நாட்களைக் கடத்தும் தமிழீழ அரசு (நா.க.த.அ)
சாத்திரி (ஒரு பேப்பர்)
புலிகள் அமைப்பானது ஆயுதங்களை மௌனிப்பதாக விடுத்த அறிக்கையினை அடுத்து அந்த அமைப்பும் செயலிழந்து போனதன் பின்னர். உலகத் தமிழர்கள் அனைவருமே மிகுந்த எதிர் பார்ப்போடும் . நம்பிக்கைகளோடும் எதிர்பார்த்திருந்த நாடு கடந்த தமிழீழ அரசு தோற்றம் பெற்று இரண்டு ஆண்டுகள் கழிந்ததோடு மட்டுமல்லாது .அதன் மூன்று பாராளுமன்ற அமர்வுகளும் நடைபெற்று முடிந்துவிட்டன. இலங்கைத் தீவில் ஆயுதப் போர் முடிவிற்கு வந்ததுமே தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கவும், சாத்வீக வழியிலான போராட்டங்களை நடாத்தி தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஒரு அமைப்பு அவசியமானது அது நாடுகடந்த தமிழீழ அரசே என வலியுறுத்தி அந்த அமைப்பு உருவாகுவதற்கு மட்டுமல்லாது. அதன் நோக்கங்கள் அதன் தேவைகள் என்ன என்பதோடு அதன் அவசியத்தையும் புலம்பெயர்ந்து வாழும் தழிழர்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதற்கு ஒரு பேப்பர் குழுவினரோடு இணைந்தும், தனியாகவும். பரப்புரைகளையும் பல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்திருந்தேன். அதன் ஆரம்ப காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் அனைத்துலகத் தொடர்பகம் நாடுகடந்த அரசை பகிரங்கமாக எதிர்த்தவேளைகளில். நாடுகடந்த அரசிற்கு ஆதரவாக அதன் பிரச்சாரப் பத்திரிகை போன்று ஒரு பேப்பர் செயற்பட்டது என்பதையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டும். ஆனால் நாடுகடந்த அரசின் தேர்தல்கள் நடைபெற்று அதன் முதலாவது பாராளுமன்ற அமர்வும் நடந்து முடிந்த பின்னர். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் செயற்பாடுகளில் உள்ள குறைகளையும். இன்று ஈழத்தமிழினம் உள்ள நிலையில் இந்த உறுப்பினர்களின் செயற்பாட்டு வேகம் போதவில்லையென்பதையும். ஒரு பேப்பர் சுட்டிக்காட்டத் தவறியதில்லை.
அதே நேரம் நாடுகடந்த அரசால் தாயகத்தில் உள்ளவர்களிற்கு பெரிதாக ஒன்றும் செய்யமுடியாது என்பதனை அனைவராலும் ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனால் சர்வதேச நாடுகளில் அதனால் எத்தனையோ பணிகளை செய்யமுடியும். இலங்கையரசின் போர்குற்றங்களை வெளிக்கொண்டு வரலாம். இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலங்களை வைத்து இலங்கையரசின் மீது வழக்குகள் தொடுக்கலாம். வழக்கு என்றதும் தான் ஞாபகத்திற்கு வருகின்றது. இலங்கையரசு மீது வழக்கு தொடர்வது பற்றி உருத்திரகுமார் மற்றும் மதியுரைஞர் குழுவினைச் சேரந்த சிறிஸ்கந்தராசா (சிறீயண்ணா, சுவீடன்) ஆகியோரோடு உரையாடிக்கொண்டிருந்தபொழுது நான் சொன்ன விடயம். அதிகாரத்திலிருக்கும் ராஜபக்சமீது வழக்கு தொடர முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ராஜபக்சவிற்கு கொஞ்சமும் குறையாத இனப்டுகொலையை செய்த சந்திரிக்கா மீதாவது ஒரு வழக்கை பதிவு செய்யுங்கள். அதற்கான ஆதாரங்கள் உள்ளன குறைந்தபட்சம் பதவியில் இல்லாத ஒருவரையாவது சர்வதேச குற்றவியல் நீதிமன்னறத்தில் நிறுத்துவன் மூலம் தற்சமயம் பதவியில் இருப்பவர்களாவது தங்கள் பார்வையை மாற்ற சந்தர்ப்பம் உண்டுடென்று கூறியிருந்தேன். பார்க்கலாம் என்கிற பதில்தான் கிடைத்தது. இன்றுவரை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அடுத்தடுத்து அறிக்கைகள் மட்டுமே வெளியாகின. கொசாவோவிலும். தென் சூடானிலும் தூதரகம் திறப்பதாக கூட செய்திகள் வெளியாகின. தூதரகம் திறக்கத் தேவையில்லை ஒரு அறையை வாடைகைக்கு எடுத்து அலுவலகமாக்கியிருக்கலாம். ஏன் ஒரு கொட்டிலையாவது போட்டு கொடியை ஏத்தியிருந்தாலும். அதன் படத்தை அண்ணாந்து பார்த்தாவது ஆசுவாசப்பட்டிருப்போமே. அதை விடுவோம், நா.க.த. அரசின் மூன்றாவவது பாராழுமன்ற அமர்வின் கூட்டத் தொடர் அண்மையில் நடைபெற்றது. அதன் முதலாவது நாள் அமர்வில் இலங்கையரசை கிடுகிடுக்க, கலங்கடிக்க அதிரடியான தீர்மானங்களாவது ஏதாவது நிறைவேறும் என அதன் நேரலை ஒளிபரப்பை ஆவலுடன் இணையத்தில் பார்த்துக்கொண்டிருந்த பல உசார் மடையர்களில் நானுமொருவன். ஆனால் கூட்டத்தின் இறுதியில் எல்லாருக்கும் பசிக்கிறது எட்டுமணிக்குத்தான் சாப்பாடு வரும் என்கிற தீர்மானத்துடன் முதலாம்நாள் அமர்வுகள் முடிவடைந்திருந்தது. நானும் கொட்டாவி விட்டபடி போய்சாப்பிட்டு விட்டு படுத்துவிட்டேன்.
கடந்த மாவீரர் தினத்தில் கூட நா.க. த. அரசு ஒரு தவறான முடிவெடுத்திருந்தது; அதாவது இறுதி யுத்தத்தில் வன்னியில் தலைவருடன் இருந்து தப்பி வந்தவர்கள் என்பவர்களுடன் கூட்டுச் சேர்ந்து ஜரோப்பா எங்கும் மாவீரர்தின நிகழ்வுகளை இரண்டாக்கியிருந்தனர். இரண்டு வருடத்தில் இவர்களின் சாதனை என்று இதனைத்தான் சொல்லலாம். புதியதாய் வந்தவர்கள் பற்றியும் அதனை பின்நின்று இயக்கும் வினாயகம், சுபன் போன்றவர்கள் பற்றியும் போதுமான விபரங்கள் நா.க.த. அரசின் பிரதமரிற்கு எம்மால் வழங்கப்பட்டிருந்தது என்பதனையும் குறிப்பிட வேண்டும்.
கடைசியாய் வந்த செய்தி இலங்கைக்கு குண்டு போட்ட உருத்திரகுமார். உள்ளே போய் செய்தியை படித்தால். ஆபிரிக்க நாடுகளில் எமது உறவை வளர்த்துள்ளோம்.தென்னாபிரிக்காவில் உள்ள பல நாடுகளுடன் தமது தூதரகங்களை திறந்து தமது நட்புறவை பேணும் நிலையில் இவை முனைந்துள்ளனவாம்.தென்னாபிரிக்காவின் ஆழும் தேசிய காங்கிரசின் 100 வது ஆண்டு கொண்டாட்டத்திற்கே நாடுகடந்த அரசு அழைக்கப்படவில்லை என்பது சோகமான விடையம். ஆனால் அதே கொண்டாட்டத்திற்கு உலகத்தமிழர் பேரவைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அழைப்பிதழ் போனது மட்டுமல்லாமல் அவர்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசு பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது தனிப்படட்ட காரணங்களிற்காக தென்னாபிரிக்கா போகவில்லையாம். உள்நாட்டு பாதுகாப்பென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளிநாட்டு பாதுகாப்பென்றால் உலகத்தமிழர் பேரவை இமானுவேல் அடிகளார். இரண்டு அமைப்பில் உள்ளவர்களிற்கும் பாதுகாப்பு பிரச்சனை உள்ளதுதான். அண்மையில் கூட இந்தியாவிற்கு முறையாக விசா பெற்று சென்றிருந்த இமானுவேல் அடிகளார் இந்தியாவிற்குள் நுளைய முடியாமல் திருப்பியனுப்பப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருந்தார். இப்படி பல அச்சுறுத்தல்களிற்கு மத்தியில்தான் இந்த அமைப்புக்கள் தங்களாலான பணிகளை முன்னெடுக்கின்றனர். ஆனால் உருத்திர குமார் அவர்கள் பாதுகாப்பை காரணம் காட்டி அமெரிக்காவிற்குள் மட்டுமே மாறி மாறி பயணம் மேற்கொள்வதால் உலகம் முழுவதும் நாடுகடந்த தமிழீழ அரசினை பலப்படுத்தி அதனை சரியான பாதையில் இட்டுச்செல்ல முடியாது.
அது மட்டுமல்லாது நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர்கள் என்பவர்கள் ஒவ்வாரு தேர்தலின் போதும் மக்காளால் மாற்றப்படுவார்கள் மாற்றப்படவேண்டும். அதன் பிரதமர் கூட மாற்றப்படுவார். ஆனால் நாடுகடந்த தமிழீழ அரசு என்பது நிலையாக இருக்கும்.இருக்கவேண்டும். எனவே நாடுகடந்த தமிழீழ அரசு உறுப்பினர்கள் மீதான எமது விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் உடனடியாகவே அது நா. க. த. அரசின் மீதான எதிர்ப்பு அல்லது அதன்மீதான காழ்ப்பை நாம் காட்டுகின்றோம் என நினைப்பது தவறு. வுpமர்சனங்களை ஏற்றுக்கொண்டு நா.க.த.அசின் பிரதிநிதிகள். தங்களை திருத்திக்கொண்டு சரியான பாதையில் அந்த அமைப்பினை வழிநடாத்தவேண்டும். இல்லையேல் காலப்போக்கில் இதுவும் தனிநபர் துதிபாடும் அமைப்பாக மாறுவதோடு இறுதியில் தலைவனும் நானே தொண்டனும் நானே என்கிற இந்தியவின் சுப்பிரமணிய சுவாமியின் கட்சி மற்றும் இலங்கையில் ஆனந்தசங்கரியின் கட்சி போன்றதொரு நிலைக்கே நாடுகடந்த தமிழீழ அரசும் தள்ளப்படும்.
இறுதியாக நாடுகடந்த தமிழீழ அரசின் ஆரோக்கியமான செயற்பாடுகளை தட்டிக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல். அதன் தவறான பக்கங்களை தட்டிக்கேட்பதற்கும் ஒரு பேப்பர் குழுமம் தயங்காது என்பததை தெரிவித்துக்கொளகிறேன்;.
skip to main |
skip to sidebar
விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்
Back on top ^
created by Nuvio | Webdesign
அவலங்கள் © 2008 Ken ahlin | Converted to XML Blogger Template by ThemeLib