பெற்றோர்கள் விரும்பினார்கள். அதற்காக முருகதாசன் அறக்கட்டளை என்கிற பெயரில் ஒரு அமைப்பினை தொடங்கி நினைவிட கற்களை இந்தியாவில் செய்வதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கியிருந்தார்கள். ஆனால் முருகதாசன் என்பவன் அனைவரிற்கும் பொதுவானவன் , எமது மக்களின் அவலத்தை உலகத்திற்கு அறிவிப்பதற்காக மரணித்தவன் எனவே அதனை பொது அமைப்பின் சார்பாக அனைத்து பிரித்தானிய மக்களின் பங்களிப்போடு கட்டித் தருகிறோம் என நாடு கடந்த தமிழீழ அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டிருந்ததோடு அந்த அமைப்பின் மாவீரர் மற்றும் மாவீரர் குடும்ப விவகார அமைச்சர் எனப்படும் சேகர் என்பவர் ( இந்த அமைப்பில் அடிக்கடி பதவிகள் மாற்றப் படுவதால் சேகர் என்பவர் தற்சமயம் என்ன அமைச்சராக இருக்கிறார் என்று தெரியவில்லை) நினைவிடம் அமைப்பதற்கு நிதி சேகரிப்பதற்காக பற்றுச் சீட்டுக்கள் தயாரிக்கபட்டு விற்பனை தொடங்கியிருந்த நேரம், சேகரை தொடர்பு கொண்ட இலண்டன் அனைத்துலகச் செயலக பொறுப்பாளர் தனம் என்பவர் நீங்கள் முருக தாசனிற்கு நினைவிடம் அமைப்பதற்காக மக்களிடம் நிதி சேகரிக்க தேவையில்லை. அதனை நாங்களே எங்கள் செலவில் செய்து தருகிறோம் எனவே உங்கள் திட்டத்தை கைவிடுங்கள் என கோரிக்கை வைக்கிறார்.அவரது கோரிக்கையை அடுத்து நாடு கடந்த தமிழீழ அரசு அந்த திட்டத்தை கை விட்டு விற்பதற்காக கொடுத்த பற்றுச் சீட்டுக்களையும் மீளப் பெற்றுக்கொண்டதோடு முருகதாசன் குடும்பத்தினரிற்கும் தகவலை தெரிவித்து விடுகிறார்கள்.

ஆனால் ஒரு வருடம் கழிந்தும் நினைவிடம் கட்டுப்படாமல் இருக்கவே முருகதாசனின் பெற்றோர்கள் அனைத்துலகச் செயலத்திடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது சரியான பதில் ஏதும் வராததால் அவர்கள் ஆரம்பத்தில் தொடங்கியிருந்த இந்தியாவில் நினைவு கல் செய்து, இலண்டன் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை தொடரத் தொடங்கியிருந்தார்கள்.அப்போதுதான் கடந்த வருடம் மாவீரர் நாளிற்கு சரியாக இரண்டு நாளிற்கு முன்னர் முருகதாசன் குடும்பத்தினரிற்கு அனைத்துலக செயலகத்திடமிருந்து ஒரு அழைப்பு. அது என்னவென்றால் உங்கள் மகனிற்கு நினைவுக்கல் நட்டுவிட்டோம் அதற்கு நிகழ்வு செய்யப் போகிறோம் அங்கு வந்து சேருங்கள் என்கிற அதிகார தோரணையிலான அழைப்பு.அதே நேரம் அனைத்துல செயலத்தினரால் நடாத்தப்படும் இணையத் தளங்களிலும் முருகதாசனின் நினைவுக்கல் நடப்பட்டு மரியாதை செய்யப்பட்டதாக செய்திகள் படங்களோடு வெளியாகியிருந்தது.
மாவீரர் தினத்திற்கு இரண்டே நாளிற் முன்னர் ஏன் அவசர அவசரமாக நினைவுக்கல் அமைக்கப்பட்டதன் பின்னணி என்னவெனில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளி நாடுகள் எங்கும் புலிகள் அமைப்பின் பிரதான பிரிவான தலைமைச் செயலகம் மற்றும் வெளிநாட்டு பிரிவான அனைத்துலகச் செயலகம் என இரண்டு பிரிவுகளால் மாவீரர் தினம் இரண்டு இடங்களில் நடாத்தப்பட்டது. அது தொடர்ந்து கொண்டும் இருக்கின்றது. வெளிநாடுகளில் அனைத்துலகச் செயலகத்தின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்த பலரும் தலைமைச் செயலகத்தின் நடவடிக்கைகளிற்கு ஆதரவு கொடுக்கத் தொடங்கியிருந்தார்கள்.

 எனவேதான் கடந்த வருடம் தலைமைச் செயலக்தினரால் நடாத்தப்பட்ட மா வீரர் நிகழ்வுகளிற்கு மக்கள் போய்விடாமல் தங்கள் பக்கம் அவர்களை இழுப்பதற்கான ஒரு தந்திரம்தான் திடீரென நடப்பட்டு விளம்பரம் செய்யப்பட்ட முருகதாசன் நினைவிடம் ஆகும். இங்கு நடந்தேறியது உண்மையில் முருகதாசனிற்கான நினைவிடத்தை எழுப்பி மனசார அவனின் தியாகத்திற்கு மதிப்பளித்து , அவனிற்கு அஞ்சலி செலுத்தி அவனது குடும்பத்தினரிற்கு மதிப்பளிப்பது என்பது அல்லாமல் அனைத்துலகச் செயலகத்தின் பண பலம், ஆட்பலம், ஊடக பலம் என்பதனையும் நிரூபிப்பதோடு மட்டுமல்லாமல் தாங்களே தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்கிற இன்னொரு செய்தியையும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிற்கு தெரியப் படுத்துவது என்பதாகும்.

ஆனால் இவர்களது அரசியல் விளையாட்டில் தங்களது மகனின் நினைவிடம் சிக்கி தவிக்கிறது என்பதை தாங்க முடியாத முருகதாசனின் குடும்பத்தினர் எந்த அமைப்பினது நினைவிடமும் தங்களிற்கு வேண்டாம் என முடிவெடுத்து அவர்கள் ஏற்கனவே தொடங்கியிருந்த முருகதாசன் அறக்கட்டளையால் இந்தியாவில் செய்ப்பட்ட நினைவுக்கல்லை இலண்டனிற்கு எடுத்து வந்து இந்த வருடம் தங்கள் மகனின் நினைவு நாளன்று ஏற்கனவே அனைத்துலகத்தினால் நிறுவப் பட்ட கல்லை எடுத்து தங்கள் வீட்டு காணியில் நிறுவி விட்டு தங்கள் கல்லை அதே இடத்தில் நிறுவி விட்டார்கள். தங்களால் நிறுவப் பட்ட நினைவுக்கல் அகற்றப் பட்டதால் அனைத்துலகச் செயலகத்தினர் சும்மாயிருப்பார்களா??
அதன் இலண்டன் பொறுப்பாளர் அவசரமாக ஒரு அறிக்கையை விட்டார். அது என்னவெனில் இலங்கை அரசின் கைக்கூலிகள் முருகதாசனது நினைவிடத்தை உடைத்தனர், இவர்கள் துரோகிகள் என்பதோடு மட்டுமல்லாமல் அதி உயர் பதவியான கே.பி யின் கைக்கூலிகள் என்று அறிக்கை வெளியானது. இங்கு இலங்கையரசின் கைக்கூலி , துரோகி கே.பியின் கையாள் என வர்ணிக்கப்பட்டவர்கள் யாரெனில் முருக தாசனின் தாய் தந்தையரே. இது மட்டுமல்ல அனைத்தலகச் செயலகத்தின் கடந்தகால செயற்பாடுகளால் வெறுப்படைந்து இவர்களால் நடாத்தப் படும் மாவீரர் தினநிகழ்வுகளிற்கு போகாது விட்ட மாவீரர் குடும்பங்களினது உறவுகளான மாவீரர்களது படங்களை கடந்த வருடம் பல நாடுகளிலும் கடந்த மாவீரர் தின நிகழ்வுகளில் வைக்காது புறக்கணித்து விட்டிருந்தார்கள்.

எனக்கு தெரிந்த கிழக்கு மகாணத்தை சேர்ந்த ஒருவரின் குடும்பத்தில் 5 பேர்கள் போராளிகளாக இருந்தவர்கள். அவர்களில் நான்கு பேர் இயக்கத்தின் பெரிய பொறுப்புக்களில் இருந்து மாவீரர்கள் ஆகிவிட்டிருந்தனர்.எஞ்சியிருந்த கடைசி போராளி தற்சமயம் ஜரோப்பாவில் வசிக்கிறார். அவரது குடும்பத்தின் நான்கு மாவீரர் படங்களும் ஒவ்வொரு வருடமும் வணக்க நிகழ்விற்காக வைக்கப்படுவது வழமை. ஜரோப்பாவில் வசிக்கும் அந்த போராளிக்கும் அனைத்துலக செயலகபொறுப்பாளரிற்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு விட்டது, அதனால் அந்த போராளி துரோகியாக்கப் பட்டதோடு கடந்த வருடம் மாவீரர்களான அவரது நான்கு சகோதரர்களின் படங்களும் நிகழ்வில் வைக்காமல் புறக்கணிப்பு செய்துவிட்டிருந்தார்கள்.இது தெரியாமல் வழைமை போல் வணக்க நிகழ்விற்கு குடும்பத்தோடு அந்த போராளியும் போயிருந்தார்.அவரது பிள்ளைகள் மாவீரர்களான தங்கள் பெரியப்பாக்களின் படங்களிற்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக படங்களை தேடியபோது எந்தப் படங்களும் இருக்கவில்லை . நிகழ்வு பொறுப்பாளரிடம் படங்கள் எங்கே என்று கேட்டபோது ஏதோ தவறுதலாக விடுபட்டிருக்கலாம் என்றார்.

ஒரு படம் தவறுதலாக விடுபட்டிருக்கலாம் நான்கு படங்களுமே எப்படி தவறுதலாக விடு பட்டது என்று கேட்டபோது அதை பற்றியெல்லாம் எனக்கு தெரியாது அடுத்த வருடம் பார்க்கலாமென்று விட்டு அந்த இடத்தை விட்டு நழுவிவிட்டார்.அங்கு போயிருந்த போராளி மற்றைய மாவீரர்களின் படங்களிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டிருந்தார்.
இப்படியாக தங்கள் மக்களிற்காகவும் தங்கள் மண்ணிற்காகவும் எந்த சுயநலமும் இன்றி பெரும் கனவுகளோடு தங்கள் உயிரையே காவு கொடுத்த மாவீரர்களும் அந்த மாவீரர்களை இழப்பை நினைத்தபடியே தினமும் கவலையோடும் கண்ணீரோடும் தங்கள் நாட்களை கடத்தும் அவர்களது தாய் தந்தையரும் ,உறவினர்களும், துரோககிகள் என்றால் தியாகிகள் யார்?? ஒரு கதைக்காக நாளை தலைவர் பிரபாகனே உயிரோடு இங்கு வந்து இவர்கள் முன்னால் நான்தாண்டா பிரபாகன் என்று சொன்னால் போய்யா நீ இலங்கையரசின் கைக்கூலி , கே.பி யின் கையாள் என்றுவிட்டு மக்களே விழிப்பாயிருங்கள் பிரபாகரன் என்கிற பெயரில் இலங்கை புலனாய்வுப் பிரிவும் ,றோவும் ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் ,அவர் ஒரு துரோகி என்று தங்கள் இணையத் தளங்களில் அவரது படத்தை போட்டு செய்தியும் போட்டு விட்டு ,தங்கள் இலாபநட்டக்கணக்கை பார்க்கப் போய்விடுவார்கள் என்பது மட்டும் உண்மை.
மீண்டும் ஒரு பதிவோடு “எதுவரை”யில் சந்திப்போம் அதுவரை .இப்படிக்கு துரோகி (லெப்.கேணல், தளபதி )

No Comment