Sunday, July 16, 2006

சி. புஸ்பராசாவின் ஈழ போராட்டத்தில் எனது (பொய்) சாட்சியம் பாகம் 2

இந்தவாரம் தமிழ் மாணவர் பேரவை மற்றும் தமிழ் இளைஞர் பேரவையின் தோற்றம் பற்றியும் அவைகளின் நடவடிக்கைகள் பற்றியும் சிலவற்றை பார்க்கலாம். இங்கு தனது புத்தகத்தில் தானும் தான் சார்ந்த சிலரும் 1973ஆம் ஆண்டு தொடக்கிய தமிழ் இளைஞர் பேரவையே முதன் முதல் ஈழவிடுதலையை வென்றெடுக்க ஆயுதப் போராட்டத்தை அறிமுகப் படுத்தியதாக எழுதுகிறார் ஆனால் உண்மையில் அதற்கு முதலே 1970ம் ஆண்டு கார்த்திகை மாதம் 13ஆம் திகதி அந்தக் காலத்தில் யாழ்ப்பாணநகரத்தில் மசால் வடைக்குப் பெயர் போன மலயன் கபே என்கிற உணவு விடுதியின் மேல் மாடியில் உரும்பிராயை சேர்ந்த சத்திய சீலனால் அப்போது இலங்கையரசிற்கு எதிரான தீவிரவாத போக்கு கொண்ட சில இளைஞர்களை ஒன்று சேர்த்து ஒரு கூட்டம் கூட்டபடுகிறது அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் 1.திரு பொன். சிவகுமாரன்(உரும்பிராய்). 2.முத்துகுவார சுவாமி 3. அரியரட்ணம் ஏழாலை 4.வில்வராயா (நல்லூர்) 5 இலங்கை மன்னன் 6. மகா உத்தமன் (யாழ்.சென்யோன்ஸ் கல்லூரி மாணவன்) 7. சிவராசா(கல்வியங்காடு) 8. தவராசா(இவர்தான் இன்று ஈ.பி.டி.பி யின் முக்கிய உறுப்பினராக உள்ளவர்.).9.சேயோன் (சென்பக்றிஸ் கல்லுரி மாணவன்)10. ஆனந்தன் (சென்யோன்ஸ் மாணவன்) 11. ஞானம் அண்ணா(மண்டைதீவு .)ஆகியோரோடு இன்னும் சிலருடனும் கிட்டத்தட்ட பதினைந்து பேரளவில் அந்த கூட்டத்தில் சமூகமளித்திருந்தனர்.

இதில் ஞானம் அண்ணா என்பர் சிறீலங்கா காவல் துறையில் கடைமையாற்றியவர் இலங்கையரசின் சிங்களம் மட்டும் என்கிற சட்டத்தால் சிங்களம் படிக்க முடியாது என தனது வேலையை உதறி எறிந்து விட்டு யாழ்நகரில் உள்ள ராணி திரையரங்கில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த இளைஞர்களின் கூட்டத்திற்கும் வேறு பல திட்டங்களிற்கும் அவர்களிற்கு ஒர் உந்து சக்தியாகவும் ஊக்கம் அழிப்பவராகவும் செயற்பட்டு வந்தவர் என்பதும் குறிப்பிட வேண்டும். இந்தக் கூட்டத்தில் அந்த இளைஞர்களால் 1970ஆம் ஆண்டு இலங்கையரசின் கல்வியமைச்சர் பதியுதீன் முகமது அவர்களால் கொண்டுவரப்பட்ட கல்வி தரப்படுத்துதல் சட்டம் மற்றும் தமிழர்களை ஒடுக்குவதற்காக சிங்கள ஆட்சியாளர்களின் பல்வேறு சட்டங்களை எதிர்த்தும் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரிகளை எதிர்க்கவும் தமிழர் மத்தியில் ஒரு அமைப்பு தேவை என சத்தியசீலனால் முன்மொழியப்பட்டது.

அத்துடன் இலங்கையரசிற்கு தமிழர் மற்றும் தமிழ் மாணவர்களின் எதிர்ப்பைக் காட்டுவதற்காக மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டு அதற்காக வடக்கிலுள்ள அத்தனை பாடசாலை உயர் வகுப்பு மாணவர்கள் மற்றும் மாணவத்லைவர்களை அணுகி அந்த அரச எதிர்ப்பு பேரணிக்கு ஆதரவு திரட்டுவது என தீர்மானிக்கப் படுகிறது .அந்த தீர்மானத்தின் படியே அங்கிருந்தவர்கள் வடக்கிலுள்ள அத்தனை பாடசாலைகளிற்கும் சென்று மாணவர்களை சத்தித்து விழக்கம் கொடுக்கப்டுகிறது மீண்டும் அதே மாதம் 17ந் திகதி அதே இடத்தில் வடகிழக்கின் பல்வேறுபட்ட இடங்களிலில் இருந்தும் வந்திருந்த சுமார் நூற்றியம்பது இளைஞர்கள் மற்றும் உயர் வகுப்பு மாணவர்களை ஒன்றிணைத்துத் தமிழ் மாணவர் பேரவை தலைவர் செயலாளர் பொருளாளர் என்று எவரிற்கும் எவ்வித பதவிகளுமற்ற ஒரு அமைப்பாகவும் அந்த அமைப்பின் அமைப்பாளர் என்கிற ரீதியில் சத்தியசிலன் அவர்கள் இருப்பார் எனவும் முடிவுகள் எடுக்கபட்டது (முன்னைய கட்டுரையில் இந்த அமைப்பின் தலைவர் என்று நான் குறிப்பிட்டிருந்தேன் பின்னர் அது சத்தியசீலன் அவர்களால் தலைவர் என்கிற பதவி இல்லை அமைப்பாளர் மட்டுமே என்று சுட்டிக்காட்டப்பட்டது) சத்தியசீலன் அவர்களால் தமிழ் மாணவர் பேரவை என்று அந்த அமைப்பிற்கு பெயர் சூட்டப்பட்டு இனி வருங்காலங்களில் அந்த அமைப்பின் செயல்த் திட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்திலேயே தமிழ் மக்கள் இனியும் சிங்கள ஆட்சியாளர்களின் கீழ் வாழ முடியாது என்றும் தமிழர்கள் ஒரு தனியரைசை அமைக்க வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தி அந்த தனியரசை அமைக்க வன்முறையிலான ஆயுதப் போராட்டமே ஒரேயொரு வழியென தீர்மானம் எடுக்கப்பட்டு அதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளான மாணவர்கள் மற்றும் பொது மக்களிற்கு தமிழ் தனியரசு பற்றிய விளக்கங்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த அங்கிருந்தவர்கள் பகுதி பகுதியாகப் பிரிக்கப் பட்டு தமிழ் பிரதேசத்தின் அனைத்து கிராமங்களிற்கும் மற்றும் அனைத்து பாடசாலைகளிற்கும் செல்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த இரண்டு கூட்டங்களிலுமே புஸ்பராசா அவர்கள் இருந்திருக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்கப்படவேண்டும். அவர்கள் திட்டப்படி கார்த்திகை மாதம் 24ந்திகதி மிக குறுகிய காலத்திலேயெ ஒழுங்கு செய்யப்பட்டாலும் வடக்கின் அனைத்து பாடசாலை மாணவ மாணவியர் மற்றும் பொது மக்கள் என எதிர்பார்த்ததற்கும் மேலாக பல்லாயிரக்கணக்காணவர்கள் பங்கு பற்றி தங்கள் எதிர்ப்பை இலங்கை அரசிற்கு காட்டினர்.

இலங்கையில் முதலாவது மிகப்பெரும் தமிழ் மாணவர்களின் எழுச்சி என்று இந்த ஊர்வலத்தை சொல்லலாம்.இறுதியாக யாழ் முற்றவெளியில் நடந்த பொது கூட்டத்துடன் இந்த ஊர்வலம் நிறைவு பெற்றது. இந்த மாணவர் பேரவையின் தோற்றமும் அதன் திடீர் வளர்ச்சி பெருமளவான மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே அதன் பிரச்சாரமும் செல்வாக்கும் அதிகரித்ததைக் கண்டு அன்றைய தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமை கொஞ்சம் அதிர்ந்து போனது. இந்த இளைஞர்களின் திடீர் வழர்ச்சி தங்களின் தமிழ் மக்கள் மீதான இருப்பையே கேள்விக்குறியாக்கி பாராளுமன்ற கதிரைகளின் கால்களை முறித்துவிடுமோ என்று பயந்தனர் http://www.orupaper.com/issue50/pages_K__Sec3_32.pdf

1 comment: