த.ஈ.வே.வெ.வெ........
இந்த வார ஒரு பேப்பரிற்காய் எனது அனுபவ தொடரின் ஒரு நினைவு
என்னது ஏதோ குழந்தை பிள்ளைகள் கதைக்க தொடங்கிற காலத்திலை கதைச்ச மாதிரி இருக்கே எண்டு யோசிக்கிறீங்களா. கடந்த வார ஒரு பேப்பரில் பாலச்சந்திரன் அண்ணாவும் பா.வை.ஜெயபலனும் ஆடிமாதத்து நினைவுகளை கிழப்பிவிட்டு போய் விட்டார்கள். அதனால்தான் எனது இந்த ஆடிமாதத்து நினைவும். ஆனால் இது அம்மி பறந்த நினைவு அல்ல ஆனால் இது இலங்கையில் 83ம் ஆண்டு தமிழர் அடிவாங்கி பறந்தோடிய ஆண்டு நினைவு.
எங்கள் ஊர் பிள்ளையார் கோவிலில் வழைமையாக பூசை முடிந்ததும் பஞ்சாட்சரம் என்று ஒருவர்தான் சுண்டல் புக்கை மற்றும் பஞ்சாமிர்தம் ஆகியபிரசாதங்களை கொடுப்பார் கோயில் பூசை முடிந்து அய்யர் விபூதி சந்தணம் கொடுத்து விட்டு போகும் வரை கொயில் தேர் முட்டியில் காத்திருந்து விட்டு பஞ்சாட்சரம் அவர்கள் சுண்டல் சட்டியுடன் வரும்போதுதான் நாங்கள் எழுந்து போய் வரிசையில் நிற்போம்.அவரும் அவல் சுண்டல் எல்லாம் கொஞ்சம் கைகளில் வைத்து கொண்டே போவார். ஆனால் இந்த பஞ்சாமிர்தம் தரும்போது மட்டும் பஞ்சாமிர்த சட்டியில் ஒரு முறை கையை வைத்தார் எண்டால் அதை ஒரு பத்து பேரின் கையிலாவது தடவிகொண்டு போவார். கையில் கொஞ்ச தேன்மட்டும் தான்ஒட்டும் அதை உடனே நக்கி விட்டு திருப்ப கையை நீட்டினாலும் அவர் தரமாட்டார் தன்பாட்டிற்கு போய் கொண்டேயிருப்பார்.
இறுதியில் மிஞ்சுகின்ற பஞ்சாமிர்தத்தை அவர் வீட்டிற்கு கொண்டு போய் விடுவார். இதனால் எங்களிற்கும் அவரிற்கும் ஒரு நிழல் யுத்தமே நடந்து கொண்டிருந்தது. சில நேரங்களில் இரவு வேளைகளில் அவரது வீட்டை சைக்கிளில் கடந்து போகும் போது பஞ்சாமிர்தம் தராத பஞ்சாட்சரம் ஒழிக என்று கத்தி விட்டு ஓடுவதும் உண்டு. அவரிற்கும் தெரியும் நாங்கள் தான் கத்துவது என்று ஆனாலும் எப்பொழுதுமே நேரடியாக நாங்கள் சண்டை பிடித்தது கிடையாது.இப்படி இது தொடர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தான்
83ம் ஆண்மடு ஆடி மாதம் 23 ந்திகதி தொடங்கிய கலவரத்தில் வடக்கு கிழக்கு தவிர்ந்த இடங்களிலை இருந்த எல்லாத் தமிழரும் சிங்களவரிட்டை அடி வாங்கி கொண்டு உறவுகள் உடைமைகள் என்றுயாழ் காங்கேசன் துறையில் கப்பல்களில் வந்து இறங்க தொடங்கினர்.அந்தநேரம் நாங்களும் வந்தவர்களிற்கு முடிந்தளவு உதவிகளை செய்தோம் எங்கள் ஊரிலும் பலர் வந்திறங்கினார்கள் அதில் பலர் ஊரின் வாசமே மறந்து போனவர்களும் அடக்கம். அப்படி வந்தவர்களில் ஒரு அம்மணி கொழும்பில் பெரிய அரசியல் பலம் பண பலம் என்று வாழ்ந்தவா அவாவும் போட்ட உடுப்போடைதான் ஓடிவந்து ஊரிலை அவையின்ரை பாட்டன் வீட்டிலை இருந்தவை . ஆனால் அப்பிடி அடிவாங்கி கொண்டு ஓடிவந்தும் அந்த அம்மணியோஊரிலை சே சரியான டேட்டி விலேச் என்று குதிக்காலாலை நடந்து திரிஞ்சவா.இந்த கால கட்டம் வடக்கு கிழக்கு தமிழர்களிடம் ஒரு கொந்தளித்த மன நிலையெ காணப்பட்டது.
யாழிலும் மூலை முடுக்கெல்லாம் முப்பதிற்கும் மேற்பட்ட இயக்கங்களும் முளைக்க அரம்பித்திருந்தது. இவைகள் ஒரு பக்கத்தாலை நடந்து கொண்டிருக்க இந்த பஞ்சாட்சரம் அவர்களின் மகளிற்கு திருமணம் ஒழுங்கு பண்ணப்பட்டிருந்தது. ஆனால் ஆடி மாதம் யாரும் ஊரில் திருமணம் வைப்பதில்லை என்பதால் ஆவணி மாதம் நாள் வைத்து அதற்கான ஏற்பாடுகள் தடலு் புடலாக நடைபெற்றது. வீடு பெயின்ற் அடிக்கப்பட்டு அவர் வீட்டு மதிலும் சுண்ணாம்பு அடித்து பளிச்சென்று இருந்தது. ஊரிலை உங்கள் எல்லாரிற்கும் தெரிந்த விடயம் றோட்டு போடுறதெண்டால் முதலில் கல்லைகொண்டு வந்து கொட்டி ஒரு பாத்தி மாதிரி கட்டிவிட்டு போவார்கள்.
பிறகு ஒரு ஆறு மாதத்திற்கு பிறகு தார் தகரத்தை கொண்டு வந்து போட்டு விட்டு போவார்கள் றோட்டு போட ஒரு வருசமும் ஆகலாம் சில வருசமும் ஆகலாம். அது எப்ப போடப்படும் எண்டு எங்கள் ஊர் பிள்ளையாருக்கே தெரியாது. ஆனால் றோட்டு போட தொடங்கும் போது பறிச்ச கல்லிலை பாதியும். ஊரிலை உள்ள ஓட்டை வாளியள் சருவகுடம் கிடாரம் அடைக்க எண்டு கொஞ்ச தாரும் காணாமல் போயிருக்கும்.
அப்பிடித்தான் ஊரிலை றோட்டு போட எண்டு கல்லும் தாரும் பறிக்கப்பட்டு இருந்தது.ஒரு நாள் இரவு கோயிலடியிலை இருந்து அரட்டை அடிச்சிட்டு இரவு நானும் இருள் அளகனும் வீட்டிற்கு போய்க்கொண்டிருந்த போது பளிச்சென்று சுண்ணாம்படித்த பஞ்சாட்சரத்தின் வீட்டு மதிலும் அதக்கு பக்கத்திலை தார் தகரத்தையும் பார்த்ததும் என்னுடைய மூளையும் அதே நேரம் படபடப்பில் இதயமும் ஒண்றாக இயங்க ஆரம்பித்தது. ஆனாலும் தைரியத்தை வரவளைத்து கொண்டு இருள் அளகனிடம் டேய் இந்த பஞ்சாட்சரம் எத்தினை வருசமா எங்களிற்கு பஞ்சாமிர்தம் தராமல் பம்மாத்து விடுறார் அவருக்கு ஒரு வேலை செய்யப்போறன் பார் என்று விட்டு ஒரு தடியை எடுத்து தார் தகரத்துக்குள்ளை விட்டு பார்த்தன். ஆடி வெய்யிலில் தார் நல்லா உருகி இருந்தது. அப்பதான் நான் ஏதோ செய்யபோறன் எண்டு இருள் அளகனிற்கு விழங்கியது. அவன் என்னைப்பார்த்து டேய் வேண்டாம் பிடிபட்டா பஞ்சாட்சரமும் வீட்டு காரரும் சேர்ந்தே தோலை உரிச்சு போடுவினம் வேண்டமாடா என்று கெஞ்சினான்.
டேய் அது ஒண்டும் நடக்காத மாதிரி என்னட்டை அய்டியா இருக்கு என்று விட்டு தடியில் தாரை நன்றாக தோய்த்து பஞ்சாட்சரம் வீட்டு பளிச்சென்ற மதிலில் ஜே.ஆர் அரசே தமிழர்கள் மீதான வன் முறையை உடனடியாக நிறுத்து இல்லாவிடில் நீயும் உனது அரச படையும் பயங்கர விளைவை சந்திக்க நேரிடும் என்று எழுதி விட்டு ஏதாவது ஒரு இயக்கத்தின் பெயரை கட்டாயம்கீழே எழுத வேண்டுமே என்று யோசித்த போதுதான் எதுக்கு வேறை ஏதாவது இயக்கத்தின்ரை பெயரை எழுதி வீண் வம்பிலை மாட்டுவான் என்று நினைத்து எல்லா இயக்கங்களின் பெயரிலுமே த.ஈ என்கிற அதாவது தமிழ் ஈழம் என்று தொடங்கி ஏதாவது ஒரு பெயர் வரும் எனவே நானும் ஏதாவது ஒரு பெயரை புதிதாய் போட நினைத்து த.ஈ.வே.வெ.வெ. என்று கீழே எழுதி விட்டு ஓடிவிட்டோம்.
மறுநாள் வழைமை போல கோயிலில் மாலை பூசை முடியும் வரை கோயில் தேர் முட்டியில் இருந்து முதல் நாள் இரவு நான் செய்த வீரபிரதாபத்தை மற்றைய நண்பர்களிடம் சொல்லி சிரித்து கொண்டிருந்து விட்டு பஞ்சாட்சரத்தை கண்டதும் எழுத்து போய் வரிசையில் நின்றோம். பஞ்சாட்சரமும் சுண்டல் அவல் புக்கை எல்லாவற்றையும் தந்து விட்டு போய் விட்டார் பஞ்சாமிர்தத்தை காணவேயில்லை.நாங்களும் பஞ்சாட்சரம் பழிவாங்கிட்டாரடா என்றபடி போய் மீண்டும் தேரடியில் இருந்தபோதுதான் திடீரென பஞ்சாட்சரம் பஞ்சாமிர்த சட்டியுடன் சிரித்தபடி எங்கள் முன்னே வந்து நின்றபடி தம்பியவை இது உங்களுக்காக ஸ்பெசலா செய்த பஞ்சாமிர்தம் அதாலைதான் மற்றவைக்கும் குடுக்காமல் உங்களுக்காக கொண்டந்தனான் என்றபடி கை நிறைய எல்லாருக்கும் அள்ளி எங்கள் கைகளில் வைத்தபடி தம்பியவை உங்களிட்டை ஒரு விசயம் சொல்ல வேணும் என்றவும் நானும் இருள் அளகனும் ஒருதரையொருத்தர் பாத்து கொண்டோம்.
அவர் தொடர்ந்தார் தம்பியவை என்ரை மகளின்ரை கலியாணத்துக்கு ஏதோ கடனை வாங்கி ஒழுங்கு பண்ணி வீட்டுக்கும் பெயின்ற் அடிச்சு மதிலுக்கும் சுண்ணாம்பு அடிச்சிருந்தனான் ஆனால் யாரெண்டு தெரியாது நேற்றிரவு என்ரை மதிலிலை ஏதோ நான்தான் கலவரத்தை தொடக்கி விட்டமாதிரிஜே.ஆர் அரசே பயங்கர வாதத்தை நிறுத்து எண்டு தாராலை எழுதி போட்டு போட்டாங்கள். தம்பியவை எனக்குத் தெரியும் நீங்கள் எழுதியிருக்க மாட்டியள் ஆனால் உங்களிற்கு தெரிஞ்சவை யாரும் எழுதியிருந்தால் அவையிட்டை சொல்லுங்கோ முடிஞ்சால் கொழும்புக்கு போய் ஜே.ஆரின்ரை வீட்டு மதிலிலையோ ஆமிகாம்ப் சுவரிலையோ இல்லாட்டி பொலிஸ் ஸ்ரேசன் வாசல்லையோ எழுத சொல்லுங்கோ.
மகளின்ரை கலியாணம் முடிஞ்சு நாலாம் சடங்கு முடியும் மட்டுமாவது மதிலை கொஞ்சம் வெள்ளையா இருக்க விட்டா காணும் என்று விட்டு.தம்பியவை வடிவா சாப்பிடுங்கோ காணாட்டிலும் கேட்டு வாங்கி சாப்பிடுங்கோ என்று விட்டு போய் விட்டார் நான் பஞ்சாமிர்தத்தை சாப்பிடாமல் அப்படியே கைகளில் வைத்திருக்க வில் இடுக்குளினால் தேன் ஒழுகிகொண்டிருந்தது.அப்போத தான் இருள் அழகன் என்னிடம் டேய் மனிசன் எங்களை கண்டு பிடிச்சிட்டுதாக்கும் எண்டு நான் சரியா பயந்தே போனன் நல்லவேளை தப்பிவிட்டம் என்றவன் எல்லாம் சரி உன்ரை இயக்கத்துக்கு பெயர் என்ன?? த.ஈ.என்றால் தமிழ் ஈழம். அதென்ன வெ...வெவ்...வே... எண்டு குழந்தையள் நெக்காட்டினமாதிரி (நக்கல் பண்ணுவது) எழுதியிருக்கிறாய் அதுகின்ரை அர்த்தம் என்ன என்றான். அப்பதான் நான் பஞ்சாமிர்தத்தை சாப்பிட்ட படி ஓ அதுவா தமிழீழ வேலை வெட்டியற்ற வெறும் பயலுகள். நான் மட்டுமில்லை நீங்களும்தான் அதன் உறுப்பினர்கள் என்றவும் எல்லோரும் தாங்கள் சாப்பிட்டு முடிந்த பஞ்சாமிர்த கையை என்மீது துடைத்தார்கள் நீங்களும் பல்லை நெருமுவது கேட்கிறது எனவே எஸ்கேப் அடுத்த பேப்பரில் சந்திக்கிறேன்
skip to main |
skip to sidebar
விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்
Back on top ^
created by Nuvio | Webdesign
அவலங்கள் © 2008 Ken ahlin | Converted to XML Blogger Template by ThemeLib