Navigation


RSS : Articles / Comments


ஈழப்போராட்டத்தில் எனது(பொய்)சாட்சியம் 9

8:05 AM, Posted by sathiri, No Comment

ஈழப்போராட்டத்தில் எனது (பொய்) சாட்சியம் பகம் 9


காத்தடிக்கிது கலகலக்கிது காரை நகரை ஈபி அடித்த கதையை இந்த வாரம் பாக்கலாம். எண்பதுகளில் முக்கியமான 5 பெரிய இயக்கங்களில் ஈபிஆர்எர்எவ் வும் ஒன்று என்று முதலில் கூறியிருந்தேன் அதில் அதிகமான உறுப்பினர்கள் தொகையை கொண்டது புளொட் அமைப்பாகும் ஆனால் அந்த அமைப்பின் தலைம அளவு கணக்கில்லாமல் ஆட்களை அள்ளியெடுத்து பயிற்சி கொடுத்து விட்டு பின்னர் அவர்களிற்கு வேண்டிய ஆயுதங்கள் இல்லாமலும் ஏன் அவர்களிற்கு உணவே கொடுத்து பராமரிக்க முடியாமலும் திண்டாடிக் கொண்டிருந்தது எனவே அவர்கள் இலங்கை அரசிற்கு எதிராக தாக்குதல்கள் நடத்தவார்கள் என்று எதிர் பார்த்து கொண்டிருக்க அவர்கள் தங்களிற்குள் தாங்களே தாக்குதல்களை நடத்தி கொண்டிருந்தார்கள்.

அடுத்தாக ரெலோவும் சில தாக்குதல்களை செய்திருந்தது ஈரோஸ் இயக்கம் வடகிழக்கிற்கு வெளியெ சில குண்டு தாக்குதல்களை நடத்தியிருந்தது. புலிகள் தொர்ச்சியாகவே வழைமை போல அவர்களில் தாக்குதல்கள் ஏதோ வடிவத்தில் இலங்கை அரசிற்கெதிராக நடந்து கொண்டுதான் இருந்தது.
ஆனால் ஈ பி மட்டும் கணிசமான உறுப்பினர் தொகை மற்றும் ஆயுதங்கள் என்று இருந்தும் எவ்வித தாக்குதலும் அதன் தொடக்க காலத்திலிருந்த செய்திருக்கவில்லை அது அப்படியே தொடர்ந்தால் கடைசியில் அதன் உறுப்பினர்களிடமே ஒரு வெறுப்பு நம்பிக்கையீனம் வளர தொடங்கி விடும் அபாயம் இருந்தது.


அதனால் அது பொதுமக்களிடமும் தங்கள் உறுப்பினர்களிடமும் ஒரு நம்பிக்கையையும் ஒரு உற்சாகத்தையும் ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அதன் இயக்க தலைமை ஒரு தாக்குதலுக்கான திட்டத்தை போட்டது. அதுதான் காரை நகர் கடற்படை தளத்தை தாக்கும் திட்டம். 1985 ம் ஆண்டு மாசி மாதம் 10 ந்திகதி தாக்குவதாக அதற்கு நாளும் குறிக்கபட்டது. அந்த செய்தி ஈபி யின் இராணுவபிரிவான பி எல் ஏ உறுப்பினர்களிற்கு தெரிவிக்கபட்டதும் அந்த செய்தி ஈபியின் முக்கிய ஆதரவாளர்கள் என்று பரவி அந்த தாக்குதல் நடப்பதற்கு சில நாட்களிற்கு முன்பே வீதியில் சாதாரணமாக சந்தித்து கொள்ளும் இருவர் "என்ன ஈபி காரைநகர் அடிக்க போகுதாமே "என்று கதைக்கின்ற அளவிற்கு யாழ் குடா எங்கும் அந்த செய்தி பரவி விட்டிருந்தது.


அப்படியானால் எங்கு என்ன செய்தி கிடைக்கும் என்று தன்னுடைய புலனாய்வு வலையை விரித்து வைத்திருக்கும் எதிரிக்கு செய்தி எப்படி போயிருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.ஈபி அமைப்பினரிற்கு யாழ் குடாவில் மானிப்பாய் மற்றும் அதனை அண்டிய கிராமங்களான நவாலி சங்கு வேலிப்பகுதிகளிலேயே இருபத்தைந்திற்கும் மேற்பட்ட சிறு முகாம்களும் மூன்று பெரிய பயிற்சி முகாம்களும் அமைந்திருந்தது எனவே இந்த தாக்குதலுக்கான தயாரிப்பு வேலைகளும் அதிகமாக இந்த பகுதிகளிலேயெ நடந்தது.

மானிப்பாயில் உள்ள வாசிகசாலையின் பொறுப்பாளராக ஈபி அமைப்பின் அரசியல் பிரிவில் இருந்த அலெக்ஸ் என்பவர் இருந்ததனால் மானிப்பாய் வாசிக சாலையும் ஈபி அமைப்பின் அதிகாரபூர்வமற்ற ஒரு அரசியல் அலுவலகமாகத்தான் இயங்கி வந்தது.
எப்பொழுதும் ஈபி அமைப்பின் அரசியல் உறுப்பினர்கள் அங்கு காணப்படுவார்கள் அந்த அமைப்பின் சுவரொட்டிகள் துண்டு பிரசுரங்கள் என்பனவும் அங்குவைத்துதான் அதிகமாக எழுதப்படும். நான் செய்திபத்திரிகை புத்தகங்கள் படிக்க அங்குதான் போவது வழைமை அதனால் எனக்கும் பல ஈபி அரசியல் பிரிவினர் பழக்கமானார்கள்.காரை நகர் தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாள்களிற்கு முன்பே அந்தவாசிகசாலையில் ஈபி உறுப்பினர்கள் பரபரப்பாக சுவரொட்டிகள் தயாரிக்க தொடங்கிவிட்டிருந்தனர்.


காரைநகர் கடற்படைத்தளம் மீதான தாக்குதல் பலநூறு கடற்படையினர்பலி என்றும் பலரக ஆயுதங்கள் கைப்பற்ற பட்டன என்றும் அவற்றில் எழுதியிருந்தார்கள். அவற்றை பார்த்த நான் அலெக்ஸ் என்ற உறுப்பினரிடம் கேட்டேன் என்ன முதலே இப்பிடி எழுதிவைச்சிட்டு தாக்கதலுக்கு போகபோறீங்களா?? சிலநேரம் ஏதும் பிழைச்சால் என்று சந்தேகத்தோடு இழுத்தேன்
.அதற்கு அவர் சொன்னார் இல்லை பிழைக்காது அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்திருக்கு என்று நம்பிக்கையோடு சொன்னார்.தாக்குதல் நாளன்று மாலை யாழ்குடாவின் பெரும்பாலும் அனைத்து சந்திகளிலும் ஈபி உறுப்பினர்கள் காவலில் நின்றனர்.அந்த தாக்குதலுக்கென்று விசேடமாக ஒரு கனரக வாகனமொன்றை கவசவாகனமாக தயாரித்து மூளாய் பகுதிக்கு அனுப்பியிருந்தனர்.


ஈபியினரின் வாகனங்கள் மற்றும் பொதுமக்களிடம் வாங்கி வைத்திருந்த வாகனங்களில் என்று மாலையே ஈபியின் இராணுவ பிரிவான பி எல் ஏ (மக்கள் விடுதலை இராணுவம்)உறுப்பினர்கள் மட்டுமன்றி அரசியல் பிரிவினர் மற்றும் ஆதரவாளர்கள் கூட அந்த வாகனங்களில் ஏறி காரை நகரிற்கு அண்மித்த இடங்களிற்கு போய்கொண்டிருந்தனர்.
அதில் போனவர்கள் பலரின் கைகளில் ஆயுதங்களே இருந்திருக்கவில்லையென்பது குறிப்பிட வேண்டிய விடயம்.ஏதோ கோயில் திருவிழாவிற்கு போவது போல கைதட்டி ஆரவாரம் செய்தபடி சந்திகளில் நின்ற மக்களிற்கு கைகாட்டியபடி போய்கொண்டிருந்தனர்.அப்போ நானும் மானிப்பாய் மருதடி சந்தியில் நின்று வேடிக்கை பார்த்துகொண்டிருந்த போது அங்கு நின்ற பழைய புலிஉறுப்பினர் ஒருவர் சொன்னார் இவங்கள் போறதை பார்தால் காரை நகர் அடிக்க போற மாதிரி தெரியேல்லை.


வீணா கன பேரை பலி குடுக்கபோறாங்கள் என்றார். எல்லோரும் எதிர்பார்த்துகொண்டிருக்க நள்ளிரவு தாண்டியதும் வெடிச்சத்தங்கள் கேட்க தொடங்கியது . அப்பொழுதே ஈபியின் அரசியல் பிரிவினர் அவசர அவசரமாக ஏற்கனவே எழுதிவைத்திருந்த காரை நகர் கடற்படைத்தளம் வீழ்ந்து விட்டு பலநூறு படையினர் பலி என்கிற சுவரொட்டிகளை ஒட்டதொடங்கி விட்டிருந்தனர்.


காரணம் தாக்குதலுக்கு போனவர்களிற்கும் சரி காவலிற்கு நின்றவர்களிற்கும் சரி அரசியல்பிரிவினரிற்கும் சரிதொடர்பு கொள்ள எவ்வித தொலை தொடர்பு வசதிகளும் அவர்களிடம் இருந்திருக்க வில்லை.எதிரி ஏற்கனவே கிடைத்து விட்ட தகவல்களால் தனது நிலைகளை பலப்படுத்தி பதுங்கியிருந்து தொடுத்த தாக்குதலில் தாக்குதலை வழிநடத்தியவர்களின் அனுபவமின்மையாலும் சரியான தொலை தொடர்பு வசதிகள் இல்லாததாலும் களநிலைமையை உடனடியாக கட்டுபாட்டிற்கு கொண்டு வரமுடியாமலும் உடனடியாக பின்வாங்கி அங்கிருந்து வெளியெற முடியாமலும் பல ஈபி உறுப்பினர்களும் அந்த தாக்குதலை வழிநடத்திய முக்கியமான ஒருவரான சின்னண்ணை என்கிற சின்னவனும் இறந்து போனார்கள்.இறந்துபோன தங்களது உறுப்பினர்கள் பலரின் பெயர் விபரங்களை கூட ஈபியினர் வெளியிடாமல் மறைத்துவிட்டனர்.இந்த தாக்குதலை வழிநடத்திய பி எல் ஏ தளபதிகளில் இன்றைய ஈ.பி.டி.பி டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவராவார்

இவர் பி எல் ஏ தளபதியாக இருந்த காலத்தில் உருப்படியாக செய்த ஒரேயொரு தாக்குதல் தமிழ்நாடு சூழைமேட்டில் இவர் பயணம் செய்த ஆட்டோகாரன் மீற்றருக்கு மேலை அஞ்சுரூபாய் போட்டு குடுங்க என்று கேட்டதற்காக சுட்டுகொன்றுவிட்டார்.
இவரை விடுவோம் இவரைப்பற்றி எழுத போனால் கட்டுரை எங்கேயோ போய்விடும். இங்கு அவர்கள் திட்டம் போட்டதில் தவறுஒன்றும் இல்லை ஆனால் முக்கிய விடயம்.ஒரு யுத்தகள வீரனிற்கு வெறும்பயிற்சிகளும் ஆயுதங்களும் ஆலோசனைகளும் மட்டும் அவனை சிறந்தவீரனாக்கி விடாது அதற்கு முக்கியம் அவனது யுத்தகளஅனுபவங்கள் தான் அதற்கு சிறந்த உதாரணத்தை நாங்கள் எங்கும் தேடி போக வேண்டியதில்லை


இலங்கை இராணுவத்தையே உதாரணமாக எடுக்கலாம் இலங்கை இராணுவம் உலக நாடுகளிடம் பெறாத பயிற்சிகளா?? அல்லது அவர்கள் பெறாத ஆலோசனைகளா??அவர்களிடம் இல்லாத ஆயுதங்களா?? ஆனாலும் அவர்களால் புலிகளை வெற்றி பெற முடியாததன் காரணம். புலிகளின் களஅனுபவம் சரியான வழிநடத்தல் மற்றும் அவர்களின் களஅனுபவங்களினுடான மனோபலமும் யுத்ததந்திரமும் என்றுசின்ன குழந்தையும் சொல்லும்.


எனவே அதுவரை ஒரு கண்ணிவெடித்தாக்குதலை கூட செய்து அனுபவமில்லாத இயக்கம் எடுத்த எடுப்பிலேயெ ஒரு தளத்தின் மீதான தாக்குதலை நடாத்த திட்டமிட்டதுதான் தவறு.ஒரு காவல் நிலையை தாக்குவதானால்கூட அதற்கு ஓரளவு எதிரியின் நடமாட்டம் அவனது நடவடிக்கை பற்றிய வேவுதகவல்கள் தரவுகள் கட்டாயம் தேவை. ஆனால் காரைநகர் தளத்தின் பாதுகாப்பு அரண்கள் அதன் பாதுகாப்பு வேலிகள் எப்படி எங்கே எல்லாம் அமைந்திருக்கும் என்று சரியான வேவு தகவல்கள் எதுவுமின்றி ஏன் காரைநகர் தளம் என்னவடிவில் எத்தனை கி.மீ சுற்றளவில் எங்கே சரியாக அமைந்திருக்கின்றது என்கிற அடிப்படை தகவல்கள் கூட அவர்களின் தாக்குதல் அணியினரிற்கு போதியளவு தெரிந்திருக்கவில்லை என்பதுதான் மோசம்.

ஏனெனில் தாக்குதலிற்கு சென்றவர்களில் யாழ்மாவட்டம் தவிர்ந்த வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இருந்தனர் இவர்களிற்கு காரைநகர் தளம் மற்றும் அமைந்திருந்த இடம் என்பன பற்றிதெரிந்திருக்கவில்லை.இதுவும் அந்த தளத்தின் மீதான தோல்விக்கு ஒரு காரணம். இத்துடன் இதை நிறைவு செய்து இனி இந்திய படையுடன் இவர்கள் சேர்ந்த இருண்ட காலத்திற்கு செல்வோம் அடுத்த பகுதியில்

No Comment