இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது.
தமிழர் நிலங்கள் பறிபோகின்றது. புலம்பெயர் தமிழர்களின் நிலங்களை இலங்கையரசு கையகப்படுத்த முயற்சி. இடம் பெயர்ந்த மக்களின் காணிகளில் இராணுவம். மீள் குடியேற சென்ற மக்களை இராணுவம் விரட்டியது.....இவை அண்மைக்காலங்களாக தமிழ் ஊடகங்களிலை வெளிவாற செய்தித் தலைப்புக்கள். அது மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலை இருக்கிற தமிழரின்ரை காணியள் பற்றின விபரங்களை இலங்கையரசு சேகரிச்சுக்கொண்டும் இருக்கினம். இந்த வருச வக்கேசனுக்கு என்ரை சொந்தக்காரன் ஒருத்தர் லண்டனுக்கு வந்து இருவத்தைஞ்சு வரியமாகிது போனமாதம் ஊருக்கு போனவர்.ஊருக்கெண்டால் கொழும்புக்கு... அங்கை அவர் ஒரு அப்பாட்மென் வாங்கிவிட்டிருக்கிறார். வருசா வருசம் வக்கேசனுக்கு அங்கைபோய் தங்கிட்டு வருவார்.
அப்பிடித்தான் இந்தவருசமும் போனவர்.. அவருக்கு தெல்லிப்பளையிலை சீதனவீடும் காணியும் இருந்தது .அதை ஆமி பிடிச்சு பிறகு பாதுகாப்புவலயம் எண்டு அரசாங்கம் அறிவிச்சு போட்டுது.இப்ப பிரச்சனையள் முடிஞ்சு பாதுகாப்பு வலயம் எடுத்தாச்சாம் சனங்கள் திரும்ப தங்கடை காணியளிற்கு போகினமாம் எண்டு செய்தி கேள்விப்பட்டு. இவரும் தன்ரை தெல்லிப்பளை காணியை போய் வீடு உருப்படியாய் இருக்கோ இல்லையோ தெரியாது இருந்தால் பாத்து திருத்திப்போட்டு இல்லாட்டி எல்லையை பாத்து மதிலை கிதிலை கட்டிப்போட்டு அப்பிடியே நல்ல விலைக்கு வித்து அந்தப் பிரச்சனையை இத்தோடை முடிச்சிடவேணும் எண்டு நினைச்சுக்கொண்டு தான் போனவர்.
போனவருக்கு காணி எங்கை எல்லை எது எண்டு தெரியேல்லை ஒரு மாதிரி மண் மூடிக்கிடந்த றோட்டுகரையிலை நிண்ட ஆலமரம் அப்பிடியே நிண்டபடியாலை காணியை அடையாளம் பிடிச்சிட்டார். வீடு தரைமட்டமாய் கிடந்தது.ஒரே பத்தைவளந்துபோய் இருந்தது.அவரும் கலியாணம் கட்டி புதிசா வந்து குடியேறின பழைய நினைவுகளோடை காணியை சுத்திபாத்தவர் அங்கை நட்டுக் கிடந்த கொங்கிறீற் கல்லை உத்துப்பாத்தார். அரைமீற்றர் அகலம் நிலத்திலையிருந்து ஒரு மீற்றர் உயரத்துக்கு அந்தக் கல்லு இருந்தது அதிலை ஏதோ நம்பரும் எழுதியிருந்தது. அவருக்கு வந்திது கோவம்.அதைவிட அந்த நேரத்திலை அவர்தான் அந்த றோட்டிலையே சண்டியன். யாரவன் என்ரை காணிக்குள்ளை கொங்கிறீற் போட்டவன் எண்டு கத்தினபடி காலாலை எட்டி கல்லை உதைஞ்சார்.
கால் சுழுக்கிப்போட்டுது.கோவம் இன்னமும் கூடிப்போக இரு என்ன செய்யிறன் பார் எண்டபடி சுத்திவர பாத்தவர் துாரத்திலை யாரோ இடிஞ்ச வீட்டை திருத்திக்கொண்டிருந்தாங்கள் அவையிட்டை போய் தம்பியவை என்ரை காணிக்குள்ளை யாரோ கொங்கிறீற் நட்டிருக்கிறாங்கள் உங்களிட்டை அலவாங்கு இருந்தால் தாங்கோ அதை இடிச்சுப்போட்டுத்தாறன். என்னை யாரெண்டு தெரியாமல் விழையாடுறாங்கள் எண்டிருக்கிறார். அங்கை நிண்டவை அவரை ஏற இறங்க பாத்திட்டு ஜயா வெளிநாட்டிலை இருந்து வந்திருக்கிறியள் போலை அந்த கொங்கிறீற்று அரசாங்கம்தான் நட்டது. அதை நீங்கள் புடுங்க ஏலாது புடுங்கினால் பொலிஸ்காரன் வந்து பிடிச்சுக்கொண்டு போடுவான்.இஞ்சையிருந்து தங்கடை காணியெண்டு உறுதிசெய்யாத வெளிநாடுகளுக்குபோனவையளின்ரை காணியளிலை அரசாங்கம் கொற்கிறீற் போட்டு ஒரு நம்பரும் அடிச்சிடுவாங்கள்.நீங்கள் ஒண்டும் செய்யேலாது. வேணுமெண்டால் வழக்குத்தான் போடவேணும் எண்டிச்சினம். என்ரை சினேதன் கொழும்பிலை பெரிய லோயர் அவனை வைச்சு வழக்கு போடுறன் எண்டு கொழும்புக்கு வந்து தன்ரை சினேதனிட்டை விசயத்தை சொன்னார்.
அவனோ... உது பாதுகாப்பு அமைச்சு சம்பத்தப் பட்ட விசயம் வழக்கு போடுறதெண்டால் அவங்களுக்கெதிராத்தான் போடவேணும். பாதுகாப்பமைச்சுக்கெதிரா வழக்கு போட்டு வெல்லுறதெண்டதெல்லாம் நடக்கிற காரியமில்லை. இருபத்தைஞ்சு வரியமா நீயும் காணிக்கு வரியள் கட்டின அத்தாட்சியளும் இல்லை.வழக்காடுற செலவு காணிக்காசைவிட கூடவரும் எண்டு கையை விரிச்சிட்டான். புலம்பிய படி திரும்ப லண்டன் வந்தவர் தன்ரை சீதணக்காணி பறிபோட்டுதெண்டு சொந்தங்கள் எல்லாருக்கும் போனடிச்சு ஒரே ஒப்பாரி.அவர் என்னோடை கதைக்கிறேல்லையெண்டபடியால் நான் தப்பீட்டன்.
இந்த விசயம் கேள்விப்பட்டு கனடாவிலை இருக்கிற என்ரை சின்னம்மா எனக்கு போனடிச்சார் அவருக்கு ஊருக்கு போக பயம் ஏனெண்டால் கனடாவிலை நடந்த ஊர்வலங்களிலையெல்லாம் புலிக்கொடியோடை முன்னாலை நிண்டு எங்கள் தலைவன் பிரபாகரன் எண்டு கத்தினவர்.அந்தப் படங்கள் தமிழ் ரிவி பேப்பருகளிலையும் வந்திருந்தது.ஆனால் தன்ரை காணிக்குள்ளையும் அரசாங்கம் கொங்கிறீற் போட்டிடும் எண்ட பயத்திலை எனக்கு போனடிசு எடேய் என்ரை வீடுகாணி விக்க முடிவெடுத்திட்டன்.வித்தா பிறகு சொந்த பந்தத்தை கேக்காமல் வித்திட்டன் எண்டு குறை சொல்லக்கூடாது அதுதான் எல்லாருக்கும் போனடிச்சனான் உனக்கும் அடிக்கிறன் உனக்கு வேணுமெண்டால் சொல்லு இல்லாட்டி கொழும்பிலை காணி வீடு விக்கிற ஏஜென்சி ஒண்டுக்கு சொன்னால் அவங்கள் வித்திட்டு தங்கடை கொமிசனை எடுத்திட்டு மிச்சத்தை பாங்கிலை போட்டு விடுவாங்கள் எண்டார்.
இருக்கிற காணியை பாக்கவே மனிசரில்லை இதுக்கை எனக்கு எதுக்கு காணி எனக்கு வேண்டாம்.போனவரியமல்லோ யாரோ வாங்க கேட்டவை ஏன் இன்னமும் விக்கேல்லையெண்டு கேட்டதுக்கு அவர் சொன்ன பதில் டேய் அது அவங்களல்லோ வாங்கிறதுக்குகேட்டவங்கள் .நாங்கள் பரம்பரையா வாழ்ந்த வீட்டை நா...னாக்கும்...ப....னாக்கும் விக்கேலுமே. அதுதான் விக்கேல்லை எண்டார். இப்ப ஏஜென்சிகாரணென்டால்... அதுவும் கொழும்பு ஏஜென்சியெண்டால் அவனுக்கு யார் எவரெண்ட கவலையில்லை நல்ல காசு அம்பிட்டா வித்துப்போடுவானே எண்டன். ஓமடா அவங்கள் கூடுதலா சிங்களவருக்குத்தான் விக்கிறாங்கள். சிங்களவர் றோட்டுக்கரையிலை உள்ள வீடுகள் தென்னங்காணியள் விழைச்சல் காணியளை நல்ல விலைக்கு வாங்கிறாங்களாம். என்ரை காணியும் யாரே சிங்களவான் தானாம் வந்து பாத்திருக்கிறான் எண்டார்.
எனக்கு பத்திக்கொண்டு வந்தது ந..னா .. .ப..னா எண்டு பாத்து தமிழனுக்கு காணியை விக்காதேங்கோ ஆனால் சி..னாக்கு வித்தா பரவாயில்லை . பிறகு தமிழரின்ரை காணி பறிபோகுதெண்டு ஒப்பாரிவேறை. இனி எங்கையாவது நீங்கள் தமிழ் தேசியம் எண்டு கதைச்சதை கேள்விப்பட்டால் ரிற்கற் போட்டு கனடாக்கு வந்து காதைப் பொத்தி காலாலை தருவன் எண்டன். ரெலிபோனை வைச்சிட்டார். எனக்குத்தெரியும் இனி அவர் என்னோடை கதைக்கமாட்டார். இப்பிடியானவையை சொந்தம் எண்டு கதைக்கிறதை விட பேசாமல் இருக்கிறதே நல்லது
skip to main |
skip to sidebar
விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்
Back on top ^
created by Nuvio | Webdesign
அவலங்கள் © 2008 Ken ahlin | Converted to XML Blogger Template by ThemeLib