Navigation


RSS : Articles / Comments


பயணம் .....................

12:04 PM, Posted by sathiri, No Comment

விமானம் இந்திய நேரம் நள்ளிரவு 12 மணிக்கு தரையிறங்கவேண்டும் விமானம் மும்பை சத்திரபதி சிவாஜி விமான நிலையத்தில் இறங்கத் தொடங்குகின்றது என்கிற விமானியின் அறிவிப்பை கேட்டதுமே மனைவின் முகம் இறுகிப் போயிருந்தது..மனதிற்குள் ஊரிலுள்ள எல்லா கோயிலிற்கும் நேத்திக்கடன் வைத்திருப்பாள் என எனக்கு தெரியும் .விமனம் தரை தட்டியதும் உங்கடை சினேகிதங்களிற்கொல்லாம் நீங்கள் வாற விபரம் குடுத்திட்டீங்கள்தானே ஒரு பிரச்சனையும் வராதுதானே என்றாள்.ஒரு பிரச்சனையுமில்லை பேசாமல் வா என்று அவளை அதட்டினாலும் எனக்கு ஏ சி குளிரிலும் வியர்ப்பதைப்போல ஒரு உணர்வு இருந்தது. விமானம் நின்றதும்பயணிகள் வெளியேறத் தொடங்கினார்கள். முதல் வகுப்பு பகுதியிலிருந்த எனக்கு தெரிந்த நம்மவர் எனக்காக காத்திருந்தவர் என்னைக் கண்டதும் முதலில் எங்கை இந்தியாவுக்கோ என்று கேட்டு அசடு வழிந்ததை மனதில் வைத்து இந்தத் தடைவை எங்கை மெட்ராசுக்கோ என கேட்காமல் மிக அவதானமாக..அடுத்த மெட்ராஸ் பிளேனுக்கு இன்னும் 6 மணித்தியாலம் காத்திருக்க வேணும் வா ஏதாவது லோஞ்சிலை போய் டீ குடிச்சபடி கதைக்கலாமென்றவரிற்கு. நான் மெட்ராஸ் போகேல்லை இஞ்சை பொம்பேயிலை வெளியாலை போறன் என்றதும். பொம்பேயிலையா??யார் இங்கை இருக்கினம் ஏதும் பிசினஸ்சோ? என்றவர் முடிக்கு முதலேயே ஓமோம் இஞ்சை பால்தக்கரேயை ஒருக்கா சந்திக்கவேணும் திரும்பவும் பிரான்ஸ் வந்ததும் போனடிக்கிறன் சந்திப்போம் என்று விடைபெற்றுக்கொண்டு குடிவரவு குடியகல்வு(இமிக்கிறேசன்) பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.


பால்தக்கரேயா? என்று தலையை சொறிந்தவர் நான் உண்மையிலேயே வெளியேதான் போகிறேனா என எட்டியெட்டிப்பார்த்து உறுதி செய்தவர் தனது விமானம் மாறும் பக்கத்தை தேடிப் போய்விட்டார். இமிக்கிறேசனில் எனது முறை வந்தது நான் எனது மற்றும் மனைவியின் கடவுச்சீட்டுக்களை அதிகாரியிடம் நீட்டினேன். எனது கடவுச்சீட்டை பிரித்து விசாவினைப்பார்த்தவர் கடவுச்சீட்டை கணணிஇயந்திரத்தில் ஒரு இழுப்பு இழுத்து பார்த்துவிட்டு வெளியேறும் சீலை எடுத்து ஒரு குத்துக் குத்தினார் அப்பொழுது மனைவியை லேசாய் திரும்பிப் பார்த்தேன் அப்பொழுழுதான் அவள் கண்களில் கொஞ்சம் மகிழ்ச்சி இழையோடியது.அடுத்ததாய் மனைவியின் கடவுச்சீட்டை பிரித்தவர் முன்னும் பின்னுமாய் பிரட்டினார் மனைவியையும் கடவுச்சீட்டையும் மாறிமாறிப்பார்த்தார்.பின்னர் எங்கே பழைய பாஸ்போட் என்றார். பழைய பாஸ்போட் பிரான்சில். கொண்டுவரவில்லை என நான் பதில் சொன்னதுமே மனைவி முந்திக்கொண்டு அது முடிந்ததால்தான் பிரான்ஸ் இந்திய தூதரகத்தில புதிதாய் எடுத்தோம் என்றாள். கடுப்பான அதிகாரி அது எனக்கு தெரியும் அதுதான் பழையதை கேக்கிறேன் என தொடங்கியவர் அதுவரை புழக்கத்தில் இருந்த ஆங்கிலம் இருவரிடமும் கிந்திக்கு தாவியது. எனக்கு பாதி புரிந்ததும் புரியாமலும் போகவே அப்பாடா நம்ம பிரச்சனை முடிஞ்சுது நான் ஒரு ஓரமாய் நிக்கலாமென ஒதுங்கிக்கொண்டாலும் .என்னைத்தான் ஏதாவது நோண்டுவார்கள் என நினைத்துப்போனால் மனைவியை போட்டு நோண்டிக்கொண்டிருந்தது எனக்கு சிரிப்பாகவும் இருந்தது. மனைவிக்கும் அவரிற்குமான சில நிமிட வாக்குவாதத்தின் பின்னர்.மனைவியின் கடவுச்சீட்டிலும் சீலை ஓங்கி ஒரு குத்தி அனுப்பிவிட்டார்.

வெளியே வந்ததும் விமான நிலைய வாசலில் பெரிய மண்மூடைகள் அடுக்கப்பட்ட பாதுகாப்பரண்களில் இந்திய இராணுவத்தினர் காவலில் இருந்தனர். இலங்கையில் இந்தியப்படை காலத்தில் எஸ்.எல். ஆர். மற்றும் எஸ்.எம்.ஜி துப்பாக்கிகளுடன் மட்டுமே பார்த்துப்பழக்கப்பட்ட இந்திய இராணுவத்தின் கைகளில் ஏ.கே m s. T 56 தூக்கியபடி அங்குமிங்குபும் திரிந்தனர். ஆனால் வெளியில் காவல்த்துறையினரின் கைகளில் இன்னமும் மூங்கில் கொட்டான்களுடன்தான் திரிகின்றார்கள். வெளியே வந்ததும் வரவேற்பு பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் நின்றிருந்தார்கள்.பாரிசில் சைபர் பாகை குளிரில் புறப்பட்ட எனக்கு 33 பாகை வெப்பம் முகத்திலறைந்து வரவேற்றது. விமான நிலையத்தில் எங்களை வரவேற்பதற்காக மனைவியின் தம்பியும் எனது நண்பன் டோனியலும்(டானியல்)வந்திருந்தார்கள்.அங்கிருந்த கூட்டத்தில் அவர்களை தேடி கண்டு பிடிப்பதே சிரமமாக இருந்த. அங்குமிங்கும் மிலாந்தியபடி நின்ற என்னை பார்த்து சியாம் என கத்தியபடியே பூங்கொத்துடன் ஒடிவந்த டோனியல் மனைவியின் கையில் பூங்கொத்தினை திணித்துவிட்டு என்னைக்கட்டிப்பிடித்துக்கொண்டான். ஒரு சில செக்கன் மௌனம் மட்டும் பேசியது எங்களை விடுவித்துக்கொண்டு ஒருவரையொருவர் நேராக பார்த்போது எங்கள் இருவரின் கண்களுமே கலங்கியிருந்தது.

டோனியலால் அடக்கமுடியவில்லை அழுதேவிட்டான் அவனை தட்டி தேற்றியபடி மனைவியின் சகோதரரையும் தேடிப்பிடித்தோம். அங்கேயும் சில நிமிட பாசபரிமாற்றங்கள் முடிந்தபின்னர் ஒரு வாடைகைக் காரில் ஏறினோம்.கார் நகரத் தொடங்கியது .ஆசியாவின் மிகப்பெரிய சேரி என்று சொல்லப்படும் தாராவிப் பகுதியில்தான் எனது நண்பன் குடியிருந்தான். எனக்காக அந்தப் பகுதியிலேயே ஒரு விடுதியை பதிவு செய்து வைத்திருந்தான். விடுதி நோக்கி போய்கொண்டிருக்கும் போதே டோனியலின் பேச்சு முழுதுமே நடந்து முடிந்த இறுதி யுத்தம் பற்றியதாகவேயிருந்தது.இடையிடை எல்லமே வீணாய் போச்சுதே என்று சொல்லிக்கொண்டே வந்தான். நானும் வெளியால் நோட்டம் விட்டபடியே அவனிற்கும் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். மும்பை வெகுவாகவே மாறி விட்டிருந்தது அதிவேக வீதிகள் ..அகலப்படுத்தப்பட்ட சாலைகள் கட்டிடங்கள் என முன்னேறியிருந்தாலும் அதிகமான வாகனங்கள் புழுதி என்றும் முன்னேறியிருந்தது. நாங்கள் விடுதியயை வந்தடைந்ததும் மனைவியும் அவளது சகோதரரையும் விடுதியில் தங்கவைத்துவிட்டு நான் டோனியலுடன் அருகேயிருந்த அவனது அறைக்கு சென்றேன். குளவிக்கூடுகள் போல் அமைக்கப்பட்டிருந்த குடியிருப்புக்கள் நாற்றமெடுத்த சாக்கடை வாசனை குறுகலான பாதை தாண்டி அவனது அறைக்குள் நுளையும் போது பார்த்துவா தலையில் அடிபடப்போகுது என்றான்.

குனிந்து உள்ளே நுளைந்தேன். ஒரு பிளாஸ்ரிக் பாயை விரித்துவிட்டு உக்காரு என்றவன் ஒரு துணிப்பையிலிருந்து இரண்டு பியரை எடுத்து வாயால் கடித்து துறந்தபடி கிளாஸ் வேணுமா என்றான்.வேண்டாமென சொல்லி ஒரு போத்தலை வாங்கிய நான் அறையினை ஒருதடைவை மேயந்தேன்.ஒரு 3 மீற்றர் நீளம் இரண்டு மீற்றர் அகலம் மட்டுமே கொண்டதொரு அறை டோனியலும் அவனது நண்பனும் குடியிருந்தனர் ஒரு சிறிய தொலைக்காட்சிப்பெட்டி எந்தத் தளபாடங்களும் கிடையாது சுவரில் ஒரு கலண்டல் அதில் சிரித்தபடி ஜஸ்வர்யாராய். சிறிய முகம் பார்க்கும் கண்ணாடி இரண்டு உடுப்புப் பெட்டிகள் இவ்வளவுதான். இந்தப் பகுதிகள் எனக்கு ஏற்கனவே பழகியிருந்தாலும் சுத்தமாக இருந்த ஜரோப்பாவில் நீண்டகாலம் இருந்துவிட்டு சாக்கடை நாத்தமும் அழுக்கான ஒரு இடத்தில் நுளையும் போது கொஞ்சம் சங்கடமாகத்தானிருந்தது.அதனை நண்பனிடம் காட்டிக்கொள்ளாவிட்டாலும் அங்கிருந்து வெளியேறவேண்டும் போல இருந்தது.வாயேன் முன்னையை போல கடற்கரையில் போயிருந்து பியரடிக்கலாமென்றேன். கடற்கரை முன்னையை போல இல்லடா. அந்த அட்டாக்கிற்கு பிறகு (மும்பைத்தாக்குதல்)இரவிலை சரியான கெடுபிடி கண்டபாட்டிற்கு போலிஸ்காரன் அடிப்பான் இரவு நேரத்திலை கடற்கரையோரமா ஒதுங்கிற ஜோடிகளை கூட போலிஸ் விட்டுவைக்கிறதில்லை.நீயும் வெளிநாட்டிலையிருந்துவந்து அடிவாங்கப் போறியா என்றான்.

போலிசிடம் அடிவாங்கிறதை விட இந்த நாத்தமே பறவாயில்லை என்று தோன்றியது. பியரை உறிஞ்சினேன். என்னடா இப்பிடியாயிட்டுதே என்கிற டோனியலின் புலம்பலை தவிர்ப்பதற்காக பொம்பே இப்ப எப்பிடி என்று தொடக்கினேன். பொம்பே இப்பொழுது கொலைகள் கொள்ளைகள் குறைந்திருக்கிறது. ஆனாலும் தாதா கும்பல்களின் கள்ள வியாபாரங்கள் தொடர்ந்து நடக்கிறது.அவர்களிற்குள் மோதல்கள் குறைந்துள்ளது.கலவரங்களை தொடர்ந்து பெரும்பாலான முஸ்லிம்கள் பொம்பேயை விட்டு வெளியிடங்களிற்கு சென்றுவிட்டார்கள்.என்று மும்பைபையை பற்றி பேசினாலும் அடிக்கடி முள்ளிவாய்க்காலிற்கும் போய் வந்தோம் நேரம் அதிகாலை 5 மணியாகிவிட்டிருந்தது என்னை விடுதிவரை கொண்டு வந்து விட்டவன் மறுநாள் சந்திப்பாதாக விடைபெற்றான்.
இந்த இந்தியப் பயணத்தில் நான் பல நண்பர்களையும் சந்தித்திருந்தாலும் எமக்கு ஒரு தேசம் தேவை என்பதற்காக தங்கள் வாழ்வு முழுவதையுமே அர்ப்பணித்த மூன்று முக்கியமான நண்பர்களை பற்றி இந்தப் பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அந்த மூன்று பேரில் முதலாவதாக நான் இப்பொழுது சந்தித்திருப்பவன்தான் டோனியல் இவனைப்பற்றி பயணத்தில்...................