Navigation


RSS : Articles / Comments


இருளில் தெரிந்த தேவதை

11:46 PM, Posted by sathiri, No Comment

இருளில் தெரிந்த தேவதை.

கடந்த மார்கழி 13 ந் திகதி விடுமுறைக்கான பயணம்.இலங்கைக்கு செல்லக்கூடிய சாதகமான சூழல் இன்னமும் சரி வராததால் வழைமை போல இந்தியாவிற்கான பயணம்.ஒன்ரரை மாதங்கள் விடுமுறைக்காலம் என்பதால் எனது நண்பர்களையும் சந்தித்து போவது என முடிவெடுத்து முதலில் மும்பையில் இறங்கி அங்கு நான்கு நாட்கள் பின்னர்  கோவா.கர்நாடகா.தமிழ்நாடு என பயணப் பாதை திட்டமிடப் பட்டது.மும்பையில் எனது மனைவியின் தம்பி ஒரு தனியார் கப்பல் நிறுவனத்தில் பொறியியலாளராக இருப்பதால் அவனும் விடுமுறை  எடுத்து எங்களிற்காக காத்திருந்தான்.மும்பையில் இரண்டாம் நாள் மாலை மனைவி தனது தம்பியுடன்  பொருட்கள் வாங்க போய்விட  நான் எனது நீண்டகால  நண்பன் டோனியலை சந்திப்பத்காக அவன் கடை வைத்திருக்கும் மலை மாதா ஆலயத்தடிக்கு சென்றிருந்தேன்.அங்கு அவனோடு வழைமை போல பல பழைய  புதிய விடயங்கள் அரசியல் என கதைத்துக் கொண்டேயிருந்தோம்.அது மட்டுமல்ல அவன் திருமணம் முடித்து ஒரு ஆண் குழந்தையும் பிறந்திருந்தது .குழந்தை ஒன்பது மாதங்கள்.எனவே தான் காதலித்து திருமணம் முடித்த கதைகளையும் சொல்லிக்கொண்டிருந்தான்.தமிழீழம் கிடைத்த பின்னர்தான் திருமணம் செய்வேன் என அடம் பிடித்து காத்திருந்தவன் திருமணம் செய்தது எனக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது.


அன்றிரவு எங்களை அவன் தனது வீட்டிற்கு சாப்பாட்டிற்கு அழைத்திருந்தான்.மனைவியும்  மச்சினனும் நேராக அவன் வீட்டிற்கு வருவார்கள். எனவே இரவு எட்டு மணியளவில் டோனியல் கடையை அடைத்து விட்டு அவனது வீட்டிற்கு போகலாமென முடிவெடுத்து விட்டு இரண்டு ரீயை வாங்கி உறுஞ்சியபடி கதைத்துக்கொண்டிருந்தோம் கோயிலிற்கு அருகே நின்றிருந்த பெரிய மரமென்றின் கீழ் வெளிச்சமற்ற பகுதியில் திடீரென ஒரு சல சலப்பு கோயிலிற்கு வந்தவர்கள் கடை வைத்திருந்தவர்கள் என பலரும்அங்கு கூடத் தொங்கியிருந்தார்கள்.நானும் டோனியலும் என்ன நடக்கின்றது என்று விடுப்பு பார்ப்பதற்காக அங்குபோய் கூட்டத்தை விலத்தி பார்த்தோம். நடுவில் ஒரு பெண் கையில் ஒரு பெண்குழந்தையோடு அழுதபடியே ஏதோ சொல்லிக் கொணடிருக்க அவளை பலர் ஏசியும் கோபமாக திட்டிக் கொண்டும் இருந்தார்கள்.அழுதபடி நின்ற பெண் மராட்டியில் கதைத்தால் எனக்கு ஒன்றும் புரியவில்லை எனவே டோனியலைப் பார்த்து என்னவாம் என்றதும்.

இது அந்த பெண்ணின் இரண்டு மாத குழந்தையாம் ஏற்கனவே இவளிற்கு மூன்று பிள்ளைகளாம்.கணவன் சந்தை ஒன்றில் லாறிகளிற்கு பொருள் ஏற்றும் வேலை செய்பவன்.அவன் ஏதோ விபத்தில் சிக்கியதால் ஒரு மாதமாக வைத்திய சாலையிலாம்.அதனால் வருமானம் இல்லை சாப்பாடு இல்லை.சாப்பாடு சரியாக இல்லாததால் பிள்ளைக்கு பால் கொடுக்க முடியவில்லை.அதே நேரம் இந்த பிள்ளை பிறந்த நேரம்தான்  கணவனிற்கு விபத்து நடந்தது என்று நினைத்து இந்த ராசியில்லாத குழந்தையை கோயிலடியில் போட்டு போகலாமென முடிவெடுத்து அவள் கோயில் படிக்கட்டில் குழந்தையை போட்டு விட்டு போகும்போது சிலர் கண்டதால் கூட்டம் கூடிவிட்டது என்று சுருக்கமாக சொல்லி முடித்தான்.
கூட்டத்தை விலக்கி அவளருகே போய் கையிலிருந்த குழந்தையை பார்த்தேன் அது தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தது.சிலர் போலிசை கூப்பிடு என்று கத்திக் கொண்டேயிருந்தார்கள்.

போலிசை கூப்பிடுவதாலேயோ அந்தப் பெண்ணை திட்டி கலைப்பதாலேயோ எதுவும் நடந்து விடப் போவதில்லை அவள் அந்தக் குழந்தையை  வேறு இன்னொரு இடத்தில் வீசி விட்டு போகத்தான் போகிறாள்.அவளை  உற்றுப் பார்த்தேன் மெலிந்த தேகம் அழுக்கான உடைகள் அழுது கொண்டே சேலையில் சுற்றிய குழந்தையை  பிடித்தபடி போலிசை கூப்பிட வேண்டாம் என கைகளை கூப்பிய படி அழுது கொண்டே நின்றவளிடம் பிள்ளையை வளக்கத் தெரியா நீயெல்லாம் எதுக்கடி பெத்துக்கிறீங்கள் என்று வீர வசனம் எல்லாம் பேச மனம் வரவில்லை.டோனியலிடம் அவளை தனியாக  அழைத்து வா என்றதும் அவன் புரிந்தவனாக அங்கு நின்றவர்களை சத்தம் போட்டு விரட்டிவிட்டு அவளை தனது கடைக்கு அழைத்து வந்தான்.மற்றையவர்கள் தூரத்தே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

 அவளிற்கு  சாப்பாடும் ரீயும் வாங்கி கொடுத்து விட்டு அடுத்தது என்ன செய்யலாமென யோசித்தபடி டோனியரை பார்த்தேன்.அவனோ மச்சான் எனக்கு இப்பதான் ஒரு மகன்பிறந்திருக்கிறான் என்று தலையை சொறிந்தான்.உடனே மனைவிக்கு போனடித்து அங்கு வரச் சொன்னேன். சில நிமிடங்களிலேயே மனைவியும் மச்சினனும் வந்து சேர்ந்தார்கள்.அவர்களிற்கு விபரத்தை சொன்னேன்.குழந்தையை பார்த்த மனைவி நாங்களே எடுத்துக்கொண்டு போகலாம் என்றாள்.அது முடியாது நிறைய சட்டச் சிக்கல் சம்பிரதாயங்கள் உள்ளது அது மாதக் கணக்கோ வருசமோ ஆகும் இப்போ உடனடி தீர்வு தேவை என்றதும் மச்சினனோ எனக்கு  ஏற்கனவே மூன்று ஆண் குழந்தைகள் எனவே தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும் என்கிற விருப்பம் தான் எடுத்து வளர்ப்பதாக சொன்னான். அதற்கிடையில் விபரம் அறிந்து தேவாலய பாதிரியாரும் அங்கு வந்திருந்தவர் குழந்தையை திருச்சபை பொறுப்பொடுத்து வளக்கதயார் என்று சொல்லியிருந்தார்.நித்திரையால் எழுந்த குழந்தை சாப்பிட்டு முடித்திருந்த தாயிடம் பால் குடித்துவிட்டு எங்களைப் பார்த்து அழகாய் சிரித்தது.
அதன் சிரிப்பை பார்ததுமே மச்சினன் தனக்கு அந்தக் குழந்தை வேண்டும் என அடம் பிடிக்கத் தொடங்கியிருந்தான்.

அவனது மனைவிக்கு போனடித்து விபரம் சொல்லி அனுமதி கேட்கசொன்னேன். வேண்டாம் ஏற்கனவே தான் ஒரு பெண் குழந்தையை தத்து எடுப்பது பற்றி மனைவியுடன் பேசியுள்ளேன் எனவே அவனிற்கு விபரம் சொல்லாமல் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்என்று விட்டான். அடுத்ததாக சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவே டோனியலிற்கு தெரிந்த ஒரு வக்கீலையும் அழைத்துக்கொண்டு அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு போனோம்.அங்கு அதிகாரி இருக்கவில்லை அவர் ரவுண்ஸ்(நகரவலம்)போயிருப்பதாக சொல்லி அவரிற்கு வோக்கியில் தகவல் கொடுத்தார்கள்.அரை மணித்தியாலம் கழித்து அங்கு வந்த அதிகாரி அதிகார தோரணையோடு கிந்தியில்  யாரப்பா நீங்களெல்லாம்  பிள்ளை வியாபாரம் பண்ணுறவங்களா.உங்களுக்கு என் னவேணும்.எல்லாரையும் உள்ளை தள்ளிடுவன் என்று சத்தமாக எங்களைப் பார்த்து சொல்ல. நான் எனது கடவுச் சீட்டையும் பத்திரிகையாளன் என்கிற அடையாள அட்டையையும் காட்டியபடி  ஆங்கிலத்தில் விபரத்தை சொன்னதும்.அமையான அதிகாரி இந்தியாவில் உள்ள அனைத்து கிரிமினல்களும் இங்கு மும்பையில்தான் இருக்கிறார்கள் அதுதான் அப்படி கதைத்து விட்டேன் என்றதும் டோனியல் மெதுவாய்  கொடுப்பிற்குள் சிரித்தான்..

அந்தப் பெண்ணை தனியாக அழைத்து விசாரித்து விட்டு அடுத்தநாள் காலை அனைவரையும் வரும்படி சொன்ன அதிகாரிஇ இரண்டு காவலர்களை  அந்தப் பெண் வசிக்கும் இடத்திற்கு போய் பெண்ணின் தகவல்கள் சரியானதா என விசாரித்துவரச்சொல்லி அனுப்பிவிட்டார். மறுநாள் காலை அனைவரும் காவல் நிலையம் போய்சேர்ந்தோம் வக்கீலும் போலிசாரும் தயாரித்த தத்து கொடுக்கும் கடிதங்களில் அந்தப் பெண்ணும் மச்சினனும் சாட்சியாக நாங்களும் கையெழுத்து போட்டு குழந்தையை பெற்றுக் கொண்டதும் காவல்துறை அதிகாரி எங்களிற்கு வாழ்த்து சொன்னதோடு அந்தப் பெண்ணை  வைத்திய சாலைக்குப்போய் கருத்தடை செய்யச் சொல்லி கோபமாய் திட்டி அனுப்பினார்.வெளியே வந்ததும் நான் அந்தப் பெண்ணை அழைத்து கொஞ்சம் பணத்தை அவளிடம்கொடுத்து மற்றைய பிள்ளைகளை  நன்றாக கவனிக்க சொன்னதும் கைகூப்பி கும்பிட்டபடி பணத்தை வாங்கிக் கொண்டு பிள்ளையை பார்க்காமலேயெ நடந்து போய்விட்டாள்

குழந்தையை மச்சினன் வீட்டிற்கு கொண்டுபோனதுமே அனைவரிற்கும் மகிழ்ச்சி. குழந்தைக்கு ஏற்கனவே முஸ்லிம் பெயர் இருந்ததால்  அதற்கு வேறொரு பெயர் வைக்கவேண்டும் என முடிவு செய்யப் பட்டது ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரை முன் மொழிந்தார்கள்.எனக்கு குழந்தையை பார்த்ததுமே தேவதை என்று பெயர் வைக்கவேண்டும் என முடிவு செய்திருந்தேன்.எனவே மற்றையவர்கள் சொன்னஅனைத்து பெயர்களையும் துண்டுக்கடதாசியில் எழுதி சுருட்டி குலுக்கிப்போடுவது என முடிவானது. நான் கடதாசிகளில் பெயர்களை எழுதி சுருட்டி குலுக்கிப் போட்டேன்.மனைவியின் தங்கை மகன் ஒரு கடதாசி சுருனை எடுத்துத் தந்தான் அதை விரித்து அனைவரிற்கும் காட்டினேன் ஏஞ்சல் என்றிருந்தது குழந்தைக்கு ஏஞ்சல் என்கிற பெயர் முடிவானது.நான் மற்றைய கடாசிகளை எடுத்து கிழித்து குப்பையில் எறிந்துவிட்டு குழந்தையை தூக்கி ஏஞ்சல் என்று அழைத்தபடி முத்தம் கொடுத்தேன்.நான் அனைத்துக் கடதாசிகளிலும் ஏஞ்சல் என்றே எழுதி சுருட்டிப் போட்டிருந்தேன்.ஏஞ்சல் இப்பொழுது எங்கள் வீட்டுப் பிள்ளை .


10:27 AM, Posted by sathiri, No Comment

தமிழ்க்கவியுடனான ஒரு சந்திப்பு

தமிழ்க்கவி என்கிற தமயந்தி (வயது 66)மக்களாலும் போராளிகளாலும் நன்கு அறியப்பட்டவர். இவரது இரண்டு மகன்களும் ஒரு பேத்தியும் புலிகள் அமைப்பில் மாவீரர்களாகிப் போனதோடு இவரது கணவரும் இறுதி யுத்தத்தில் இறந்து போனார். ஆரம்ப காலப் போராளிகளிற்கு அவர் அக்கா.அடுத்த கட்ட போராளிகளிற்கு அன்ரி.அல்லது மம்மி. அதற்குமடுத்த கட்ட போராளிகளிற்கெல்லாம் அவர் அம்மம்மா.இப்படி புலிகள் அமைப்பின் மூன்று தலைமுறை போராளிகளிற்கு நன்கு அறிமுகமானதும் அவர்களின் அன்பு கொண்டவருமான தமிழ்க்கவி புலிகள் அமைப்பின் இராணுவக் கட்டமைப்பு தவிர்ந்த புறக் கட்டமைப்புக்களான  அரசியல்.பிரச்சாரம்.கலை பண்பாட்டுக் கழகம். தொலைக்காட்சி. வானொலி. பத்திரிகை என . இருபது வருடங்களிறகு மேலாக  பணியாற்றியவர்.இலங்கை இராணுவத்தால் கைதாகி முகாமில் அடைக்கப் பட்டு  புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப் பட்டு  விடுதலையானர்.இன்று  வன்னி இறுதி யுத்தத்தின் நேரடி சாட்சியமாகி நிற்பதோடு தனது அனுபவங்களை  ஊழிக்காலம் என்கிற ஒரு நாவல் வடிவத்தில் தந்துள்ளார்.

இவர் சென்னை வந்திருந்ததை அறிந்து அவரது விலாசத்தினை பெற்றுக் கொண்டு அவர் இருந்த முகப்பேர் பகுதிக்கு என்னுடைய ஒரு நண்பரோடு  சென்றிருந்தேன். சென்னையில் இப்போ இருக்கின்ற சிறிய இடத்திலெல்லாம் குடியிருப்புக்களை சிறிது சிறிதாகக் கட்டி வாடைக்கு விட்டு பணம் சம்பாதிப்பது  முக்கிய தொழில். அப்படி ஒரு சிறிய அடுக்கு மாடி கட்டிடம் தான் அவரது விலாசம். ஒடுங்கிய படிக் கட்டுக்களில் அவரது வீட்டைத் தேடி  முதலாவது  இரண்டாவது என ஏறி நான்காவது மாடியை கடந்து மொட்டை மாடிவரை போய் விட்டேன்  அவரது வீட்டைக் காணவில்லை. மொட்டை மாடியில் ஏறி நின்று சுற்றி வர பார்த்தபோது அங்கு அமைக்கப் பட்ட சிறிய ஒரு அறையில் இருந்து சிரித்தபடியே இதுதான் எனது மாளிகை வாருங்கள் என வரவேற்றவர்.கவனம் குனிந்து உள்ளை வாங்கோ என்றார்.
மொட்டை மாடியில் இரண்டு மீற்றர் சதுர அளவில்  சுவர் எழுப்பி மேலே சீற் போட்ட கூரை.இதுதான் அவரது வீடு இங்கு அவரும் அவரது ஒரு பேரனும் வசிக்கிறார்கள்.நான் கவனமாய் குனிந்து உள்ளே போனதும் இஞ்சை கதிரையெல்லாம் கிடையாது என்றபடி ஒரு பாயை விரித்து விட்டு அவசரமாக தேனீருக்காக அடுப்பை மூட்டி தண்ணீரை கொதிக்க வைத்து விட்டு ஒரு பிஸ்கற் பக்கற்றை பிரித்தவர் அங்கு மிங்கும் பார்த்து விட்டு அங்கு கிடந்த ஆனந்த விகடன் புத்தகத்தை எடுத்து நிலத்தில் வைத்து இதுதான் தட்டு என்றபடி அதில் பிஸ்கற்றுக்களை கொட்டி சாப்பிட சொல்லி விட்டு ரின் பால் பேணியை உடைத்து பால்தேனீர் போட்டு  கொண்டு வந்து அமர்ந்தார்.நீண்ட நேரம் அவரோடு உரையடிவிட்டு விடை பெற முன்னர் நாங்கள் வாங்கிப் போன அவரது புத்தகத்தில் வீரமும் தீரமும் விலை பேச முடியாதவை. வெற்றி அல்லது வீர மரணம் இதுவே எமது தாரக மந்திரம் அன்புடன் தமிழ்க்கவி என்று கையெழுத்திட்டு தந்தார்.

 நான் சென்னையை விட்டு புறப்பட முன்னர் அவரை தொடர்பு கொண்வதாக சொல்லி விடை பெற்றோம்.
நான் சென்னையை விட்டு புறப்படு முன்னர் அவரை புத்தக சந்தையில் சந்தித் திருந்த போது தான் அவசரமாக வேறு வீடு தேடுவதாக சொன்னார். காரணம் நாங்கள் மற்றும் வேறு பத்திரிகையாளர்களும் அடிக்கடி அவரை சந்திக்கச் சென்றதில் ஆத்திரமடைந்த வீட்டு முதலாளி வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி விட்டாராம் என்றார்..வேண்டு மானால் வீட்டு முதலாளியோடு  நாங்கள் கதைத்து பார்க்கவா என்றதற்கு வேண்டாம் எங்களிற்கும் மான ரோசம் இருக்கு றோட்டிலை படுக்கிறது ஒண்டும் எனக்கு புதிசில்லை வீட்டை விட்டு போ.. எண்டு சொன்னதுக்கு பிறகு எனக்கு அங்கை இருக்க விருப்பம் இல்லை பாலத்துக்கு கீழை படுத்தாலும் இனி அங்கை இருக்க மாட்டன் வீடு தேடுறன் என்றார்.முடிந்தளவு நானும் உதவுவதாக கூறி விடை பெற்றேன்.அவரது ஊழிக்காலம் இன்னமும் முடியவில்லை...