Friday, December 14, 2012

பங்குபிரிப்பும் படுகெலையும் பாகம் 3

 பங்குபிரிப்பும் படுகெலையும் பாகம் 3
 
(பூபாளம் கனடா)
சாத்திரி
 
கடந்த தெடரில் பங்குபிரிப்பும் 1995ம் ஆண்டு புலிகளின் புலனாய்வு மற்றும் வெளிக்கட்டமைப்பை சேர்ந்தவர்களாலேயே புலிகளின் அனைத்துலகத்தால் நடாத்தப்பட்ட  வியாபார நிலையமும் அவர்களது அலுவலகமும் தாக்கப்பட்டதை  எழுதியிருந்தேன். அது பலரிற்கும் ஆச்சரியத்தை கொடுத்திருந்தது, என்னுடைய நண்பர்கள் மட்டுமல்ல பல முன்னைநாள் போராளிகள் கூட அந்தச் சம்பவம்பற்றி அறிந்திருக்கவில்லை,உண்மையிலேயே இலங்கை புலனாய்வாளர்களோ அல்லது ஒட்டுக்குழுக்களோ நடத்தியதாகவே இது வரை காலமும் நினைதஇதிருந்தார்கள், அதேபோலத்தான்  புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தை சேர்ந்தவரே தங்களது பொறுப்பாளரை போட்டுக்கொடுத்த சம்பவம் ஒன்றும் யெர்மனியில் நடந்தது,
 
 
புலிகள் அமைப்பின் முடிவிற்கு பின்னர் அனைத்துலக செயலக பொறுப்பாளர் கஸ்ரோ இறந்துபோக வெளிநாட்டு அனைத்துலகச்செயலகம் அனைத்தையும் நோர்வே யில் இருந்து நெடியவன் என்பவர் இயக்க அவரிற்கு அடுத்த நிலை பொறுப்பாளராகவும் யெர்மனிய பொறுப்பிலும் இருந்தவர்தான் வாகீசன் என்பவர். புலிகளின் முடிவிற்கு பின்னர் நெடியவனும் வாகீசனும் கனடா அமெரிக்கா தவிர்ந்த மற்றைய நாடுகளிற்கு பயணம் செய்து புலிகள் அமைப்பின் சொத்து விபரங்களை திரட்டியவர்கள்  தங்களின் நம்பிக்கைக்குரிய தாங்கள் கைகாட்டும் நபர்களின் பெயரிற்கு மாற்றி விடும்படி கோரிக்கை வைத்தனர் ,மறுத்தவர்கள் மிரட்டப்பட்டனர்
 
vakesan_zps04d82faf.jpg
,
அதேபோலத்தான் சுவிசிலும் அனைவரிடமும் கோரிக்கை வைத்தபோது சுவிஸ் பொறுப்பாளராக இருந்த குலம்  இவர்களது கோரிக்கைக்கு மறுத்ததோடு பலர்  தன்னை நம்பித்தான் கடன் எடுத்து பணம் தந்திருக்கிறார்கள் எனவே வியாபார நிலையங்களால் வரும் வருமானத்தை வைத்து அந்தக்கடன்களை அடைக்கவேண்டும் என்று சொன்னதற்கு. கடன் அடைக்கிற வழி எங்களிற்கு தெரியும் நீ உனது வேலையை பார் இன்றிலிருந்து நீ பொறுப்பாளர் இல்லையென்று விட்டு நெடியவன் குலத்தை தாக்கி அலுவலகத்தை விட்டு துரத்தியும்விட்டிருந்தார்கள், இங்கு குலம் என்பவர் யார் என்றும் சுருக்கமாக சொல்லி விடுகிறேன், சுவிஸ் நாட்டில் புலிகளின் பொறுப்பாளரக இருந்த முரளி  தற்சமயம் கனடாவில் வசிக்கிறார் இவர் நிதி சேகரித்தது சிலரை அச்சுறுத்தியது தொடர்பா சுவிஸ் காவல்த்துறையால் கைதான பின்னர் சுவிஸ் பொறுப்பை ஏற்றவர் குலம்,எழுபதுகளின் இறுதியில் பிரபாகரன் அவர்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்திய காலங்களில் பிரபாகரனை புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தனது வீட்டில் தங்கவைத்து பராமரித்ததில் இருந்து இவரது இயக்கத்துடனான தொடர்பு தொடங்குகின்றது,பிரபாகரனே குலம் அண்ணை என்று மரியாதையோடு அழைக்கப்பட்டதொரு மனிதர்,
 
ltteSwisskulam-147x150_zps1beb18ec.jpg
 
1984 ம் ஆண்டு இலங்கையரசின் அவ்ரோரக விமானத்தை தானே தயாரித்து எடுத்துச்சென்ற நேரக்கணிப்பு குண்டின் முலம் தகர்த்தவர்,அதற்கும் மேலால்  ஆரம்ப கால இயக்க விதிக்கு அமைய இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் ஒரு மனிதன் , பிரபாகரன் அவர்களே திருமணம் செய்த பின்னர்  பல தடைவைகள் குலத்தை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டும் தமிழீழம் கிடைக்கட்டும் பார்க்கலாம் என்று சொல்லிவந்தவர்,புலிகளை திட்டுபவர்கள் கூட குலம் அண்ணையை திட்டுவது கிடையாது அப்படியான ஒருவரை சொத்திற்காக நெடியவனும் வாகீசனும்அடித்து உதைத்திருந்தார்கள்,பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால்  இந்த செய்கைக்காக நெடியவனையும் வாகீசனையும்  வெளிநாட்டில்வைத்தே போட்டுத்தள்ள சொல்லியிருப்பார், 
 
nediyavan_zps0a7d3761.jpg
 
இதற்கு அடுத்ததாக யெர்மனியில் அனைத்து மானிலங்களிலும் தங்கள் பெயர்களில் சொத்துக்களை வைத்திருந்த பொறுப்பாளர்கள் அனைவரையும் அதன் விபரங்களோடு தன்னை வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்த வாகீசன் சந்திக்கும் இடம் திகதி நேரம் அனைத்தையும் அறிவித்து விடுகிறார். அவர்கள் சந்திப்பதாக சொல்லியிருந்த  உணவு விடுதியில் வாகீசன் காத்திருக்கிறார். பெரும்பாலனவர்கள் வந்துசேர்ந்துவிட்டிருந்தார்கள் முக்கியமான ஒருவரைத்தவிர,அவர் யாரெனில் தென்மானிலங்களிற்கு பொறுப்பாக இருந்த ஸ்ருக்காட் நகரை சேர்ந்த சிறிரவி  என்பவரே,  சிறிரவிக்காக காத்திருந்தவேளை சிறிரவி வரவில்லை அவரிற்கு பதிலாக அங்கு வந்தவர்கள் யெர்மனிய காவல்த்துயையினர், வாகீசனையும் அவரோடு நின்றவர்களையும் கைது செய்கிறார்கள், ஒபகௌசன் என்னும் இடத்தில் இயங்கிய வாகீசனின் அலுவலகத்தினுள் புகுந்த யெர்மன் காவத்துறையினர் அங்கிருந்த ஆவணங்களையும் எடுத்துச் சென்றார்கள்.
 
வாகீசனை ஏற்கனவே யெர்மனிய காவல்த்துறையினர் தங்கள் கண்காணிப்பு வழையத்தினுள் கொண்டுவந்திருந்தாலும் அன்று அனைவரும் முக்கிய ஆவணங்களோடு சந்திப்பதை போட்டுக்கொடுத்ததேடு தன்னுடைய சொத்துக்களை சிறிரவி வாகீசனிடமிருந்து பாதுகாத்துக்கொண்டார்,  ஆனால் வழைமைபோல இலங்கை அரசின் சதி என்று தமிழ் இணையங்கள் எழுதித் தள்ள  இந்த கைதுகளின் பின்னணியில் தானே இருந்ததாக சிறீலங்காவிற்கான தூதர் ஜெகத்டயஸ் அறிவித்ததாகவும் செய்திகள் வெளியானது, தொடர்ந்தும் யெர்மனியில் பலர் கைதாகி விசாரணைகள் நடந்தாலும் இதுவரை புலிகள் அமைப்பில் ஒரு பெரும் பகுதியான தென்மானில பொறுப்பாளரான சிறிரவியை மட்டும் இன்னமும் யெர்மன் காவல்த்துறையினர் விசாரணை செய்யவில்லை.இவரிடமிருந்து தொடர்ந்தும் யெர்மன் காவல்த்துறை தகவல்களை பெற்றுக்கொண்டிருக்கலாம், எல்லாவற்றையுமே பணமாக்கத் தெரிந்த அனைத்துலகசெயலகம் வாகீசன் கைதானதும் ,வாகீசனை வெளியே எடுக்கவேண்டும் என்று அதற்கும் மக்களிடம் பணம் சேர்த்தார்கள், நிதி சேர்ப்பது விரும்பியவர்கள் கொடுப்பது அவரவர் விருப்பம் ஆனால் நிதியை சேகரிப்பவர்  சிறிரவியே . அவரே மாட்டியும் விட்டுவிட்டு வெளியே எடுக்க அவரே நிதியும் சேகரிக்கிறார்,சிறி ரவி தான் வாகீசனை போட்டுக்கொடுத்தார் என்று அறிந்த சிலர் சிறிரவியிடம் எதற்காக வாகீசனை போலிசிடம் போட்டுக்குடுத்தாய் எனகேட்டதற்கு அவர் சொன்ன பதில்  நான் போட்டுக் குடுக்கவில்லை நான் யேர்மனியில் வசிப்பதால் யேர்மன் நாட்டு காவல்த்துறையின் நடவடிக்கைக்கு ஒத்துளைப்பு கொடுத்தேன்  அது காட்டிக்கொடுப்பு அல்ல என்றாராம். இதே மற்றவங்கள் என்றால் துரோகி உளவாளி கட்டிவைத்து போட்டுத்தள்ளவேண்டும் ,
 
அதே இவர்களே தங்களுக்குள்ளை காட்டிக்குடுத்தால்  அது காவல்த்துறைக்கு ஒத்துளைப்பாம்,கவுண்டமணி பாணியில்  அடங்கொக்கா மக்கா என்று  சொல்லதோன்றுகிறதா,,ஆனால் வாகீசன் வெளியே வந்தபாடுதான் இல்லை, இதேபோலத்தான் பிரான்சில் பரிதி மற்றும் பலரும் கைது செய்யப்பட்டபோதும் பிரான்சிலும் அவர்களை வெளியே எடுக்கவென நிதி சேகரிக்கப்பட்டது  அதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டு அதற்கு பொறுப்பாளராக பாரிஸ் ஈழநாடு  பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார் , இந்தக்குழுவை பரிதி கைதின் பின்னர் பிரான்ஸ்  பொறுப்பை எடுத்த மயூரன் குட்டி அல்லது விடுதலை  என்பவரோடு சேர்ந்து அமைத்தவர்களில் நானும் ஒருவன் ,அந்த குழுவை அமைத்ததோடு நான் ஒதுங்கி விட்டிருந்தேன், பிரான்சிலும் நிதி சேகரிக்கப்பட்டது ஆனால்  கைதானவர் எவரது வழக்கிற்கும் அந்த நிதி செலவளிக்கப்படவில்லை .கைதானவர் அவரவர் தங்கள் உறவுகள் நண்பர்களின் உதவிகளுடனேயே வழக்கு செலவுகளை கவனித்திருந்தார்கள்.
 
 
இது இப்படியிருக்க யெர்மனியில் பரப்புரைக்கு பொறுப்பாக இருந்தவர் பெயர் அகிலன் என்பவர். இறுதி யுத்தத்திற்கு என சேகரித்த நிதியில் ஒரு பகுதி இவரது கைகளிலும் இருந்தது அதனை அவர் மடகஸ்காரில் முதலீடு செய்திருந்தார் அதேநேரம் அகிலன் சிறுவயதிலேயே யெர்மனிக்கு வந்துசேர்ந்தவர் யெர்மனிய குடியுரிமை பெற்றவர் இவரிற்கு யெர்மன் சட்டதிட்டங்கள் என்றால் என்ன யெர்மனிய காவல்த்துறை எப்படிப்பட்டது என்று தெரிந்திருந்திருந்தவர். வாகீசனின் அடிதடி அடாவடி அரசியலால் நிச்சயம் ஒரு நாளைக்கு மாட்டவேண்டி வரும் என்று தெரிந்திருந்தது ஆனால் வாகீசனை கட்டுப்படுத்த முடியாமல் இருந்தார். அதனால் நிரந்தரமாக குடும்பத்துடன் மடகஸ்காரிற்கு சென்று குடியேறிவிட திட்டமிட்டிருந்தார். ஆனால் யேர்மன் காவல்த்துறை முந்திவிட்டிருந்தது.வாகீசனை கைது செய்துவிட்டார்கள். அதை அறிந்த உடனே அகிலன் யேர்மனிய காவல்த்துறை எல்லாம் மொக்கனுகள் என நினைத்தாரோ என்னவோ அவசரமாக மடகஸ்காரிற்கு தனியா பறந்துவிட்டிருந்தார்.ஆனால் அவரது நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருந் யேர்மன் காவல்த்துறையினர்  அகிலனை மடகஸ்காரிலிருந்துயேர்மனிக்கு  நாடுகடத்தவைத்து யேர்மன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
 
இவையனைத்தும் அவ்வப்போது செய்திகளாக வெளிவந்தவைதான். அனைத்துலகச் செயலகம் புதிதாக விட்ட புலுடாதான்  மீள இணையும் புலிகள் என்கிறதொரு   காணொளி. 
கைத்தொலைபேசி முலம் எடுக்கப்பட்ட காணொளியில் முதலில் மாவீரர்நாள் உறுதி உரை என எழுத்து போகின்றது. பின்னர்  இருளான  மரங்கள் உள்ள  இடமொன்றில் முகங்கள் மறைக்கப்பட்ட சிலர் கறுப்பு உடையணிந்தபடி நிற்க முன்னால் ஒரு பெண் சிறிய ரோச்லைற் வெளிச்சத்தில் கடதாசியில் எழுதியிருப்பதை படிக்கிறார். தாங்கள் முள்ளிவாய்க்காலில் நின்றே உறுதியெடுப்பதாக தொடங்குகிறார். முள்ளிவாய்கால் பகுதிமுழுக்க முழுக்க இலங்கை ராணுவமே நிற்கிறதென்பது வேறை கதை. அறிக்கையை படித்தவர்   5ம் கட்ட ஈழப்போரை தொடங்கப்போகிறோம் என்கிறார்.ஒருவர் கைகளிலும் ஒரு பொல்லாங்கட்டை கூட இல்லை. சரி அவர்களது உறுதி மொழியில் அடுத்த கட்ட நடவடிக்கை கொள்கை விளக்க உரை தரைவரைப்பற்றிய தகவல்கள்.எதாவது வருமா என நானும் ஆவலோடு காத்திருந்தேன். ஆனால் அந்தப் பெண்மணியோ  வினாயகத்தையும்  அவரது சகோதரரையும் திட்டித்தீர்க்கிறார்,இதுதான் அவர்களது மாவீரர் உறுதி உரை. மற்றையவர்களை திட்டித்தீர்ப்பதுதான் அவர்களது 5 ம் கட்டப்போர் என்று அப்பொழுதுதான்  எனக்குப்புரிந்தது.
 
அறிக்கை படித்து முடிந்ததும் ஒருவர் ஆமிவாறான் ஓடுங்கோ என்பார் . அறிக்கை படித்து முடியும்வரை ஆமிக்காரரை காத்திருக்கச் சொல்லியிருப்பாங்கள் என்று நினைக்கிறேன். பற்றைகள் உள்ள பகுதியால் ஓடுகிறார்கள். தமிழ் சினிமாவில் கதாநாயகன் உசிலம்பட்டியில்  கொழுத்தும் வெய்யிலில் கதா நாயகியை கலைக்கத்தொடங்க  உடனேயே சுவிசில் கொட்டும் பனியில் பாடல் தொடங்குவதைப்போல  பற்றைக்குள்ளால் ஓடியவர்கள் திடீரென மணல் நிறைந்த கடற்கரை ஓரமாக இரண்டு கல்லறைகள் போல் மணலால் அமைக்கப்பட்டு  ஒரு தீப்பந்தம் ஏற்றிய இடத்தில் சத்தியப்பிரமாணம் எடுக்கிறார்கள். அத்தோடு அனைத்துலகத்தின் படம்காட்டல் முடிவடைகின்றது.  5ம் கட்ட ஈழப்போர் என்பது அடுத்தவரை திட்டித்தீர்ப்பது என்பதால் இக்கட்டுரையை எழுதத்தொடங்கியதிலிருந்து என்மீதும் 5 கட்ட ஈழப்போர் தொடங்கி விட்டது எனவே இந்தக் கட்டுரையில் வாகீசனின் கைது பற்றி  எழுதவேண்டி வந்ததால் பரிதி இறுதியாக தமிழரசனோடு நடாத்திய பேச்சு வார்த்தை பற்றி எழுதமுடியவில்லை. எனவே அதனை அடுத்த  பதிப்பில் பார்ப்போம்..தொடரும்...............

Saturday, December 08, 2012

பங்கு பிரிப்புக்களும் படுகொலையும் பாகம் 2

பங்கு பிரிப்புக்களும் படுகொலையும் பாகம்  2
(பூபாளம்  கனடா)
சாத்திரி

இந்தக் கட்டுரை முதல் பாகம் வெளியாகியிருந்த போதே மாவீரர் தினம் நடந்து முடிந்து விட்டிருந்தது  மூன்றாவது மாவீரர் தினத்தினை  இலண்டனில்  திடீரென அறிவித்தவர் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினரும் பிரபாகரனின் நண்பருமான மண்டைக் கண்ணன் என்று அறியப் பட்டவர். புலிகள் அமைப்பில் குண்டப்பா என்கிற பெயரோடு  புலிகள் அமைப்பின் பயிற்சிக்கு இந்தியாவிற்கு போகின்றவர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து அமைப்பிற்கு  ஊருக்கு அனுப்பப்படும் பொருட்கள் ஆகியவற்றை கவனிப்பதற்கு  கடற்கரைக்கு பொறுப்பாக இருந்தவர்.  அதே நேரம் புலிகள் அமைப்பின் முடிவிற்கு பிறகு புலிகளால் பிரேமதாசா காலத்தில் மாத்தையாவை தலைவராக்கி அரசியல் கட்சியாக பதிவு செய்யப் பட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்கிற கட்சியை பாலசுப்பிரமணியம் என்பவர்  இலண்டனில் சட்டரீதியாக பதிவு செய்திருந்தார் இவர்கள் இருவரும் இணைந்தே இந்த மூன்றாவது மாவீரர் நாளை அறிவித்திருந்தனர்.  பாலசுப்பிரமணியம் என்பவர் புலிகளின் வெளிநாட்டு பிரிவில் தென்னாபிரிக்காவிற்கு பொறுப்பாக  இயங்கியவர். 2001 ம் ஆண்டு புலிகளின் அனைத்துலக செயலகம்  வெளிநாட்டு பிரிவில் மாற்றங்கள் ஏற்படுத்தியபொழுது  இவரையும் வன்னிக்கு அழைத்து நந்தவனத்தில் வைத்து (நந்தவனம் என்பது அனைத்துலக பொறுப்பாளர் கஸ்ரோவின் அலுவலகம்) இவரது பதவியும் பறிக்கப்பட்டிருந்தது.திடீரென எதற்காக நீங்கள் மூன்றாவதாக புதியதொரு மாவீரர் தினத்தை அறிவித்தீர்கள் என்று கேட்டதற்கு கண்ணன் என்பவர் சொன்ன பதில் என்னவென்றால் இதுவரை மாவீரர் தினங்களை நடாத்தியவர்கள் அதனை வியாபாரமாக்கி விட்டார்கள் எனவே நீங்கள்தான் இதனை நடாத்தவேண்டும் என்று தலைவரே தங்களுடன் தொடர்பு கொண்டு சொல்லியிருந்தார் என்றிருக்கிறார்.


தலைவரே நேரிலை கதைத்தாரா என வாயை பிளந்தபடி ஆச்சரியமாக கேட்டவர்களிற்கு  கண்ணன் தொடர்ந்து தலைவர் கதைத்த கதையை சொன்னார். அதாவது  ஆபிரிக்காவின் ஒரு நாட்டின் கடற்கரையோரமாக ஒரு கப்பல் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கின்றது அதில் தான் தலைவர் தங்கியிருக்கிறார். அங்கிருந்துதான் சட்டிலைற் தொலைபேசி ஊடாகதன்னோடு கதைத்தாகவும் சொன்னவர் . தான் தலைவரோடு கதைத்ததை உறுதி செய்வதற்காக  இன்று அவர் கோழி சமைத்து உன்றதாக மேலதிக இலவச இணைப்பு தகவலையும் சொல்லியிருக்கிறார். எது எப்பிடியோ இவர்கள் மூன்றாவது மாவீரர் தினத்தை நடாத்தி அதற்கும் மக்கள்  போயிருந்தார்கள்.நூறு பேரளவில் வந்ததாக தகவல் சொல்லியிருந்தார்கள். இனிவரும் காலங்களில் இப்படியான பிரிவுகள் மேலும் அதிகரிக்கலாம்.


இனி பரிதி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் பின்னணி பற்றி பார்ப்போம்.இவர்களில் தாஸ் என்பவரை தவிர மற்றையவர்கள் பாரிசில் இயங்கும் வன்முறை கும்பல்களில் ஒன்றான பாம்புக் குழு எனப்படும் குழுவை  சேர்ந்தவர்கள். இவர்களின் ஆரம்பம் சுவிஸ் சுறிச் நகரத்தில் இயங்கியவர்கள் பின்னர் சுவிஸ் காவல்த்துறையின் கடுமையான நடவடிக்கைகளால்  அங்கிருந்து தப்பிவந்து பாரிசில் வசிப்பவர்களால் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறார்கள். அதே நேரம் கடந்த வருடம் இதேகாலப் பகுதியில் வெண்ணிலா என்னும் குழுவினரால் பரிதி மீது தாக்குதல் நடத்தப் பட்டது தாக்குதல் நடாத்தியவர்களை பிரெஞ்சு காவல்த்துறையினரும் அடையாளம் கண்டு விசாரணைகளை நடத்தியிருந்தார்கள். ஆனால் காலில் வெட்டு வாங்கிய பரிதி அவர்கள் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யமுன்வரவில்லை.அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி பரிதியின் நண்பர்கள் வற்புறுத்தியிருந்தார்கள். அதற்கு பரிதி சொன்ன பதில் என்னவெனில் போலிஸ் கேஸ் என்று போனால் பிறகு அவங்கள் இண்டு பக்கமும் நோண்டுவாங்கள்.ஏன் வெட்டிது என்று நோண்டத் தொடங்கினால் பாதிப்பு எங்களிற்கு தான் அதிகம் அதாலை பேசாமல் விடுவம் என்றதோடு அப்படியே விட்டுவிட்டிருந்தார்.

அதனால் பிரெஞ்சு காவலத்துறையினரும் பரிதி மீது தாக்குதல் நடாத்தியவர்களை சில நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விட்டு விடுதலை செய்து விட்டார்கள்.பிரான்ஸ் நாடு யெர்மன் சுவிஸ் நாடுகளைப் போல வெளிநாட்டு வன்முறை கும்பல்கள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுப்பது குறைவு காரணம் பிரான்சில் பலநாடுகளையும் சேர்ந்த பல்லின மக்கள் அதிகம் வாழும் நாடு அவர்களிற்குள் இது போன்ற வன்முறை கும்பல்களும் ஏராளம். இவர்களது பொதுவான தொழில் சிறிய அளவில் இருந்து பெரிய அளவு வரை  போதைப்பொருள் வியாபரம் கப்பம் சட்டவிரோத குடியேற்ற வாசிகளை ஆட்கடத்தல் என்பனவாகும்.அவர்கள் தங்களிற்குளேயே அடிபட்டு கொள்வார்கள். இடைக்கிடை கொலைகளும் விழும்.இவர்கள் பற்றிய விபரங்கள் அனைத்தையும் பிரெஞ்சு காவல்த்துறை திரட்டிக்கொண்டே இருப்பார்கள் இந்த கும்பலால் பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பிற்கோ அல்லது பிரெஞ்சு மக்களிற்கு ஆபத்து என்று வரும் போதுதான் செயலில் இறங்குவார்கள். மற்றபடி இந்த குழுக்கள் தங்களிற்கள் அடிபட்டாலென்ன சுடுபட்டாலென்ன இதற்காக தங்கள்நேரத்தையும் பணத்தையும் செலவு செய்ய மாட்டார்கள்.


இதே போலத்தான் தமிழ்குழுக்களிற்கிடையிலான மோதல்களையும் பிரெஞ்சு காவல்த்துறையினர்  பெரியளவில் கணக்கெடுப்பது கிடையாது இவர்களிற்கிடையில் மோதுப்பட்டு யாராவது இறந்தாலும் அதனை  கணக்குத் தீர்த்தல் என்கிற வகைக்குள் அடக்கி கொலையாளி பிடிபட்டாலும்  தண்டனை பெரியளவில் இருக்காது 5 அல்லது 6 வருடங்களில் சிறையை விட்டு வெளியே வந்து விடுவார்கள்.இதே போல பரிதி மீது நடந்த தாக்குதலையும் கணக்குத் தீர்த்தல் என்கிற அடிப்படையிலேயே அடக்கியிருக்கிறார்கள்.காரணம் பரிதி என்பவர் எம்மவர்களிற்கும் எமது சில ஊடகங்களிற்கும்தான் தளபதி. கேணல்.மனித நேய செயற்பாட்டாளர். ஆனால் பிரெஞ்சு காவலத்துறைக்கு அவர் ஒரு குற்றவாளி என்பது மட்டுமல்ல இவர் சார்ந்த அமைப்பும் பிரான்சில் தடை செய்யப்பட்டிருக்கும் ஒரு அமைப்பு.அவர் செய்த குற்றங்களிற்காக மூன்றரை ஆண்டுகள் தண்டனை பெற்றதொரு முன்னைநாள் கைதி என்பதோடு தொடர்ந்தும் காவல்த்துறையின் கண்காணிப்பில் இயங்கும் ஒருவர்.

எனவே ஒரு வன்முறை குழுவை செர்ந்தவரை இன்னொரு வன்முறைக்குழு கணக்குதீர்த்திருக்கின்றது என்பதே பிரெஞ்சுக் காவல்த்துறையின் பார்வை.
ஆனால் இதற்கிடையில் பிரான்சின் முன்னணி பத்திரிகையொன்று இந்தக் கொலை இலங்கை  தூதரகத்தின் பின்னணியில் நடாத்தப் பட்டதென்று ஒரு செய்தியையும் வெளியிட்டிருந்தது.அதனை  தொடர்ந்து வரும் காலங்களில் பார்ப்பதற்கு முன்னர். பரிதியை கொலை செய்தவர்கள் என சந்தேகத்தின் பெயரால் கைதாகி இருக்கும் பாம்பு குழுவிரிற்கும் பரிதிக்கும் இருந்த நெருக்கத்தையும் கொஞ்சம் பார்த்து விடுவோம்.

பிரான்சில் இயங்கிய புலிகளின் அனைத்துலகச் செயலகத்தின் பொறுப்பில் இருந்த அனைவருமே ஒவ்வொரு வன் முறைக் கும்பல்களை  தங்களோடு அரவணைத்து வைத்திருந்தனர் என்பது அனைவரிற்கும் தெரிந்த விடயம். இயக்கத்திற்கு பணம் கொடுக்க மறுக்கும் வியாபாரிகள் அல்லது சாதாரணமானவர்களை இந்த குழுக்களை வைத்தே  மிரட்டுவார்கள். பிரான்சிற்கு நாதன் (பாரிசில் சுட்டுக்கொல்லப் பட்டவர்)பொறுப்பாக இருந்த காலத்தில் முக்காப்புலா என்கிற குழுவை அரவணைத்து வைத்திருந்தார் இவர்களே யெர்மனியில் கேவலார் தேவாலயத்தில் ஆராதனைகள் நடந்துகொண்டிருந்தபோது தேவாலத்தில் புகுந்து சிலதமிழர்களை வாளால் வெட்டியதில் ஒருவர் கொல்லப்பட இந்தக் குழு யெர்மன் மற்றும் பிரெஞ்சு காவல்த்துறையின் இணைந்த நடவடிக்கையில் முடிவிற்கு வந்திருந்தது.நாதன் கொல்லப் பட்ட பின்னர் பொறுப்பெடுத்த இளங்கோ என்பவர் தானாகவே ஒரு குழுவை தொடங்கினார். புலிகள் அமைப்பில் இருந்து விலகி பிரான்சிற்கு வந்தவர்களை இணைத்து இந்தக்குழுவை தொடங்கினார்.இதற்கு குழந்தை என்பவர் தலைமை தாங்கினார் இந்தக் குழுவில்   சோதி.பரணி.ராகுலன்.பயஸ்.ஆகியோர் முக்கியமானவர்கள்.  இவர்களே  பாரிஸ் லாசப்பல் பகுதியில் பணம் கொடுக்க மறுத்த  V.S. CO  கடை உரிமையளரை தாக்கி கடையை உடைத்தது.  ஈழநாடு  பத்திரிகையை நடாத்திவரும் பாலச்சந்திரன் என்பவர்  புலிகள் பணம் என்றால் பெண்களையும் வைத்து வியாபாரம் செய்வார்கள் என்று  சொன்னதற்காக  அவரது மண்டையை உடைத்தது. குகன் (ஈரோஸ்) தாஸ்(ரெலோ) தவம் ஆகியோரை கடத்திக்கொண்டு போய் வெட்டியது  என்பன .

பிரான்சில் புலிகள் மீதான தடை கொண்டுவரப்பட இவர்களது செயற்பாடுகளும் முக்கியமானவை அந்தத் தடையோடு இவர்களது செயற்பாடுகளும் முடங்கிப் போக புதிதாக மீண்டும் பொறுப்பெடுத்த பரிதி இந்த பாம்புக்குழுவோடு நெருக்கமாகிக் கொண்டார்.
ஆரம்ப காலத்திலேயே  பிரான்சிற்கு பொறுப்பாக நாதன் இருந்த காலத்தில் புலிகளின் அனைத்துலகத்தால் நடாத்தப் பட்ட லூன் என்கிற வியாபார நிலையத்தையும் அவர்களது அலுவலகத்தையும் புலிகளின் புலனாய்வு பிரிவிலும் வெளிநாட்டு பிரிவிலும் இயங்கிய சிலரே அடித்து நொருக்கி அனைத்துலகத்தை சேர்ந்தவர்களிற்கு அடிபோட்ட சுவாரசியமான சம்பவம் ஒன்றும் நடந்திருந்தது.அதனையும் கொஞ்சம் சுருக்கமாக பார்த்து விடுவோம். பிரான்சில் எண்பதுகளின் இறுதியில் புலிகள் அமைப்பிற்கு வேலை செய்தவர்களில் முக்கியமானவர்கள்  நாதன் . ரங்கன்(தர்சன் இவர்தான் பிரான்சில் இருந்து ஒலிபரப்பாகும் ரி.ஆர்.ரி வானொயை  இயக்குபவர்) மற்றவர் மாணிக்ஸ் என்பவர்.


                                                                         (நாதன்)

இயக்கத்திற்கு சேகரித்த நிதியில் நாதன் கையாடல் செய்து விட அது பற்றி கணக்கு கேட்ட ரங்கனை  வன்முறை குழு ஒன்றிக்கு பணத்தை கொடுத்து நாதன் போடச்சொல்லி விட்டார்.  அதேபோல ரங்கனை அந்தக் குழு கத்தியால் குத்திவிட  ரங்கன்   கோமா நிலைக்கு சென்று உயிர் தப்பிவிட்டிருந்தார். அதன் பின்னர் அவர் இயக்க நடவடிக்கைளில் இருந்தும் ஒதுங்கிகொண்டு விட்டிருந்தார். பின்னர் மாணிக்சும் ஒதுங்கிவிட நாதனே பொறுப்பாளராக தொடர்ந்து கொண்டிருந்த காலப் பகுதியில்  1995 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம்  பாரிஸ் லாசப்பல் பகுதியில் இருந்த ஒரு மதுபானச்சாலையில் ரங்கனின் ஒன்று விட்ட சகோதரர் குமார்(தற்சமயம் கனடா) என்பவருடன் நானும் வேறு சில நண்பர்களும் அமர்ந்திருந்தோம்  குமாரை எனக்கு  ஊரிலேயோ  தெரியும்  குப்பிளான் கிராமத்தை சேர்ந்தவர். அவரது குடும்பம் புலிகள் அமைப்பின்  ஆதரவாளர்கள் என்பதால் எனக்கு அவர் பழக்கமாகியிருந்தார்.சிலர் பியர் குடிக்க சிலர் கோப்பி குடித்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது நாதன்  சிலரோடு அங்கு வந்து கோப்பி குடிக்கத் தொடங்க ஏற்கனவே பியர் குடித்த போதையில் இருந்த குமார் நாதனை பார்த்து முறைக்க  நாதன் குமாரிடம்  என்ன  முறைக்கிறாய் என்று தூசணவார்த்தைகளையும் கலந்து கேட்க  கோபமடைந்த குமார் எழுந்து போய் நாதனின் கண்ணாடியை  பறித்து காலில் போட்டு மிதிக்கிறார்.அதற்கிடையில் இருவரையும் இருபக்கத்தினரும்  விலக்கு  பிடித்துவிட நாதன் அங்கிருந்து வெளியேறி சுமார் இருநூறு மீற்றர் தூரத்திலிருந்த அவர்களது வியாபார நிலையமான லூன் கடை வாசலில் போய் நின்று தொலைபேசி மூலம் முக்கப்புலா குழுவினரை அழைக்க அவர்களும் இரண்டு கார்களில் வந்து இறங்கினார்கள்.

அதே நேரம் அன்றைய அனைத்துலகப் பொறுப்புக்களில் இருந்த மனோவும் அங்கு வந்து சேர்ந்திருந்தார்.நிலைமை மோசமாகப் போவதை உணர்ந்த  நாங்கள்  நான் .ஈசன். சிவா(டிஸ்னி உணவக உரிமையாளரின் மகன் எனது நல்லதொரு நண்பன்)ஆகியோர்  நாதனிடம் சென்று ஏதோ கோபத்திலை இப்பிடி நடந்து விட்டது பிரச்சனையை பெரிதாக்கவேண்டாம் என கேட்டதும். குமார் வந்து தன்னிடம் மன்னிப்பு கோரினால்  விட்டு விடுவதாக சொல்லியிருந்தார். திரும்ப வந்த நாங்கள் குமாரை பேசிவிட்டு நடந்தது நடந்து விட்டது போய் மன்னிப்பு கேட்டு விட்டு வா என்று அனுப்பிவிட்டு  அந்த மதுபானச்சாலைக்குள் இருந்தபடி கவனித்துக்கொண்டிருந்தோம். ஆனால் குமாரை கண்டதும் நாதன் கடைக்கு உள்ளே போய்விட வேறு பலர் கடை வாசலிற்கு வந்தார்கள். குமாரிற்கு உள்ளே ஏதாவது பிரச்சனை நடந்தாலும் என நினைத்து  குமாரிற்கு பின்னால் போய் கவனிக்கச் சொல்லி குகனை நான் அனுப்பிவிட்டிருந்தேன்.

குமார் கடை வாசலிற்கு போனதும் அங்கு நின்றிருந்த ஒருவன் கைத் துப்பாக்கியை  எடுத்து குமாரின் கழுத்தில் சுட்டுவிடுகிறான்.குமார்  கழுத்தைப் பொத்திப் பிடித்தபடி கீழே விழ அது மழைக்காலம் என்கிற படியால் கையில் பெரியதொரு குடையோடு போயிருந்த  குகன் உடனே பாய்ந்து சுட்டவனை குடையால் தாக்கி பிஸ்ரலை பறித்து விடுகிறான். அதே நேரம் எதிரே பூக்கடை வைத்திருந்த பிரெஞ்சு பெண்மணி  போலிஸ் என கத்தியபடியே போலிசிற்கு போனடித்துவிட அங்கிருந்தவர்கள் எல்லாமே  நாதன் உட்பட ஓடிவிடுகிறார்கள். நாங்கள் உடனேயே குமார் அருகில் சென்று பார்த்தோம் குண்டு கழுத்தின் கொஞ்சம் கீழாக சதைப் பகுதியை மட்டுமே துளைத்து சென்றிருந்தது ஆபத்து இல்லை என்பது புரிந்தது அதற்கிடையில் அங்கு வந்த காவல்த்துறையினர் எங்களை விசாரிக்க  தீயணைப்பு படையினர் குமாரை வைத்திய சாலைக்கு எடுத்து சென்று விட்டிருந்தனர். சுட்டவர் யாரென்று எமக்கு தெரியாதெனவும் சத்தம் கேட்டே அந்த இடத்திற்கு வந்ததாக நாம் காவல்துறையிடம் தெரிவித்துவிட்டிருந்தோம்.காவலத்துறையும் அங்கிருந் போய்விட லூன் கடைக்குள் போய் பார்த்தோம் அங்கு  முகுந்தனும் பரமேஸ் மட்டுமே நின்றிருந்தார்கள். எதற்காக மன்னிப்பு கேட்க வந்தவனை சுட்டனீ்ங்கள் என்று கேட்டதும் தாங்கள் சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள் தங்களிற்கு எதுவும் தெரியாது என தெரிவித்தார்கள்.அவர்களை கடையை விட்டு வெளியேற்றிவிட்டு கடை உடைக்கப்பட்டு தீ வைக்கப் பட்டது.  அதையடுத்து நேராக  அனைத்துலகச் செயலகத்தின் அலுவலகத்திற்கு போயிருந்தோம் அங்கு மகேஸ் திரு ஆகியோர் நின்றிருந்தனர் அலுவலகத்திலும் நாதனை காணாததால் அலுவலகத்தையும் அடித்து நொருக்கிவிட்டு  அந்தக் குழு அங்கிருந்து வெளியேறி விட்டது.


இங்கு நடந்தது என்னவெனில் அனைத்துலகசெயலகத்தினை தாக்கிய அனைவருமே புலிகள் அமைப்பின் புலனாய்வு மற்றும் சர்வதேச கட்டமைப்பில் பணி புணிந்தவர்கள். இவர்களிற்கும் அனைத்துலக செயலகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது  அனைத்துலகத்தோடு அவர்கள் எவ்வித தொடர்புகளையும் வைத்திருப்பதும் கிடையாது. அவர்கள் தனியாக தங்களது லேலைகளை பார்ப்பதோடு வெளிநாடுகளில் அனைத்துலகத்தை சேர்ந்தவர்கள் என்னென்ன  தில்லு முள்ளு  நிதி மோசடிக செய்கிறார்கள் என்பதனையும் கண்காணித்து புலனாய்வுத் துறை  தலைமைக்கு தெரிவித்தபடி இருப்பார்கள். இந்தத்தாக்குதல் நடந்ததுமே புலனாய்வு பிரிவில் இயங்கிய ஈசன்(வசாவிளான்) என்பவர் உடனடியாக நடந்த சம்பவம் பற்றி விபரமாக எழுதி அனைத்துலகத்தின் கடை மற்றும் அலுவலகத்தை தாங்கியதற்கான காரணங்களையும் எழுதி புலனாய்வு தலைமைக்கு அனுப்பி விட்டிருந்தார்கள். அதே நேரம் தங்கள் அலுவலகத்தை இலங்கையரசின் கைக்கூலிகளும் இலங்கை புலனாய்வு பிரிவும் சேர்ந்து தாக்கிவிட்டார்கள் என்று இங்கு ஊடகங்களில் பிரச்சாரம் செய்த அதே வேளை  அதே பொருள்பட  ஏழு பக்க அறிக்கை ஒன்றும்  அனைத்துலகத்தால் தயாரிக்கப்பட்டு  இயக்கத்தின் தலைமைக்கு அனுப்பி வைத்திருந்தனர். பின்னர் அதே ஆண்டு சில வாரங்களின் பின்னர் புலனாய்வு பிரிவின் சக்தி(தற்சமயம் கனடா) தாய்லாந்தில் என்னை சந்தித்தபொழுது  அனைத்துலகம் அனுப்பியிருந்த ஓழு பக்க அறிக்கையின் பிரதியை எனது கையில் தந்து படித்துப் பார் என சொல்லி சிரித்தான்.

பின்னர் சக்தி ஆயுதம் கடத்திய குற்றச்சாட்டில்  தாய்லாந்து  பர்மா எல்லையில் வைத்து  தாய்லாந்து இராணுவ அதிகாரி ஒருவரோது கைது செய்யப் பட்டு  ஜந்து வருடங்கள் தாய்லாந்தில் சிறை வைக்கப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளியாகி அனைவரும் அறிந்ததே.இதை ஏன் இங்கு எழுதவேண்டி வந்தது என்றால் அனைத்துலகச் செயலகம் தங்களிற்குள் மாறி மாறி அடிபட்டுக்கொண்டு ஒருவரை மற்றவர்  அவர்கள் இலங்கை அரசின் கைக்கூலிகள் என்று குற்றம் சாட்டுவது வழமையாக நடப்பது ஒன்றாகி விட்டது.
இப்படி அனைத்துலகத்தின் பொறுப்புக்களில் இருந்த ஒவ்வொருவருமே ஒரு வன்முறை  குழுவை தங்கள் தேவைகளிற்காக பாவிப்பதும் வழைமையானதான ஒன்றே  அதே வழியில் தான் பரிதியும் பாம்பக்குழுவை  தனது தெவைகளிற்காக பாவித்து வந்தார்.அவரது கொலை பற்றிய விசாரணைகள் போய்க்கொண்டு இருக்கும் இதே நேரம் கடந்த வாரத்திலிருந்து  அனைத்துலகச் செயலகத்தினரால்  மீண்டும் இணையும் புலிகள் அமைப்பு என்கிற  தலைப்பிட்டு ஒரு காணொளியொன்று  இணையத்தினூடக பரவ விடப் பட்டுள்ளது.அதில் புலிகள் அமைப்பு மீளவும் இணைகின்றார்களா???அந்த காணொளியில் இருப்பவர்கள் யார்??அவர்கள் சொல்ல வருகின்ற சேதி என்ன என்பதையும்.கடைசியாக  பரிதிக்கும்  தலைமைச் செயலகத்தை சேர்ந்த தமிழரசனிற்கும் இடையில் என்ன பேச்சு வார்த்தை நடந்தது என்பதனையும் பார்ப்போம்.
தொடரும்..........

முதலாவது பாகத்தை படிப்பதற்கு இங்கு அழுத்துங்கள்.
http://sathirir.blogspot.fr/2012/12/blog-post.html

Sunday, December 02, 2012

பங்கு பிரிப்புக்களும் படுகொலையும்

பங்கு பிரிப்புக்களும் படுகொலையும்
சாத்திரி



தமிழீழ விடுதலைப் புலிகள்  அமைப்பின் நடவடிக்கைகள் அனைத்தும்   இலங்கையில்  மே மாதம் 2009 ஆண்டு   முடிவிற்கு கொண்டுவரப் பட்டபின்னர் புலம் பெயர் நாடுகளில் எஞ்சியிருக்கும் அதன் கட்டமைப்பின் இன்றைய  சமகாலப்பார்வை
நவம்பர் 8ந் திகதி  வியாழக் கிழைமை இரவு 9.30 தை தாண்டிய நேரம் பாரிஸ் 20 ல் தமிழர் ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் இந்த வருட மாவீரர் நாள் பற்றிய ஏற்பாட்டு விவாதங்களை முடித்து விட்டு நான்கு பேர் அலுவலகத்தை விட்டு வெளியே வருகிறார்கள்.அந்த நான்கு பேரில்  மேக்தாவும் மாஸ்ரரும்   வீதியால் நேராக நடந்து  செல்ல பரிதியும்  பார்த்திபனும் வீதியைக் கடந்து அலுவலகத்திற்கு எதிரேயிருந்த  பஸ் நிலையத்திற்கு வந்து பஸ்சிற்காக காத்திருக்கிறார்கள்.  பஸ் நிலையத்தில் வேறு பல வேற்று நாட்டவரும் பஸ்சிற்காக காத்திருந்த வேளை திடீரென ஒரு வெடிச்சத்தத்தோடு பஸ் நிலையத்தின் பின்புற கண்ணாடி உடைந்து நொருங்குகின்றது.எதற்காக கண்ணாடி உடைந்திருக்கலாமென   பரிதி உட்பட அனைவரும் திடிக்கிட்டு பார்த்தபொழுது அடுத்தடுத்த துப்பாக்கிச் சூடுகள் பரிதியின்  மார்பிலும் வயிற்றிலும் விழுகின்றது.பார்திபன் என்பவர் வீதியை கடந்து ஓடிப்போய் அங்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கார்களிற்கு பின்னால் ஒழிந்து கொள்ள மற்றையவர்கள் பயத்தில் கண்களை பொத்திக்கொள்கிறார்கள். கொலையாளி அருகில் வந்து பரிதிஇறந்து விட்டதை உறுதிசெய்து விட்டு தயாராய் ஒருவன் இயக்கிக்கொண்டிருந்த ஸ்கூட்டரில் ஓடிப்போய் ஏற ஸ்கூட்டர்  அந்த இடத்தை விட்டு மறைந்து விடுகின்றது. கொலை நடந்த விதத்தை பாரக்கும் போது கொலையாளி உண்மையான குறிபார்த்துச்சுடும் கைதேர்ந்த கொலையாளி இல்லையென்பது மட்டும் தெளிவாகின்றது. கைதேர்ந்த கொலையாளியாக இருந்திருந்தல் ஒரு மீற்றரிற்கும் குறைவான தூரத்தில் இருந்து சுட்ட முதலாவது குண்டு குறி தவறிப் போயிருக்காது முதலாவது குண்டே பரிதியின் தலையை துளைத்திருக்கும். அல்லது அண்மையில் ஊரில் இருந்து வந்தவராக இருந்திருப்பார் வெளிநாட்டு சூழல் அவரிற்கு பதற்றத்தை கொடுத்திருக்கும்.  ஆனால் பரிதியோடு கூட இருந்தவர்களின் உதவியோடுதான் தகவல்களை பெற்று கொலைக்கான திட்டம் தீட்டப் பட்டிருக்கும் என்பது உறுதியாகத் தெரிகின்றது.


இது அத்தனையையும் பதற்றத்தோடு கவனித்துக்கொண்டிருந்த  ஒருவர் காவல்த்துறையின் இலக்கத்தை அழுத்துகிறார். சில நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்த காவல்த்துறையினரிற்கு கெல்மெட் போட்டபடி முகத்தை துணியால் மூடிய இருவர் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்க.  அதே நேரம் அங்கு வந்து சேர்ந்த தீயணைப்பு படை முதலுதவி பிரிவினர் பரிதியின் உயிர்  பிரிந்து விட்டதை உறுதி செய்கிறார்கள். உடனடியாக  அங்கிருந்தவர்களின் விபரம் தொலைபேசி இலக்கங்களை பெற்றுக் கொண்ட காவல்த்துறையினர்  அவர்களை அகற்றி விட்டு  அந்த இடத்திற்கு யாரும் வராதபடி வீதிகளை மூடிவிடுகிறார்கள்.மேலதிக காவல்த்துறையினர் புலநாய்வுத் துறையினர் தடவியல் நிபுணர்கள் என அங்கு விரைகின்றார்கள்.
அதற்கிடையில் பரிதியோடு நின்றிருந்த பார்த்திபன் பரிதி கொல்லப் பட்டு விட்டதாக தனது  கைத்தொலைபேசி மூலம் செய்தியை மற்றையவர்களிற்கு தெரிவிக்கின்றார். செய்தி  பாரிசில் தமிழர்களிடம் வேகமாகப் பரவுகின்றது. மறுபக்கம் காவல்துறையினர் விசாரணையை  நடத்திக் கொண்டிருக்கும் போதே  கொலை நடந்த ஒரு சில நிமிடங்களிலேயே  தாங்களே தமிழ்த்தேசிய  ஊடகம் என்று தங்களைத் தாங்களே பிரகடனம் செய்த  சில இணையத்தளங்கள்  கொலையாளிகளை  கண்டு பிடித்து சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினரால் பரிதி படுகொலை  என்கிற செய்தியை வெளியிடுகிறார்கள். அதற்கடுத்த நிமிடங்களிலேயே  கொலையாளிகளையும்  கண்டு பிடித்து  கே.பி. மற்றும் வினாயகம் ஆகியோரின் படங்களைப் போட்டு இவர்கள்தான் கொலையாளிகள் என்றும் செய்திகள் வெளியாகின்றது. இத்தனைக்கும் அப்பொழுதுதான் தடவியல் பரிசோதனைகள் முடிந்து பரிதியின் உடலை பிரெஞ்சு காவல்த்துறையினர் மேலதிக பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.
000000000000000000000000000


பரிதியை  றேகன் என்கிற பெயரில் 84 ம் ஆண்டு இறுதிகளில்  புலிகள் அமைப்பின்  அன்றைய பிரதித் தலைவர் மாத்தையாவின் பாதுகாப்பு பிரிவு பொறுப்பாளராக எனக்கு அறிமுகம் ஆகின்றான். பின்னர் 85 ம் ஆண்டு கிளிநொச்சியில் ஒரு முகாம் பொறுப்பாளராக இருந்தவேளை  கிளிநொச்சி  இராணுவ முகாம் பகுதியில் நானும் நின்றிருந்ததால் எங்கள் அறிமுகம் நட்பாகி  கடந்த ஆண்டு வரை தொடரவே செய்தது.கடந்த வருடம் வரை தமிழர் வாழும் உலகநாடுகள் அனைத்திலும்  புலிகள் அமைப்பின்  அனைத்துலக செயவக அமைப்பு  ஒரு இடத்தில் நடாத்திவந்த மாவீரர் நாளானது கடந்த வருடம் இரண்டு அமைப்புக்களால் இரண்டு இடங்ககளில் நடப்பதற்கான ஏற்படுகள் நடந்து கொண்டிருந்த போதுதான் நான் பரிதியை  சந்தித்து கதைத்திருந்தேன். இரண்டாவது  மாவீரர் நாள் ஏற்பாடுகளை செய்திருந்தவர்கள் புலிகளின் தலைமைச் செயலகம் என்று தங்களை பிரகடனப் படுத்தியிருந்தார்கள். இந்த தலைமைச் செயலகம் என்பவர்கள் யாரென  கொஞ்சம் சுருக்கமாக  பார்த்து விடலாம். இறுதி யுத்தத்தின் போது  யுத்தப் பிரதேசத்திலிருந்தும் மற்றும் யுத்தப் பிரதேசங்கள்ளிற்கு வெளியே அதாவது வடக்கு கிழக்கிற்கு வெளியே நின்றிருந்த  இலங்கையிலிருந்து தப்பியோடி இந்தியா மலேசியா . சிங்கப்பூர்.இந்தோனிசியா. தாய்லாந்து ஆகிய நாடுகளிற்கு வந்து சேர்கிறார்கள்.இதில் பெரும் பாலானவர்கள் புலிகளின் புலனாய்வு பிரிவைச சேர்ந்தவர்கள். புலிகளின் முடிவிற்கு பின்னரும் புலிகளின் பெயரில்  தொடர்ந்து  ராமு சுபன் என்னும் பெயரில் மலேசியாவில்  இருந்து வெளியான  அறிக்கைகள் இவர்களுடையதுதான்.இப்படி வந்து சேர்ந்தவர்கள் தாங்கள் வெளி நாடுகளிற்கு வருவதற்காகவும் மற்றும் முகாம்களில் தங்கியிருக்கும் தங்கள் குடும்பங்களை மீட்கவும் வெளிநாடுகளில் இருந்த அனைத்துலகச் செயலகப் பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு பண உதவிகளை  கோருகின்றனர்.


ஆனால் புலிகள் அமைப்பு முடிவிற்கு வந்துகொண்டிருக்கின்றது என்கிற செய்தி 2009 ம் ஆண்டு ஏப்றல் மாதமளவில் அறிந்து கொண்ட அனைத்துகத்தை சேர்ந்தவர்கள் இறுதி யுத்தத்திற்கு என சேகரித்த நிதியில்  கிடைத்ததை சுருட்டவும்  புலிகளின் அசையும் அசையா  சொத்துக்களை பங்கு போடும் போட்டியில் பிரிந்து நின்று சண்டை பிடிக்கத் தொடங்கியிருந்தனர். ஆனால் யாரும் பெரிய வன்முறைகளில் இயங்காமல் புத்திசாலித் தனமாக நடந்து கொண்டார்கள் காரணம் வன்முறைகள் பின்னர் வழக்காகி காவத்துறைக்கு போனால் அவர்கள் நோண்டியெடுத்து உள்ளதையும் பிடுங்கி விடுவார்கள் என்கிற பயம் அவர்களிற்கு. ஏனெனில் புலிகள் இயக்கத்திற்கு உலகம் முழுவதும் உள்ள வர்த்தக  வியாபரங்களால் மாதம் ஒன்றிற்கு சுமார் 300 மில்லியன் டெலர்களை  வருமானமாகப் பெறும் அமைப்பாக இருந்தது. இலங்கையரசே கடன் வாங்கி  ஆயுதம் வாங்கி சண்டை பிடித்தக் கொண்டிருந்தபோது  புலிகள் அமைப்பு  தங்கள் பணத்திலேயே  நவீனரக ஆயுதங்களாக  இறக்கி சண்டை பிடித்துக்கொண்டிருந்தார்கள். 2001ம் ஆண்டிற்கு பின்னர்  அவர்களால்  ஆயுதங்களை வன்னிக்குள் கொண்டு சேர்க்க முடியாமல் போனது வேறு கதை..அப்படி உலகம் முழுவதும்  சொத்து சண்டைகள் நடக்கத் தொடங்கியிரந் போது  பிரான்சில் பிரிந்து சண்டை பிடித்தவர்களில் முக்கியமாக பரிதி மேக்தா  சுக்குளா போன்றவர்கள் ஒரு புறமும் ஆதித்தன் சாம்ராஜ்  போன்றவர்கள் மறுபுறமுமாக பங்கு பிரிக்கத் தொடங்கியிருந்தார்கள். சாம்ராஜ் என்பவரே  புலிகள் அமைப்பின் பணத்தை  உண்டியல் முறை மூலம் மற்றைய நாடுகளிற்கு பரிமாற்றம் செய்பவர். இறுதி யுத்தத்திற்கென சேகரித்த பெருமளவு நிதி இவரின் கைகளிலேயே இருந்தது. பரிதி கொலை செய்யப் பட்ட பின்னர்  இவரும் பிரான்சு காவல்த்துறையால் விசாரிக்கப்பட்டிருந்தார்.  விசாரணை முடிந்து வெளியில் வந்ததும்  நாட்டை விட்டு வெளியேறி விட்டார். இவர் தென்னாபிரிக்கா சென்றிருக்கலாம்.  அதற்கிடையில் பினாமிகளாக  தனியார்கள் பெயரில் இருந்த வர்த்தக நிலையங்களின் பினாமிகள் சிலரை மிரட்டியும் பார்தார்கள். அவரகளோ போலிசுக்கு போனடித்து விடுவோம் என்றதும் பயத்தில் விட்டு விட்டார்கள். எனது நகரத்திலும் அப்படி புலிகளின் பினாமி உணவகம் ஒன்று ஈழம் றெஸ்ரோரனற் என்கிற பெயரில் ஒருவரால் இயக்கப் பட்டுக்கொண்டிருந்தது  ஆனால் கடந்த வருடத்திலிருந்து அதன்பெயர் இந்தியன் றெஸ்ரோறன்ராக மாறி விட்டது.


இப்படி இவர்களது சண்டையில் தப்பி வந்தவர்களது உதவிக் கோரிக்கைகளை யாரும் கவனத்தில் எடுக்கவில்லை.ஆனால் தப்பி வந்தவர்கள் தங்கள் தனிப்பட்ட நண்பர்கள் உறவுகளின் உதவிகளுடன்  சுமார் நூற்றுக்கு  மேற்பட்டவர்கள் ஜரோப்பாவிற்குள் வந்து விடுகிறார்கள். அப்படி வந்து சேர்ந்தவரகளில் பலர் தாங்கள் தங்கள் விசாப் பிரச்சனை வேலை என்று இருந்துவிட்டார்கள். ஆனால் பெருமளவு பணத்தை பதுக்கி வைத்துக்கொண்டு தங்களிற்கு உதவவில்லையென்கிற கோபம்  வெளிநாடுகளிற்கு வந்து சேர்ந்தவர்கள் நேரிலும் சென்று  பண உதவி செய்யுமாறும்  தாயகத்தில்  பாதிக்கப்பட்ட போராளிக்குடும்பங்களிற்கு உதவுமாறும் கேட்டுப் பார்க்கிறார்கள்.  அதுவும் அனைத்துலகத்தை சேர்ந்தவர்களால் மறுக்கப்படவே  புதிதாய் வந்து  சேர்ந்தவர்கள்  சிலர் இணைந்து   தாங்களே தலைமைச் செயலகம் தாங்கள்தான்  தாங்கள் தான் புலிகள் அமைப்பின் அனைத்து விடயங்களையும் முடிவெடுக்கும் அதிகாரம் உடையர்கள்  என அறிக்கையொன்றையும் விடுகிறார்கள். அப்படி தலைமைச் செயலகம் என்வர்களில்  இலண்டனில் சுரேஸ்.ராமு சுபன்.மற்றும் சங்கீதன் . பிரான்சில் தமிழரசன்.கனி. ஜெர்மனியில் தும்பன் புலவர் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

இவர்களது வருகையும் அறிக்கையும்  ஏற்கனவே வெளிநாடுகளில்  அனைத்துலகச் செயலகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டு அல்லது துரத்தப் பட்டவர்களிற்கு புதிய உற்சகத்தை கொடுக்க அவர்களும் தலைமைச் செயலகத்தோடு கைகோர்த்துக் கொள்கிறார்கள். இது இப்படியாக போய்க்கொண்டிருக்கும் போது  புலிகளின் முடிவில் தொடங்கப் பட்ட நாடு கடந்த தமிழீழ அரசையும் இயங்க விடாமல் மிக மோசமாக அனைத்துலகச் செயலகத்தினர் எதிர்த்துக்கொண்டிருந்தனர்.  அனைத்துலகத்தின் ஜெர்மனிய பொறுப்பாளர் வாகீசன் என்பவர்  தான் இருக்கும் வரை நாடு கடந்த தமிழீழ அரசை இயங்க விடமாட்டேன் ஒரு இடத்தில் கூட்டம் நடாத்த விடமாட்டேன் என பகிரங்கமாக சவால் விட்டிருந்ததோடு மட்டுமல்லாமல் ஜெர்மனி பிரான்ஸ் சுவிஸ் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நா.க.அரசின் கூட்டங்களை குளப்பிக்கொண்டும் இருந்தார்கள். கே.பி கைதாகிய பின்னர் நா.க அரசை இயக்கியவர்கள் அனைவருமே கோட்சூட் போட்ட கனவான்கள். யாராவது வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு சண்டை என்று இறங்கினால் ஒதுங்கி ஓரமாய் போய் விடுகிறவர்கள். அவர்களது கூட்டங்களில் அனைத்துலகச் செயலகத்தினர் வேட்டியை  மடித்துக் கட்டியபடி வாடா  வா..என்கிற மிரட்டல்களால் பயந்து போய் கையை பிசைந்து கொண்டு  நின்றவர்களிற்கு இந்த புதிய தலைமைச் செயலக வரவுகள் தங்கள் ஆதரவுக் கரங்களை நீட்டவே அப்படியே  பாய்ந்து பற்றிக் கொண்டார்கள்.  இப்படியான புது கூட்டணி இன்னொரு மாவீரர் தினத்தை கடந்த வருடம் அறிவித்தபோதுதான் நானும் வேறு சில முன்னைநாள் போராளிகளும் ஒரு சமரசத் திட்டத்தோடு பரிதியை சந்தித்திருந்தோம்.


எங்கள் சந்திப்பானது மாவீரர் தினத்தை பிரிக்காது ஒற்றுமையாக நடத்துமாறும் அதே நேரம் இயக்கத்தின் வர்த்தக நிறுவனங்களை நடாத்துபவர்கள்  அதன் வருமானத்தில் 20 வீதத்தை மாதா மாதம் பாதிக்கப்பட்ட போராளிக் குடும்பங்களிற்கு கொடுக்குமாறும் கோரிக்கை  வைத்தோம். சிலர்  5 வீதத்தை தருவதாக ஒத்துக் கொண்டார்கள். ஆனால் மாவீரர் நாள் இணைந்து செய்யமுடியாது என்று மறுத்ததோடு அதற்கு அவர்கள் கூறிய காரணம். இறுதி யுத்தத்தில் இருந்து தப்பிவந்தவர்கள் அனைவரும் இலங்கை புலனாய்வு பிரிவால் அனுப்பப் பட்டவர்கள் அவர்களுடன் இணைய  முடியாது அவர்களிற்கு வருமானத்தில் பங்கும் கிடையாது என்றுவிட்டார்கள். புதிதாய் வந்தவர்கள் சிலரில் எனக்கும் சில சந்தேககங்கள் இருக்கத் தான் செய்தது அதனை கட்டுரைகளாகவே கடந்து ஆண்டு எழுதியிருக்கிறேன். ஆனால் உண்மையில் அவர்கள் இலங்கை இந்திய புலனாய்வுத் துறையால் இயக்கப் பட்டாலும் நாங்கள் இனியென்ன அடுத்த ஆயுதப் போராட்டமா நடாத்தப் போகிறோம் மாவீரர் தினம் தானே. இரண்டாம் உலக யுத்தத்தில் கொல்லப் பட்ட ஜெர்மனிய இரணுவத்தினரிற்கே பிரான்சு அரசு நினைவுத் தூபி கட்டி அஞ்சலி செலுத்தியிருக்கிறபோது எங்கள் மாவீரர்கள் தினத்தை இலங்கை இந்திய புலனாய்வு துறை என்று சந்தேகப் படுபவர்களோடு இணைந்து செய்வதில் எவ்வித நட்டமும் இல்லை அவர்கள் மாவீரர் தினத்தை உளவு பார்த்து என்ன செய்யப் போகிறார்கள் என வாதாடியிருந்தோம். ஆனால் அவங்களா நாங்களா என மோதிப் பார்த்து விடுவோம் என்று அனைத்துலக செயலகத்தினர் சவால் விட்டார்களே தவிர இணக்கத்திற்கு வரவில்லை. அதன் பின்னர் மாவீரர் தினமும் இரண்டாக நடந்து முடிந்தது. கடந்த வருடம் பரிதியும் தாக்குலிற்குள்ளாகியிருந்தார். அது மட்டுமல்ல அனைத்துலக செயலக இலண்டன் பொறுப்பாளர் தனம் மீதும் தாக்குதல் நடாத்தப் பட்டிருந்தது.

இந்த வருடம் பரிதி கொலை செய்யப் பட்டு விட்டார். கொலை நடந்த மறுநாள் பரிதிக்கு  தளபதி. லெப்.கேணல். கேணல்  என்று அவரவர் தங்கள் விருப்பத்திற்கு பதவிகள் கொடுத்து இணையத்தளங்களில் அஞ்சலி வெளியிட்டிருந்தார்கள். தற்சமயம் விடுதலையாகி வவுனியாவில் வசிக்கும் முன்னை நாள் போராளியொருவர் பரிதி பற்றி கதைத்தபோது  அவர் சொன்னது  எங்கடை தலைவர் தளபதி கேணல் எல்லாரையும் வெளிநாட்டிற்கு அனுப்பிப் போட்டு வெறும் சப்பையள் எங்களை வைச்சு சண்டை பிடிச்சதிலைதான் தோத்து போனவர் என்று சொல்லி சிரித்தான். இது இப்படியிருக்க  கொலை நடந்து நான்குநாட்கள் கழித்து   நடராசா மகீந்திரன் (பரிதி)கொலைச் சந்தேக நபர்கள் இருவர் கைது என்கிற செய்தி பிரெஞ்சு ஊடககங்களில் வெளியாகின்றது.  றமேஸ் மற்றும் பிறேம் என்பவர்களே கைதானவர்கள் இவர்கள் பெயர்களை இதுவரை காவல்த்துறையினர் இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.அதற்கடுத்ததாக தாஸ் என்கிற மன்னைநாள் ரெலோ உறுப்பினர் ஒருவரும் கைதாகிறார். இந்தக கைதுகளும் தமிழ் இணையத் தளங்கள் தங்கள் கற்பனைகளை  செய்திகளாக்கி கொண்டும் இருக்கும் போது  ஏற்கனவே இரண்டு மாவீரர் தினத்திற்கான  இடங்கள் பற்றிய செய்திகள்  வெளியாகியிருந்த வேளை  திடீரென  வேறு சிலர். தாங்களே உண்மையான புலிகள்  தங்களிற்குத்தான்  தலைவர் மாவீரர் தினத்தை நடாத்துமாறு கட்டையிட்டிருக்கிறார் என்றபடி இலண்டனில் மூன்றாவது மாவீரர் தினத்தை  இந்த  வருடம் அறிவித்திருக்கிறார்கள்.
கொலை தொடர்பாக கைது செய்யப் பட்டவர்கள் யார்??  இந்த திடீர் மூன்றாவது மாவீரர் தினத்தை நடாத்துவது யார் என்கிற விபரங்களோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.   நன்றி தொடரும்..................