Navigation


RSS : Articles / Comments


வெளித்தெரியாத வேர். M.S.R

12:21 PM, Posted by sathiri, No Comment


வெளித்தெரியாத வேர். M.S.R
சாத்திரி ஒரு பேப்பர்.

ஈழத்தின் ஆயுத விடுதலைப் போராட்டத்தின்  தங்கள்அனுபவங்களை மையமாக வைத்து  பலர் தங்கள் பதிவுகளை புத்தமாக்கியிருக்கிறார்கள். அவற்றில் .சி.புஸ்பராஜா. கி. பி. அரவிந்தன். மற்றும் ஜயர் ஆகியோருடைய பதிவுகள் முக்கியமானவை. ஆனால் இந்த மூவரது பதிவுகளிலுமே  இந்த  எம்.எஸ்.ஆர் என்கிற மனிதனைப் பற்றிய எந்தவொரு தகவல்களும் உள்ளடக்கப் பட்டிருக்கவில்லை. இந்த மூவரோடும் நெருங்கி பழகியவர்தான்  எம்.எஸ். ஆர். சி. புஸ்ப்பராஜா எதற்காக தனது புத்தகத்தில் இந்த மனிதரைப்பற்றிய பதிவுகளை தவறவிட்டிருந்தார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கி. பி அரவிந்தனிடம் நான் ஒரு தடைவை கதைத்தபொழுது  அதற்கான காரணத்தை கேட்டிருந்தேன். அதற்கு அவர் கூறிய காரணம் நினைவுத் தேய்வுகள் காரமாண தவறவிட்டு விட்டேன் ஆனால் நீங்கள்  எங்காவது அவரைப் பற்றி கட்டாயம் பதிவு செய்யுங்கள் என்று கூறியிருந்தார்.அண்மையில் வெளியான ஜயரின்  பதிவுகளில் நிச்சயமாக ஏதாவது ஒரு தகவலாவது   எம்.எஸ்.ஆரைப் பற்றி இருக்கும் என எதிர் பார்த்தேன் ஆனால் ஏமாற்றம்.

ஜயரின் ஊரான வடக்கு புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்தவர்தான் எம்.எஸ்.ஆர் அதைவிட ஈழப் போராட்ட ஆரம்ப காலங்களில் ஜரோடு இணைந்தே பல உதவிகளையும் போராட்டக் குழுக்களிற்கு செய்தவர்.ஆயுதப் போர் என அறைகூவல் விடுத்த சத்தியசீலன் தொடக்கம். அதை அடுத்த பரிமாணத்திற்கு தள்ளிய பொன் சிவகுமாரன் அதன் பின்னர் ஆயுதப் போராட்டங்களை வழிநடத்தத் தொடங்கிய  உமா. பிரபாகரன்.சிறீசபாரத்தினம்  மட்டுமல்ல  தொண்ணூறுகளின் யாழ் இடப்பெயர்வு  நடக்கும் வரை பலாலி இராணுவ முகாமை சுற்றி காவல் கடைமையில் நின்ற புலிகள் அமைப்பு போராளிவரை. இவரின் வீட்டில் ஒரு நாளாவது தங்கியிருந்து ஒரு வேளை உணவாவது உண்ணாதவர் கிடையாது.


  M.G.R என்றால் அனைத்து தமிழர்களிற்குமே  தெரியும்  ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு அவர்  என்னென்ன உதவிகள் செய்தார் என்பதும் அனைவரும் அறிந்தது  ஆனால் அதேயளவிற்கு கொஞ்சமும் குறைவில்லாத  உதவிகளை   வெளியே தெரியாமல் செய்தவர்  M.S.R . யார் இந்த . M.S.R??.....M.S..ராஜேந்திரன்.நெடிய கண்ணாடி அணிந்த உருவம். வடக்கு புன்னாலைக்கட்டுவன் சந்தியிலிருந்து  குப்பிளான்  செல்லும் வழில் இரண்டாவதாக இருந்த கேரளா பாணியிலான  மிகப்பெரிய பழையகாலத்து வீடுதான் இவர்களது வீடு.எழுபதுகளில் பல லொறிகளை வைத்து  கொழும்பிற்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த வசதி படைத்த குடும்பம். M.S.R என்கிற  எழுத்து பதித்த  லொறிகள்  பொதிகளை  எற்றியபடி  யாழ் கொழும்பு  வீதியில்  அன்றைய காலங்களில் யாரும் பார்க்காமல் இருந்திருக்க முடியாது என்றே சொல்லாம்.எழுபதுகளின் இறுதியில் ஆயுதப் போர் என்று தொடங்கியபோது அனைத்து போராளிகளையும் அரவணைத்து பாதுகாத்த ஒரு முக்கியமான வீடு இவருடையது.எல்லாவற்றிக்கும் மேலால் பிரபாகரனிற்கு  ஜய்யர் மற்றும் ராகவன் ஆகியோருடைய தொர்புகள் கிடைத்த பின்னர். அவரின் முக்கியமான மறைவிடம் இவரது வீடுதான். பிரபாகரன் துரையப்பாவை சுட்டுக்கொன்ற பின்னரும்.  பொன் சிவகுமரனின் கோப்பாய் வங்கிக் கொள்ளை தோல்வியடைந்து சிவகுமார் பிடிபட்டபோது அவருடன் வங்கிக் கொள்ளைக்கு போயிருந்த கி.பி அரவிந்தன்  தப்பியோடி நேராக போய்ச் சேர்ந்தது. இந்த வீட்டிற்குத்தான். இப்படி ஆரம்ப காலங்களில் இயக்க பேதங்களற்று  அனைவரரையும் போராளிகள் என்கிற நோக்கோடு அரவணைத்தவர்தான் M.S.R என்கிற மனிதன்.

பின்னை காலங்களில் இயக்க மோதல்கள் தொடங்கிவிட புலிகள்அமைப்பின் ஆதரவாளராக மாறிவிட்டிருந்தார். M.S.R  சரளமாக சிங்களம் கதைக்கத் தெரிந்தவர் என்பதால்  வடக்கு கிழக்கிற்கு  வெளியே  புலிகள் அமைப்பு நடாத்திய  தாக்குதல்களிற்காக  பாவித்த   அல்லது உதவிய சிங்களவர்களை   இவரது வீட்டில்தான்  கொண்டு வந்து தங்க  வைத்து  பராமரிப்பார்கள்.  அப்படியானவர்களிற்கு ஆடு  அடித்து விருந்து வைப்பதில் இருந்து  சாராயம் வாங்கி விருந்து வைப்பது வரை தனது  செலவிலேயே செய்து முடிப்பார்.அப்படியான  காலங்களில் 85 ம் ஆண்டு இறுதியில் பலாலி படை முகாமை சுற்றி காவல் நிலை அமைக்கும் பணிக்காக சென்றிருந்தவேளை எனக்கும் அறிமுகமாகிறார்.அதன் பின்னர் அடிக்கடி அவர் வீட்டிற்கு சென்றுவரத் தொடங்கியிருந்தேன். எந்த நேரத்தில் யார் சென்றாலும் அவர்களிற்கு தேனீர் தயாரிப்பதற்காக  அவர்கள் வீட்டு அடுப்பில் ஒரு பானையில் சுடுநீர் இருந்தபடியேதான் இருக்கும். எத்தனை பேர் போனாலும்  சலித்துக்கொள்ளாமல். அவரது மனைவி றூபியக்கா இன் முகத்துடன்  வரவேற்று சாப்பிடுறீங்களா  தேத்தண்ணி குடிக்கிறீங்களா என்று வரவேற்றபடியேதான் இருப்பார்.

அவர்கள் வீட்டின் காணியில் இருந்த கழிவறையில் மேலே சீமெந்து  தகடு(பிளாற்) போடப்பட்டிருந்தது அதனோடு ஒட்டியபடி ஒரு வேப்பமரம் அகன்று பரந்து கழிவறையின் மேல் பக்கத்தை நன்றாக மறைத்து வளர்ந்திருந்தது. அதற்குமேல் ஏறி நின்று பார்த்தால் வடக்கு புன்னாவை கட்டுவன் சந்தியில் இருந்து  குப்பிளான் வீதி இரண்டு பக்கமும் நன்றாக பார்க்கலாம். அத்தோடு அவரது வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி எதிரேயிருந்த ராகவன் வீடும் தெளிவாகத் தெரியும்.  டேய் இந்த பிளாற்றிலை உங்கடை அண்ணன் பதுங்கி படுத்திருக்கிறவர் என்று எனக்கு அடிக்கடி சொல்லுவார். 86 ம் ஆண்டு தமிழ் நாட்டிலிருந்து  தாயகம் திரும்பியிருந்த  தலைவர் பிரபாகரன்.  ஆரம்பத்தில் தனக்கு அடைக்கலம் கொடுத்த வீடுகளிற்கு திடீரென  போய் பார்த்து அவர்களிற்கு நன்றி தெரிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தக் கொண்டிருந்தார். அப்படி ஒரு  இரவுப் பொழுதில் நான்   M.S.R அண்ணரோடு அவரது வீட்டில்  அரட்டையடித்தக் கொண்டிருந்தேன்.  றூபியக்கா இரவு உணவாக புட்டு அவித்துக்கொண்டிருந்தார்.

அவரது வீட்டிற்கு முன்னால் ஒரு வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ஆயுதங்களுடன் குதித்த  பலர் மளமளவென அவரது வீட்டின் நாலு பக்கமும் புகுந்து நிலையெடுத்தார். அவரது வீட்டிற்கு  அருகேயே இரண்டு பக்கமும் புலிகள் அமைப்பின் காவல் நிலைகள் இருந்ததால் அங்கு வேறு யாரும் வரும் சந்தர்ப்பம் இல்லாததால் நாங்கள் அமைதியாக நடப்பதை கவனித்படி இருந்தோம். என்னைப்பார்த்து யாரே பெரிய தலைபோலை இருக்கு  சிலநேரம் குமரப்பாவா இருக்கலாமெண்டார். காரணம் குமரப்பா அன்றைய காலங்களில் அந்தப் பகுதியில் தான் தங்கியிருந்தார்.  ஆனால் தலைவர் பிரபாகரன் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்ததை கண்டதும் அட தம்பிவாறான் என்றார். அப்பதான்  எனக்கு சங்கடமாயிருந்தது தந்த வேலையை விட்டிட்டு இங்கை என்ன செய்யிறாயெண்டு பேச்சு விழலாமென எதிர்பார்த்தேன். ஆனால் வந்தவர்  M.S.R ரை கட்டித் தழுவி அண்ணை எத்தினை வருசமாச்சு  என்றபடி  நலம் விசாரித்து விட்டு என்னை பார்த்தவர்  சிரித்தபடி டேய் உனக்கும் இவங்களை தெரியுமா ஆச்சரியமாக  கேட்டவர் முழு இயக்கத்தையும்  இவர்தான் வளக்கிறார் போலை   என்று விட்டு. என்ன றூபியக்கா சாப்பாடு றெடிபோலை நல்ல நேரத்தக்குத் தான் வந்திருக்கிறன் என்றபடி குசினிக்குள் புகுந்து விட்டிருந்தார். அவருடன் மெய் பாதுகாவலர்கள் ஆறுபேர் வந்திருந்தார்கள். அனைவரிற்கும் றூபியக்கா  அவித்த புட்டு போதாது என்பதால்  மதியம் மிச்சம் இருந்த சோற்றையும் புட்டுடன் சேர்த்து  பெரிய பாத்திரத்தில் போட்டு இருந்த கறிகளையும் ஊற்றி அவசரமாய் கலந்தவர். அதை கையில் உருட்டி பிரபாகரன் கையில் வைத்தவர் தம்பி மற்றவையையும் வரச்சொல்லுங்கோ என்றார்.


பெடியள் வாங்கோ அக்காவின்ரை கையாலை சாப்பிட குடுத்து வைக்கவேணும் என்று கூப்பிட்டார். ஆனால்  விறைத்தபடி நின்றிருந்த பாது காவலர்கள் வரத் தயங்கினார்கள். அண்ணையின்ரை வீட்டிலை எனக்கு பாது காப்பு தேவையில்லை வாங்கோடா என்று மீண்டும் கூப்பிட்டதும்தான் ஒவ்வொருத்தராய் வந்து கையை நீட்டி சாப்பிட்டு முடித்ததும் M.S.R அண்ணன் செம்பில் தண்ணி அள்ளி அவர்கள் கைகள் கழுவ தண்ணீரை ஊற்றினார்.சாப்பிட்டு முடிந்து புறப்படும்போது  அண்ணை  எந்த உதவி தேவையெண்டாலும் எங்களிட்டை கேளுங்கோ எண்டு சொல்மாட்டன் உங்கடை உதவிதான் எங்களுக்கு தொடந்தும் தேவை என்று M.S.R ரிடம் விடை பெற்ற பிரபாகரன் என்னை பார்த்து  டேய் இங்கையே படுத்து கிடக்காமல் அலுவல்களை கவனி என்றுவிட்டு போய் விட்டார்.அப்படி எந்தனை வருடங்கள் கடந்தாலும் தலைவர் பிரபாகரனால் மறக்கமுடியாத ஒரு மனிதராகவே M.S.R இருந்தார்.

இந்தியப் படையினரின் வருகை புலிகளோடு யுத்தம் தொடங்கியதும் பலாலியில் இருந்து புறப்பட்ட இந்தியப் படையினர் வடக்கு புன்னாலைக் கட்டுவன் சந்தியில் இருந்த அனைத்து வீடுகளையும் இடித்து தரை மட்டமாக்கினார்கள். சந்தியில் இருந்த சாமியார் வீடு . ஸ்பீக்கர் மேகனின் வீடு ராசாத்தியக்கா வீடு அவரது எரிபொருள் நிரப்பு நிலையம் என்பவற்றோடு M.S.R அவர்களின் வீடும் அவரது நடக்க முடியாத வயது முதிர்ந்த தந்தை குட்டியப்பாவோடு சேர்த்து இந்தியப்படைகளால் இடித்து  தரை மட்டமாக்கப் பட்டதோடு அவரது லொறிகளையும் கொளுத்தி விட்டிருந்தார்கள்.எப்பொழுதுமே கலகலப்பாக  இருக்கும் மனிதர் அன்றோடு இடிந்து போனார். கடைசியாய்  தப்பியிருந்த ஒரோயொரு லொறியை விற்று  எல்லாத் தொழில்களும் செய்து பார்த்தார். பின்னை காலங்களில் அவரது மூத்த மகனும் இயக்கத்தில் இணைந்து சண்டையொன்றில் தலையில் காயமடைந்து  மன நிலை பாதிப்படைந்தவனாகிவிட்டிருந்தான்.  நீண்ட காலங்களின் பின்னர் இரண்டாயிரமாம் ஆண்டளவில்  மீண்டும்  தமிழ்நாட்டில் அவரது தொடர்பு கிடைத்போது என்னாலான சிறு உதவியினை செய்திருந்தேன். அது அவரது மகனின் மருத்துவ செலவுகளிற்கே போதுமானதாக  இருந்திருக்கவில்லை. அவரும் மீண்டும் வன்னிக்கு போய்விட எங்கள் தொடர்பும் விடு பட்டு போய்விட்டது. இறுதியில் மிகவும் வறுமையான நிலையில் வவுனியா பூந்தோட்டப் பகுதியில் வசித்து வந்தவர் அண்மையில்  இறந்து போய் விட்டார் என்கிற  செய்திமட்டுமே எனக்கு கிடைத்தது.

முன்னை நாள் போராளிகளிற்கும்  இயக்க ஆதரவாளர்களிற்கும் புலிகள் அமைப்பு அவர்களது வாழ்வாதாரங்களிற்கு உதவிகளையும் பொருளாதார வசதிகளையும் செய்து கொடுத்த காலகட்டங்களில் கூட தனக்காக உதவியென்று இயக்கத்திடம் போய் நிற்காமல் இறுதிவரை அவர்களிற்காக உதவி  வெளியே தெரியாத வேராக  உதவி செய்தே மரணித்துபோய் விட்ட அந்த மனிதனை இந்த மாவீரர் நாளில் நினைவு கூர்ந்து அஞ்சலிக்கிறேன்.

கடைசி அடி

1:29 PM, Posted by sathiri, No Comment

Posted Image

“சூரிச்” புகையிரத நிலையத்தினுள் நுழைந்த  அமுதன்  அங்கிருந்த சிற்றுண்டி சாலையை நோக்கி நடந்தான்.  அங்கு இருந்த கதிரைகளில் பிஸ்கற்றை சாப்பிட்டபடி  விளையாடிக்கொண்டிருந்த   மாலதியும் தமிழினியும்  பல நாட்களிற்கு  பின்னர் அமுதனைக் கண்டதும், அப்பா என்றபடி ஓடிப்போனவர்களை  முழந்தாளிட்டு   இரண்டு கைகளாலும்  கட்டியணைத்து மாறி மாறி முத்தமிட்டவன் . தான் வாங்கி உடைந்து விடாமல் பத்திரமாக பாதுகாத்தபடி  கொண்டு வந்த  இரண்டு Kinder சொக்கிலேற்றுக்களை இருவரிடமும் கொடுத்து விட்டு  மேனகாவை பார்த்தான். தன்னை  பாரக்கிறான் என்பதை கவனித்த மேனகா  அவனை கவனிக்காதது போல் வாடிக்கையாளர் ஒருவரிற்கு  குளிர் பானங்களை  எடுத்து நீட்டிவிட்டு பணத்தை பெற்றுக்கொண்டிருந்தாள். அவசரமாக  சொக்கிளேற்றுக்களை உடைத்த இருவரும் அதற்குள் இருந்த  பொருத்தப்படாத விளையாட்டு சாமான்களை  எடுத்தார்கள்.  மாலதிக்கு ஒரு காரும்  தமிழினிக்கு ஒரு பொம்மையும் கிடைத்திருந்தது. இருவரும் அதனை பொருத்தித் தருமாறு அமுதனிடம் கொடுத்ததும் அவன் ஒரு கதிரையில் அமர்ந்து பொருத்தத் தொடங்கினான்.

அவர்கள் இருபக்கமாக அமர்ந்து கொண்டார்கள்.


“அப்பா நீங்கள் ஏனப்பா இப்ப வீட்டை வாறேல்லை “இது தமிழினியின் கேள்வி. அவளின் தலையை தடவியபடியே  “அப்பாக்கு இப்ப தூரத்திலை  வேலை  அதுதான் வாறேல்லை  ஆனால்  நேரம் கிடைக்கேக்குள்ளை நான் அடிக்கடி உங்களை வந்து பாப்பன் . நீங்கள்  அச்சா பிள்ளையள் தானே ,குளப்படி செய்யாமல்  அம்மா சொல்லுறதை கேட்டு நல்லபடியா படிக்கவேணும். அப்பா கெதியிலை திரும்பவும் விட்டு வந்துடுவனாம்.சரியா? “என்றதற்கு ஓமென்று தமிழினி  தலையாட்டினாலும், சமாதானமடையாதவளாய்  “அப்பா நீங்களெண்டால்  பள்ளிக்கூடம் முடிஞ்சதும் காரிலை வந்து  வீட்டை கூட்டிக்கொண்டு போயிடுவிங்கள்.  ஆனா இப்ப  நாங்கள் அம்மா வரும்வரைக்கும் இங்கை இருக்கவேண்டியிருக்கு எனக்குப் பிடிக்கேல்லை “முகத்தை சுழித்தாள். “எனக்கும் தான் “என்றாள் மாலதி. ஆனால் மாலதி அவனிடம் அதிகம் கேள்விகள் எதனையும் கேட்கவில்லை அவள் கொஞ்சம் பெரியவள் என்கிற படியால்   தனது தாய்க்கும்  தந்தைக்குமிடையில் ஏதோ பிரச்சனை  அதனாலதான்  தந்தை வீட்டிற்கு வருவதில்லை என்பது புரிந்திருந்தது. தமிழினிக்கு  இப்பொழுதுதான்  நான்கு வயது அவள்தான்  இருவரிடமும் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தாள்.

விளையாட்டு பொருள்களை பொருத்திக் கொடுத்தவன் ” அப்பாக்கு வேலைக்கு நேரமாகிது போகப்போறன்  அப்பாக்கு உம்மா தாங்கோ ” எண்டதும் இருவரும் இரண்டு பக்க கன்னத்திலும் ஒரே நேரத்தில் முத்தத்தை பதிக்க அமுதனின் கண்கள் கலங்கி விட்டிருந்தது. “இனி எப்ப வருவிங்களப்பா” என்கிற தமிழினியின் அடுத்த கேள்வி. “அப்பா கெதியிலை திரும்ப வீட்டை வந்திடுவன் குளப்படி செய்யக் கூடாது ” என்று விட்டு புறப்பட தயாரானவனிடம்   தமிழினி “அப்பா  எனக்கு  காரோடுற பார்பி பொம்மை  வேணும்” என்றாள். மேனகாவை பார்த்தான் அவள் கவனிக்காதது போலவே நின்றிருந்தாள். அவளிடம் போய் நாளைக்கு வழக்கு முடிவு தீர்ப்பு சொல்கிற நாள்.  எப்பிடியும் எனக்கு சார்பாத்தான் தீர்ப்பு வரும் அதுக்கு பிறகு எங்களுக்குள்ளை  உள்ள பிரச்சனையெல்லாம் முடிஞ்சிடும்  என்று சொல்லி விடைபெற மனம் தவித்தது.  ஆனால் தான் வந்து நிற்கிறது தெரிஞ்சும் தெரியாத மாதிரி நிக்கிறாள் கல்நெஞ்சக் காரி , கிட்ட கதைக்கபோக  ஏதாவது சத்தம் போட்டு விட்டாளெண்டால்  ரெயில்வே ஸ்ரேசனிலை மரியாதை போயிடும், எதுக்கு வம்பு என்று நினைத்தவன் பிள்ளைகளை இன்னொரு தடைவை முத்தமிட்டு விட்டு நடக்கத் தொடங்கியவன் இடையில் நின்று பிள்ளைகளை ஒரு தடைவை திரும்பிப் பார்த்தவன் என்ரை பிள்ளையள் இப்பிடி பிச்சையெடுக்கிற பிள்ளையள் மாதிரி இரயில் நிலையத்திலை குந்தியிருக்கிதுகள். மனிசி திரும்பியும்  பாக்கிறாள் இல்லை . ஏன் இந்த நிலைமை? நான் யாருக்கு என்ன  பாவம் செய்தனான் ?ஏன்?? ஏன்?? போய்க்கொண்டிருந்தான்………………………….


போய்க்கொண்டிருந்த அமுதனையே  மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தாள் மேனகா. பாவம் மனுசன் மெலிஞ்சு போச்சுது கனக்க தண்ணியடிக்கிறார் போலை. காரிலையே திரிஞ்ச மனுசன் எந்த பஸ் எங்கை போகுதெண்டே தெரியாதவர் காரையும் வித்துப்போட்டு பஸ்சிலை ஏறி இறங்கி என்ன கஸ்ர படுறாரோ.எண்டாலும் என்னட்டை வந்து ஒரு வசனம் கதைக்காமல் போறார் போகட்டும். நாளைக்கு வழக்கு முடிவு தெரிஞ்சிடும். கடவுளே  நல்ல முடிவா வரவேணும் என மனதிற்குள் வேண்டியவள். எவ்வளவு   மகிழ்ச்சியா இருந்த  எங்களுக்கு இவ்வளவு பிரச்சனை ஏன்??………………………
௦௦௦

/நித்திரையா தமிழா நீயும் எழுந்து பாரடா…/
பாடல் சி டியில் ஓடிக்கொண்டிருக்க  அதையே முணு முணுத்தபடி பாடசாலையால் கூட்டி வந்த பிள்ளைகளிற்கு  உணவை தயாரித்துக்கொண்டிருந்தான் அமுதன்.வீட்டு அழைப்பு மணி சத்தம்.திறந்து பார்த்தான்  அப்பாத்துரையும் பக்கத்தில் இன்னொரு புதியவர் அதுவரை அவன் பார்த்தேயில்லை. வரவேற்றவன் ஒரு நிமிசம் பிள்ளையளிற்கு சாப்பாடு குடுத்திட்டு வாறன் என்றவன் அவர்களிற்கு உணவை கொடுத்து விட்டு வந்து அமர்ந்தான். அப்பாத்துரையிடம்  “சொல்லுங்கோ என்ன புதினங்கள். கிளிநொச்சியையும் விட்டாச்சு எண்டு செய்தியள் சொல்லுது  எவ்வளவு கஸ்ரப் பட்டு கசை கொட்டி கட்டியெழுப்பின இடம் மனசுக்கு கஸ்ரமாயிருக்கு ஏன் அதை விட்டவை” என்று விட்டு இருவரையும் மாறி மாறி பார்த்தான்.


“இடங்களை விடுறதும் பிறகு பிடிக்கிறதும் இது முதல் தரம் இல்லைத்தானே  இதுவும் தந்திரோபாயமான பின் வாங்கல்தான்.  இந்த தடைவை கொஞ்சம் கூடுதலாய் பின்வாங்கினம் ஏனெண்டால் இழப்புகளை குறைச்சு  பலத்தை  தக்க வைக்கவேணும்.தலைவர் பெரிய திட்டம் ஒண்டு வைச்சிருக்கிறார் அதுதான் கடைசி அடி.  அதுக்கு இந்த தடைவை பெரிய தொகை  ஒண்டு உடனடியா அனுப்ப சொல்லி கேட்டிருக்கினம். அது மட்டுமில்லை  இதுதான் நாங்கள் சேக்கிற கடைசி நிதி அதாலை உங்களிட்டை இருந்து பெரிய பங்களிப்பை  எதிர் பாக்கிறம். அதுக்காவவே இவரை நாட்டிலையிருந்து  நேரடியா தலைவர் அனுப்பியிருக்கிறார். இவரின்ரை பெயர் விடுதலை ” என்று வலக்கை விரல்களை குவித்து  விளக்கத்தை சொல்லி முடித்தான் அப்பாத்துரை.
“பெரிய தொகையெண்டால் எவ்வளவு ” புருவத்தை உயர்த்தினான் அமுதன்.
“குறைஞ்சது பத்தாயிரம் பிறாங்காவது எதிர் பாக்கிறம்”.

பத்தாயிரமா?..வாயை பிளந்தவன்.இரண்டு வருசத்தக்கு முதல் நீங்கள் கடனடிப்படையிலை வாங்கின  நாலாயிரமே திருப்பி தரேல்லை ஆனாலும் நான் அதை கடனா நினைக்காமல் பங்களிப்பா தான் தந்தனான்.  மாத காசு வேறை தாறனான் ஆனால் பத்தாயிரம் கொஞ்சம் கஸ்ரம்.
அமுதன் நீங்கள் காசு தரத் தேவையில்லை கடன் மட்டும் எடுத்துத் தந்தால் போதும்  நாங்கள்  மாதா மாதம் காசை கட்டுவம். அவ்வளவுதான்.
என்ரை பாங்கிலை கடன் எடுக்கேலாது ஏற்கனவே வீட்டுக்கடன் ,கார் கடன் எல்லாம் எடுத்திட்டன்.அதுவும் பத்தாயிரம் கஸ்ரம்.தலையை சொறிந்தான் அமுதன்.

Posted Image

நீங்கள் ஒண்டும் கஸ்ரப் படவே தேவையில்லை  இதிலை கையெழுத்து மட்டும் போட்டால் போதும் உங்கடை விசா போட்டோ கொப்பி ஒண்டு அவ்வளவுதான் என்றபடி சில படிவங்களை  பையிலிருந்து வெளியே எடுத்தான் அப்பாத்துரை. ஆனாலும் அமுதனிற்கு கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. இல்லை வந்து என்று இழுத்தான். அதை கவனித்த அப்பாத்துரை  என்ன யோசிக்கிறீங்கள்  நீங்கள் ஒரு மாவீரரின்ரை  அண்ணன். அது மட்டுமில்லை  எங்கடை பொறுப்பாளர் கஸ்ரோ அண்ணையே  தன்ரை குரலிலை பதிஞ்சு ஒரு சி.டி அனுப்பியிருக்கிறார் கேட்டுப்பாருங்கோ என்றதும் பக்கத்தில் இருந்த  விடுதலை  ஒரு சிடியை எடுத்து நீட்டினான். பாடலை நிறுத்திய அமுதன் அந்த சிடியை  ஓடவிட்டான்.  அதற்கு முன்னர் அவன் கஸ்ரோவின் குரலை கேட்டதே கிடையாது ஆனாலும்  அது கஸ்ரோதான் என நம்பினான். சுமார் ஏழு நிமிடங்கள்  ஓடிய சிடியை கேட்டவன்  சரி எங்கை கையெழுத்து போடவேணும் என்றான்.
நீட்டிய பத்திரங்களில் கையெழுத்தை போட்டவன் தனது விசாவையும் ஒரு போட்டோ கொப்பி எடுத்து கொடுத்தான். எல்லாவற்றையும் பத்திரப் படுத்திய அப்பாத்துரை இந்தாங்கோ புதிசா ஒரு சி.டி வந்திருக்கு ஏழு பிறாங் . எந்த பிரசுரமோ  சி.டிக்களோ  கலண்டர்களோ அமுதன்  தவற விடுவதில்லை. சி.டி யை வாங்கியவன் பத்து பிறாங்கை நீட்டி விட்டு  வைச்சிருங்கோ என்றான். அப்பொழுது வேலையால் வந்து நுழைந்த மேனகா இருவரிற்கும் வணக்கம் சொல்லிவிட்டு  அமுதனிடம் வந்தவைக்கு ஏதாவது குடிக்க குடுத்தனிங்களோ என்றதும் தான்  அமுதனிற்கு அந்த நினைவே வந்தது. இல்லையப்பா இனித்தான் .. அதற்குள் சமையலறைக்குள்  போனவள் எனக்கு உங்களை பற்றி தெரியும்தானே ஊர் கதை  எண்டால் உலகத்தையே மறந்திடுவீங்கள் என்றபடி தேனீரை தயாரிக்க தொடங்கி விட்டிருந்தாள்.அமுதனோ அதற்கிடையில் மேனகாவிற்கு எதுவும் தெரிய வேண்டாம் என்று அப்பாத்துரைக்கு  சைகை காட்டி விட்டிருந்தான். அவர்கள் விடை பெற்று போனதும்  அமுதனும் வேலைக்கு புறப்பட்டவன் புதிதாய் வாங்கிய  சி.டி யின் பொலித்தீன் உறையை பல்லால் கடித்து பிரித்து எடுத்து காரில் ஓடவிட்டு காரை இயக்கினான். “இதுதாண்டா கடைசி அடி “செல்லப்பா  பாடிக்கொண்டிருந்தார்…………


  00000
வேலையால் வந்து  தபால் பெட்டியை  திறந்து கடிதங்களை  எடுத்த அமுதன் முதலில் வங்கி கடிதத்தை பிரித்தவன் திடுக்கிட்டவனாய்  வந்திருந்த தொகையை  திரும்ப  திரும்ப  பார்தான் .கடைசியில் ஒண்டு ,பத்து, நூறு ,ஆயிரம்.,பத்தாயிரம், இலச்சம் எண்டு . கை விரல்களினாலும் எண்ணிப் பார்த்தான்  ஆறாவது விரலில் வந்து நின்றது. அவசரமாய் கைத்தொலைபேசியை எடுத்து அப்பாத்துரையின் இலக்கங்களை  அழுத்தியவன், “அப்பாத்துரை பாங்கிலை இருந்து கடிதம் வந்திருக்கு  ஆனால் நீங்கள் பத்தாயிரம் தானே கேட்டனீங்கள்  ஒரு லச்சம் வந்திருக்கு இப்ப என்ன செய்யிறது”.  மறுமுனையில்” ஓ அப்பிடியா”  என கேட்டவன். “தலைவர் கேட்ட தொகையை  குடுக்கிறதுக்காக  சில பேரின்ரை பெயரிலை கூடுதலா எடுத்தனாங்கள் அதிலை உங்கடை பேரும் வந்திட்டுது போலை…….. ம்.. ஒரு பிரச்சனையும் இல்லை நான் தாற எக்கவுண்டுக்கு மாத்தி விடுங்கோ ” என்றான் சாதாரணமாக. “இல்லை என்னட்டை ஒரு சொல்லு சொல்லியிருக்கலாமல்லோ நம்பி கையெழுத்து போட்டால் இப்பிடியா செய்யிறது ” கொஞ்சம் கோபமாகத்தான் கேட்டான்.

“அமுதன் காசு எங்களிட்டையா வந்திருக்கு உங்களிட்டை தானே வந்திருக்கு ,ஏன் ரென்சன் ஆகிறீங்கள். உங்களுக்கே தெரியும் போராட்டத்துக்கு நிதி உதவி செய்யிறதிலை இண்டு வரைக்கும் சுவிஸ்தான் முதலாவதா நிக்கிது. சின்ன நாடு  நாங்கள் கொஞ்சப்பேர்  ஆனால் கூடுதலாய் குடுக்கிறம் . தலைவரே அதை தன்ரை வாயாலை  புகழ்ந்து சொல்லியிருக்கிறார். அவசரம் எண்ட படியாலை எங்களாலை ஒவ்வொருத்தராய் தொடர்பு கொண்டு விபரம் சொல்ல முடியேல்லை கடனை நாங்கள் தானே கட்டப் போறம் பிறகெதுக்கு பயப்பிடுறீங்கள்”. ஆனாலும் சமாதானமடையாத அமுதன் “அதில்லை வந்து”….. என்று தொடங்கவும் குறுக்கிட்ட அப்பாத்துரை  , “அமுதன் அவனவன் நாட்டுக்காக உயிரையே  குடுக்கிறாங்கள் நீங்கள் காசை கடனெடுத்து குடுக்க யோசிக்கிறீங்கள். நீங்கள் யோசிக்கிறதை பாத்தால் நாட்டுக்காக போராடுற போராளியள் மட்டுமில்லை எங்களுக்காக உயிரை குடுத்த மாவீரர்களையும் அவமதிக்கிறமாதிரிக் கிடக்கு “, பதறிப்போன  அமுதன் “ஜயையோ அப்பிடியெல்லாம் இல்லை  என்ரை தங்கச்சியும் மாவீரர் தான் எனக்கும் அந்த வலி தெரியும் .எக்கவுண்ட் நம்பரை எஸ்.எம். எஸ் பண்ணி விடுங்கோ  இப்பவே போய் காசை மாத்தி விடுறன்” என்று விட்டு தொலைபேசியை நிறுத்தினான்.  ஒரு நிமிடத்திலேயே  எஸ்.எம். எஸ் . வந்திருந்தது.
00000
Posted Image

ஒரு மாதம் ஓடிவிட்ட நிலையில் செய்திகள் எல்லாமே குழப்பமானதாகவே வந்து கொண்டிருந்தது அமுதனிற்கும் ஒண்டும் புரியவில்லை. வங்கியில் அந்த மாதத்திற்கான கடன் பணமும் கழிந்து விட்டிருந்தது. ஆனால் அப்பாத்துரையிடமிருந்து  எந்த பதிலும் வரவில்லை.  போனடித்து  காசு என்று கேட்கவும் அமுதனிற்கு சங்கடமக இருந்தது. அப்பாத்துரையிடம் காசு  எண்டு கேக்காமல் நிலவரத்தை கேக்கிற மாதிரி அடிச்சு பாப்பம் என நினைத்து போனடித்து  “என்ன  புதினங்கள் சாலை கடற்கரையை  பிடிச்சிட்டதாவும்  புலிகளையும் தலைவரையும் முற்றுகைக்குள்ளை கொண்டு வந்திட்டதா  செய்தியள்ளை சொல்லுறாங்கள்.உண்மையோ “என்றதும், சிரித்தபடியே   அப்பாத்துரை தொடங்கினான்  “இலங்கை அரசுதான் புலிகள் முற்றுகைக்குள்ளை  அகப்பட்டிட்டினம்  எண்டு சொல்லுது  ஆனால் உண்மையிலை இலங்கை இராணுவம்தான் முற்றுகைக்குள்ளை  சிக்கு பட்டு நிக்கிது.வன்னிக்குள்ளை முழு ஆமியும் போய் நிக்கிறாங்கள் ஆனால் திருகோணமலை மட்டக்கிளப்பிலை உள்ள எங்கடை படையணியள்  அவங்களை சுத்தி வளைச்சு நிக்கிது.  வடிவா பாத்தீங்கள் எண்டால்  நாங்கள் தேள் வடிவத்திலை ஒரு தாக்குதலை நடத்தப் போறம்.தேள் எண்டால் தெரியும்தானே ?  ” தட்டுத் தடுமாறிய  அமுதன் “ஓம் தேள் எண்டால் நட்டுவாக்காலிதானே” என்றான். “ஓம் அதுதான் அது முன்னங்காலாலை கடிக்கிற நேரம் பின் வாலாலையும் குத்தும் வாலாலை குத்துறதுதான் மோசமாயிருக்கும்.  அதைப்பற்றி ஒரு பெரிய இராணுவ ஆய்வாளரே எழுதியிருக்கிறார் படிச்சனீங்களோ?” . “இல்லை படிக்கேல்லை” . “வெப்சைற்றுகளிலை இருக்கு படிச்சு பாருங்கோ அதைவிட  நாங்கள் வாங்கின  பிளேனுகளின்ரை  படங்கள் உங்களுக்கு மெயில் போட்டு விடுறன் பாருங்கோ பிறகு சந்திப்பம் “என்று அப்பாத்துரை இணைப்பை துண்டித்தான்.

அமுதனுக்கு  இன்னும் குழப்பமாயிருந்தது  அவங்கள் இவங்களை சுத்தி வளைச்சிருக்கிறம் எண்டுறாங்கள். இவங்கள் அவங்களை சுத்தி வளைச்சிருக்கிறம் எண்டுறாங்கள். இவன் வேறை தேள் மாதிரி வாலாலை குத்தப் போறம் எண்டுறான். புலியள்  புலிமாதிரி பாயாமல் எதுக்கு தேள் மாதிரி வாலாலை குத்துவான் என்றபடியே  கணணியை  போட்டு மின்னஞ்சலை திறந்தான். ஈழம் எயார் போஸ்(Eelam Air Force)என்று எழுதிய நவீன குண்டு வீச்சு விமானங்களின் படங்கள் வந்திருந்தது . அவனிற்கு  தெரிந்ததெல்லாம் சியாமா செட்டியும். அவ்ரோவும் புக்காராவும் தான்  ஆனால்  இதுகள் ஒண்டு கிபீர் மாதிரி இருந்தது மற்றது மிராச்சா இருக்குமோ??  யோசித்தவன் எதுவாயிருந்தாலும்  படங்களை பார்க்க  அவனிற்கு புல்லரித்தது.  இவ்வளவு வாங்கியிருக்கிறாங்கள்  சரி ஒரு மாத காசு தானே போனால் போகட்டும் என்று நினைத்தவன். வேலையிடத்திலை எல்லாருக்கும் காட்டவேணும் என்று நினைத்தபடி  கிறாபிக் குண்டு வீச்சு விமானங்களை  பிறின்ற் எடுத்துக்கொண்டான்.

அடுத்த மாதக் காசும் கழிந்து விட்டிருந்தது. மகிந்தா நிலத்தை முத்தமிட்டு  பயங்கரவாதத்தை அழித்து விட்டேன் என்று அறிவித்த அடுத்தடுத்த நாட்களில் அனைத்து செய்திகளிலும் புலிகள் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டு விட்டதாக தலையின் வலப்பக்கம் காயமடைந்த படத்தினை திரும் திரும்ப போட்டுக்காட்டிக் கொண்டிருந்தார்கள். அமுதனிற்கு உடல் விறைத்து பைத்தியம் பிடித்ததை போல ஒரு உணர்வு பி.பி.சி…தொடங்கி  சி.என்.என். என்று உள்ளுர் செய்தி அனைத்தையும் மாறி மாறி பார்த்தவன், அப்பாத்துரைக்கு  போனடித்து விடயத்தை கேட்டான். பெரும் சத்தமாய் சிரித்த அப்பாத்துரை “பாத்தீங்களோ நீங்களும் ஏமாந்திட்டியள்.

இதுதான் எதிரிக்கு தேவை அவன் எங்களையும் சர்வதேசத்தையும் குழப்பிறதுக்கு செத்துப்போன ஒருத்தரின்ரை  தலையிலை  தலைவரின்ரை முகம் மாதிரி பிளாஸ்ரிக்கிலை செய்து வைச்சு படமெடுத்து போட்டிருக்கிறாங்கள்.ஆனால் தலைவர் ஆறாயிரம் போரோடை முல்லைத்தீவை விட்டு தப்பி காட்டுக்குள்ளை போட்டார்” என்றான் .உண்மையாவே என்று கேட்ட அமுதனிற்கு  தலைவர்  தப்பிட்டார் என்ற செய்தி கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது ,ஆனால் “வாங்கின பிளேனுகள் எல்லாம் எங்கை ?  அதுகளை ஏன் பாவிக்கேல்லை “என்று கேட்டான். “அதெல்லாம் பத்திரமா எரித்தியாவிலை நிக்கிது. தலைவர் அடுத்த சண்டையை தொடங்கினதும் இவங்கள் எரித்தியாவிலை இருந்து போய் அடிச்சிட்டு வருவாங்கள்  சரி நான் கொஞ்சம் அலுவலாய் நிக்கிறன் பிறகு கதைக்கிறன் “என்று தொடர்பை துண்டித்தான் அப்பாத்துரை. இந்த மாதமும் அமுதன் காசைப் பற்றி கதைக்கவில்லை.
மாதம் மூன்றை  தாண்டி அந்த மாத காசும்  கழிந்து விட்டிருந்தது அமுதனின் நிலைமை  கவலைக்கிடமாகி விட்டிருந்தது அப்பாத்துரையை தொலைபேசியில் பிடிக்க முடியவில்லை. மேனகா அன்று வழைமை போல் தனது காரிற்கு பெற்றோலை நிரப்பிவிட்டு  எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கடன்  அட்டையை நீட்டிளாள்.அது வேலை செய்யவில்லை  அவசரத்திற்கு என வைத்திருக்கும் பணத்தை எடுத்து கொடுத்து விட்டு, வீட்டிற்கு போகிற வழியில்தான் வங்கி ,போய் கேட்கலாமென  நினைத்து வங்கிக்கு போயிருந்தாள்.

வீட்டின்  வரவு செலகு கணக்குகள் அனைத்தையும்  அமுதனே கவனிப்பதால் மேனகா அவற்றை கவனிப்து கிடையாது.  வங்கிக்கு போய் நிலைமையை கேட்டதும் தான்  அவளிற்கு புரிந்தது. அந்த மாத கடன் காசு கழியாமல் கடன்  அட்டைகள் முடக்கப்பட்டிருந்ததோடு அனைத்து பண கொடுப்பனவுகள் வீட்டுக் கடன் உட்பட வங்கியால் திருப்பிவிடப் பட்டிருந்தது. இவ்வளவு நிலைமை மோசமாகியும் தனக்கு எதுவும் தெரியாமல் மறைத்த அமுதன்  மீது ஆத்திரமாய் வந்தது. வீட்டிற்கு போனவள்  நேரடியாக அமுதனிடம் போய் பாங்கிற்கு என்ன நடந்தது என்றதும் தான்  மேனகாவிற்கு எல்லாம் தெரிந்து விட்டது என்பதை உணர்ந்தவன் தயக்கத்தோடு  நடந்து முடிந்தது அனைத்தையும் சொல்லி முடித்தான். மேனகாவிற்கு கோபம் அதிகரித்ததே தவிர குறையவில்லை.

௦௦௦௦௦௦

அன்றாடக்  கடனை ஈடு செய்வதற்காக மேனகாவின் நகைகள் எல்லாம் ஒவ்வொன்றாக விலைபோய் தாலியும் இறுதியாக அடைவு வைத்தாகிவிட்டது.அமுதனிற்கும்  மேனகாவிற்கும்  சின்ன சின்ன பேச்சுக்கள் கூட பெரும் சண்டையாக மாறத்தொடங்கி ஆறு மாதங்கள் கடந்த நாளென்றின் இரவில் பிள்ளைகள் இருவரும் நித்திரையாகிப் போன பின்னர்  வேலையால் வந்த  அமுதனிடம் ” அப்பாத்துரை  தன்ரை மச்சானின்ரை பேரிலை ஒரு றெஸ்ரோரண் வாங்கிட்டானாம் தெரியுமோ?” ம்…என்றான்.

“அவனிட்டை காசு கேட்டினீங்களோ? ” அதற்கும்.  ம்…தான் பதிலாக வந்தது.மேனகா  தொடர்ந்து பேசிக்கொண்டே போனாள்  அமுதனிடமிருந்து  ம்…மட்டுமே பதிலாக வந்துகொண்டிருக்க வெறுப்பின்  உச்சத்தை மேனகாவும்  கோபத்தின் உச்சத்தை அமுதனும் தொட்டுக்கொண்டிருந்த  அந்த  தருணங்களில்  ” சே நீங்களெல்லாம்  ஒரு மனுசன் ஏதாவது வாயை துறந்து கதையுங்கோ உங்களை ஒரு ஆம்பிளை  எண்டவே வெக்கமாயிருக்கு ” எண்டவும்  மேனகா என கத்தியபடி அமுதனின் கை அவள் கன்னத்தில் இறங்கியது மட்டுமல்ல எட்டி உதைத்தும் விட்டான்.
சத்தம் கேட்டு பிள்ளைகள் எழுந்து வந்து அழத் தொடங்கத்தான். தன்னிலைக்கு திரும்பிய அமுதனிற்கு  ஆத்திரத்தில் எவ்வளவு பெரிய தவறை செய்து விட்டோம் என்று புரிந்தது. பிள்ளைகளை சமாதானப்படுத்தி அவர்களை படுக்கைக்கு கொண்டு போய் விட்டான் . மேனகா அழுதபடியே படுக்கையறைக்குள் போய் கதவை பூட்டிக்கொண்டு விட்டாள்.கதவருகே வந்து நின்று மன்னிப்பு கேட்டுப்பார்த்தான் கதவு திறக்கவேயில்லை. அவள் ஏதாவது செய்து விடுவாளோ என்றும் அமுதனிற்கு பயமாக இருந்தது.போலிசிற்கு போனடிக்கலாமா என்றும் யோசித்தான். வேண்டாம் அவங்கள் வந்தால் சும்மா உள்ள பிரச்சனையையும் பெரிசாக்கிபோடுவாங்கள். எதற்கும் விடியட்டும் என நினைத்தவன் விஸ்கியை திறந்து கிளாசில் ஊற்றி குடித்தபடி படுக்கை அறை கதவையே பார்த்தபடி சத்தம் ஏதாவது கேட்கிறதா என  கவனித்தபடி இருந்தான்.


காலை மேனகா பிள்ளைகளை  பாடசாலைக்கு தயார்பண்ணிக்கொண்டிருக்கும் சத்தத்தத்தில் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான் ,  சே கலியாணம் கட்டி இத்தினை வருசத்திலை ஒரு நாள்  இப்பிடி மோசமாய் நான் நடந்ததேயில்லை.இண்டைக்கு  அவளுக்கு பிடிச்ச சொக்கிலேற் கேக் வாங்கி கொண்டு போய் குடுத்து  காலிலை  விழுந்தாவது மன்னிப்பு கேட்கவேணும்.என்று நினைத்தவன். மாலை  பாடசாலையால் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு கேக்கோடு  போயிருந்தான். வேலையால் மேனகா வந்ததும் பிள்ளைகளை  அறைக்குள் அனுப்பிவிட்டு கேக் பெட்டியை கையில் எடுக்கும் போதே  அவள் “உங்களோடை கொஞ்சம் கதைக்கவேணும் கோபப் படாமல்  ஆறுதலா கேளுங்கோ “,அவள் மேசையில் அமர  எதிரே அவன். கேக் பெட்டியை  இருவரிற்கும் நடுவில் வைத்தவன் சரி சொல்லு என்றான். நான் இண்டைக்கு வேலைக்கு போகேல்லை  என்றபடி பையில் இருந்து சில  காகிதங்களை எடுத்தவள் நான் நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திட்டன்  நாங்கள் பேசாமல் டிவோஸ் எடுப்பம் இதை தவிர வேறை வழி இல்லை.

அதிர்ந்துபோனவன் என்ன கதை கதைக்கிறாய் பிள்ளையளையாவது கொஞ்சம் யோசிச்சியா?
பிள்ளையளை யோசிச்சு அதுகளின்ரை எதிர் காலத்தை நினைச்சுத்தான் இந்த முடிவே எடுத்தனான்.

என்ன சொல்லுறாய்.?

நாங்கள் கட்ட வேண்டிய காசுகளை கணக்கு பாத்தன் எங்கடை வருமானத்தை விட மூண்டு மடங்கு வருது. நாங்கள் இருபத்து நாலு மணித்தியாலமும் வேலை செய்தாலும்  காணாது. நகைகளும் வித்தாச்சு தெரிஞ்சாக்களிட்டை  கடனும் வாங்கியாச்சு இந்த மாதம் வீட்டு கடன் கட்ட முடியேல்லை  இப்பிடியே போனால் வீட்டை பிடுங்கிபோடுவாங்கள். பிறகு நாங்கள் பிள்ளையளோடை சேர்ந்து தற்கொலை செய்யவேணும் இல்லாட்டி சூறிச் ரெயில்வே ஸ்ரேசனிலை தான் போய் படுத்திருந்து பிச்சையெடுக்கவேணும். இந்த இரண்டும்தான் தெரிவு இதிலை எதை செய்யலாமெண்டு நீங்களே சொல்லுங்கோ.

பிள்ளையளோடை தற்கொலையா என்ன விசர் கதை கதைக்கிறாய் .டிவோஸ் எடுத்தால் எல்லாம் சரியாயிடுமா என்றவன் விவாதங்கள் தொடர்ந்தது .சண்டை பிடித்தபடி சேர்ந்து  இருப்பதை விட பிரிந்து போவது  நல்லதாகத்தான்  தெரிந்தது.கடைசியில் மேனகா சொன்னவைகள் அவனிற்கு சரியாகப்படவே மன வேதனையுடன்  விவாகரத்து எடுக்க சம்மதித்தான்.அவன் ஆசையாய் வாங்கி வந்த கேக் குப்பைக்  கூடையை நிரப்பியிருந்தது.

௦௦௦
அப்பாத்துரையோ சிறிய தொகை  கொடுத்தவர்களிற்கு  தலைவர் கெதியிலை வருவார் வந்ததும்  கணக்கு தரலாமென்று பதில் சொல்லிவிட்டிருந்தான். பெருமளவில் கடனெடுத்து கொடுத்தவர்களிற்கு ஒரு புதிய திட்டத்தை அறிவித்தான். அதுதான் கொத்து றொட்டித் திட்டம். சூரிச்சில் உள்ள அனைத்து தமிழர்களும்  தினமும் தனது கடையில் கொத்து றொட்டி வாங்கவேண்டும். அதன் வருமானத்தை சேர்த்து மொத்தமாக்கி ஒவ்வொருத்தரின் கடனாக அடைக்கலாம். வேறு வழியின்றி கடன் கொடுத்தவர்களே சம்மதித்தும் இருந்தார்கள்.உணவு விடுதியில் வேலை செய்த அமுதனும்  பசிக்காவிட்டாலும் கொத்து றொட்டி வாங்க தொடங்கியிருந்தான். வருடம் ஒன்றை தாண்டி விட்டதொரு நாளில் தற்செயலாக அவனைப் போலவே  பெருந்தொகை கடன் வாங்கி கொடுத்திருந்த  மோகனை சந்தித்த போது, அமுதன்  உங்கடை கடனை  ஒரு மாதிரி கட்டிட்டாங்களாம் என்று மோகன் சொன்னபோதுதான்  தாங்கள் எல்லாருமே ஒட்டுமொத்தமாக ஏமாற்றுப் படுவதை உணர்ந்தார்கள். அவர்களைப் போலவே பெருந்தொகை கடன் எடுத்துக்கொடுத்த அனைவரையும் தொடர்பு கொண்டார்கள்.  கடையிசில்  ஆறு பேர்  சேர்ந்து  அப்பாத்துரைக்கு எதிராக வழக்கு போடுவது என முடிவு செய்து வழக்கும்  தாக்கல் செய்திருந்தார்கள்.

அன்று வழக்கின் இறுதிநாள்  ,வழக்கு போட்ட ஆறு பேரும் வந்திருந்தார்கள் . வழக்கில்  நல்லபடியாய் தீர்ப்பு  வந்தால் சூரிச் சிவன்கோவிலுக்கு அடுத்த திருவிழாவிற்கு  காவடி எடுப்பதாக  நேர்த்தி வைத்தபடி  அமுதனும் போயிருந்தான். ஆனால்  அவர்களில் ரமேஸ் மட்டும் நீதிமன்றத்திற்குள்ளே  வராமல் வெளியேயே  நின்றிருந்தான். அவனது நடவடிக்கைகள் வித்தியாசமாய் இருந்ததை கவனித்த அமுதன் அவனருகே போய்  நேரமாகிது உள்ளை வாடா என்று அழைத்தான்.நான் வரேல்லை  நீ உள்ளைபோ என்றான் . றமேஸ் நிறைய குடித்திருந்தான் என்றது அமுதனிற்கு புரிந்தது .என்னடா செய்யப் போறாய் என்றதற்கு  தனது ஜக்கெற்ரை  விலக்கி இடுப்பில் செருகியிருந்த கத்தியை காட்டியவன்  இண்டைக்கு அப்பாத்துரையை போடப்போறன்.

டேய்  விளையாடாதை  தீர்ப்பு எங்களுக்கு சாதகமாய்தான் வரும். அவசரப் படாதை…

சும்மா போங்கோ அவனிட்டை காசு இருக்கு கிரிமினல் லோயரை வைச்சு வாதாடிட்டான் ,எங்கடை அரசாங்க லோயர் என்னத்தை கிழிச்சவன். அது மட்டுமில்லை  காசையும் குடுத்திட்டு  கையெழுத்து  வைச்ச எங்களுக்கு விசரோ இல்லையோ எண்டு டெக்ரர் சேட்டிபிக்கற் வேறை எடுக்க வைச்சு  கொத்து றொட்டி வேறை  தீத்திட்டாங்கள்.

எனக்கு நம்பிக்கை இருக்கடா நாங்கள் யாருக்கும் துரோகம் செய்யேல்லை யாரையும் ஏமாத்தேல்லை  கடவுள் ஒண்டு ஒருத்தர் இருக்கிறார்  எல்லாம் நல்லபடி நடக்கும்.
சும்மா போங்கோ  நீங்களும் உங்கடை கடவுளும் அவரே காசு உள்ளவன்  ஏமாத்திறவன் பக்கம் தான் நிக்கிறார்.

டேய் உனக்கு இப்பதான் கலியாணமாகி  ஒரு பிள்ளை வேறை பிறந்திருக்கு  காசையும் குடுத்திட்டு  நீ ஜெயிலுக்கு போனால் உன்ரை குடும்பத்தை ஒருக்கா நினைச்சு பார்.

என்ரை குடும்பம்  நாசமா போனாலும் பரவாயில்லை பலபேரின்ரை குடும்பம் நிம்மதியா இருக்கும். காசை சுத்தினவங்களுக்கு லண்டனிலை குணத்துக்கும் பாரிசிலை  யோகனிற்கும் ஆசை தீர அடியாவது போட்டாங்கள் நாங்கள்தான் காசை குடுத்திட்டு வாயை பார்த்துக்கொண்டு நிக்கிறம்.

அதற்கு மேல்  அவனுடன் கதைத்து பிரயோசனம் இல்லையென நினைத்த அமுதன்  மற்றவர்களிடம் போய் நிலைமையை விளங்கப் படுத்தி  அவர்களை அழைத்து வந்ததும்  அவர்கள் ரமேசை அமத்தி பிடிக்க  அவன் செருகி வைத்திருந்த கத்தியை உருவி எடுத்தவன் அவனை விடவேண்டாம் என்றபடி  ஒதுக்குப் புறமாக இருந்த ஒரு குப்பை கூடையில் கத்தியை கொண்டுபோய்  எறிந்துவிட்டு வரும்போது  ,புதிய AUDI  கார் ஒன்றில் அப்பாத்துரை  நீதிமன்ற பகுதிக்குள் நுழைந்துகொண்டிருந்தான்.
நீதி மன்றத்திகுள் அனைவரும் எழுந்து அமர்ந்ததும்  நீதிபதி தீர்ப்பினை படிக்க ஆரமப்பித்தார். இதுவரை நடந்து முடிந்த விசாரனைகள் விவாதங்கள்  பரிசோதனைகளின் அடிப்படையில்  வழக்கை தொடர்ந்த ஆறு பேரும் கடன் பத்திரங்களில் அவர்களே  கையெழுத்திட்டுள்ளனர். அவை போலியானவை அல்ல என்பதை பரிசோதனைகள் நிருபிக்கின்றது.

அதே வேளை சம்பத்தப் பட்டவர்கள் மீது  நடாத்தப்பட்ட  உளவியல் பரிசோதனைகளில் அவர்கள் அனைவருமே  எவ்வித உளவியல்  தாக்கங்கள் பிரச்சனைகளுமற்றவர்கள் என்கிற அவர்களது மருத்துவ பரிசோதனை  உறுதி செய்திருப்பதால்  அவர்கள் அனைவருமே தங்கள்  சுய விருப்பின் பேரில் சரியான மனநிலையில் இருந்தே கையெழுத்தை இட்டிருக்கும் சாத்தியம் தெளிவாகின்றது. ஆகவே அவர்கள் பெற்றுக்கொண்ட கடன்களிற்கு அவர்களே பொறுப்பாளிகள் ஆகின்றார்கள். அடுத்ததாக அவர்களை  அப்பாத்துரை மோசடி செய்தார் என்பதற்கான சரியான வலுவான ஆதாரங்கள்  உறுதிப்படுத்தப்படவில்லை. அப்பாத்துரையின்  தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு பணம் ஏதும் மாற்றம் செய்யப் பட்டிருக்கவில்லை. எனவே அப்பாத்துரை  இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார். ஆனால்  சுவிஸ் நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பான புலிகள் அமைப்பு கடந்த காலங்களில் நிதி மோசடிகளில் ஈடு பட்டது காவல்துறையாலும் நீதிமன்றங்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைப் போல இந்த சம்பவத்திலும் நிதி மோசடிகள் நடந்திருக்கின்றதா என்பதனை  காவல்துறையினர் கண்டு ஆராயவேண்டும். மேலதிகமாக அப்பாத்துரை நிதிகளை பெறுவதற்காக   சம்பந்தப் பட்டவர்களை  மிரட்டியோ அல்லது அழுத்தங்களை பிரயோகித்திருந்தாலோ சரியான ஆதாரங்களுடன்  அவர்கள் மீண்டும்  காவல்துறையின் உதவியுடன் இந்த வழக்கை  மீளாய்விற்குட்படுத்தலாம்.  வழக்கு முடிந்தது  என்றுவிட்டு நீதிபதி எழுந்து போய் விட்டார்.

அப்பாத்துரை அவர்களை பார்த்து  நக்கல் சிரிப்பு ஒன்றை வீசி விட்டு காரில் ஏறி போய்விட்டான்.  அப்பவும் சொன்னான்  இந்த கோட்டு கேசிலை எனக்கு நம்பிக்கையிலையெண்டு கேட்டியா.  ஏதோ  தர்மம் நியாயம், கடவுள் எண்டாய் எங்கை எல்லாம் போனது. போடா நீயும் உன்ரை சாமியும் என்று  அமுதனை திட்டிவிட்டு ரமேஸ் போய்விட மற்றையவர்கள்  எதுவும் பேசாமல் அங்கிருந்து போய் விட்டார்கள். சோர்வோடு பஸ் நிலையத்தில் வந்து இருந்தவன்  சட்டைப் பையை தடவிப்பார்த்தான். வழக்கு நல்லபடியாய் முடிந்த பின்னர் தமிழினிக்கு  கார் ஓடுற பார்பி பொம்மை வாங்குவதற்காக  வைத்திருந்த பணத்தை எடுத்தபடி ஒரு கடைக்குள் நுழைந்தவன் ஒரு விஸ்கி போத்தலை வாங்கி விட்டு  ரமேசிடம் இருந்து பறித்த கத்தி  எறிந்த குப்பைக் கூடை பக்கம் போய் கத்தியை தேடியெடுத்து  இடுப்பில் செருகி விட்டு வந்த பஸ் ஒன்றில் ஏறிக்கொண்டான்.

௦௦௦
அப்பாத்துரையின்  கார்  அதன் நிறுத்துமிடத்தில் நுழைந்து   நிறுத்துமிட கதவு சாத்தப்படுவற்கு முன்னராக அவரசரமாக ஓடிப்போய் வாகனத் தரிப்பிடத்திற்குள் நுழைந்துகொண்டான். காரை விட்டு இறங்கிய  அப்பாத்துரை  அமுதனை பார்த்து அதிர்ச்சியடைந்திருந்தாலும்  தன்னை  சுதாகரித்துக்கொண்டு  .”என்ன அமுதன்  இந்த நேரத்திலை அதுவும் இஞ்சை என்று வில்லங்கத்திற்கு  ஒரு சிரிப்பை வரவழைத்துக்கொண்டு கேட்டான். எதுவும்  போசாமல்  அப்பாத்துரையை நோக்கி முன்னேறிய அமுதன்  திடீரென அவனை நோக்கி பாய்ந்தவன் காரோடு அப்பாத்துரையை சாத்தி அழுத்திப் பிடித்தபடி இடுப்பில் செருகியிருந்த கத்தியை  உருவினான் . அப்பாத்துரை  பதறியவனாய்  அமுதன் சொல்லுறதைக்கேள்  சத்தியமா என்னட்டை ஒரு சதமும் இல்லை  எல்லாம் ஊருக்கு அனுப்பிட்டன்  என்னை  நம்பு,அமுதன்  அப்பாத்துரையின் அடிவயிற்றில்   கத்தியை செருகி இழுத்தான். அடி வயிற்றை  பொத்திய அப்பாத்துரை  என்னை ஒண்டும் செய்யாதை  உன்ரை காசு முழுக்க நான் திருப்பி தாறன் என்னை  விட்டிடு  என்றபடி அடிவயிற்றை பொத்தியிருந்த கைகளை எடுத்து கும்பிட்டான்  அவனது கைள் இரத்தத்தால் நனைந்து போயிருந்தது. ” அட ஒரு குத்திலையே ஊருக்கு  அனுப்பின காசு திரும்பி வந்திட்டுது” என்றபடி  அமுதன் கத்தியை அப்பாத்துரையின் வயிற்றிக்கும் மார்பிற்கும் இடையில் ஓங்கி இறக்கினான்.

என்னை விட்டுடடா  நான் பிள்ளை குட்டிக்காரன் கும்புடறனடா  அவனது நாக்கு குளறி  சத்தம் கம்மியது.. நானும் கூடத்தான் பிள்ளை குட்டிக்காரன்  உன்ரை மனிசி பிள்ளையள் கடைசி வரைக்கும் சந்தோசமா  வாழுறதுக்கு  எங்கடை காசு  உன்னட்டை இருக்கு ஆனால் எங்கடை பிள்ளை  குட்டியளை பற்றி நீ யோசிச்சியா என்று கத்தியபடி அப்பாத்துரையை கீழே விழுத்தியவன்  அவன் மீது செருகியிருந்த கத்தியை உருவிவிட்டு அவனது மார்பில் ஏறி அமர்ந்து ,கத்தியை இரண்டு கைகளாலும் இறுக்கிப் பிடித்து தலைக்கு மேலாக தூக்கி ஓங்கி அவனது நெற்றியில் குத்தினான்.  டக் என்ற சத்தத்துடன் ஒரு அங்குலமளவு மட்டுமே நெற்றியில் கத்தி இறங்கும்போதே  அமுதனின் கைகள் வழுக்கி அவனது கையொன்று அறுக்கப்பட்டு இரத்தம் வழியத் தொடங்கியிருந்தது. ஆனால் அவனது மது வெறியும் கொலை வெறியும்  சேர்ந்திருந்தில் கை அறு பட்ட வலியை அவன் உணர்ந்திருக்கவில்லை. மெல்ல எழுந்தவன்  அப்பாத்துரையின் நெற்றியில் குத்திநின்ற கத்தியின் அடிப்பாகத்து பிடியில்  ” இது தாண்டா கடைசி அடி “என்றபடி தனது  வலது சப்பாத்து காலால் ஓங்கி அடித்தான்  சறக்  என்கிற சத்தத்தோடு அப்பாத்துரையின் மண்டையோடு உடைந்து  கத்தி மண்டைக்குள் இறங்கியது.

தனது கைத்தொலை பேசியை  எடுத்து காவல்துறையின் இலக்கங்களை அழுத்தினான். அவனிற்கு அருகாகா காவல்துறையின் வாகனங்களின் சைரன் ஒலிக்கத்தொடங்கியிருந்தது.
எமது கைகளின்  ஆயுதங்களை எதிரி மட்டுமல்ல துரோகிகளும் தீர்மானிக்கிறார்கள்.
௦௦௦
யாவும் கற்பனை  அல்ல.

பிற்குறிப்பு. கடைசி அடி சிறுகதை கடந்த மூன்று வாரங்களிற்கு முன்னரே எழுவரை சஞ்சிகைக்காக எழுதி அனுப்பி விட்டிருந்தேன். எனவே இதனை அண்மைய பாரிஸ் சம்பவத்துடன் போட்டு குளப்பி கொள்ளதோவையில்லை. ஆனாலும் கதையில் கூறப்பட்டுள்ளது போல் நடப்பதற்கான சாத்தியங்களை மறுப்பதற்கும் இல்லை

அன்பு அம்மா.

11:10 AM, Posted by sathiri, 2 Comments


அன்பு அம்மா.

வீட்டு அழைப்பு மணிச் சத்தத்தை கேட்டு வாசல்  கதைவை திறந்த திறந்த நிவேதா வாசலில் நின்றிருந்த இருவரை பார்ததும்  நீங்கள் யார்  என்ன வேணும் என்றாள். இருவரில் ஒருவன் சிரித்தபடி நாங்கள் அன்பு அம்மாவை  பாக்கவேணும் அவாவை எனக்குத்தெரியும் அவாவோடை கொஞ்சம் கதைக்கவேணும்.அதுதான் வந்தனாங்கள் என்றான். இருவரையும் மேலும் கீழுமாக பார்த்த நிவேதா  இவங்கள் எதுக்கு  இங்கை வந்திருக்கிறாங்கள் என்று மனதில் நினைத்தபடியே சரி வாங்கோ என்றவள் அவர்களை இருக்கச: சொல்லிவிட்டு அம்மா உங்களை  ஆரோ தேடி வந்திருக்கினம்  வந்து பாருங்கோ  என்று தாயாரை அழைத்து விட்டு தனது அறைக்குள்  புகுந்து கொண்டாள். வரவேற்பறைக்கு வந்த அம்மா கண்ணாடியை சரிசெய்தபடி வந்தவர்களை பார்த்தவர் தம்பியயை யார்  என்றதும். அம்மா  என்னை ஞாபகம் இருக்கோ நான் தான் கீதன்  மல்லாவியிலையும்  பிறகு முள்ளியவளையிலையும் உங்கடை வீட்டை அன்புவோடை வந்திருக்கிறன். அன்புவின்ரை  சினேகிதன்  தெரியிதோ?  உற்று பார்த்த படியே  யோசித்த அம்மா  தெரியேல்லை பிள்ளை   அவனோடை எத்தினை  பேர் வந்தவங்கள் எனக்கு  எல்லாரையும் நினைவிலை இல்லை  என்ரை  மகனின்ரை சினேதம் எண்டுறீங்கள்  இருங்கோ என்ன குடிக்கிறீங்கள் என்றாள் கனிவுடன்.

நீங்கள் இஞ்சை  இருக்கிறீங்கள் எண்டு இப்பதான் கேள்விப் பட்டனான் அதுதான் உங்களை பாத்திட்டு  அதே நேரம்  மாவீரர் நாள் வருது தெரியும் தானே  இஞ்சை பக்கத்திலையும்  ஒரு மண்டபத்திலை செய்யிறம்  அதுக்கு கட்டாயம் நீ்ங்கள் வரவேணும்.  அதோடை நீங்கள்தான் குத்து விளக்கு ஏத்த வேணும் அம்மா என்றான். தம்பியவை  குறை நினைக்ககூடாத நான் அண்டைக்கு  விரதம் அதோடை மெளனவிரதமும் இருக்கிறனான்  ஒருத்தரோடையும்  அண்டைக்கு  கதைக்கவும் மாட்டன்  என் பாட்டிலை அறையை பூட்டிப் போட்டு எங்கடை செல்லங்களை  நினைச்சு தேவாரங்களை  மனதுக்கை  படிச்சபடியிருப்பன் உங்கடை நிகழ்ச்சிக்கு வந்து இந்த விளக்குஏத்திறதெல்லாம் சரிவராது தம்பி பெருமூச்சோடு சொல்லி முடித்தார்

உங்கடை விரதத்தை தராளமா பிடியுங்கோ அம்மா விளக்கு ஏத்திறதுக்கு கதைக்கவேணும் எண்டு அவசியம் இல்லைத்தானே  ஆனால் கட்டாயம் வரவேணும் என்று அடம் பிடித்தான்  கீதன்.  இறுதியில் நிகழ்ச்சிக்கு வருவதாக அம்மா உறுதியளித்திருந்தாள்.  அவர்கள் புறப் படும் போது வரவேற்பறை சுவரில்  காய்ந்துபோனதொரு மலையோடு சிரித்துக்கொண்டிருந்த அன்பரசனின் படத்தை பார்த்த கீதன் அம்மா  அன்புவின்ரை படம்  எங்களிட்டை இல்லையம்மா அதாலை இந்த படத்தை தந்தால்  மாவீரர் நாளன்று மண்டபத்திலை  வைச்சிட்டு  திருப்பிகொண்டு வந்து தாறன் என்றதும்.தம்பி அவனின்ரை  படங்களும் என்னட்டை கனக்க இல்லை பத்திரமா திருப்பி தருவியள் எண்டால் தரலாமென்றாள்.நானே பத்திரமாய் கொண்டு வந்து தருவன் பயப்படாமல் தாங்கோ என்றதும் படத்தை கழற்றி சேலைத் தலைப்பல் துடைத்து விட்டு கீதனிடம் நீட்டினார்.
   00000000000000000000000000
அன்பு அம்மவிற்கு சொந்தப் பெயர்  மனோகரி  ஆசிரியையாக கடைமையாற்றியவள். முதல் நிவேதாவும் இரண்டாவது நிவேதன்  இரண்டு பிள்ளைகள்தான்.  நிவேதா திருமணமாகி யேர்மனிக்கு வந்துவிட அன்றைய  யாழ்ப்பாண இடப் பெயர்வின்போது  செல்லடியில் கணவனை  பறி கொடுத்த  மனோகரி மகனுடன்  வன்னிக்குள் போய் சேர்ந்திருந்தார். வன்னிக்கு போனதும்   உயர்தரம்  படித்துக்கொண்டிருந்த நிவேதன் இயக்கத்திற்கு போய்விட்டு அன்பரசனாகி  மீண்டும் வந்திருந்தான். அதன் பின்னர் அவனோடு  இயக்ககாரர் பலரும் வந்து போகத் தொடங்கினார்கள்.  அதற்கு பிறகு மனோகரி அனைவரிற்கு  அன்பரசன்  அம்மாவானவள்  காலப் போக்கில் எல்லாரும் அவளை அன்பு அம்மா என்று கூப்பிடத் தொடங்க அவளிற்கே தனது பெயர் மறந்து  அன்பு அம்மா என்றால் தான் எல்லாரிற்கும் தெரியும் என்கிற நிலையாகிவிட்டிருந்தது.  அவரும் தனது தனிமையை போக்க பிள்ளைகளை  சேர்த்து பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கியிருந்தார். ஆரம்பத்தில் சைக்கிளில் நண்பர்களோடு வந்து போய்கொண்டிருந்த  அன்பரசன்  பின்னர்  உருந்துளி(மோட்டார் சைக்கிள்.) என்று இப்பொழுது பொறுப்பாளராகி  பஜுரோவில் பாதுகாவலர்களுடன்  வரத் தொடங்கியிருந்தான்.
அத்தனையும்  சமர்க்களங்களில்  அவனது திறைமையால் வேகமாக வளர்ச்சிகண்டிருந்தான். பேச்சு வார்தைகள் தொடங்கிய காலம் வன்னிக்கு போயிருந்த நிவேதா தாயையும்  தம்பியையும் எப்படியாவது ஜெர்மனிக்கு கூட்டிவந்துவிடலாமென நினைத்து  எடுத்த முயற்சிகளில் அன்பரசன்  இயக்கத்தை விட்டு வர மறுத்து விடவே மகனை  பிரிந்து  வர மனமில்லாத மனோகரிக்கு .. இப்ப சமாதான காலம் தானே  அனேகமா இனி சண்டை தொடங்காது  பேச்சு வார்த்தையிலை தீர்க்கபோறதா இயக்கமே அறிவிச்சிருக்கு பயப்பிடாமல் வாங்கோ என்றுதன்னுடன் கொஞ்சக்காலமாவது வந்து இருக்கும்படி  அழைத்து வந்து விட்டிருந்தாள். ஆனால் மீண்டும் தொடங்கிய சண்டையில் கடைசியாய் ஆனந்த புரத்தில்  அன்பரசனும் இறந்து போனதாய் செய்திகள் மட்டும் கிடைத்தது. இலங்கை அரசு சார்ந்த  சில இணையத்தளங்களில் வெளியான படங்களையெல்லாம் நிவேதா தேடியபொழுது   அன்பரசனினன்  படமும் இருந்தது. அவர்களிற்கு ஆளாழிற்கொரு மூலையில் இருந்து அழுவதைத் தவிர வேறு வழியில்லை. மாவீரர் நாளன்று அன்பு அம்மா அன்று முழுதும் ஒரு துளி தண்ணீர்கூட வாயில் படாது விரதம் இருப்பதோடு அறையை பூட்டிக்கொண்டு மெளனவிரதமும் இருந்து விடுவார்.அன்பரசன் இறந்து போனதன் பின்னரான மூன்றாவது மாவீரர் நாள் நெருங்கிக் கொண்டிருந்த வேளையில்தான் கீதன் அவர்களது வீட்டுக் கதைவை தட்டியிருந்தான்.

    000000000000000000000000000000000
நிவேதாவிடம்  சொல்லி பூக்கள் வாங்கி நார் கிடைக்காததால் நூலில் அவைகளை  மாலையாகக் கட்டி தண்ணீர் தெளித்து ஒரு பிளாஸ்ரிக் பையில் வைத்துவிட்டு மண்டபதற்திற்கு போவதற்கு தயாராகியிருந்தார்அன்பு அம்மா. நிவேதாவிற்கோ அவளது கணவரிற்கோ  இப்பொழுதெல்லாம்  மண்டபத்திற்கு போய்  மாவீரர் நாளை கொண்டாடுவதில் ஆர்வமில்லை  அதனால்  அம்மாவை மண்டபத்தில் கொண்டுபோய் இறக்கி விடுவதாகவும்    மண்டபம்  அருகிலேயே இருப்பதாலும்  நிவேதாவிற்கு  வேலை  இருப்பதாலும் நிகழ்ச்சிகள் முடிந்ததும்  அம்மாவை பஸ்சில் வீடு வருமாறு ஏற்கனவே சொல்லி விட்டிருந்தாள். அதன்படி  அம்மாவை மண்டபத்திற்கு முன்னால் இறக்கிவிட்டுப் போயிருந்தாள். நிகழ்ச்சிக்கு  சனங்கள் வரஆரம்பித்திருந்தார்கள். அம்மாவும்  மண்டபத்தினுள் நுளைந்தபோது  வாசலில் ஒரு கூடையில் கார்த்திகை பூக்களோடு நின்றிருந்தவன் அம்மா பூ வாங்குங்கோ  ஒண்டு மூண்டு யுரோதான் என நீட்டினான். அம்மா கையிலிருந்த பூமாலையை அவனிற்கு காட்டிவிட்டு பேசாமல் உள்ளே போகவும்.   அவன் பக்கத்தில் நின்றவனிடம் " சரியான திமிர் பிடிச்ச கிழவியா இருக்கு என்றதும் மற்றவன்.   டேய் அது தானாம்  ஆனந்த புரத்திலை தீபன்   துர்க்கா  ஆக்களோடை செத்துப்போன அன்பரசனின்ரை அம்மா  அவாதானாம்  விளக்கு கொழுத்தப் போறா பேசாமல் இரடா என்றான்.

வரிசையாய் அடுக்கப் பட்டிருந்த கதிரைகளில் கடைசி வரிசையில் போய் அமர்ந்தவர்  மண்டப மேடையை பார்த்தார்  பல மா வீரர்களின்  படங்கள் வரிசையாய் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது.  அப்பொழுதுதான் அவரிற்கு தான் செய்த தவறு உறைத்தது. இவ்வளவு  படங்கள் இருக்கு நான் மகனின் படத்துக்கு போட மட்டும்  ஒரு மாலையை  கொண்டந்திட்டனே  மற்றவங்களும் என்ரை பிள்ளை மாதிரித்தானே  மண்ணுக்காக மாய்ந்தவங்கள்  எல்லாமே என்ரை பிள்ளையள் தானே  என்று நினைத்தபடி  தனது பிளாஸ்ரிக் பையை திறந்து  மாலையில்  இருந்த பூக்களை  ஒவ்வொன்றாக பிரித்தெடுக்கத் தொடங்கினாள். அவரிற்கு பக்கத்தில் இருந்த ஒரு பெண் அம்மாவை பார்த்து சிரிக்க அவளை நிமிர்ந்து பார்த்து விட்டு எந்த சலனமும்  இல்லாமால்  பூக்களையே பிரித்தெடுத்துக் கொண்டிருந்தார். அந்த பெண்மணியோ  இது கொஞ்சம்  லூசாயிருக்குமோ?? என நினைத்தபடி  இரண்டு கதிரை தள்ளி போயிருந்துவிட்டார்.  வணக்க நிகழ்வுகள் ஆரம்பம் என ஒருவர் கையில் ஒரு பேப்பரை வைத்து பார்த்தபடி  அறிவிக்க எல்லாரும் எழுந்து நிற்க ஒருவர் கொடியெற்றினார்.

மொழியாகி எங்கள்  மூச்சாகி நாளை  முடிசூடும் தமிழ் மீது உறுதி .வழிகாட்டி  எம்மை உருவாக்கும் தலைவன்  வரலாற்றின் மீதும் உறுதி  விழி மூடி இங்கே துயில்கின்ற  வீரர்கள் மீதிலும் உறுதி  சிடியில் சுழலத் தொடங்கியிருந்தது... அடுத்தாக  லெப்.கேணல் அன்பரசனின் தாயார் விளக்கேற்றுவார். என அறிவித்தார்.  " தாயகக் கனவுடன்  சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளை   உங்களைப் பெற்றவர் உங்களின் தோழர்கள் உறவினர் வந்துள்ளோம்". பாடல் போய்க்கொண்டிருந்தது ..எழுந்து  போன அம்மா விளக்கை ஏற்றிவிட்டு  மடியில்  பிரித்துப் போட்டிருந்த மாலையின் பூக்களை  எடுத்து ஒவ்வொரு மாவீரர்   படங்களிற்கு முன்னாலும் வைத்து படங்களை  தடவி தனது உதட்டில் ஒற்றியபடியே  போய்க்கொண்டிருந்தார். இறுதியாய் மிஞ்சியிருந்த ஒற்றை பூவை அன்பரசனின் படத்திற்கு முன்னால் வைத்தார்.. "எங்கே  எங்கே     ஒரு கணம் உங்கள்  விழிகளை இங்கே திறவுங்கள். ஒருகணம் உங்கள் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்"". படத்தை தடவியபொழுது அவர் கண்களில் படம் மங்கலாக தெரியத் தொடங்கியிருந்தது. கண்களை துடைத்துவிட்டு மேடையை விட்டு இறங்குகிறார்.ஆரம்பத்தில்  அவரிற்கு பூ விற்றவன்  அவசரமாக ஓடி வந்து படங்களிலிருந்த  பூக்களை  தனது கூடையில்  அள்ளிப் போட்டபடி வாசலை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான்.

 நிகழ்ச்சிகள் ஆரம்பமாக தொடங்கியிருந்தது  சிறுமியர்கள் சிலர் அபிநயம் பிடித்து ஆடத் தொடங்க  அம்மா கண்களை மூடி தேவாரங்களை மனதில் உச்சரிகக் தொடங்கினார். கொத்து றொட்டியின் மணம் மண்டபத்தை நிறைக்கத் தொடங்க  பலர்  ஆசிய கடை சாமான்களை  பார்வையிட எழுந்து போகத் தொடங்கிருந்தார்கள். எவ்வளவு நேரம் போனதென்று தெரியவில்லை   கதிரைகள்  அடுக்கப்படும்  சத்தத்தில் அம்மா கண்ணைத் திறந்து பார்த்பொழுது எவரையும் காணவில்லை  மூவர் மட்டும் மண்டபத்தை துப்பரவு செய்து கொண்டிருந்தார்கள்.   எல்லாத்தையும் செய்திட்டு கடைசியிலை  மண்டபம்  கூட்டவும் கதிரையள்  அடுக்க மட்டும் எங்களை மாட்டி விட்டிட்டு   உண்டியலை மட்டும் தூக்கிக் கொண்டு போயிடுவாங்கள் என்று யாரையோ திட்டியபடி  வாசலில் நின்று பூ விற்றவன்  தான் விற்ற  கார்த்திகை பூக்களை  தும்புத்தடியால் வாரியள்ளி குப்பையில் போட்டுக்கொண்டிருக்க இன்னொருவன் அடுக்கி வைக்கப் பட்டிருந்த படங்களையெல்லாம் எடுத்து பெரிய கடதாசி பெட்டி ஒன்றிற்குள்  போட்டுக் கொண்டிருந்தான். டேய் படங்களை  கவனமாய் பாத்து போடு என்றபடி பிளாஸ்ரிக் கிண்ணத்தில் கோலாவை  கலந்து கொண்டிருந்தான் இன்னொருத்தன்.

இனி அடுத்த வருசத்துக்குத்தானே இதுகள்  உடைஞ்சாலும் திருத்தலாமென்றபடி  வரிசையாய் படங்களை எடுத்துப் போட்டபடி வந்தவன் அன்பரசனின் படத்தையும் தூக்கிய பொழுது பதறிப்போன அம்மா வேகமாய் அவனை நோக்கி  வேண்டாம் வேண்டாம்  என் சைகை  செய்து கையை ஆட்டியடி ஓடிப் போய்க்கொண்டிருந்தார். ஆனால் அதற்குள் அவன் படத்தை பெட்டிக்குள் போட்டுவிட சில்லென்ற சத்தம் எழுந்தது. போன வேகத்தில் அவனை  தள்ளி விட்டு படத்தை எடுத்தார் கண்ணாடி நீள் கீலங்களாய் உடைந்து போயிருந்தது. மெதுவாய் தனது சேலைத் தலைப்பால்  உடைந்த கண்ணாடிகளை தட்டித் துடைத்தவர் அவர்களை  முறைத்துப் பார்த்து விட்டு மண்டபத்திற்கு வெளியே வந்திருந்தார். வெளியே  மழை வருவதற்கான அறி குறியாக  வானம் இருண்டு ஒரு மின்னல் கீற்றொண்டு   கிழித்துப் போக போட்டிருந்த கடைகளை  கடைக்காரர்கள்  அவசரமாக அகற்றிக் கொண்டிருந்தார்கள்.  அன்பு அம்மா வானத்தை அண்ணாந்து பார்த்தார் விழத் தொடங்கிய  மழைத்துளியொன்று ஆவென்றிருந்த அவர் வாயில் வீழ்ந்து விட  காறித்துப்பியவர் அன்புவின் படத்தை சேலையில் சுற்றி மார்போடு அணைத்தபடி பஸ் நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்.