Navigation


RSS : Articles / Comments


த.தே.கூட்டமைப்பின் பின்னால் உள்ள இரகசியங்கள்..

9:33 AM, Posted by sathiri, One Comment

த.தே.கூட்டமைப்பின் பின்னால் உள்ள இரகசியங்கள்..

-நிராஜ் டேவிட்

த.தே.கூ. ஈழத் தமிழர்களை அரசியல் ரீதியாக வழிநடாத்தத் தகுதியானதா?

த.தே.கூ. நம்பகத்தன்மை வாய்ந்ததா?

த.தே.கூ. தவிர்த்து ஈழ மண்ணில் அரசியல் நடாத்த வேறு வேறு சக்திகள் அங்குள்ள ஈழத் தமிழருக்குக் கிடையாதா?

சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கின்றது.பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்தத் தேர்தலில் பாரிய வியூகங்களை வகுக்க,த.தே.கூ. இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.

இந்தத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பற்றி புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பலத்த வாதிப்பிரதிவாதங்கள் இருந்து வருகின்றன.இலங்கையின் அரசியல் அரங்கில் தமிழ் மக்களுக்கு இன்று இருக்கின்ற ஒரே தெரிவு, த.தே.கூட்டமைப்பாகவே இருக்கின்றது என்று ஈழத் தமிழர்களில் ஒரு தரப்பு வாதாடி வருகின்றது.

சிறிலங்காவின் அரசாங்கத்தில் ஒரு அமைச்சராக இருக்கும் கருணா என்பவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இருப்பதுடன், இலங்கையில் தமிழருக்கு எந்தவிதப் பிரச்சனையும் இல்லை, அவர்களுக்கு அரசியல் தீர்வு எதுவும் தேவை இல்லை என்று சிங்கள அமைச்சர்களை விட உரக்கக் குரல் கொடுத்து வருகின்றார்.

சிறிலங்கா அரசாங்கத்தினால் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகானத்தின் முதலமைச்சராக இருக்கும் பிள்ளையான் என்ற சந்திரகாந்தன், கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணத்துடன் இணைக்கப்படக்கூடாது என்பதில் பிடிவாதமாக உள்ளார்.

மறுபக்கம், மத்திய ஆட்சியில் இருப்பவருக்கு சாமரம் வீசியபடி, பிரிக்கப்பட்ட யாழ்பாணத்தில் ஒரு குறுநிலமன்னணாக ஆட்சி செய்ய நினைக்கின்றார் அமைச்சர் டக்ளஸ் தேவாணந்தா.

இந்த நிலையில் தமிழ் தேசியம், வடக்கு கிழக்கு இணைப்பு, தமிழர்களுக்கு என்று சுயாட்சி அல்லது சமஷ்டி என்ற நிலைப்பாட்டில் தேர்தல் களத்தில் நிற்கும் ஒரே கட்சி த.தே.கூட்டமைப்புத்தான் என்று எம்மில் ஒரு பகுதியினர் அடித்துக் கூறிவருகின்றார்கள்.த.தே.கூ. நம்பகத்தன்மை இல்லாத ஒரு அமைப்பு என்றும், தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடும்படியான போக்கு த.தே.கூ. இடம் காணப்படுகின்றது என்றும்- மற்றொரு தரப்பு குற்றம் சுமத்துகின்றது. த.தே.கூ. ஈழத் தமிழருக்கு துரோகம் இழைத்து வருகின்ற ஒரு அமைப்பு என்று அந்தத் தரப்பு கட்டுரைகளையும் இணையத்தளங்களில் வெளியிட்டு வருகின்றது.

த.தே.கூ. தொடர்பான சந்தேகங்கள், கேள்விகள்,என்று பல இருந்தாலும் கூட, அவைகள் அனைத்தையும் கடந்து, இலங்கை வாழ் தமிழர்களுக்காகவென்று இன்று எஞ்சி இருப்பது இந்த த.தே.கூ. மாத்திரம்தான் என்று புலம்பெயர்ந்த மண்ணில் இருக்கின்ற சில புத்திஜீவீகள் தெரிவிக்கின்றார்கள்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் எதிர்வரும் காலங்களில் அவர்களது போராட்டங்கள் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்? இதுதான் எம்மத்தியில் இன்று இருக்கின்ற மிகப் பெரிய கேள்வியாக இருக்கின்றது.

வதந்திகள்

வன்னியில் 20,000 போராளிகள் மறைந்திருக்கின்றார்கள், முக்கிய தளபதிகள் தாக்குதலுக்குத் தயாராக இருக்கின்றார்கள், தென்ஆபிரிக்காவில் புலிகளின் படை அணிகள் இலங்கைக்குக் கிளம்ப தயார் நிலையில் நிற்கின்றன, ஈழத் தமிழரைக் காப்பாற்ற அமெரிக்கப்படைகள் வரப்போகின்றன - இப்படி பல வதந்திகள் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஒரு தரப்பால் பரப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன.அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் எந்த நகர்வையும் செய்யத் தேவையில்லை. அடித்துத்தான் எதையாவது நாம் பெற்றாகவேண்டும். அதுவரை நாம் காத்திருப்பது அவசியம் என்று இந்தத் தரப்பினர் மக்களிடம் கூறிவருகின்றார்கள்.

இந்த இடத்தில் ஒரு முக்கிய உண்மையை நாம் நன்றாக விளங்கிக்கொள்ளவேண்டும்.தமது போராட்டப் பாதையில் ஈழத் தமிழர்கள் என்பவர்கள் தமது இராணுவப் பலத்தை முற்றாகவே இழந்துவிட்டுள்ளார்கள். இதுதான் உண்மை. அத்தோடு ஒரு சக்திவாய்ந்த அரசியல் பலத்தை உருவாக்கவேண்டிய நிலையில் ஈழத் தமிழர்கள் இன்று நின்றுகொண்டிருக்கின்றார்கள்..- இதுதான் யதார்த்தம்.

நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ இன்னும் சிறிது காலத்திற்கு அரசியல் ரீதியான பாதையில்தான் பயணம் செய்தாகவேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.

„அரசியல் ரீதியான ஒலிக்கும் எமது குரல் சிங்களப் பேரினவாதத்திடம் ஒலிக்காது.. அரசியல் ரீதியாக நாம் நகர்ந்தால் எமது கோரிக்கைகள் பலவீனமாகிவிடும். பேரினவாதச் சிந்தனை கொண்ட சிங்களவர்களிடம் எமது சாத்வீகத்தின் குரல் ஒருபோதும் எடுபடாது.“- இப்படி பல எச்சரிக்கைகள் எம்மில் சிலரால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த எச்சரிக்கைகளில் உண்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இந்த விடயத்தில், இன்று நாம் இருக்கின்ற நிலையில் - எங்களுக்கு வேறு வழி எதுவும் கிடையாது என்பதுதான் உண்மை.

எம்முன் இன்று இருக்கின்ற ஒரே தெரிவு- அரசியல், பொருளாதார, இராஜதந்திரப் போராட்டங்கள்தான்.இந்த அரசியல், பொருளாதார, இராஜதந்திரப் போராட்டங்களை நாம் இங்கு புலம் பெயர் தேசங்களில் ஒரு வரையறுக்கப்பட மட்டத்தில்தான் செய்யமுடியும். இந்த அரசியல், பொருளாதார, இராஜதந்திரப் போராட்டங்களை நாம் இலங்கை மண்ணில் செய்தால்தான் எம்மால் அதனை முன்கொண்டு செல்லமுடியும். இலங்கை மண்ணில் அரசியல் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு அங்கு எமக்கு ஒரு அரசியல் தளம் தேவையாக இருக்கின்றது. இதுதான் இன்று ஈழத் தமிழர் முன் இருக்கின்ற அவசரத் தேவைகளுள் முதன்மையானதாக இருக்கின்றது.

இன்று இருக்கின்ற நிலையில், இலங்கை மண்ணில் அரசியல் சக்திகளாக டக்ளசும், கருணாவும், பிள்ளையானும் மிக வேகமாக வளர்ந்து வருகின்றார்கள். இவர்களது அரசியல் இருப்பையும், அரசியல் வளர்சியையும் யாராலும் தடுத்துவிடமுடியாமல் இருக்கின்றது.

2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாழ்மாவட்டத்தில் வெறும் 18,612 வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்த ஈ.பி.டி.பி கட்சி, நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 41,900 வாக்குகளைத் திரட்ட முடிந்திருப்பதானது, யாழ்ப்பாணத்தில் டக்ளசின் அரசியல் வளர்ச்சியை வெளிக்காண்பிப்பதாக இருக்கின்றது.

யார் எவர் என்று தெரியாத நிலையில் இருந்த பிள்ளையானுக்கு சந்தர்ப்பவசத்தால் கிடைத்த கிழக்குமாகாண முதலமைச்சர் பதவி, இன்று கிழக்கைப் பொறுத்தவரையில் தவிர்க்கமுடியாத ஒரு சக்தியாக பிள்ளையானை உருவாக்கிவிட்டுள்ளது.

தமிழ் மக்களின் அரசியலில் வெற்றிடங்கள் உருவாக்கப்பட உருவாக்கப்பட, இன்றும் பல கருணாக்களும், பிள்ளையான்களும், டக்ளஸ்களும் அந்த வெற்றிடத்தை நிரப்பிட வரிசையாக நின்றுகொண்டிருக்கின்றார்கள்.

எனவே இன்றைய அரசியல் சூழலில் வியாக்கியானம் பேசிக்கொண்டு, கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றுவிட முடியாத நிலையில்தான் தமிழினம் இருந்துகொண்டிருக்கின்றது.

தமிழ் மக்கள் தமக்கென்று ஒரு சக்திவாந்த அரசியல் பலத்தை உருவாக்கிக்கொள்ளும்வரைக்கும், அந்த வெற்றிடத்தை நிறப்புகின்ற பணியை யாராவது ஒருவர் மூலம் நாம் செய்துதான் ஆகவேண்டி இருக்கின்றது.காலம் என்பது எங்களுக்காக ஒருபோதும் காத்துக்கொண்டிருக்காது. காலத்தின் வேகத்தில் நாம்தான் ஓடவேண்டி இருக்கின்றது.

ஒரு நாடாளுமன்றத் தேர்தலை எமது சமூகம் எதிர்கொண்டபடி இருக்கையில், அந்த அரசியல் தளத்தை நாம் சரியாகப் பயன்படுத்தத் தவறுவோமானால், அடுத்துவரும் 6 வருட காலத்தை கருணா போன்ற, பிள்ளையான் போன்ற, டக்ளஸ் போன்ற பிரகிருதிகள்;எமது இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு நாமே வழியேற்படுத்திக்கொடுத்ததாகப் போய்விடும்.

ஈழத் தமிழர்களின் ஜனநாயகப் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு பல கோடாரிக் காம்புகள் எமது தலைவர்களாக வலம்வரும் அவலம் எமது இனத்திற்கு ஏற்பட்டுவிடும்.எனவே விம்பியோ விரும்பாமலோ, இந்த நாடாளுமன்றத் தேர்தலை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டி இருக்கின்றது.

எப்படி எதிர்கொள்வது?

நாடாளுமன்றத் தேர்தலை தமிழினம் எப்படி எதிர் கொள்வது? யாரை வைத்து எதிர்கொள்வது?

„இன்றைய நிலையில், தமிழ் தேசியம், வடக்குகிழக்கு இணைப்பு, சுயநிர்ணயம் - போன்ற விடயங்களை இலங்கை மண்ணில் பெயரளவிலாவது உச்சரித்துக்கொண்டிருக்கின்ற ஒரே கட்சி தமிழ் தேசிக் கூட்டமைப்பு மாத்திரம்தான். எனவே இந்த த.தே.கூட்டமைப்பை முன்னிலைப்படுத்தித்தான் சிறிது காலத்திற்கு ஈழத்தமிழ் இனம் அரசியல் செய்தாகவேண்டி உள்ளது“ என்று எம்மிடையே இருக்கின்ற ஒருசிலர் கூறுகின்றார்கள்.

எமது கைகளில் இருக்கின்ற சிறிய பலத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று சிந்திப்பதுதான் நாம் இன்று செய்யவேண்டிய மிகப் பெரிய கடமையாக இருக்கின்றது என்றும் அவர்கள் வாதாடுகின்றார்கள்.

இப்பொழுது எம்முன் இருக்கின்ற கேள்வி இதுதான்.

த.தே.கூ. ஈழத் தமிழர்களை அரசியல் ரீதியாக வழிநடாத்தத் தகுதியானதா?

த.தே.கூ. நம்பகத் தன்மைவாயந்ததா?

த.தே.கூ. தவிர்த்து ஈழ மண்ணில் அரசியல் நடாத்த வேறு வேறு சக்திகள் அங்குள்ள ஈழத் தமிழருக்குக் கிடையாதா?

இந்தக் கேள்விகளுக்கான பதிலைப் பார்பதற்கு முன்னதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றால் என்ன, இந்தத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்படி உருவாக்கப்பட்டது என்று பார்ப்பது அவசியம் என்று நான் நினைக்கின்றேன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றால் என்ன?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்படி உருவாக்கப்பட்டது?

இந்த த.தே.கூட்டமைப்பை யார் உருவாக்கினார்கள்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகள்தான் உருவாக்கினார்கள் என்று பலர் நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

அப்படி அல்ல.

த.தே.கூ;டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் தேவை கருதி த.தே.கூட்டமைப்பை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டு உள்வாங்கியிருந்தார்களே தவிர, த.தே.கூட்டமைப்பின் உருவாக்கத்தின் பின்னணியில் விடுதலைப் புலிகள் இருக்கவில்லை என்பதுதான் உண்மை.

அப்படியானால், த.தே.கூட்டமைப்பு எப்படி உருவானது?

இது உண்மையிலேயே ஈழத் தமிழினம் அறிந்து வைத்திருக்கவேண்டிய ஒரு உண்மை.த.தே.கூட்டமைப்பின் உருவாக்கத்தின் பின்னால் இருந்த உழைப்புகள், தியாகங்கள், இழப்புக்கள், இரத்தம் சிந்தல்கள் -இவைகள் அனைத்துமே ஒரு சிலருக்கு மாத்திரமே தெரிந்திருந்த இரகசியங்கள்.

இந்த விடயங்கள் பற்றித்தான் இன்று விரிவாக ஆராய இருக்கின்றோம்.

காலச் சூழல்:

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாகுவதற்கான காலச் சூழல் பற்றிப் பார்ப்பது அவசியம்.

2ம் கட்ட ஈழப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில், தமிழ் மக்களின் அரசியல் பலத்தைச் சிதைக்கும்படியான திட்டம், சிங்களத் தலைவர்களாலும், முஸ்லிம்களின் தேசியத் தலைவர் என்று கூறப்பட்ட அஷ்ரப்பினாலும் தீட்டப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் வடக்கில் யாழ்குடா உட்பட பெரும்பாலான பிரதேசங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழேயே இருந்ததன் காரணமாக, கிழக்கைக் குறிவைத்துத்தான் சிங்கள, முஸ்லிம் தலைமைகள் இந்தத் திட்டத்தை நகர்த்த முற்பட்டன.

தமிழர் தரப்பில் பலரை பல்வேறு கட்சிகளின் பெயரில் தேர்தலில் போட்டியிட வைப்பதன் ஊடாக, தமிழர் வாக்குகளைப் பிரித்து தமிழ் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதுதான், எதிரிகளின் திட்டமாக இருந்தது.

தமிழ் மக்கள் மத்தியில் புரையோடிக் காணப்பட்ட பிரதேச வேறுபாடுகள், சாதிப்பிரச்சனைகள், மத பேதங்கள் -இவைகளைக் கருத்தில் கொண்டு, பல கட்சிகளிலும், சுயேட்சையாகவும் கூட, தமிழர்கள் பெருமளவில் தேர்தலில் போட்டியிட உற்சாகப்படுத்தப்படார்கள்.

தமிழ் தேசியம் பேசுவோரின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, அரசியல் ரீதியிலான தமிழரின் உரிமைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்துவதே, எதிரியின் திட்டமாக இருந்தது.

சிங்கள முஸ்லிம் தலைமைகள், தாம் வகுத்த திட்டத்தை, 1994ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் முதன் முதலில் பரிட்சித்துப் பார்த்திருந்தன.

1994ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மட்டக்களப்பில் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய ஒரு பிரதிநித்துவம் தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களித்தன் காரணமாக முஸ்லீம்களுக்கு சென்றிருந்தது. மட்டக்களப்பு மாவட்ட வாக்காளர் விகிதாசாரத்தின் அடிப்படையில் நான்கு தமிழ் பிரதிநிதிகளும் ஒரு முஸ்லீம் பிரதிநிதியுமே வரமுடியும். ஆனால் அவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் அலிசாகிர் மௌலானாவும் , கிஸ்புல்லாவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்..

தமிழ் மக்களுக்கான ஆயுதப்போராட்டம் நடைபெற்று வருகின்ற அதேவேளை தமிழ் மக்களை அரசியல்மயப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் 1994ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் பின்தான் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பாக பல்வேறு மட்டங்களின் பேச்சுக்கள் நடைபெற்ற போதிலும், வெறும் கலந்துரையாடல் என்கின்ற நிலையைக் கடந்த வேறு எதனையும் தமிழர் தரப்பால் செய்ய முடியவில்லை.

இப்படியான சூழலில்;2000.10.10 அன்று நடைபெற்ற சிறிலங்கா நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் தமிழ் மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான தேர்தலாக அமைந்திருந்தது. தமிழ் மக்களின் அரசியல் நகர்வுகளில் ஒரு பாரிய விளிப்புணர்வை ஏற்படுத்திய ஒரு தேர்தலாக அந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன.

அந்தப் பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு தமிழர் கூட தெரிவாகவில்லை. 53860 வாக்குகளைப்பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3 ஆசனங்களையும், 46ஆயிரம் வாக்குகளைப்பெற்று ஐக்கிய தேசியக்கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தது. தமிழர் விடுதலைக்கூட்டணி 14090 வாக்குகளை மட்டுமே அந்தத் தேர்தலில் பெற்றிருந்தது.

இதேபோன்று, 5 தமிழ் பிரதிநிதிகளும் ஒரு முஸ்லீம் பிரதிநிதியும் வரவேண்டிய வன்னி மாவட்டத்தில், 200ம் ஆண்டுத் தேர்தலில் மூன்று தமிழர்கள் மட்மே தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.

4 தமிழ் பிரதிநிதிகளும் ஒரு முஸ்லீம் பிரதிநிதியும் தெரிவாகவேண்டிய மட்டக்களப்பு மாவட்டத்தில், தமிழர் விடுதலைக்கூட்டணி இரு பிரதிநிதிகளை மட்டுமே பெற்றிருந்தது.

அம்பாறை மாவட்டத்தில் ஒரு தமிழர் கூட தெரிவு செய்யப்படவில்லை.

பாராளுமன்றத்திற்கு வடக்கு கிழக்கில் 23 தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டிய இடத்தில் 14 பேர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.

விழிப்புணர்வு

தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பாரிய அரசியல் விழிப்புணர்சியை ஏற்படுத்திய ஒரு நிகழ்வாக இந்தத் தேர்தல் அமைந்திருந்தது. எதிரிகளின் திட்டமிட்ட சதிக்கு எமது இனத்தின் அரசியல் அபிலாசைகள், அநியாயமாகப் பழியாகிப் போவதையிட்டு தமிழ் ஆர்வலர்கள், புத்திஜீவிகள் கவலை கொண்டார்கள்.

இது தொடர்பாக, இந்த ஆபத்தான நிலை தொடர்பாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், சமூகஆர்வலர்கள் மட்டத்தில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது. பிரபல ஊhடகவியலாளரும், அரசியல் இராணுவ ஆய்வாளருமான மாமனிதர் சிவராம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அந்தக் கலந்துரையாடலில், கிழக்குப் பல்கலைக்களக விரிவுரையாளர்கள், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற அமைப்புக்களின் இணையம், மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் என்பன பங்குபற்றியிருந்தன.

அந்த கூட்டத்தில் இரண்டு விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

1. தமிழ் மக்கள் சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்கும் நிலையை மாற்றுவதற்கு அவர்கள் மத்தியில் தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்த வேண்டும்

2. களத்தில் இருக்கின்ற தமிழ் அரசியல்; கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் .

முதலாவது விடயத்தை, அதாவது தமிழ் மக்களுக்கு விளிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையை, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமோ அல்லது கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கமோ தனித்து நின்று செய்ய முடியாது என்றும் அதற்காக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இரண்டாவது தீர்மாணத்தை கிழக்கிலங்கைச் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் தனித்து மேற்கொள்ளுவது என்றும் தீர்மாணிக்கப்பட்டது.

விஷப் பரிட்சை

தமிழ் கட்சிகளை ஒன்றிணைப்பது என்பது அந்த நேரத்தில் மிகவும் சவாலான, கஷ்டமான காரியமாக இருந்தது..

அந்த நேரத்தில் அது ஒரு மிகப் பெரிய விஷப்பரீட்சை. அதற்கு மேலாக விடுதலைப்புலிகள் அதற்கு சம்மதிப்பார்களா என்ற சந்தேகமும் பல கல்விமாண்களால் எழுப்பப்பட்டிருந்தன.

“தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க முடியும்” என சிவராம் உறுதியாக சொன்னார். அதற்கு கலாநிதி தம்பையா, விரிவுரையாளர் கெனடி, ஊடகவியலாளர் இரா. துரைரெத்தனம் போன்றோர் ஆதரவு தெரிவித்தார்கள்.

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கமே இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அதற்கு ஏனையவர்கள் ஒத்துழைப்புக்களை வழங்குதென்றும் தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து அன்று மாலையே கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் செயற்குழுவின் கூட்டம் மட்டக்களப்பு லேக்வியூ இன் ஹொட்டலில் நடைபெற்றது.

இதனையடுத்து மட்டக்களப்பு கத்தோலிக்க கழகத்தில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற அந்தக் கூட்டத்திலேயே தமிழர் மறுமலர்ச்சிக்கழகம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் கருத்தரங்கு உட்பட பல செயற்பாடுகளை தமிழர் மறுமலர்ச்சிக்கழகம் செய்தது.

கிழக்கு பல்கலைக்கழக ஆசிரிய சங்கத்தைச்சேர்ந்த கலாநிதி தம்பையாவும், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் செயலாளர் சண். தவராசாவும், அரசசார்பற்ற இணையங்களின் செயலாளர் செல்வேந்திரனும் இந்தத் தமிழர் மறுமலர்சிக் கழகத்திற்கு இணைப்பாளர்களாக செயற்பட்டார்கள்:

மாமனிதர் சிவராம், இரா துரைரெத்தினம் போன்ற சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் இந்த கழத்தின் முக்கிய வழிகாட்டிகளாகச் செயற்பட்டார்கள்.

முக்கிய சவால்:

இந்த இடத்தில்தான் இந்தத் தமிழ் ஆர்வலர்கள் முக்கியமான சவாலைச் சந்திpக்கவேண்டி ஏற்பட்டது.

தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றினைத்து தமிழர்களுக்கான ஒரு கூட்டமைப்பை உருவாக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டபோதுதான் மிகப் பெரிய சவால்கலை அவர்கள் சந்திக்கவேண்டி ஏற்பட்டது.

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் முதற்கட்டமாக தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் தமிழ் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து, கூட்டமைப்பு பற்றிப் பேசியபோதுதான், இது ஒன்றும் இலகுவான காரியமாக இருந்துவிடமாட்டது என்று அவர்கள் உணரத் தலைப்பட்டார்கள்.

தமது கூட்டமைப்பு உருவாக்கும் திட்டம்பற்றி நாடாளுமன்ற உறுப்பினரும், த.வி.கூட்டணியின் சிரேஷ்ட தலைவருமான ஜோசப் பரராஜசிங்கம் அவர்களிடம் பேசிய பொழுது, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற ஆயுதக்குழுக்களுடன் தாங்கள் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டால் மக்கள் தங்களையும் நிராகரித்து விடுவார்கள் என்றும், முதலில் விடுதலைப்புலிகள் இதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி, ஊடகவியலாளர்களின் இந்த முன்மொழிவுக்கு ஒரேயடியாக மறுப்புத் தெரிவித்துவிட்டார். இரத்தம் தோய்ந்த கரங்களுடன் தமிழ் விடுதலைக் கூட்டணி கூட்டமைப்பு வைத்துக்கொண்டு, எந்த முகத்துடன் மக்கள் முன்நிலையில் சென்று வாக்குக் கேட்பது என்று தயங்கிய திரு பரராஜசிங்கம், இந்த நகர்வை கைவிட்டுவிடுங்கள் என்று ஊடகவியலாளர்களுக்கு ஆலோசனையும் வழங்கினார். அனேகமான மிதவாதக்கட்சி உறுப்பினர்களின் நிலைப்பாடும் இதுவாகத்தான் இருந்தது.

வெறுக்கப்பட்ட அமைப்புகள்

ஆம் அந்த காலகட்டத்தில், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்ற கட்சிகள் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிக்கொண்டிருந்தன. விடுதலைப் புலிகள், புலிகளின் ஆதரவாளர்கள், அனுதாபிகள் மீது மிகவும் மோசமான தாக்குதலை மேற்கொள்வதிலும், அவர்களைச் சித்திரவதை செய்து கொலை செய்வதிலும் இந்த அமைப்புக்கள் மிக ஆர்வம் கொண்டு திரிந்த காலம் அது.

தமிழ் மக்களால், குறிப்பாக தமிழ் தேசியவாதிகளால் இந்த அமைப்புக்கள் வெறுப்புடன் பார்க்கப்பட்ட காலம் அது.

எனவே தமிழ் கட்சிகளை ஒன்று சேர்த்து ஒரு கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, தமிழ் மக்களின் அரசியல் பலத்தை அதிகரிக்கவேண்டிய தேவையை முதலில் விடுதலைப் புலிகளுக்கு உணர்த்தும்படியான நடிவடிக்கையை செய்வது அவசியம் என்று இந்தக் குழு தீர்மாணித்தது.

இந்த விடயம் தொடர்பாக விடுதலைப்புலிகளின் அரசியல்துறையைச் சேர்ந்த கரிகாலன் அவர்களைச் சந்தித்து, தமது இந்தத் திட்டத்தை முன்நகர்த்துவது என்று தீர்மாணிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கரிகாலன் அவரகளுடனான சந்திப்பு மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலையில் நடைபெற்றது. அந்தச் சந்திப்பில், தமிழ் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை குறைத்து, அரசியல் ரீதியாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் முகமாக சிறிலங்காத் தலைமை மேற்கொண்டு வரும் சதி பற்றி, சிவராம் விளக்கம் அளித்தார். இந்தச் சதியால் தமிழர் தரப்பிற்கு ஏற்பட்ட பின்னடைவுகள், இழப்புக்கள் போன்றன பற்றி புள்ளிவிபரங்களுடன் விளக்கினார்.

ஊடகவியலாளர்களின் கருத்துக்களைக் கவனமாகச் செவிமடுத்த திரு.கரிகாலன், “நல்ல முயற்சி ஆனால் தமிழர் விடுதலைக்கூட்டணி தமிழ் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய கட்சிகள் ஆயுதங்களை கைவிட்டு வருவார்களா?” என்று தனது சந்தேகத்தை வெளியிட்டார். அந்த முயற்சியில் தாம் தொடர்ந்து இறங்கப்போவதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்தார்கள்.

“தமிழ் கட்சிகளின் மனங்களில் எங்கோ ஒரு மூலையில் நிச்சயம் தமிழ் உணர்வு இருக்கத்தான் செய்யும். அதனை வெளிக்கொணர்வதில்தான் எங்களது வெற்றி தங்கியிருக்கின்றது. டெலோவின் கரங்களில் விடுதலைப் புலிகளின் இரத்தக்கறையும், புலிகளின் கைகளில் டெலோவின் இரத்தக்கறையும் பரஸ்பரம் இருக்கின்றன. எமது இனத்திற்காக பழயவைகளை மறப்பதுதான் நல்ல இராஜதந்திரம் என்று விளக்கம் கொடுத்தார்.

தங்கள் தரப்பிலும், தலைமையுடனும் பேசிவிட்டு முடிவை சொல்வதாக தெரிவித்திருந்தார் கரிகாலன்.

“இது நாய்வாலை நிமித்தும் முயற்சி” என்று கரிகாலன் அவர்களுடன் இருந்த சில புலித் தளபதிகள் ஊடகவியலாளர்களிடம் தமது அபிப்பிராயத்தை தெரிவித்தார்கள்.

புலிகளின் பதில்:

சரியாக ஒரு வாரகாலம் கழித்து கரிகாலனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. கரிகாலன் அவர்களை;மீண்டும் சந்தித்த போது அவர் சாதகமான ஒரு பதிலை ஊடகவியலாளர்களுக்கு வழங்கினார்.

இந்த விடயத்தில் விடுதலைப் புலிகள் தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை, புலிகளின் தலைமை தமிழர் விடுதலைக்கூட்டணியின் சிரேஷ்ட தலைவர் திரு. ஜோசப் பரராசசிங்கம் அவர்களுக்கும் அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, தமிழர் விடுதலைக்கூட்டணியினரும் தமிழ் காங்கிரஸ் கட்சியினரும் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு ஒருவாறு சம்மதித்தார்கள்.

இந்தக் கூட்டமைப்பு உருவாக்கத்திற்கு தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் சிலர் தயக்கம் காட்டிய போதிலும் மாமனிதர் ரவிராஜ் தமிழ் கட்சிகளை இணைக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவராக காணப்பட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழர் விடுதலைக்கூட்டணியை விட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினரே இந்த முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் பின்னடித்தனர்.

அக்கட்சியின் சார்பில் தீர்மானம் எடுக்க கூடியவராக அந்த நேரத்தில் திருமதி குமார் பொன்னம்பலமே இருந்தார். தமிழ் காங்கிரசுடனான சகல சந்திப்புக்களும் குமார் பொன்னம்பலம் அவர்களுடைய வீட்டிலேயே நடைபெற்றன.

அப்படி தமிழ் கட்சிகள் இணைக்கப்பட்டாலும் தங்களுடைய கட்சியிலேயே அனைவரும் போட்டியிட வேண்டும், தமிழ் காங்கிரசின் சின்னமான சைக்கிள் சின்னத்திலேயே அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் போட்டிபோட வேண்டும் என்ற நிபந்தனைகள் கூட விதிக்கப்பட்டன. தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்திக்கொண்டாலும் கூட, முன்னாள் ஆயுதக்குழுக்களுடன் சேர்வதற்கான தயக்கம் பெருமளவில் வெளிக்காண்பிக்கப்பட்டது.

இரத்தக்கறை

முன்னாள் ஆயுதக் குழுக்களின கரங்களில் இரத்தக்கறை படிந்துள்ளதாகவும், அவர்கள் இரத்தகறைபடிந்த கரங்கள் என்றும் தமிழர் விடுதலைக்கூட்டணியினரும் தமிழ் காங்கிரஸ் கட்சியினரும் குற்றம் சுமத்தினார்கள்.

தமிழர் விடுதலைக்கூட்டணியினருடனான ஒரு சந்திப்பின் போது இவ்வாறு சிலர் தெரிவித்த போது, சிவராம் கடும் கோபம் கொண்டவராக “நீங்கள் தானே அவர்களை உருவாக்கினீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். “1989ஆம் ஆண்டு ஆயுதங்களோடு இருந்தவர்களுடன் இணைந்து போட்டியிட்டீர்கள். இப்போது அவர்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசியல் நிரோட்டத்திற்கு வந்திருக்கின்ற போது நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது” என்று கடுமையாக வாதிட்டார்.

1989ஆம் ஆண்டு இந்த குழுக்களுடன் சேர்ந்து தாங்கள் போட்டியிட்டபோது தங்களுக்கு கிடைத்த கசப்பான அனுபவத்தையும் தமிழர் விடுதலைக்கூட்டணியினர் தெரிவித்தனர். 1989ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி சின்னத்தில் இந்த கட்சிகள் போட்டியிட்ட போதிலும் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் முழுக்க முழுக்க ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்களே தெரிவு செய்யப்பட்டனர் என்பதையும் தமிழர் விடுதலைக்கூட்டணியினர் சுட்டிக்காட்டினர்.

பல சந்திப்புக்கள், நீண்ட இழுபறிகள் போன்றனவற்றின் பின்னர், தமிழ் ஆயுதக் குழுக்களாக செயற்பட்ட தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து ஒரு கூட்டமைப்பை அமைப்பதற்கு த.வி.கூ மற்றும் தமிழ் காங்கிரஸ் என்ற இரண்டு மிதவாதக் கட்சிகளும் சம்மதித்தன.

அடுத்த பயணம்:

இதனைத் தொடர்ந்து, சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கிக் கொண்டிருந்த அமைப்புக்களைச் சந்திக்கும்படியான பயணத்தை ஆரம்பித்தார்கள்- உடகவியலாளர்கள். அந்தப் பயணம் கூட, அவ்வளவு இலகுவான பயணமாக இருந்துவிடவில்லை.

முதலில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் ஆகிய கட்சிகளுடன் சந்திப்புக்கள் நடைபெற்றன.

இந்த அமைப்புக்களிடம் மூன்று முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

1. இந்த அமைப்புக்கள் இனிமேல் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்க கூடாது.

2. அவர்களது இராணுவ பிரிவுகளைக் கலைத்து விட வேண்டும்.

3. தமிழ் தேசிய விடுதலையையும், அந்த விடுதலையை முன்னெடுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டும்

ஊடகவியலாளர்களின் இந்த நிபந்தனைகள் தமிழ் ஆயுதக் குழுக்களை பெரிய அளவில் உணர்ச்சிவசப்படுத்தின.

அது என்ன ஏக பிரதிநிதித்துவம்? புலிகளும் விடுதலைக்காகப் போராடினார்கள் நாங்களும் விடுதலைக்காகப் போராடினோம். புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஒன்றும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார் டேலோ முதல்வர் சிறிகாந்தா.

மற்றய அமைப்புக்களின் உடனடி பிரதிபலிப்புக்களும் இப்படியாகத்தான் இருந்தது.

ஆனால் இவை அனைத்தையும் கடந்து, அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய பலவீனம் இருந்தது. அந்தப் பலவீனத்தின் மீது ஊடகவியலாளர்கள் தொடர்ந்து அடிக்க, அடிக்க, அந்த அமைப்புக்கள் கூட்டமைப்புப் பற்றி யோசிக்கத் தலைப்பட்டன.

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்புக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் களமிறக்கப்பட்ட, ஈ.பீ.ஆர்.எல்.எப், டெலோ, புளொட், போன்ற அமைப்புகள், 10 வருடங்கள் கடந்துவிட்டிருந்த நிலையிலும் புலிவாலைப் பிடித்த கதையாக அந்தப் பாதையில் இருந்து மீழ முடியாமல் தவிர்துக்கொண்டிருந்தார்கள். அவர்களது நிலைப்பாடு காரணமாக தமிழ் மக்கள் மனங்களில் இருந்து அன்னியப்படும் ஆபத்துக்களையும்; அவர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். வடக்கு கிழக்கின் ஒரு சில பிராந்தியங்களைத் தவிர வேறு பிரதேசங்களில் செல்வாக்கு அற்றவர்களாகவே இந்த அமைப்பினர் இருந்தார்கள்.

தம்மீதுள்ள இரத்தக்கறையை எப்படித் துடைத்துக் கொள்வது, தமது அரசியல் எதிர்காலத்தையும் எப்படி உறுதிப்படுத்திக்கொள்ளவது என்ற தடுமாற்றம் அவர்கள் மத்தியில் அந்தக் காலகட்டத்தில் இருந்து வந்தது.

இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில்தான், தமிழ் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் போன்றனவற்றை இணைத்து கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சி பற்றி அவர்களுக்கு முன்மொழியப்பட்டது.

டெலோவின் நிபந்தனை:

சிவராம் தலைமையிலான ஊடகவியலாளர்கள் முதலில் டெலோ அமைப்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள்: ரெலோ அமைப்புடனான சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன், சிறிகாந்தா, பிரசன்னா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் சார்பாக சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் பேசப்பட்டது.

கூட்டமைப்பு உருவாக்கத்திற்கு கொள்கை அளவில் சம்பதித்த இந்த இரு கட்சிகளும், ஒரு முக்கிய முன் நிபந்தனையை விதித்தார்கள்.

ரெலோ ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிகள் தங்கள் உறுப்பினர்களுக்கு விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து பாதுகாப்பு உத்தரவாதம் தரப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டிந்தது. அந்தக் காலகட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தின் ஒட்டுக் குழக்களாகச் செயற்பட்ட இந்த அமைப்புக்களின் உறுப்பினர்கள், துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டு விடுதலைப் புலிகளால் துரத்தித் துரத்தி வேட்டையாடப்பட்டு வந்தார்கள். எனவே, விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து தமது உறுப்பினர்களுக்கு உரிய பாதுகாப்பு உத்தரவாதம் வளங்கப்படவேண்டும் என்று, இந்தக் கட்சிகள் கோரிக்கை விடுத்ததார்கள்.

விடுதலைப் புலிகளுடன் பேசி, அந்த உத்தரவாதம் விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து பெறப்பட்டது.

இந்தச் சந்தர்பத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்க முயற்சியைக் குலைக்கும்படியான ஒரு சம்பவம் மட்டக்களப்பில் நடைபெற்றது.

டெலோ அமைப்பின் ஒரு முக்கியஸ்தரும், மட்டக்களப்பு ஆரையம்பதிப் பிரதேச சபைத் தலைவருமான ரொபர்ட் விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மட்டக்களப்பு நகரில், வைத்தியசாலை வீதியில் வைத்து ரெலோ ரொபர்ட் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரது மரணச் சடங்கு இடம்பெற்ற தினம் மாலை ஊடகவியலாளர்களை டெலோவின் தலைமை அழைத்துப் பேச்சுவார்த்தை நடாத்தியது.

ரெலோவின் மட்டக்களப்பு அலுவலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த சிறிக்காந்தா, விடுதலைப் புலிகள் வழங்கிய உத்தரவாதத்தை மீறிவிட்டார்கள். எங்களை நீங்கள் சந்தித்து கூட்டமைப்பு உருவாக்கம் முயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற போது ரொபட் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறரே. இந்த நிலையில் எப்படி நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடும்படி எமது உறுப்பினர்களுக்குத் தெரிவிப்பது. யார் எங்களுக்குப் பாதுகாப்புத் தருவார்கள்? என்று விசனம் தெரிவித்தார்.

புலனாய்வுப் பிரிவுக்குத் தெரியாது

ஊடகவியலாளர்கள் மறுநாள் கரிகாலனை சந்தித்தார்கள்.

ஊடகவியலாளர்களிடம் மன்னிப்பு கோரிய கரிகாலன், “நீங்கள் எடுக்கின்ற முயற்சி புலிகளின் அரசியல் பிரிவினருக்கு மாத்திரமே தெரியும். இராணுவ மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு இன்னமும் தெரியாது. அதனால்தான் இது நடந்து விட்டது. இனிமேல் இதுபோன்று நடைபெறாது பார்த்துக்கொள்கிறோம்” என்று கரிகாலன் தெரிவித்தார். இவ்வாறான சம்பவங்கள் கூட்டமைப்பு முயற்சிகளை முற்றாக பாதித்து விடும் என்பதையும் கரிகாலனுக்கு ஊடகவியலாளர்கள் தெரிவித்தார்கள்;.

அதன் பின்னர் முதற்தடவையாக செல்வம் அடைக்கலநாதனையும் சுரேஷ் பிரேமச்சந்திரனையும் தனித்தனியாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுபிரதேசத்திற்கு கிழக்கிலங்கை செய்தியாளர் சங்க பிரதிநிதிகள் அழைத்து சென்று கரிகாலனுடனான சந்திப்பை ஏற்படுத்தினார்கள்.

தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் இந்த முயற்சி தொடர்பாக தகவல்கள் ஊடகங்களில் வெளிவரக்கூடாது என்றும் ஏற்கனவே உறுதியான தீர்மானம் ஒன்றை கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் எடுத்திருந்தது. ஊடகவியலாளர்களே இந்தப் பணியில் நேரடியாக ஈடுபட்டதன் காரணமாக, ஊடகங்களில் இந்தச் செய்திகள் கசியவில்லை. நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த நடவடிக்கைகள் தொடர்பாக எந்த ஒரு செய்தியும் ஊடகங்களில் வெளிவராத போதிலும், ஊடகவியலாளர்களையும் மீறி சுரேஷ் பிரேமசந்திரன் கரிகாலனை சந்தித்தது தொடர்பான செய்தி கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்றில் வெளிவந்து விட்டது. அந்த செய்தியை பின்னர் டெயிலி மிரர், சண்டே ரைம்ஸ் உட்பட ஆங்கில சிங்கள ஊடகங்களும் வெளியிட்டிருந்தன.

ஊடகவியலாளர்கள் கொழும்பு ஊடகங்கள் மத்தியில் தங்களுக்கு இருந்த தொடர்புகளைப் பாவித்து, இந்த சந்திப்புக்கள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளிவராமல் தடுத்திருந்தார்கள்.

புளொட்டின் நிலைப்பாடு

புளொட் தலைவர் சித்தார்த்தனுடன் நான்கு தடவைகள் சந்திப்பு இடம்பெற்றது. ஒரு கட்டத்தில் சித்தார்த்தன் ஆயுக்குழுவை கலைத்து விட்டு தமிழ் கட்சிகளின் கூட்டமைப்புடன் இணைவதற்கு விருப்பம் கொண்டிருந்தாலும் அக்கட்சியை சேர்ந்தவர்கள் முக்கியமாக வவுனியாவில் உள்ள சிலர் அதற்கு சம்மதிக்காததால் புளொட் அமைப்பை கூட்டமைப்பில் சேர்க்கும் முயற்சி கைவிடப்பட்டது.

ஒரு சந்திப்பின் போது சித்தார்த்தன் தங்கள் அலுவலக வாசலில், சென்றிருந்த இளைஞனைக்காட்டி கூறினார், “நான் ஆயுதப்பிரிவை கலைத்து விட்டு வந்து அரசியல் செய்யலாம். ஆனால் எம்மை நம்பி வந்த இந்தச் சிறுவர்களை எப்படி பராமரிப்பது? இவர்களது எதிர்காலம் என்ன? என்று கூறி, கூட்டமைப்பில் தமது அமைப்பினை இணைத்துக்கொள்ளத் தயங்கினார்.

மட்டக்களப்பு புளொட் அரசியல்பிரிவு பொறுப்பாளர் பாக்கியராசா தமிழ் கட்சிகளுடன் தங்களை இணைக்க வேண்டும் என ஆர்வம் காட்டிவந்தார். ஆனால் அவர்களின் இராணுவப்பிரிவு அதற்கு இடம்கொடுக்கவில்லை.

முதலாவது கூட்டம்

இதன் பின்னர் 2001ஆம் ஆண்டு கொழும்பில் தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட முதலாவது கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. சிவராம் தலைமையில் ஊடகவியலாளர்கள், சில பேராசிரியர்கள் போன்றோர் கலந்துகொண்டார்கள். அந்தக் கூட்டத்தில்தான் ததே.கூ. பற்றிய இறுதி முடிவு எடுக்கப்படது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பை இணைக்கும் பணி நிறைவு பெற்ற பின்னர் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் செயற்பாடுகளில் தலையிடுவதில்லை என்றும் ஊடகவியலாளர்கள் தீர்மானித்துக்கொண்டார்கள். இதை அந்த முதலாவது கூட்டத்தில் த.தே.கூட்டமைப்பிடம் ஊடகவியலாளர்கள் தெரிவித்துக்கொண்டார்கள்.

அதன் பின்னர் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அந்த நான்கு கட்சிகளும் இணைந்து வெளித்தலையீடுகள் இன்றி வேட்பாளர்களை தெரிவு செய்து தேர்தலில் போட்டியிட்டன.

அந்தத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் தேசிய நிலைப்பாட்டின் கீழ் போட்டியிட்டு 17 தமிழ் உறுப்பினர்கள் நடாளுமன்றத்திற்குத் தெரிவானார்கள்.2002ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் பின்னர், தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் செயற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆரம்பித்தார்கள்.. 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பல வேட்பாளர்களின் பெயர்களை விடுதலைப்புலிகளே முன்மொழிந்தனர் என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

தேசியக் கடமை:

த.தே.கூட்டமைப்பு உருவாக்கத்தின் பின்னால் இருந்த பல முக்கியஸ்தர்கள் இன்று உயிருடன் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் ஏரோ ஒரு வகையில் பங்காற்றியிருந்த பல தமிழ் ஆர்வலர்களும் தற்பொழுது உயிருடன் இல்லை.

த.தே.கூட்டமைப்பு உருவாக்கத்தின் பிதாமகர் என்று கூறக் கூடிய ஊடகவியலாளர் சிவராம், ஊடகவியலாளர் நடேசன், பேராசிரியர் கலாநிதி தம்பையா போன்றவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கிலங்கைச் செய்தியாளர் சங்கத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா.துரைரெத்தினம், கிழக்கிலங்கைச் செய்தியாளர் சங்கத்தின் செயலாளர் சண் தவராஜா, விரிவுரையாளர் கெனடி, விரிவுரையாளர் மோகன், மருத்துவ கலாநிதி நீதிராசா, ஊடகவியலாளர் நிராஜ் டேவிட், ஊடகவியலாளர் வேதநாயகம் உட்பட பல ஊடகவியலாளர்கள், விரிவுரையாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இந்தக் கூட்டமைப்பு உருவாக்கத்தில் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் போன்றவர்கள் படுகொலைசெய்யப்பட்டார்கள்.

மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தமது தேசியக் கடமைகளை நிறைவேற்றினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, சிறிலங்கா அரசாங்கத்தினாலும், அதனுடைய கூலிப்படைகளினாலும் இவர்கள் துரத்தித் துரத்தி வேட்டையாடப்பட்டார்கள்:

த.தே.கூட்டமைப்பு

ஆக, த.தே.கூ. என்பது, மிகுந்த பிரயாசைகளினால், பலத்த இழப்புக்களுடன், தமிழ் மக்களின் நன்மைகருதி தமிழ் மக்களினால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு.

சிங்களப் பேரினவாதம் அமைத்துக்கொண்டுள்ள ஒரு அரசியல் மேடையில் தமிழ் மக்களின் தேசியம் சார்ந்த குரல்கள் ஒலிக்கவேண்டும் என்பதற்காக, தமிழ் ஆர்வலர்களால் வகுக்கப்பட்ட ஒரு அரசியல் வியூகம்.

தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை அவ்வப்பொழுது உலகிற்கு வெளிப்படுத்திக்கொள்ள, தமக்குத்தாமே அவர்கள் அமைத்துக்கொண்டுள்ள ஒரு ஜனாநாயகத் தளம்தான், இந்தத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.இப்படிப்பட்ட இந்தத் த.தே.கூ. தமிழ் மக்களின் அபிலாசைகள உண்மையாகவே பிரதிநிதித்துவப்படுத்துகின்றதா?

த.தே.கூ உருவாக்கப்பட்டதன் நோக்கத்தின் பாதையில் அது பயணித்துக்கொண்டிருக்கின்றதா?

தனிநாட்டுக் கோரிக்கையை நாம் முன்வைக்கவில்லை என்று இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்பொழுது கூறுகின்றதே, பின்னர் இதனை எப்படி ஏற்றுக்கொள்வது?

-இப்படி பல கேள்விகள் புலம்பெயர்ந்த தமிழர் மத்தியில் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தொடர்ந்து பலதும் பத்தில் விரிவாக ஆராய்வோம்.

One Comment

Anonymous @ 5:40 PM

தமிழ்ழர்களின் சந்தோசம் துக்கம் இந்தியாவின் அரசியல் பூலோக பொருளாதறோதத்துல்டன் சம்பந்தபட்டது