நாடகத்தினை கேட்பதற்கு இங்கு அழுத்துங்கள்http://www.tamilnews24.com/twr/audio/sathiri/avalam14.smil
அன்புள்ள கறுப்பி நாயே
8:18 AM, Posted by sathiri, 2 Comments
தொடர்ந்து என்ரை கதையையே எழுதிக் கொண்டு வாறதாலை இந்தமுறை ஒரு நாய்க்கதை எழுதப்போறன்.எல்லாம் ஒண்டுதான் எண்டு முணுமுணுக்காமல் படியுங்கோ ஏணெண்டால் இது 80 களிலை ஊரிலை நான் வளர்த்த நாயின்ரை கதைதான். நாங்கள் வளர்த்த நாய் வயசு போய் செத்துப்போயிருந்த நேரம் என்ரை நண்பன் இருள்அழகனின்ரை வீட்டு நாய் நாலைஞ்சு குட்டிபோட்டிருந்தது.நான் அதிலை ஒரு நரைநிற கடுவன் ஒண்டையும் கறுப்பு பெட்டைக்குட்டி ஒண்டையும் தூக்கிக் கொண்டு வந்திட்டன்.இப்ப அதுகளுக்கு பேர் வைக்க வேணுமெல்லோ??.வீட்டிலை ஆளாளுக்கு ஒவ்வொரு பெயரை சொல்லிச்சினம். அதே நேரம் என்ரை தங்கச்சி.. நாயளின்ரை நிறத்தையே பெயராவைப்பம் எண்டிட்டு நரையனுக்கு பிறவ்ணி எண்டும் கறுப்பு குட்டிக்கு பிளக்கி எண்டும் வைப்பம் எண்டாள்.அவளின்ரை யோசினை எனக்கு பிடிச்சிருந்தாலும் நாங்கள் ஆர் தமிழரல்லோ அதாலை எனக்கு இங்கிலிசிலை பேர் வைக்கிறது பிடிக்கேல்லை அதை அப்பிடியே தமிழிலையே நரையன் எண்டும் கறுப்பி எண்டும் பேர் வைச்சு பக்கத்து வீடு இருள்அழகனின்ரை வீடு எண்டதாலை தாய் நாய் தேடிவந்து குட்டியை கவ்விக்கொண்டு போகாமல் இருக்க அதுளை எங்கடை வீட்டு தண்ணித்தொட்டிக்குள்ளை வைச்சு பால்குடுத்து வளத்தன்.இரண்டும் நல்லா வளந்து சாப்பிட தொடங்கத்தான் நரையனுக்கு ஏதோ ஒரு வருத்தம் பிடிச்சிட்டுது.என்னத்தை சாப்பிட்டாலும் மெலிஞ்படிதான் இருந்திச்சிது.
ஆனால் கறுப்பி மினுமினுவெண்டு கொழுத்து வளந்துகொண்டிருந்தது. நரையனுக்கு சாப்பாடு பால் எல்லாம் கூடுதலாய்குடுத்தும் பாத்தன் ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை. அந்தநேரம் நரையனை அமெரிக்காவுக்கு கொண்டுபோய் வைத்தியம் பாக்கிற அளவுக்கு என்னட்டை வசதி இல்லாததாலை பக்கத்திலை சண்டிலிப்பாயிலை இருந்த அரசாங்க மிருக வைத்திரிட்டை கொண்டு போய் காட்டினன்.அங்கை சுமணா எண்டு எனக்கு தெரிஞ்ச அக்கா ஒராள்தான் வைத்தியராய் இருந்தவா.
அவாவும் நரையனை பிடிச்சுப்பாத்திட்டு சாப்பாட்டோடை கலந்து குடு எண்டுசில விற்றமின் குளிசையளை எழுதித்தந்து விட்டார். நானும் அந்த விற்மின் குழிசையளையும் வாங்கி குடுத்தும் பாத்தன் ஒரு மாற்றமும் இல்லை.ஆனால் நரையனுக்கு எந்த நேரமும் சாப்பாடு தேவைப்பட்டது. சாப்பாட்டோடை யாரையாவது கண்டாலே காணும் உடைனை அவதிப்பட்டு அவைக்கு மேலை பாய்ஞ்சு பறிச்சுப்போடும். ஒருக்கால் சோறு போடப்போன அம்மாவை சோறு போடமுதலே அவதிப்பட்டு சோத்தோடை சேத்து அம்மாவின்ரை கையையும் கடிச்சுப்போட்டுது. அதுமட்டுமில்லை சாப்பாட்டுக்காக பக்கத்து வீடுகளுக்குள்ளையும் நுளையத் தொடங்க நரையனை எந்த நேரமும் கட்டிப்போட்டிட்டு சாப்பாட்டை தட்டிலை போட்டு தூர நிண்டு தட்டை தள்ளிவிட வேண்டிய நிலைமைக்கு வந்திட்டுது. ஆனால் அது எந்த நேரமும் சாப்பாட்டுக்கு அவதிப்படுறதாலை அதுக்கு அவதி எண்டிற பட்டத்தை குடுத்துஎல்லாரும் அவதி நரையன் எண்டு கூப்பிடத் தொடங்கிட்டினம்.சாப்பாடு போட்டு அலுத்துப்போன அம்மாவோ என்னட்டை" டேய் இந்த நாயைக் கட்டி சாப்பாடு போட்டநேரம் ஒரு யானையை கட்டிசாப்பாடு போட்டிருக்கலாம் பேசாமல் எங்கையாவது கொண்டு போய் விட்டிட்டுவாடா "எண்டு சொன்னாலும் எனக்கு நரையனை விடமனசு வரேல்லை.
ஆனால் நரையனுக்கோ வலை ஆட்டக்கூட பலமில்லாமல் மெலிஞ்சு போய்விட்டது.அதை திருப்பவும் தூக்கிக் கொண்டு மிருகவைத்தியர் சுமணாக்காவிட்டை போனன்.அவாவும் நரையனைப்பாத்திட்டு அம்மா சொன்மாதிரியே எங்கையாவது கொண்டுபோய் விடு எண்டு சொல்லவும் எனக்கு வந்த கோபத்திலை அவாவைப் பாத்து " நீங்கள் உண்மையா மிருகவைத்தியர் தானோ இல்லாட்டி கொழும்பிலை போய் கோழி வளப்புப் பற்றி படிச்சுப்போட்டு இஞ்சைவந்து மிருக வைத்தியர் எண்டுசொல்லிக் கொண்டு திரியிறீங்களோ எண்டு கேட்டிட்டன்.அவாவும் கோவத்தோடை தம்பி இந்த வருத்தத்துக்கு யாழ்ப்பாணத்திலை மருந்துவசதி இல்லை கொழும்பிலைதான் அதுவும் ஸ்பெசலாய் சொல்லி எடுப்பிக்கவேணும் வேணுமெண்டால் மருந்து ஊசிமருந்துகளின்ரை பேரை எழுதித்தாறன் கொழும்பிலை போய் வாங்கிக் கொண்டு வா. நான் அந்த ஊசியளை போட்டு விடுறன் எண்டு சொல்லி ஒரு கடுதாசியிலை விறுவிறெண்டு கொஞ்ச மருந்துகளின்ரை பேரை கிறுக்கி கையிலை தந்துபோட்டு இனி உன்ரை நாயோடை இஞ்சை வாறதெண்டால் இந்த மருந்துகளோடை வா இல்லாட்டி இந்தப் பக்கம் வராதை எண்டு சொல்லி அனுப்பி "இல்லை" கலைச்சு விட்டிட்டா.அந்தநேரம் மனுசருக்கு வருத்தம் வந்தாலே விக்சை தடவிப்போட்டு கொத்தமல்லியை அவிச்சு குடிச்சுப்போட்டு போத்து மூடிக்கொண்டு படுத்திடுவினம்.இதுக்கை நான் என்ரை நாய் நரையனுக்கு கொழும்பிலை இருந்து மருந்து எடுத்து ஊசி போட்டு இதெல்லாம் நடக்கிற காரியமோ ?? எண்டு நினைச்சபடி வீட்டை போறதுக்கு சண்டிலிப்பாய் சந்தியை கடக்கேக்குள்ளைதான் அவரின்ரை ஞாபகம் வந்திச்சுது.
அவர்தான் சண்டிலிப்பாய் சீரணி நாகம்மாள்(நாகபூசணியம்மன்) கோயிலடியிலை இருக்கிற சாமியார்.இவரைப் பற்றி ஒரு தனிப் பதிவே எழுதலாம் ஆனால் இப்ப அவரைப் பற்றின கொஞ்ச விளக்கத்தோடை கதையை தொடருறன். இவர் குள்ளமாய் பெரிய வண்டியோடை இடுப்பிலை காவி. நடு மண்டையிலை அள்ளிமுடிஞ்ச சடாமுடி . நாலைஞ்சு ஊருத்திராச்சம் மாலை சிவப்புக் கண்களோடை சின்னப்பிள்ளையள் பாத்தால் பயப்பிடுற ஒரு தோற்றம். இவர் கன காலம் இமயமலையிலை போய் தவமிருந்திட்டு வந்தவர் எண்டு ஊரிலை கதைப்பினம். ஆனால் உண்மையிலை இமய மலையிலைதான் போய் தவமிருந்தாரோ இல்லாட்டி திருகோணமலையிலை போய் கொஞ்சக்காலம் ஆரும் சொந்தக் காரர் வீட்டிலை நிண்டிட்டு வந்தாரோ எண்டு உண்மை பொய் தெரியாது.ஆனால் எங்களுக்கு சின்னிலை ஏதாவது காச்சல் வருத்தம் வந்தால் அப்பா எங்களை அந்தச்சாமியாரிட்டை கூட்டிக்கொண்டு போனல் அவரும் விபூதியை மந்திரிச்சு பூசிப்போட்டு கையிலை ஒரு நூலும் கட்டிவிடுவார்.அதுக்காக மருந்து எடுக்காமல் விடுறதில்லை மருந்தும் எடுக்கிறதுதான். எங்களை மாதிரி ஊரிலையும் கனபேர் அவரிலை நம்பிக்கை.சரி சாமியாராவது என்ரை நரையனை கைவிட மாட்டாரெண்டு நினைச்சு அவரிட்டைப்போய் நரையனைக் காட்டி விசயத்தை சொன்னன் அவரும் யோசிச்சுப்போட்டு கொஞ்ச விபூதியை எடுத்து ஏதோ முணுமுணுத்துப் போட்டு நரையனுக்கு மேலை எறிஞ்சுபோட்டு போ எல்லாம் சரி வருமெண்டு அனுப்பிவிட்டார்.நானும் வீட்டை போய் நரையனை சங்கிலியிலை கட்டாமல் அப்பிடியே விட்டிட்டன். அடுத்தநாள் காத்தாலை நரையன் வீட்டு மரவள்ளித் தோட்டத்துக்கை செத்துப்போய் கிடந்திச்சிது.கவலையோடை அதை எடுத்து வளவுக்குள்ளை தாட்டுப்போட்டு அந்த இடத்திலை ஒரு நெல்லி மரத்தையும் நட்டுட்டுப்போட்டு அதோடை நரையனின்ரை கதையும் முடிஞ்சு போச்சுது. என்னடா கறுப்பி நாயே எண்டு தலைப்பை போட்டிட்டு நரையனைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறன் எண்டுதானே நினைக்கிறீங்கள். இனி கறுப்பிக்கு வாறன்.
கறுப்பிதான் வீட்டிலை செல்லப் பிள்ளை அதோடை நல்ல புத்திசாலி நாங்கள் கதைக்கிறதெல்லாம் பெரும்பாலும் அதுக்கு விளங்கும் சொல்லுறதை செய்யும்.நாங்கள் பள்ளிக் கூடம் போகேக்கை சைக்கிளுக்கு பின்னாலையே பிரதான வீதி வரைக்கும் ஓடியந்து நாங்கள் மறையும் வரைக்கும் அங்கை நிண்டு பாத்திட்டு வீட்டை ஓடிடும். ஆனால் ஒருநாள் கூட பிரதான வீதிக்கு வராது.அதே மாதிரி மத்தியானம் நாங்கள் பள்ளியாலை வீட்டை வாற நேரத்துக்கு சரியாய் ஒழுங்கை முகப்பிலை வந்து காவல் நிக்கும்.எங்களிலை உள்ள பாசம் மட்டுமில்லை பள்ளிக் கூடத்திலை தாற விசுக்கோத்திலை நாங்கள் கறுப்பிக்கெண்டு கொஞ்சம் கொண்டு வருவம். கறுப்பிக்கு அதை அந்தரத்திலை எறிய அது பாய்ஞ்சு பிடிச்சு சாப்பிட்டபடி பின்னாலை ஓடிவரும்.நான் சாப்பிட்டிட்டு முத்தத்திலை இருக்கிற வேப்பமரத்துக்குக் கீழை உள்ள வாங்கிலை கொஞ்சநேரம் ஒரு குட்டி நித்திரை போடுவன் கறுப்பியும் வந்து வாங்குக்கு கீழை படுத்திடும் நான் நித்திரையான நேரம் வீட்டுக்காரரைத் தவிர வேறை ஒருத்தரும் எனக்குக் கிட்ட வரமுடியாது.
அப்பிடி யாரும் வந்தால் பல்லைக் காட்டி உறுமி ஒரு எச்சரிக்கை விடும் அதுக்கு மேலையும் கிட்ட வந்தால் அவ்வளவுதான் அது எங்கை பாஞ்சு எதைக்கவ்வும் எண்டு தெரியாது.நான் வீட்டை விட்டு வெளியேறி இருந்த காலங்களிலை வீட்டுக்கு கடிதம் எழுதேக்குள்ளை கறுப்பியை வடிவாய் கவனியுங்கோ எண்டு ஒரு வசனம் எழுதத் தவறுறேல்லை. அதே மாதிரி நான் வீட்டை போற நாட்களிலை என்னைக் கண்டதும் கறுப்பி எனக்கு மேலை பாய்ஞ்சு எனக்கு நோகாமல் செல்லமாய் உடம்பெல்லாம் கடிச்சு விழையாடும்.இந்தியனாமி காலத்திலை எங்கடை ஊரிலை சண்டை நடக்கேக்குள்ளை பலஊர்நாய்கள் வெடி மற்றது குண்டுச் சத்தத்துக்கு திக்குத் திசை தெரியாமல் ஊரை விட்டே ஓடியிருந்ததுகள். எங்கடை வீட்டிலையும் எல்லாரும் அகதிகளாய் கோயில்லை போய் இருந்த நேரமும் கறுப்பி வீட்டிலையேதான் படுத்திருந்தது. பிறகு இந்தியனாமி எல்லா இடமும் பிடிச்சால் பிறகு எங்கடை ஊரிலை ஒருத்தன் இந்தியனாமியோடை சேந்து புலிகளுக்கு ஆதரவு குடுத்த மற்றது போராளிகளின்ரை வீட்டுக்காரர் எல்லாருக்கும் பிரச்சனையள் குடுத்துக்கொண்டிருந்தான் . அவன் ஒருநாள்.. அம்மாவும் தங்கச்சியும் தனிய வீட்டிலை இருந்தநேரம் ஆமியொடை எங்கடை வீட்டையும் வந்து ஆயுதம் இருக்கு செக் பண்ணப்போறம் எண்டிட்டு தங்கச்சியின்ரை கையைப் பிடிச்சு இழுக்க இதைப் பார்த்த கறுப்பி பாய்ஞ்சு அவனைக்கடிச்சு குதற தொடங்க இந்தியனாமி ஒருத்தன் துவக்காலை கறுப்பிக்கு அடிக்க. இன்னொரு ஆமியின்ரை துவக்கு குண்டுகள் கறுப்பியை துளைக்க கறுப்பி சுருண்டு விழுந்ததாம். அதோடை அவங்கள் போட்டாங்கள் எண்டு சில நாளுக்கு வீட்டை போன என்னட்டை தங்கச்சி அழுதபடி சொல்லிப்போட்டு வளவுக்குள்ளை ஒரு இடத்தைக் காட்டி இஞ்சைதான் கறுப்பியை தாட்டிட்டு அதிலை ஒரு மாங்கண்டு நட்டிருக்கிறன் எண்டாள்.
சிலநாளுக்குப் பிறகு அந்த அவனை யாரோ மனிப்பாய் அந்தோனியார் கோயிலுக்கு பக்கத்திலை வைச்சு சுட்டு. அவன் செத்துப்போனான் எண்டு ஊர்சனம் கதைச்சிச்சினம்.கறுப்பியின் ஆத்மாவேதான் அவனைப்பழிவாங்கியிருக்க வேண்டும் எண்டு நினைச்சன். இந்த வருசமும் அந்த மாமரம் நல்லாய் சிலுத்து காச்சிருக்கு ஆனால் சாப்பிடத்தான் நீங்கள் இலலையெண்டு அம்மா சொன்னா .